top of page
Search
  • Writer's pictureMaha Periyava

மனம் பேசும் மௌன மொழிகள் தொடர் எண் - 3 - அத்தியாயம் - 2


மனம் என்பது மனிதனை

சிறகுகள் இல்லாமல் வானத்திலும் பறக்க வைக்கும்;

கால்கள் இல்லாமல் தரையிலும் வாழ வைக்கும்.

துவண்டு விழும் நேரத்தில், ” என்ன இழந்து விட்டாய்?

இன்னும் வாழலாம்”, என்று

ஆறுதல் சொல்லி தூக்கி நிறுத்தும்

ஒரே நட்பும் உறவும், மனம் தான்


அன்று ஒரு சில ஆன்மீகவாதிகள் உமிழ்ந்த ஆலகால விஷத்தால், மனதளவில் துவண்டு விழுந்த என்னை, ஆறுதல் மொழி பல கூறி தூக்கி நிறுத்தியது மஹாபெரியவாளின் மௌன மொழிகள்மட்டுமே . ஆறுதல் அடைந்தேன். புத்துணர்ச்சி பெற்றேன். ஆனால், சில மணி நேரங்கள் கூட அந்த புத்துணர்ச்சி என்னுள் வாழவில்லை. அல்ப ஆயுசில் மடிந்து போனது.


மஹாபெரியவாளே தைரியம் சொன்ன பிறகு என்ன அதைரியம் என்று கேட்கிறீர்களா? என்னிடம் நானே பேசிக்கொண்டேன். நான், இதே மாதிரி, லோக க்ஷேமத்திற்காக, என்னையே அர்ப்பணித்து வாழும் பொழுது எனக்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டுவிட்டால், என் குடும்பமே பாதித்து விடுமே. நான் செல்லும் பாதை சரியானது தானா என்ற பயமும் விபரீத எண்ணங்களும் என்னுள் எழுந்தன.


இந்த நொடியில் இருந்து தான், நானும் என் மனமும் எதிர் எதிரே நின்று பேசுவதை அனுபவிக்க ஆரம்பித்தேன், இந்த அனுபவத்தையும் மஹாபெரியவா தான் எனக்கு கொடுத்தார்.


அன்று குருக்ஷேத்திர யுத்தத்தில், அர்ஜுனன் மன சாட்சியாக கண்ணன் தேரில் அமர்ந்து அர்ஜுனனுக்கு ஏற்பட்ட குழப்பத்தையும் பயத்தையும் போக்கியது போல, லோகக்ஷேமம் என்னும் வேள்வி யாகத்தில் நான் அமர்ந்திருக்க, வேள்வி யாகத்தை நிகழ்த்தும் பிரகஸ்பதி ஸ்தானத்தில் கண்ணனாக என் மனம் அமர்ந்து, யாக தீயை கொழுந்து விட்டு எரிய செய்து கொண்டிருந்தது.


லோகக்ஷேமம் என்னும் யுத்தத்தில், பஞ்ச பாண்டவர்களாகிய நானும், என் ஐம்புலன்களும், மனமும், தயாராக நிற்க, எதிர் அணியில் சமுதாயத்தில் தென்படும் கோபம், போட்டி, பொறாமை, ஆற்றாமை, இயலாமை… இப்படி பல நூறு துரியோதனாதிகள் வில் அம்பை நாணேற்றி, என் மேல் எய்ய தயாராக நிற்கிறார்கள்.


துவண்டு விழுந்த என்னை, என் மனம், சில கேள்விகள் கேட்டதையும், அதற்கு நான் சொன்ன பதில்களையும், உங்களிடம் இந்த பதிவில் இருந்து பகிர்ந்து கொள்கிறேன். இனி, எனக்கும், என்னை இயக்கும் மனசுக்கும் நிகழ்ந்த சம்பாஷணையை உங்களுக்காக இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கேளுங்கள்.


மனம்: என்னடா? பரமேஸ்வர ஸ்வரூபம் மஹாபெரியவாளே உன்னிடம் பேசிய பிறகு இன்னும் என்ன குழப்பம்?


நான்: மஹாபெரியவா இவ்வளவு சொன்ன பிறகும் என் எதிர்மறை எண்ணங்கள் என்னை பயமுறுத்துகின்றன. இந்த எதிர்மறை எண்ணங்களை தூக்கி எறிய முடியாதா?


