• காயத்ரி ராஜகோபால்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-29 மைதிலி பாகம் -III


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-31

மைதிலி பாகம் -III

பிரதி திங்கட்கிழமை தோறும்

மைதிலியின் மூன்றாவது பிரார்த்தனை:

மைதிலிக்கு திருமணம் முடிந்தாக வேண்டும். எந்த பெண்ணுக்கும் அந்ததந்த வயதில் நடக்க வேண்டியது நடந்து விடும் திருமணம் உட்பட.… ஆனால் மைதிலிக்கு மட்டும் திருமணம் தள்ளிக்கொண்டே போனது. இதற்கு காரணம் மைதிலியின் பயம் தான்.

பெற்றோர்களுக்கு வயதாகிக்கொண்டே போகிறது. அவர்களுக்கும் தீர்மானம் செய்து விட வேண்டும் என்ற ஆதங்கம். நிறைய ஜாதகங்கள் வந்தாலும் எதுவும் சேரவில்லை. சேர்ந்தாலும் மைதிலியால் முடிவெடுக்க முடியாத நிலைமை.. அவளும் குழந்தைதானே. இந்த நிலையில் நான் மஹாபெரியவாளிடம் நின்று பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.

GR:பெரியவா மைதிலி வளர்ந்து விட்டாளே தவிர அவளுக்குள் பயம் நிறைய இருக்கு. ஒரு தீர்மானமான முடிவு எடுக்கமுடியவில்லை. அவளுக்கு அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா. அவளுக்கும் சீக்கிரம் ஒரு கல்யாணம் ஆகணும் பெரியவா என்றேன்

பெரியவா:. " அவோ ரொம்ப பயப்படறா.. நீ அவளோட அப்பா ஸ்தானத்தில் இருந்து யோசனை சொல்லு புரிஞ்சிண்டு ஏத்துப்பா என்றார்.

நானும் அடுத்த நாள் மைதிலியை அழைத்து பின்வருமாறு பேசினேன்.

நான் மைதிலியுடன் பழகியதில் இருந்து அவளிடம் கஷ்டங்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒன்று : தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப கணவன் இருப்பாரா.

இரண்டு: அவரிடம் வேண்டாத பழக்கங்கள் இருந்தால் என்ன செய்வது?.

மேற்படி சொன்ன இரண்டு விஷயங்களை பற்றி மைதிலியிடம் பின் வருமாறு பேச ஆரம்பித்தேன்.

மைதிலி உனக்கு வரப்போகும் கணவனிடம் நீ எதிர்பார்ப்பது தவறில்லை. ஆனால் ஒன்றை புரிந்து கொள். உன்னுடைய எதிர்பார்ப்பை போல உனக்கு வரப்போகும் கணவனுக்கும் எதிர்பார்ப்பு இருப்பதில் தவறில்லையே.?

உன்னுடைய எதிர்பாப்புகள் எல்லாவற்றையும் கொண்ட கணவன் கிடைப்பது என்பது மிகவும் கஷ்டம். வரப்போகும் கணவன் எதிர்பார்ப்பது அத்தனையும் உன்னிடம் உள்ளது என்பதை அறுதியிட்டு உன்னால் சொல்ல முடியுமா.? ஒரு வேளை நீ எதிர்பார்ப்பது அனைத்தும் கணவனிடம் இருப்பதாக வைத்துக்கொள்..

திருமணமும் ஆகிறது திருமணம் முடிந்த பின் உனக்கு ஒரு சில ஏமாற்றங்கள் இருக்குமாயின் அதை எப்படி எதிர் கொள்ள போகிறாய்.. வாழ்க்கையில் ஏமாற்றங்கள் என்பது இரு தரப்பிலும் சகஜம்., அதனால்தான் நம்முடைய பெரியோர்கள் பத்தில் இரண்டு பழுதில்லை. என்ற கணக்கில் இரு உள்ளங்களை இணைத்து வைத்தனர்.

நம்முடைய தாய் தந்தையரும் அப்படித்தான் இணைந்தார்கள்... ஏமாற்றங்கள் இல்லாமலா இருந்திருக்கும்,. அந்த ஏமாற்றத்திலும் அவர்கள் குடும்ப ஒற்றுமையை மட்டுமே தேடினார்கள். அவர்களுக்கும் ஒற்றுமை கிடைத்தது..குடும்ப பாரம்பரியத்தையும் காப்பாற்றினார்கள்.

இன்று நீ என்ன குறைந்து போய் விட்டாய்.. புள்ளி வைத்து நேர்கோட்டில் வாழுவதல்ல வாழ்க்கை....ஒரு நல்லபுரிதலும் சமாதானமும் செய்து கொண்டு வாழ ஆரம்பித்தால் வாழ்க்கை நொடிப்பொழுதும் இனிக்கும்.. ஏமாற்றங்களையே பாராட்டிக்கொண்டு நொடிப்பொழுதும் அழுத கண்களுடன் வாழ்க்கையை நடத்தினால் வாழ்க்கை நரகமாகி விடும்.

