• காயத்ரி ராஜகோபால்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்


ஒரு சிந்தனையினாலோ செயல்களாலோ

தன்மீது களங்கமோ இல்லை அழுக்கோ

பட்டு விடக்கூடாது என்பதில் மஹாபெரியவா

மிகவும் கவனாக இருந்த சம்பவங்கள் ஏராளம்

அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இந்த பதிவ

படித்து மேலும் மஹாபெரியவா என்னும்

பிரபஞ்ச பொக்கிஷத்தை

அறிந்து கொள்ளுங்கள்

*******

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-010

சன்யாசம் என்பது பிடித்ததை விடுவதுமட்டுமல்ல

பிடிக்காததை ஏற்றுக்கொள்வதும் தான்

ராமா அவதாரம் கிருஷ்ணா அவதாரம் என்பது போலெ மஹாபெரியவா ஒரு ஈஸ்வர அவதாரம். சன்யாசத்திற்கு இலக்கணம் வகுத்து அதை வாழ்க்கையில் கடைப்பித்தும் வாழ்ந்தும் காட்டியவர் நம் மஹாபெரியவா. .மறந்தும் சன்யாச நெறி பிறழா மஹாபெரியவா, தன இறுதி மூச்சிருக்கும் வரை தன் சன்யாச வாழ்க்கையை போற்றியும் பாதுகாத்தும் வாழ்ந்தும் வந்தார்.

நாம் எல்லாம் கோவிலில் அடிப்பரதக்ஷணம் செய்வோம் நாமும் நம் குடும்பமும் நன்றாக இருப்பதற்கு. ஆனால் இந்தியாவையே கோவிலாக நினைத்து இந்திய மக்களின் நலனுக்காக இந்தியாவையே அடிப்பரதக்ஷணம் செய்தார் நம்முடைய மஹாபெரியவா..

மஹாபெரியவா கால்நடைப்பயணமாகவே சிற்றூர்களுக்கும் பெரிய நகரங்களுக்கும் சென்று அங்கு தங்கி அங்குள்ள மக்களுக்கு நம்முடைய வேதத்தின் உயர்வு பற்றியும் இந்து மத தர்ம சிந்தனை மற்றும் அதன் வாழ்க்கைநெறிமுறை பற்றியும் போதித்து வந்தார்.

நினைத்துப்பாருங்கள் மஹாபெரியவா என்னும் அவதாரம் இல்லாமலிருந்திருந்தால் நம்முடைய வாழ்க்கை நெறிமுறைக்கும் காட்டில் வாழும் மிருகங்களின் நெறிமுறைக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழுந்துகொண்டிருப்போம்.

மஹாபெரியாவளின் மனிதனை மனிதனாக்கும் முயற்சி முழுமையான வெற்றியடைந்ததா என்பது எனக்கு தெரியவில்லை.ஆனால் ஒன்று சர்வ நிச்சயம் மனிதன் இன்னும் மிருகமாகவில்லை. மனிதனாகவே நீடிக்கிறான்.

வாருங்கள்-அற்புதசாரல்களுக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன்

இப்படியிருக்கையில் ஒரு நாள் மஹாபெரியவா ஆந்திரப்ரதேசத்திலுள்ள விஜயவாடா என்னும் ஊருக்கு சென்றார். அங்கு தங்கி பக்தர்களுக்கு தரிசனமும் இந்துமத போதனைகளையும் செய்து வந்தார்.

அப்பொழுது பெரியவாளுக்கு வயது அறுபது.

விஜயவாடாவிலிருக்கும் பக்தர்களுக்கு ஒரு ஆசை. மஹாபெரியாளின் சஷ்டியப்த பூர்த்திக்கு தங்கள் அன்பு காணிக்கையாக ஏதாவது செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். முடிவாக எல்லோரும் பணம் வசூல் செய்து தங்கத்தினாலான தலைக்கிரீடம் ஒன்று செய்வோம் என்று முடிவு செய்தார்கள்.

இதுபற்றி மஹாபெரியவாளுக்கு எதுவும் தெரியாது.

சன்யாசத்திற்கு ஒரு இழுக்கு வருகிறதென்றால்

பிரபஞ்சத்திலுள்ள பஞ்ச பூதங்களும் ஒன்றாக இணைந்து

அவதார புருஷர்களை காப்பாற்றிவிடும்

அது அவர்களுக்குள்ளே இருக்கும் எழுதப்படாத இறைவிதி

அன்று இரவு மஹாபெரியவா தன் கடமைகளை முடித்துவிட்டு வழக்கமான நேரத்தில் படுக்கச்சென்றார். ஆனால் தூக்கம் வராமல் மிகவும் அவதிப்பட்டார். எவ்வளவு முயன்றும் தூக்கம் வரவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது. ஆம் தன்னைச்சுற்றி ஏதோ ஒன்று நடந்துகொண்டிருக்கிறது என்று மட்டும் புரிகிறது. தனக்கு கைங்கர்யம் செய்யும் மனுஷாளை அழைத்து தனக்கு தூக்கம் வரவில்லை என்ன காரணம்னு தெரியல்லே. உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என்று கேட்டார்கள்.