மனம்: ஒன்னு புரிஞ்சுக்கோ . அரிசியில் கல் இருந்தால், பொறுக்கி எறிந்து விடலாம். துணியில் அழுக்கு இருந்தால், துவைத்து போக்கி விடலாம். ஆனால், மனதில் இருக்கும் அழுக்கையும் எதிர்மறை எண்ணங்களையும் உன்னால் தனியாக பொறுக்கி எடுத்து ஏறிய முடியுமா?


நான்: முடியாது. ஒத்துக்கொள்கிறேன். அதற்கு என்ன செய்வது?


மனம்: உனக்கு ஒரு உதாரணம் மூலம் இன்னும் விளக்கமாக புரிய வைக்கிறேன் .கேள்.


ஒரு பாத்திரத்தில் ஒரு துளி விஷம் இருக்கிறது என்று வைத்துக்கொள். அந்த பாத்திரத்தில் உள்ள விஷம் நீர்த்து போக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அந்த விஷம் உள்ள பாத்திரத்தில் வழிய வழிய தண்ணீரை நிரப்பிக்கொண்டே இருந்தால் என்ன ஆகும்? விஷம் காணாமல் போய் தண்ணீர் மட்டுமே அங்கே இருக்கும்.


அதே போல நல்ல எண்ணங்களையும் நேர் மறை சிந்தனைகளையும் வளர்ந்துகொண்டே இருந்தால், எதிர் மறை எண்ணங்களும் தீய சிந்தனைகளும் காணாமல் போய் விடும். உன் மனம் பக்குவப்பட்டு, உன்னுடைய மனமே ஆத்ம நிலைக்கு உயர்ந்து விடும். நீயும் இறை நிலைக்கு உயர்ந்து விடுவாய்.


நான்: அப்படியானால், மனமும் ஆத்மாவும் வேறு வேறு இல்லையா? மனம் தான் ஆத்மாவா.?


மனம்: நல்ல கேள்வி கேட்டாய். சொல்கிறேன் கேள். வாழ்க்கை என்னும் அனுபவத்தில் உனக்கு ஞானம் பிறக்கிறது. ஞானம் பிறந்து விட்டால் உன்னை வழி நடத்தும் மனமும் பக்குவப்பட்டு விடுகிறது.


இறைவன் உனக்கு ஒவ்வொரு பிறவியாக மாறி மாறி கொடுத்துக்கொண்டே இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? ஏதாவது ஒரு பிறவியிலாவது ஞானம் பெற்று, மனம் ஆத்ம நிலைக்கு உயர்ந்து, மனிதன் தன்னுடன் ஐக்கியமாகி விடமாட்டானா என்ற ஏக்கம் தான் .


நான்: கொஞ்சம் புரியறமாதிரி சொல்லேன்.


மனம்: இறைவன் உனக்கு ஒரு சரீரத்தை கொடுத்து, ஜென்மாவை எடுக்க வைத்து, அந்த சரீரத்தில் தானே ஆத்மாவாக அமர்ந்து கொண்டு, நீ செய்வது அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.


நான்: நான் செய்வது அனைத்தையும் என்னுள் ஆத்மாவாக இருந்து பார்த்து கொண்டிருக்கும் இறைவன், நான் செய்யும் தவறுகள் அனைத்தையும் பார்த்து கொண்டு தானே இருக்கிறான்?


என்னை பாவ செயல்களில் இருந்து இறைவனால் தடுக்க முடியாதா? ஏன் இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான்? அப்படியானால், இறைவன் கொடியவனா? இறைவனுக்கு ஏன் இந்த விபரீத விளையாட்டு?


மனம்: ஒன்றை நன்றாக புரிந்து கொள். உனக்குள் இருக்கும் ஆத்மாவும், இந்த அண்ட சராசரத்தை படைத்த பரமாத்மாவும் ஒன்றே. விண்ணில் இருக்கும் இறைவன் தான் உனக்குள்ளும் இருக்கிறான்.


நான்: நானும் அதை தான் கேட்கிறேன். இறைவனுக்கு ஏன் இந்த விபரீத விளையாட்டு?


மனம்: இறைவன் புனிதமானவன். அப்பழுக்கு அற்றவன். இந்த அளவிற்கு புனிதமும் பவித்ரமும் நிறைந்திருக்கும் எந்த வஸ்துவுமே இறைவன் தான்; அல்லது இறைத்தன்மையுடன் விளங்குபவர்கள்.