இத்தனை பேசிய பிறகு மைதிலி மனதில் ஒரு தெளிவு பிறந்ததை என்னால் உணர முடிந்தது.நான் அவளிடம் மேலும் சொன்னேன்

மைதிலி உன்னுடைய பெற்றோர்களும் பையனின் பெற்றோர்களும் பல கனவுகளை சுமந்து கொண்டு தங்களுடைய வாழ்நாள் பூராவும் ரத்தமும் வியர்வையும் சிந்தி சேர்த்த சேமிப்பில் இருந்து லக்ஷக்கணக்கில் செலவு செய்து திருமணம் என்ற பெயரில் இரு உள்ளங்களை இணைக்கிறார்கள்.

உங்களுடைய கடமை பெற்றோர்களின் மனம் கோணாமல் அவர்கள் சந்தோஷப்படும்படி வாழ்ந்து அவர்களின் மடியில் பேரக்குழந்தைகளை தவழ விட்டால் பெற்றோர்கள் மனமும் குளிரும்.. உங்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும்..உங்கள் குழந்தைகளும் நன்றாக உங்கள் பெற்றோர்களின் அரவணைப்பில் வளருவார்கள்..

இது இன்றைய இளைஞர்களுக்கு:

ஆனால் இன்று இளைஞர்களிடையே என்ன நடக்கிறது.. வீட்டின் பெயர் அன்னை இல்லம்.. ஆனால் அன்னையோ முதியோர் இல்லத்தில்.. பெற்றோர்கள் சொல்லிக்கொடுத்து வளர வேண்டிய குழந்தைகள் காப்பகத்தில் யாரோ முன் பின் தெரியாத முகவரி அறியாத ஒரு ஆயா அம்மா உங்கள் குழந்தைகளை வளர்க்கின்றனர்.

குடும்பத்தில் இரண்டு பாசங்கள் பொதுவாக குழந்தைகளுக்கு உருவாகும். ஒன்று தாயிடத்தில் பெற்ற பாசமும் தாத்தா பாட்டியிடத்தில் வளர்த்த பாசமும் உருவாகும்.

இன்று தாத்தா பட்டியிடத்தில் கிடைக்கும் அன்பும் பாசமும் கிடைக்காமல் ஏமாற்றம் அடையும் குழந்தைகளுக்கு உங்கள் மேல் கோபமும் வருகிறது. பாசமும் காணாமல் போகிறது.

இப்பொழுது புரிகிறதா? உங்களுக்கு.. அன்று இருந்த குடும்ப அமைப்பும் பாசமும் காணாமல் போயிற்றே. இன்னும் என்னவெல்லாம் காணாமல் போகப்போகிறதோ தெரியவில்லை. இன்னும் தொலைவதற்குள் விழித்துக்கொள்ளுங்கள்.

அன்று உங்கள் பெற்றோர்கள் சம்பாதித்தை போல நீங்கள் பலமடங்கு சம்பாதிக்கிறீர்கள். சந்தோஷம். ஆனால் அன்று இருந்த சந்தோஷம் இன்று காணோமே. எங்கே போயிற்று.

உங்கள் வங்கிக்கணக்கில் உங்களுடைய சேமிப்பு கோடியில் உயரலாம்.ஆனால் அன்று இருந்த சந்தோஷம் இன்று தெருக்கோடியில் கூட காண முடியவில்லையே. . இதை யோசித்தீர்களா.

இங்கு உங்கள் பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் காப்பாற்றி வந்த குடும்ப பாரம்பரியம் காணாமல் போய் விட்டதே. அன்று குடும்ப பின்னணியை வைத்து திருமணம் பேசி முடிப்பார்கள். ஆனால் இன்று என்ன நடக்கிறது. வங்கியில் சேமிப்பில் இருக்கும் தொகையையும் சொத்துக்களையும் வைத்துதான் திருணங்கள் பேசி முடிக்கப்படுகிறது.

வாழ்க்கைக்கு பணம் தேவைதான். இல்லையென்று சொல்லவில்லை.ஆனால் பணம் என்ற பெயரில் அன்பையும் பாசத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டு சந்தோஷத்தை எங்கோ தேடி அலைகிறீர்களே. கிடைத்ததா சந்தோஷம்?. கிடைக்காது.. எப்படி கிடைக்கும்.. தொலைத்த இடம் ஒன்று தேடும் இடம் ஒன்றாக இருக்கிறது..

