• காயத்ரி ராஜகோபால்

குரு பூஜை அற்புதங்கள் -15 புதிய அற்புதம் சங்கரன்- வசந்த கல்யாணி


உருகும் பக்தியும் வானளவு நம்பிக்கையும் இருந்தால் பக்தர்களின் அழைப்புக்கு விஞ்ஞானத்தை கூட வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து விடுவாயோ இதோ சங்கரன் வசந்தகல்யாணி குடும்பம் சொல்கிறதே எதிலும் உனக்கு நிகர் நீதான்

குரு பூஜை அற்புதங்கள் -15 புதிய அற்புதம்

சங்கரன்- வசந்த கல்யாணி

(மகன் சித்தி உறவு)

நானும் கடந்த ஓராண்டுக்கு மேலாக பலரது மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன் . அந்த அற்புதங்கள் எல்லாமே ஒவ்வொரு கோணத்தில் சிறப்பு வாய்ந்தவை.

ஆனால் நான் எழுதும் பொழுதே நான் என்னையே இழந்த அற்புதங்கள் ஒரு சில. அப்படி நான் என்னையே இழந்த அற்புதங்களில் சங்கரன் வசந்தகல்யாணி அனுபவித்த அற்புதமும் ஒன்று,

இவர்கள் வாழ்க்கையில் மஹாபெரியவா குரு பூஜை ஒரு அற்புதத்தில் ஆரம்பித்து ஒன்பதாவது வாரம் மற்றொரு அற்புதத்தில் முடிந்தது இன்னும் என்னை வியக்க வைக்கிறது.

இருபது ஆண்டு கால வறுமை ஒரே இரவில் துடைத்து எறியப்பட்ட அற்புதத்தை நாம் எல்லோருமே அனுபவித்தோம். அன்று முதல் இன்று வரை இவர்கள் வாழ்வில் மஹாபெரியவா அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. அப்படி நடந்த அந்த அற்புதங்களில் இருந்து இரண்டு அற்புதங்களை வசந்த கல்யாணியும் சங்கரனும் எனக்கு எழுதி அனுப்பினார்கள்.

அந்த அற்புதங்களை உங்களுக்காக இதோ இன்று சமப்பிக்கிறேன். அவர்கள் எழுதி அனுப்பியதையும் உங்களுக்காக தனி பதிவாக வெளியிட்டுளேன். இனி அற்புதங்களுக்குள் நுழைவோம்.

அற்புதம் நடந்த நாள் நாள் - .02/09/2017

எல்லா குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் எவ்வளவோ சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் சொல்லிக்கொடுப்பவை எல்லாமே மனதில் நின்று விடுகிறதா. இல்லையே. ஏதோ சொல்வதில் ஒரு சிலது தான் வாழ்க்கையின் இறுதி வரை நிற்கிறது.

அப்படி இன்று வரை வசந்த கல்யாணி சகோதரிகள் சங்கரன் மனதில் நிலைத்து நிற்பது "இருப்பதை வைத்து சந்தோஷப்படு.இல்லாததற்கு ஏங்கி இருக்கும் சந்தோஷத்தை இழந்து விடாதே" என்பதுதான் அவர்கள் பெற்றோர்கள் சொல்லிக்கொடுத்த பாடம்.

மூத்த சகோதரிக்கு மட்டுமே திருமணம் ஆகி இருக்கிறது.இரண்டு சகோதரிகள் திருமணமே செய்து கொள்ளவில்லை.மூத்தசகோதரிக்கு இருக்கும் ஒரே மகன் சங்கரனை தங்களுடைய மகனாக மூன்று பேருமே பாவித்து தங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்து விட்டனர்.

விட்டுக்கொடுப்பது தியாகம் என்பது இவர்களின் குடும்பத்து சொத்து என்று நான் நினைக்கிறன்.தங்களுடைய வாழ்க்கையே தியாகம் செய்து மூத்த சகோதரி மற்றும் இரு சித்திகள் சங்கரனை படிக்க வைத்து நல்ல ஒரு பொறியாளராக ஆக்கி விட்டார்கள்.

மஹாபெரியவா குரு பூஜை வாரங்களில் இவர்கள் வறுமையில் வாடினாலும் மழையில் நனைந்தாலும் மஹாபெரியவா ப்ரசாதத்திற்கு ஒரு குறையும் இல்லாமல் மஹாபெரியவாளை மழையால் நனையாமல் இருக்க குடை பிடித்துக்கொண்டே நூற்றி எட்டு ப்ரதக்ஷிணம் செய்வார்கள் .

இவர்களின் உண்மையான பக்தியை மஹாபெரியவா பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார். இவர்கள் பக்தி ஒரு நாளும் குறையாமல் பார்த்துக்கொள்வதில் இவர்கள் அனைவருமே கவனமாக இருக்கிறார்கள். இவர்கள் அழைக்கும் குரல் கேட்டு நொடிப்பொழுதில் ஏன் என்று கேட்கிறாரே மஹாபெரியவா.எப்படி அது. உருகும் பக்தியும் வானளவு மஹாபெரியவா நம்பிக்கையும் இருப்பதால்தானே.

மேலே குறிப்பிட்ட தேதியில் இவர்கள் இல்லத்தில் ஒரு அற்புதம் என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.