ஒரு உதாரணம் சொல்கிறேன் கேள். புனிதமே உருவான விதை நெல் ஒரு பாத்திரத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொள்

.

அந்த விதை நெல்லை வயலில் தூவி விட்டு, புனிதமான இறைத்தன்மை கொண்ட நெல் தான் விளையும் என்று இறைவன் எதிர்பார்த்தான் . நெற்பயிர்கள் விளைந்தன.


ஆனால், ஆயிரமாயிரம் விதை நெல்லில் இருந்து ஒரு விதை நெல்லோ இரு விதை நெல்லோ தான் இறை தன்மையுடன் முளைத்தன. . மீதி நெல் மணிகள் எல்லாமும் முளைத்தன. ஆனால், இறைவனுக்கு நிகரான புனிதத்தையும் பவித்திரத்தையும் இழந்து விட்டிருந்தன


பாத்திரத்தில் இருக்கும் வரை இறைவனுக்கு நிகரான புனிதத்தன்மையுடன் இருந்த நெல்மணிகள், வயல் வெளியில் தூவியவுடன் இறை தன்மையை இழந்து விடுகிறதே . என்ன காரணம்? இது யாருடைய தவறு? இறைவனின் தவறா? மண்ணின் தவறா? அல்லது பாய்ந்த நீரின் தவறா? மண்ணில் விழுந்தவுடன் தோஷப்பட்டு விட்டதே. நிச்சயமாக இறைவன் தவறு செய்யவில்லை.


விதை நெல்லாக விழுந்த அத்தனை நெல் மணிகளும் ஆரம்பத்தில் ஒன்று போலத்தான் இருந்தன. மண்ணில் விழுந்தவுடன் மண்ணின் தோஷங்கள் தாக்கின. மண்ணின் தன்மை தாக்கியது. ஆனால், ஒரு சில நெல்மணிகள் மட்டும் மண்ணின் தோஷங்கள் தங்களை தாக்காமல், வேண்டிய நீரை எடுத்துக்கொண்டு, புனிதத்தன்மை மாறாமல், தங்களை காத்துகொண்டு, இறைத்தன்மையுடனேயே முளைத்தன.


இந்த நெல்மணிகள் மட்டும் திரும்பவும் இறைவனின் பாத்திரத்திற்கே சென்று விட்டன. மற்ற நெல்மணிகள் முளைத்து, உதிர்ந்து, மீண்டும் முளைத்து, நெல் பயிராகவே இந்த மண்ணிலேயே தங்கி விட்டன.


ஜீவாத்மாக்களும் இது போலத்தான். கோடிக்கணக்கான ஆத்மாக்கள் ஒரு சரீரத்தை எடுத்து இந்த மண்ணில் பிறக்கின்றன. ஒரு சில ஆத்மாக்கள் மட்டுமே ஆயுட்காலத்தை முடித்துக்கொண்டு இறைவனின் பாதங்களை அடைந்து விடுகின்றன. மற்ற ஆத்மாக்கள், பிறந்து, பிறந்து, ஞானம் பெறாமலேயே பிறப்பு இறப்பு சுழற்சியில் மாட்டிக்கொள்கின்றன.


பிறப்பு, இறப்பு என்பது, பல கோடிக்கணக்கான வருடங்களாக நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஜனன மரண விளையாட்டு. ஜீவாத்மாக்களுக்கும் பரமாத்மாவிற்கும் இடையே ஏற்படும் இடைவெளி என்பது, ஆத்மாக்களின் கர்மாவை பொறுத்தது.


நான்: கேட்கவே ப்ரம்மிப்பாக இருக்கிறதே. இந்த விதை நெல் உதாரணம் மனிதனுக்கு எப்படி பொருந்தும்?


மனம்: அண்ட சராசரங்களையும் நொடிப்பொழுதில் படைத்த இறைவன், பரமாத்மா என்ற நிலையில் இருக்கிறான். இப்படிப்பட்ட பரமாத்மாவுக்கு ஒரு நாள் விபரீத ஆசை ஒன்று வந்தது.