இது மைதிலிக்கு மட்டும் அல்ல. மைதிலி போன்ற பல பெண்களுக்கும் ஆண்களுக்கும் நான் சொல்லும் ஒரு சிறிய அறிவுரை.. சந்தோஷம் வெளியில் எங்கோ கிடைப்பதல்ல. சந்தோஷம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது.உங்கள்மனம் தான் அது. மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் மனதின் கட்டுப்பற்றிற்குள் சென்று விடாதீர்கள். குடும்பமே காணாமல் போய் விடும்.. வாழ்க்கை வாழ்வதற்கே. இதை மனதில் நிறுத்தி வாழ கற்றுக்கொள்ளுங்கள்.இன்னும் எவ்வளவோ எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் உங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறதே. நேரத்திற்கும் ஒரு கட்டுப்பாடு இருக்கிறதே. என்ன செய்ய. இன்னொரு சமயத்தில் இன்னும் எழுதுகிறேன்.

மைதிலியின் திருமணம்:

எந்த ஒருவரின் திருமணமும் நேரம் காலம் ஒத்துவரும் வரை ஏதோ காரணத்தினால் தள்ளி போய்க்கொண்டே இருக்கும்.. நேரம் ஒன்று வந்து விட்டால் அது உங்களையோ என்னையோ கேட்காது. எப்படி முடிகிறது என்பது தெரியாது. ஆனால் திருமணம் கை கூடி வந்துவிடும்.

அப்படித்தான் மைதிலிக்கும் ஒரு வரன் வந்தது. இரு வீட்டாரும் ஜாதகப்பொருத்தம் பார்த்ததில் ஜாதகம் பொருந்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இங்கு ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். என்னை பொறுத்தவரை ஜாதகம் பார்ப்பது நம்முடைய இந்து மதத்தில் இன்றியமையாதது. எல்லாம் ஒரு வயது வரைதான்.. வயதையும் தாண்டிய திருமண முயற்சிக்கு ஜாதக பொருத்தத்தை விட மண மகன் மண மகள் இருவரின் மண பொருத்தம் தான் முக்கியம். ஒரு வயதுக்கு மேல் ஜாதக பொருத்தத்தை விட மணபொருத்தமும் இறைவனின் அனுகிரஹமும் இருந்தால் போதும்.

மஹாபெரியவா சன்னதியிலோ காமாட்சி சன்னதியிலோ அல்லது உங்களுக்கு எந்த தெய்வம் இஷ்ட தெய்வமோ அந்த சன்னதியில் பூ கட்டிப்போட்டு உத்தரவு கிடைத்தவுடன் திருமணத்தை காலாகாலத்தில் நடத்தி முடித்து விடுங்கள். ஜாதகம் என்பது வாழ்க்கைக்கு வழிகாட்டி.. அந்த ஜாதகமே வாழ்க்கையை சிதைத்து விடக்கூடாது.

மைதிலிக்கு ஒரு நல்ல வரன் வந்தது. பையனின் பெற்றோர்கள் மைதிலியை வந்து பெண் பார்த்தார்கள். பெற்றோர்களுக்கு மைதிலியை மிகவும் பிடித்து போனது. அடுத்த கட்டம் பையன் பெண்ணை பார்க்க வேண்டும். அதுவும் முடிந்தது.அடுத்தகட்டம் பயனும் பெண்ணும் தனிமையில் பேச வேண்டும் என்பது தான். அதுவும் நடந்தேறியது.

மைதிலியை பொறுத்தவரை பையன் திரிகால சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். பையன் இரு வேளை சந்தியா வந்தனம் செய்கிறார் என்பதை உறுதி செய்துகொண்டாள். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.என்பதை உறுதி செய்து கொண்டாள்..

பையனுக்கும் பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்து போனது. இருவரின் முடிவு என்ன தெரியுமா? இறைவன் ஒருவருக்காகவே இன்னொருவரை படைத்ததாக முடிவு செய்தார்கள். எல்லாமும் நெருங்கி வந்து விட்டது.

வழக்கமாக திருமணம் முடியும் தருவாயில் பெற்றோர்கள் ஒரு தடையை ஏற்படுத்துவார்கள்.. அல்லது பையன் பெண்ணின் மாமாக்கள் பிரச்னையை ஏற்படுத்துவார்கள்.,

அப்படித்தான் பையனின் வீட்டில் திருமணம் அவர்கள் ஊரிலே தான் நடக்க வேண்டும்.. காரணம் வீட்டில் நிறைய வயதான தாத்தா பாட்டிகள் இருக்கின்றனர். பெண்ணின் ஊருக்கு வர இயலாது.என்பது பையன் வீட்டாரின் கோரிக்கை. ஆனால் மைதிலிக்கு என்ன பிரச்சனை தெரியுமா ?

