• சாணு புத்திரன்

ஸ்ரீகுருப்புகழ்


பெரியவா சரணம்

மாதா பிதாவானவர்கள் நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்குகிறார்கள் என்று சொன்னால், இவ்வாழ்விலே நல்லனவெல்லாம் கற்றுத் தேர்ந்து, தர்ம நெறி தவறாமல் நாம் வாழ்ந்து தெய்வ அனுக்ரஹம் கூடி நல்லபடியாக வாழ வழிசெய்பவர்கள் நம் ஆசார்யன். இது நாம் யாவரும் அறிந்ததே! நாம் என்ன செய்கிறோம்..? ஆசார்யனுக்கு அனுதினமும் நமஸ்காரம் செய்கின்றோம். அது போதாதே! ஆசார்யன் அனுக்ரஹித்துக் காட்டிய வழிதனிலே செவ்வுற நடந்து கொள்ளவும் வேணுமல்லவோ! தர்ம வழி நாம் நடந்தோமானால் சகல தேவதைகளும் நம்மைத் தேடிவந்து அருள்புரிவர் என்பதாகத் தானே நம் மஹாஸ்வாமிகள் அருளினார்கள். எனவே முதற்கண் நம் மனத்தினிலே தர்மசிந்தனை ஏற்படவேண்டும்; தர்ம கார்யங்களிலே நாம் ஈடுபடுதல் வேண்டும்; தர்ம வழிதனிலே நம் வாழ்வும் பயணித்தல் வேண்டும் என்பதாகவே இன்றைய தினம் கலியுக தெய்வமான நம் ஆசார்யத் தேவன் ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாபெரியவாளிடம் ஒரு குருப்புகழ் கொண்டு துதித்து நமஸ்கரிப்போமே! சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர… #ஸ்ரீகுருப்புகழ் ....... சந்தம் ....... தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன ....... தனதான ....... பாடல் ....... முக்திக் கொருவழி சித்தத் தூயுற பக்திச் செயல்வழி ..... அடிபேணி சக்தித் தலமுறை சித்திச் சங்கர மொற்றிப் பணிவது .... முறையாமே புத்தித் தெளிவுற சுத்தத் திறமொடு நத்தித் தொழுதிட ..... வரம்வேண்டி எட்டுத் திசையுற பற்றித் தொழுபொரு ளெட்டித் திகழ்பதி ....... உனையண்டி பக்கத் துணையென மெத்தக் குருவுனை நத்திச் சரண்புக ........ நாடினமே சித்தச் சுவைபட புந்தித் திருவடி பற்றக் கவினுற ......... தொழுவோமே கச்சித் தலமுறை சக்தித் திருவரு ளுற்றுச் செவ்வரு ...... ளருளோனே முத்துச் சங்கர மொத்தச் செம்மலு மெச்சிச் சீரருள் ....... புரிவாயே!

எல்லாம் வல்ல பரப்ரம்மமூர்த்தியான பரந்தாமன் ப்ரத்யக்ஷ பரமேஸ்வர சசிசேகர சங்கரனின் அருளாசிதனிலே யாவரும் ஆனந்தமாக வாழ பிரார்த்திப்போம். குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.