எல்லா உயிரினங்களுக்குள்ளும் தானே அந்தராத்மாவாக அமர்ந்து கொண்டு, முக்கியமாக, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தானே அமர்ந்து கொண்டு, மனிதனுடைய இயக்கத்தை கவனித்து கொண்டே இருந்தால், எந்த நேரத்திலும், ஏதாவது ஒரு ஜென்மத்திலாவது மனிதன் தன்னுடன் வந்து ஐக்கியமாகி விட மாட்டானா என்ற ஏக்கத்தில் அமர்ந்து கொண்டே இருக்கிறான்.


ஆனால் நடப்பது என்ன? ஒவ்வொரு ஜென்மத்திலும் இறைவனை ஏமாற்றி விடுகிறீர்கள். நீங்களும் ஏமாந்து போகிறீர்கள்.


நான்: எனக்கு ஒரு சந்தேகம். மனிதனின் இயக்கத்தை ஏக்கத்துடன் கவனித்து கொண்டிருக்கும் இறைவனுக்கு, மனிதனின் இயக்கத்தை மாற்றி அமைத்து, புனிதம் மாறாமல், பவித்ரம் மாறாமல், தன்னுடன் ஐக்கியப்படுத்தி கொள்ள முடியாதா? இறைவனை இங்கே எது தடுக்கிறது?. இறைவனுக்கு மனமில்லையா? அல்லது இறைவன் மனிதர்களை கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்கும் கொடியவனா?


மனம்: உன்னை இன்னும் ஆழமாக அழைத்து சென்று சொன்னால் தான் உனக்கு புரியும் . நீ புரிந்துகொள்வது மட்டுமல்ல, இந்த உலகத்தில் வாழும் அத்தனை மனிதர்களும் புரிந்து கொள்ளட்டும். சொல்கிறேன். கேள்.


இறைவன் எல்லோர் மனதிலும் அந்தர்யாமியாக, ஜென்மஜென்மமாக உட்கார்ந்து கொண்டு காத்திருக்கிறான். இறப்பு என்னும் அனுபவத்தை ஒவ்வொரு நாளும் மனிதனுக்கு உறக்கம் என்ற பெயரில் கொடுத்துக்கொண்டே இருக்கிறான்.


ஆழ்ந்த உறக்கத்திலும், ஒவ்வொரு ஆத்மாவிடமும் இறைவன் ஒவ்வொரு நாளும் பேசிக்கொண்டே இருக்கிறான். இரவு தூங்கி காலையில் எழுந்தால் அதற்கு பெயர் தூக்கம். இந்த பிறவியில் தூங்கி அடுத்த பிறவியில் எழுந்தால் அதற்கு பெயர் ஜென்மம்.


நான்: அப்பப்பா எவ்வளவு பெரிய உண்மையை இன்று புரிந்து கொண்டேன்.


மனம்: இன்னும் நிறையவே இருக்கு. சொல்லறேன் கேட்டுக்கோ. உலகத்துக்கும் எடுத்து சொல்லு.


உயிர் பிரியும் நேரத்தில், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கும் இறைவன், அந்த ஆத்மாவிற்கு காட்சி கொடுப்பான். அப்பொழுது, மிகவும் வேதனையில் துடித்துக்கொண்டிருக்கும் ஆத்மாவிற்கு, இறைவன் தரிசனத்தை கண்டவுடன் முகத்தில் இருந்த வேதனை காணாமல் போய், முகத்தில் சாந்தி நிலவி விடும்.


தரிசனம் கொடுக்கும் அந்த நொடியில், ஜீவாத்மா, இறைவனின் காலை கட்டிக்கொண்டு கதறி அழும். அப்பொழுது பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் நடக்கும் சம்பாஷணை இதோ உங்களுக்காக.


ஜீவாத்மா: ஐயோ இறைவா . நான் வாழத்தெரியாமல் வாழ்ந்து விட்டேன். இனிமேல் எனக்கு பிறவியே வேண்டாம். என்னை உன்னுடன் கூட்டி சென்று விடு.


பரமாத்மா: இப்போ என் காலை கட்டிக்கொண்டு அழறதாலே என்ன பிரயோஜனம்? உனக்கும் எவ்வளவோ மனுஷப்பிறவி கொடுத்து, கர்மாக்களை கழிக்க வெச்சு வாழவைக்கிறேன்.ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது ? நீயும் ஒவ்வொரு பிறவியாக கர்மாக்களை சேர்த்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் ஒரு பிறவியை எடுத்து விடுகிறாய்


குழந்தையாக பிறந்த நீ, பல பருவங்களை தாண்டி, வாழ்ந்து, கர்மாக்களை சேர்த்துண்டே இருக்கே. மீண்டும் அறுபது வயதில் கொஞ்சம் ஞானம் பெறுகிறாய்.