தன்னுடைய தந்தை வேலையில் இருந்து ஒய்வு பெற்று விட்டார். அவர் மைதிலியின் திருமணத்திற்கு செலவு செய்து விட்டால் திருமணத்திற்கு பிறகு தந்தை கஷ்டப்பட கூடாது என்ற எண்ணம் மைதிலிக்கு.

பையனின் வீட்டில் உறுதியாக சொல்லிவிட்டார்கள். திருமணம் அவர்கள் ஊரான பெங்களூரில் தான் நடக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லிவீட்டார்கள். இல்லாவிட்டால் வேறு வரன் இருக்கிறது. நீங்கள் கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்

வெண்ணை திரண்டு வரும் பொழுது தாழி உடைந்த கதையாக ஆகிவிடும் போல இருந்தது. மைதிலி என்னை அழைத்தாள். பிரச்னையை சொல்லி முடித்தாள். இறுதியாக விரக்தியில் இன்னொன்றும் சொன்னாள். மாமா என் தலையில் வேறு விதமாக எழுதி இருந்தால் யார் என்னசெய்ய முடியும்..நீங்களும் என்ன செய்ய முடியும்.. விட்டுவிடுங்கள் மாமா என் தலை விதிப்படி நடக்கட்டும் என்றாள்.

நான் சொன்னேன் மைதிலி நீ விரக்தியில் உளறுகிறாய்..எல்லாம் நல்ல படியாகத்தான் முடியும். இது மஹாபெரியவா ஏற்படுத்தி கொடுத்த சம்பந்தம், நான் நாளை காலையில் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்கிறேன். நீ பொறுமையாக இரு என்று அவளை சமாதானம் செய்தேன்.

மறு நாள் காலை மஹாபெரியவாளிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தேன்.

"பெரியவா மைதிலிக்கு நான் வேண்டிய அனைத்துக்கும் நீங்கள் பதில் கொடுத்தீர்கள். திருமண பேச்சு வார்த்தையும் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. இப்பொழுது திருமணம் எங்கு நடத்துவது என்பதில் ஒரு உரிமை பிரச்சனை வந்து விட்டது. மைதிலி மிகவும் மனம் உடைந்து போயிட்டாள். நீங்கள் அவளுக்கு ஒரு நல்ல தீர்வை கொடுங்கள் பெரியவா என்றேன்.

பெரியவா: ஏண்டா இவ்வளவு கவலை பட்டுண்டு இருக்கே. எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீயும் மனசிலே கஷ்டப்படாதே. அவளையும் கஷ்டப்படாமல் இருக்க சொல்லு.

நான்: கண்களில் கண்ணீருடன் மஹாபெரியவாளிடம் விடை பெற்றேன்.

நான் மைதிலியை அழைத்து மஹாபெரியவா சொன்ன விவரங்களை சொல்லி கவலை படாமல் இரு. எல்லாத்தையும் மஹாபெரியவா பார்த்துப்பா. திருமணம் உங்கள் ஊரில் தான் நடக்கும். எப்படி என்று கேட்டால் எனக்கு தெரியாது. ஆனால் மஹாபெரியவா ஒன்று சொல்லிவிட்டால் இந்தப்ரபஞ்சமே ஒன்று கூடி மஹாபெரியவா சங்கல்பத்தை நிறைவேற்றும். பொறுமையுடன் இரு என்று சொல்லி விடை பெற்றேன்.

சரியாக இருபத்தி நாலு மணி நேரம் கூட ஆகவில்லை. பையனின் வீட்டார் திருமணத்தை பெண்ணின் ஊரிலேயே நடத்துங்கள் என்று சொல்லிவிட்டார்கள் என்ற செய்தி என்னை வந்து அடைந்தது. மஹாபெரியவளே அவர்கள் கனவில் தரிசனம் கொடுத்து அவர்கள் மன நிலையை மாற்றியிருப்பாரோ. இருக்கலாம்.

மஹாபெரியவா அனுக்கிரஹம் எனது கல் இதயத்தை கூட கரைத்து விடுமே. பையன் வீட்டாரின் மனது எல்லாமே மாறிவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் மைதிலிக்கு திருமணம். இந்தப்பதிவு வெளி வரும் நாளில் மைதிலியின் திருமணம் முடிந்திருக்கும்.(தற்பொழுது கிடைத்த செய்தி திருமண தேதி குறித்தாகி விட்டது.இன்னும் மூன்று மாதங்களில் திருமணம்.)

உங்களுடன் சேர்ந்து நானும் என் நன்றியை மஹாபெரியவாளுக்கு சொல்லுகிறேன்.திருமண தம்பதிகள் இன்று போல என்றும் வாழ்க என்று வாழ்த்துவதோடு அவர்கள் பதினாறும் பெற்று வளமோடு வாழ வேண்டும். இருவர் குடும்பம் மூவராகட்டும்.

மஹாபெரியவா சரணம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்திரி ராஜகோபால்