இன்று எல்லோருக்குமே பொழுது போக்கு அம்சங்கள் நிறையவே உள்ளன.திரைப்படங்கள் சுற்றுலா தொலைக்காட்சி போன்றவைகளே அவை. பொருளாதர நிலையில் மிகவும் பின் தங்கி இருப்பவர்களுக்கு வெளி உலக தொடர்பு அற்றவர்களுக்கு தொலை காட்சிதானே உலகம்.

மேலே குறிப்பிட்ட தேதியில் மாலை சுமார் ஏழு மணி இருக்கும். அன்றைய அலுவல்களை முடித்து விட்டு சகோதரிகள் மூன்று பேரும் தொலை காட்சி பெட்டிக்கு முன்னே உட்கார்ந்து ஒரு பெரு மூச்சோடு மின் இணைப்பை போட்டார்கள். பத்து நிமிடம் ஆகியும் தொலை காட்சி பெட்டியில் உயிர் வரவில்லை. இவர்களே ஒரு மின் சாதன பொறியாளராக மாறி என்னென்னமோ செய்து பார்த்தார்கள்.ஒன்றும் பயனில்லை.

மூன்று பேரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவர்களுக்கு தெரிந்த ஒரு மெக்கானிக்கை வரவழைப்பது என்று. மெக்கானிக்கை அழைத்தார்கள். அவரும் வந்து பார்த்து விட்டு இது பழைய தொலைக்காட்சி பெட்டி. இந்த பழுதான பாகம் கிடைப்பது கஷ்டம் இருந்தாலும் முயன்று பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். கூடவே பழுதடைந்த பாகத்தையும் எடுத்துச்சென்றார்.

மூன்று நான்கு நாட்கள் ஆகியும் அவரிடம் இருந்து பதில் இல்லை இந்த நிலையில் டிவி கம்பெனி மெக்கானிக்கை அணுகி கேட்டார்கள். அவரும் வந்து பார்த்து விட்டு இந்த பழுதடைந்த பாகம் கிடைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டு சென்றார். மொத்தத்தில் சுத்தமாக பொழுது போக்கு என்பது நான்கு நாட்களாக கிடையாது.

சற்று யோசித்து பாருங்கள். காலையில் இருந்து வீட்டு வேலைகள். கை கால் அசந்து போன நிலையில் தொலை காட்சி பெட்டிமுன்பு அமர்ந்து உடல் அசதியை மறக்கலாம். இந்த நிலையில் என்ன செய்வது இவர்களுக்கு தெரிந்த ஒரே ஆபத் பாந்தவன் மஹாபெரியவா ஒருவரே.

அன்று மாலை மஹாபெரியவா முன்பு அமர்ந்து விளக்கேற்றி வைத்து சகோதரிகள் மூவரும் பிரார்த்தனை செய்தார்கள். என் கற்பனையில் அவர்களின் பிராத்தனை உங்களுக்காக இதோ.

"பெரியவா எங்கள் பிரார்த்தனையை ஏற்று ஒரே இரவில் குடும்ப நிலைமையை தலைகீழாக மாற்றினீர்கள். குடும்பம் ஒரு நல்ல நிலைமைக்கு வருவகற்கு இன்னும் இரண்டு மாதமாவது ஆகும்.

இந்த நிலைமையில் எங்கள் ஒரே பொழுதுபோக்கு சாதனமான தொலைக்காட்சி பெட்டி பழுதாகி விட்டது. நாங்களும் நான்கு நாட்களாக போராடுகிறோம். எங்களுக்கு நீங்கள் கொஞ்சம் கருணை காட்டி அருள்புரிய கூடாதா.என்று தான் பிரார்த்தனை செய்திருக்க வேண்டும். இது என் கற்பனையில் உதித்த அவர்களது பிரார்த்தனை.

பிரார்த்தனையை முடித்து மூன்று சகோதர்களும் கண்ணை மூடி த்யானம் செய்தனர்.

வாசலில் அம்மா என்ற ஒரு குரல். வெளியில் வந்து பார்த்தால் முதலில் வந்த டிவி மெக்கானிக். மெக்கானிக் சொல்கிறார் "அம்மா எப்படியோ பழைய பழுதான பாகத்தை ஒத்த பாகம் இன்று தான் கிடைத்தது. இதை தொலை காட்சி பெட்டியில் போட்டு விடுகிறேன் என்றார்.

அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். தொலை காட்சி பெட்டியில் அந்த பாகத்தை பொருத்தினார். தொலை காட்சி பெட்டிக்கு உயிர் பெற்றது. வந்தது மெக்கானிக்கா அல்லது மெக்கானிக் உருவில் மஹாபெரியவாளா.

யாராக இருந்தாலும் சகோதரிகளின் பிரார்த்தனைகள் பலித்து விட்டது. உங்கள் எல்லோருக்குமே தெரியும் இந்த சகோதரிகளின் பக்தியை பற்றி தெரியும்.

தங்களுடைய சௌகரியங்கள் ஒரு பொருட்டே இல்லை. தங்கள் வயிற்று .பசி ஒரு பொருட்டே இல்லை.மழையோ வெய்யிலோ மஹாபெரியவா நனைந்து விடக்கூடாது என்பதில் எவ்வளவு ஒரு காதலுடன் பக்தியுடன் குரு பூஜை செய்தார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

இந்த பக்திக்கு இறங்கி வராத சிவபெருமான் வேறு எந்த பக்திக்கு இறங்கி வருவான். பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா இறங்கி வந்து இன்றும் அவர்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் கோவில் கொண்டுள்ளார். இந்த பக்தி நமக்கெல்லாம் ஒரு உதாரணம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்