• காயத்ரி ராஜகோபால்

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-058


மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-058

பிரதி செய்வாய்க்கிழமை தோறும்

ஓரிருக்கை மணி மண்டபம் பிறந்த கதை

மஹாபெரியவா ஒன்றை மனதில் நினைத்து

சங்கல்பம் செய்துவிட்டால்

பிரபஞ்சமே ஒன்று கூடி சங்கல்பத்தை

நிறைவேற்றி விடும்

இந்த பதிவே ஒரு ஆதாரம்

ஒரு நாள் மாலைப்பொழுது மஹாபெரியவா தன்னுடைய கைங்கர்ய மனுஷாளுடன் வந்தவாசி சாலையில் நடை பயணமாக சென்று கொண்டிருந்தார். மேற்கில் பொன்னிறத்தில் கதிரவன் கீழே இறங்கி கொண்டிருந்த மந்தமாருத மாலை நேரம்.

ஓர் மணல் மேடான பகுதி. நன்றாக கண்களை கவரும் வண்ணம் பூச்செடிகள் வளர்ந்து நிற்கின்றன. அருகே ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்த நீர்த்தடம். இவைகளை பார்த்த மஹாபெரியவா தன்னுடைய சிப்பந்தி வேதபுரி மாமாவிடம் சொல்கிறார்.

ஏண்டா வேதபுரி இந்த இடம் எவ்வளவு ரம்யமா இருக்கு என் கண்ணுலேயே இருக்குடா. தூங்கினாலும் இந்த இடம்தான் என் கண்ணுக்கு தெரியறது என்றார்.

இந்த பிரபஞ்சத்திற்கே மஹாபெரியவா தெய்வம்..பிரபஞ்ச தெய்வம் நினைத்து விட்டால் இந்த பிரபஞ்சம் முழுவதுமே எதிரொலிக்குமே. ஆம் எதிரொலித்தது. அந்த இடம் வாங்கப்பட்டது.

அங்கே மஹாபெரியவாளுக்கு ஒரு மணி மண்டபம் கட்டவேண்டும் என்ற எண்ணங்கள் ஒவ்வொருவர் சிந்தனைகளையும் தூண்டியது..அந்த இடம் தான் இன்று காணும் ஓரிருக்கை மஹாபெரியவா மணி மண்டபம்.

ஓரிருக்கையில் மஹாபெரியவாளுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று முடிவான நிலையில் மணிமணி மண்டபத்தை எழுப்புவதற்கு ஏராளமான பணமும் பொருளும் தேவை பட்டது. தேவை பட்டது அனைத்தும் கிடைத்து விட்டது. ஒன்றை தவிர. அதுதான் கருங்கற்கள்

மணி மண்டபத்தை கருங்கல் தூண்களால் தான் கட்டவேண்டும் என்று முடிவாகியது. ஆனால் அந்த இடத்தில கருங்கல் கிடப்பது கஷ்டம் மட்டுமல்ல. கிடைக்காது என்பதுதான் உண்மை. மஹாபெரியவா நினைத்து விட்டார். கருங்கல்லும் கிடைத்தது எப்படி தெரியுமா?

சென்னையில் சுவாமி விவேகானந்தருக்கு கருங்கல்லால் மிகப்பெரிய தியான மண்டபம் எழுப்பவேண்டும் என்று அவரது சீடர்கள் முயன்று மிகவும் சிரத்தையுடன் கட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் குறித்த நேரத்தில் மண்டபத்தை கட்டி முடிக்க முடியாது என்ற நிலை..

அந்தக்கட்டிடத்தை கட்டி தருவதற்கு பொறுப்பாளரான பொறியாளர் சொல்லிவிட்டார். நாம் கருங்கற்களால் கட்டினால் குறித்தநேரத்தில் முடிக்க முடியாது.ஆகவே கருங்கற்களால் கட்டுவதை விடுத்தது நாம் பளிங்கு கற்களால் கட்டினால் குறித்த நேரத்தில் முடிப்பது மட்டுமல்ல. பார்வைக்கும் மிக அழகாகஇருக்கும் என்று சொன்னார்..பொறியாளர் யோசனையை கட்டுமானக்குழுவினர் ஏற்றார்கள்.. ஆனால் இருக்கும் அவ்வளவு கருங்கற்களை என்ன செய்வது என்ற கவலை அவர்களுக்கு..

ஓரிருக்கை கட்டுமானக்குழுவினர் விவேகானந்த தியான மன்ற குழுவினரை சந்திக்கின்றனர். ஓரிடத்தில் தேவைப்படாத கருங்கற்கள் இன்னொரு இடத்தில் தேவை படுகிறது. அந்த கற்களை கொண்டுதான் ஓரிக்கை மண்டபம் எழுப்பப்பட்டது. இன்று நம் கண்களையும் எண்ணங்களையும் கொள்ளை கொள்ளும் ஓரிருக்கை மணி மண்டபம் வாணுயர்ந்து நிற்கிறது.

நான் அடிக்கடி எழுதும் வாக்கியம் : மஹாபெரியவா ஒரு விஷயத்தை மனதில் சங்கல்பம் செய்துவிட்டால் இந்த பிரபஞ்சமே ஒன்று கூடி அந்தசங்கல்பத்தை உண்மையாக்கிவிடும் என்றவாக்கியம்.

இப்பொழுது புரிகிரிதா உங்களுக்கு. மஹாபெரியவா சங்கல்பித்தார். பிரபஞ்சம் கை கோர்த்தது.எண்ணங்கள் உண்மையாக உருமாறியது. ஓரிருக்கை மணி மண்டபமும் இன்று வளர்ந்து நிற்கிறது.

ஒரு ஆத்மா நன்றாக இருக்கவேண்டும் என்று மஹாபெரியவா நினைத்து விட்டால் அந்தப்பிரபஞ்சமே ஒன்று கூடி அந்த ஆத்மாவை கரையேற்றி விடும். . இதற்குத்தான் மகாபெரியவா கையால் ஒரு சொட்டு தீர்த்த பிரசாதம் கிடைக்காதா என்று வாழ்நாள் முழுக்க ஏங்கி நீண்ட வரிசையில் நின்று தீர்த்தம் கிடைத்தவுடன் ஆத்ம தாகத்தை தீர்க்க அந்த சொட்டு தீர்த்தத்தை உட்கொள்ளும் ரகசியம்.

மஹாபெரியவா நிழல் நம்மீது பட்டால்

செய்த பாவங்கள் எரிந்து சாம்பலாகும்

மூச்சு கற்று நமீது பட்டால் உள்ளம் தூய்மையாகும்

பார்வை பட்டால் எண்ணங்கள் தூய்மையாகும்

ஸ்பரிசம் கிடைத்தால் நொடி பொழுதில் நோய்கள் அகலும்

கையால் பிரசாதம் கிடைத்தால் ஆத்ம தரிசனம் கிடைக்கும்

மனத்தில் இடம் பெற்றால் பிறவிப்பிணியில்

இருந்து விடுதலை கிடைக்கும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்