• சாணு புத்திரன்

குரு புகழ்


பெரியவா சரணம்

கற்பக விருட்சத்தின் நிழலிலே இருந்து தவம் செய்தால் வேண்டிடும் வரங்களை பெற்றிடலாம் என்பதாகத் தானே நம் இதிகாச புராணங்கள் வாயிலாக அறிகின்றோம்! அப்படியான கற்பக விருட்சத்திற்கு ஈடான ஒரு திருவடி இந்தக் கலிகாலத்திலே நமக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அது நம் காஞ்சி ஸ்ரீமஹாஸ்வாமிகளின் திருவடி தானே! அந்தத் திருவடியிலே வீழ்ந்து சரணாகதியாகி பிரார்த்திப்பது என்பது இவ்வுலகு மட்டுமன்றி ஈரேழு பதினான்கு லோகங்களிலும் வியாபித்துள்ள குருமஹாரத்தினங்களுடைய பாதாரவிந்தந்தனிலே சரணாகி ஆகியதற்கு ஒப்பாகுமல்லவோ! இன்றைய குருப்புகழ் மூலமாக அப்படியானதொரு பிரார்த்தனையைச் செய்வோமே!

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

#குருப்புகழ் இருளென ரோக முடமதன் வாச மெதுமணு காத .................. கடமோடே யினிநலி யாத நிலைதனி லேகி பெறுநல மாக.................. சுகமோடே பெருவள மீயுங் குருவடி தேட வரமெனக் கீயு .................. முதல்வோனே பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாசி .................. அருள்வாயே வரமொடு கூடி யறிதற்கு மாதி குருவரு ளாசி .................. பெறவேண்டி திருவுரு காண மனமுற நாடி கதியுன தாகி .................. வருவேனே தருநிழல் போலே யருளிட வந்த சந்திர சேகர .................. குருநாதா இருவினை களையு மருட்தல காஞ்சித் திருத்தல மேவு .................. பெருமாளே!

பிரார்த்தனை விளக்கம்

எந்தன் வாழ்வினை இருட்டாக்கக் கூடிய வியாதிகளேதும் என்னை அணுகாமல், இனியும் நலியாத நிலையினிலே ஆனந்தமாக வாழ்ந்து சுகந்தனை உணரவைக்கக் கூடிய பெரியவ வளங்களை தரக்கூடிய குருவின் திருவடியிலே சரணாகதி அடையும் வரத்தினை எனக்கு நல்கிய முதல்வனே! ப்ராரப்த கர்மாவினாலே இனியும் பிறக்கவுள்ள பிறப்புகளிலும் நலியாத வாழ்வினை அருள்வாயாக! இப்பிறப்பிலே வரமாகப் பெற்ற ஆதி குருவினுடைய ஆசி பெறவேண்டி உந்தன் திருவுருவினைக் காண மனதார உனது திருவடிகளை நாடி வந்து நீயே கதி என சரண் அடையும் எனக்கு கற்பக விருட்சத்திற்கு ஈடான உந்தனுடைய திருவடி நிழலை அருள்வாயே! ஸ்ரீசந்த்ரசேகர மஹா குருவே! இரு வினைகளையும் களைந்து நல்வாழ்வு தரக்கூடிய புண்ணிய ஷேத்திரமான காஞ்சித் திருத்தலத்திலே அதிஷ்டானம் கொண்டு மேவியருளும் பெருமானே! குருவினுடைய திருவடிதனிலே சரணாகதி அடைந்தோமானால் சர்வ நிச்சயமாக நம் பாபங்களெல்லாம் தீர்ந்துவிடும். புண்ணியங்களை மட்டுமே செய்கின்ற நிலை நமக்கு ஏற்படும். இன்றளவிலும் நம்மையெல்லாம் காத்து ரக்ஷிக்கும் பொருட்டுத் தானே நாமெல்லாம் அன்போடு “புதுப்பெரியவா” என்றழைக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளும், “பாலபெரியவா” என அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளும் பரிபாலனம் செய்து வருகின்றனர். அவர்களுடைய பாதாரவிந்தங்களுக்கு நமஸ்கரித்து இன்றைய தினம் இந்தக் குருப்புகழினை உங்கள் அனைவரோடும் பகிரும் பாக்கியம் பெற்றமைக்கு ஆனந்தம் அடைகின்றேன்.

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.