மீண்டும் பிராணன் போகும் சமயத்தில் என் காலை கட்டிக்கொண்டு கெஞ்சுவாய்.எவ்வளவு பிறவியாக நானும் பார்த்து விட்டேன். நீயும் திருந்துவதாக இல்லை. நானும் உன்னை விடுவதாக இல்லை


ஜீவாத்மா: என்னால் முடியாது. நான் மீண்டும் பிறக்க மாட்டேன். என்னை உன்னுடன் அழைத்து செல்


பரமாத்மா: சரி, இந்த ஒரு பிறவி எடுத்து விடு. இதுவே கடைசி பிறவியாக இருக்கட்டும்.


ஜீவாத்மா: நான் மீண்டும் பிறந்து, இறக்கும் தருவாயில் உன்னிடம் வந்தால், எனக்கு கர்மாக்கள் இருக்கிறது என்று அழகாக சொல்லி, என்னை மீண்டும் பிறவி எடுக்க சொல்லுவாய். நான் மாட்டேன்.


பரமாத்மா: இதோ பார், நீ பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டே இரு. எப்பொழுது, “என்னால் வாழ முடியவில்லை”, என்று கைகளை உயர்த்தி சரணாகதி செய்து விடுகிறாயோ, அப்பொழுது, அந்த பிறவியே உனக்கு கடைசி பிறவியாக அமைந்து விடும்.உன்னுடைய ஜென்மாந்திரத்து கர்மாக்கள் முழுவதையும் கழித்து, உன்னை என்னுடன் ஐக்கியப்படுத்தி கொள்கிறேன்.


நான் உனக்குள் இருந்தாலும், உன்னுடைய செயல்களில் நான் தலையிட மாட்டேன். நீ செய்யும் செயல்களை கைகட்டி பார்த்திருப்பேன். உனக்கு பூரண ஸ்வதந்திரம் கொடுத்து விடுவேன். இதற்கு ஜீவ ஸ்வாதந்த்ரியம் என்று பெயர்.


எந்த ஒரு வயதிலும், எந்த நொடியிலும், “நான் பயணிக்கும் வாழ்க்கை பாதை சரியில்லை”, என்பதை உணர்ந்து, உடனே உன்னுடைய வாழ்க்கை பயணத்தை இறைவனை நோக்கி திருப்பி பயணிக்க ஆரம்பித்தால், நான் உன் வாழ்க்கையில் தலையிட்டு உன்னை கரையேற்றும் முயற்சியில் இறங்குவேன்.


நீ உன்னுடைய வாழ்க்கை பாதை தவறு என்பதை உணர வேண்டும். சரணாகதி செய்து என்னை அடைய உன் வைராக்கியத்தை காட்ட வேண்டும்.இப்படி செய்தால், இந்த பிறவியின் இறுதியில் உன்னை என்னுடன் ஐக்கியப்படுத்தி கொள்கிறேன்.


நான் என் மனத்திடம் கேட்டேன். இறைவன் மனம் என்ற ஒன்றை ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுத்து, பாவங்களை செய்ய வைத்து, மீண்டும் மீண்டும் பிறக்க வைத்து விடுகிறானே.


மனமே உன்னுடைய குணாதிசயங்கள் என்ன? நீ நல்லவனா ?கெட்டவனா? எப்பொழுது உனக்கு மேல் ஆத்மா வரும்? எப்பொழுதுமே ஆத்மாவை பின்னுக்கு தள்ளி, மனம் என்னும் நீயே வெற்றி பெறுகிறாயே.இதை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லேன்.


மனம்என்னிடம் பேசிய மௌன மொழியை, அடுத்த பதிவில் எழுதி, உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அதுவரை, உங்கள் மனதுடன் மௌன மொழியில் நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள். இதோ வந்து விடுகிறேன்.மனிதனை இயக்குவது மனம்

மனதை இயக்குவது கர்மா

மனதின் முதிர்வு, ஆத்ம ஞானம்

மனிதனின் முதிர்வு, இறைநிலை


என்னுடன் சேர்ந்து

உங்களையும் கரையேற்ற துடிக்கும்

உங்கள் சக ஆத்மா

GR மாமா


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர


165 views0 comments

Comments


bottom of page