கைங்கர்ய மனுஷாளுக்கு தெரியும் எதுவும் மஹாபெரியவாளுக்கு தெரியாமல் நடக்காது என்று..அப்பொழுது கைங்கர்யமனுஷாள் அவாளுக்குள்ளேலய பேசி ஒரு விஷயத்தை மஹாபெரியவாளிடம் சொல்லிவிட தீர்மானித்தார்கள். கைங்கர்ய மனுஷாளில் முக்கியமான ஒருத்தர் மஹாபெரியவளிடத்தில் பின்வருமாறு சொன்னார்.

"பெரியவா, விஜயவாடா பக்தர்கள் எல்லாரும் சேர்ந்து பணம் வசூல் செய்து தங்களுக்கு தங்கத்தினால் ஆன கிரீடம் செய்து, தங்களுடைய அறுபதாவது வயதில் உங்கள் சிரஸில் (தலை) சாத்த முடிவுசெய்துள்ளார்கள்."

இதைக்கேட்ட மஹாபெரியவா கைங்கர்ய மனுஷாளிடம் சொன்னார்." நான் ஒரு சன்யாசி. என்னோட காவி துணியும் தண்டமும் தவிர எனக்குன்னு எதுவுமில்லை. அப்படியிருக்க எனக்கு தங்கம் எதுக்குடா. அதெல்லாம் வேண்டான்னு அவாகிட்டே சொல்லிடுங்கோ. கைங்கர்ய மனுஷாளும் பக்தர்களிடம் அவர்கள் மனது புண்படாமல் விஷயத்தை தெரிவித்தார்கள். ஆனால் பக்தர்களுக்கு பெரிய ஏமாற்றம்.

பக்தர்கள் முடிவாக மஹாபெரியவாளிடமே நேராக கேட்டு அனுமதி பெற்றுவிடலாம் என்று தீர்மானித்து மஹாபெரியவாளை நேரில் பார்த்து தரிசினம் செய்து அனுமதி கேட்டனர். மஹாபெரியவளும் மறுத்துவிட்டார் .

பக்தர்களுக்கு ஏமாற்றம்.இருக்காதா பின்னே. நேரில் பரமேஸ்வரன் அவதாரம்.இந்த வாய்ப்பை விட்டால் பின் எந்த ஜென்மத்தில் இது நடக்கும். ஆகவே பக்தர்கள் அனைவரும் மஹாபெரியவாளை மிகவும் நிர்பந்தம் செய்தார்கள். இறுதியில் மஹாபெரியவா பக்தர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு சம்மதித்தார்கள்.

அறுபதாவது வயது ஜென்ம நக்ஷத்திர நாளில் தங்க கிரீடத்தை செய்து முடித்து மஹாபெரியவாளிடம் சமர்பித்தார்கள். மஹாபெரியவாளும் பக்தர்களை சிறிது நேரம் காக்கவைத்துவிட்டு ஒரு காரியம் செய்தார். ருத்திராக்ஷரத்தை தன் தலையில் சுற்றிக்கொண்டு அதன் மேல் தங்க கிரீடத்தை வைக்கச்சொன்னார்கள்.

உங்களுக்கு புரிகிறதா - தங்கம் தன் தலையிலும் படவில்லை.உடம்பிலும் படவில்லை. ருத்திராக்ஷரத்தின் மேல் வைத்ததால் அது அந்த சிவபெருமானுக்கு சாத்தியதாகவே ஆகும். மஹாபெரியவாளும் தங்க கிரீடத்தை தன் தலையில் வைத்து தரிசனமும் கொடுத்துவிட்டார்கள். பக்தர்களுக்கு ஏக சந்தோஷம். தங்கள் அன்பு காணிக்கையாக பெரியவாளுக்கும் மரியாதை செய்துவிட்டோம். ஸ்ரீ மடத்திற்கும் தங்கத்தை காணிக்கையாக்கிவிட்டோம்.

பக்தர்களின் சிந்தனை இப்படியிருக்க மஹாபெரியவாளின் சிந்தனை வேறு விதமாக இருந்தது. ஒரு சன்யாசி எப்படி தங்கத்தை ஏற்றுக்கொள்வது.அப்படி ஏற்றுக்கொண்டால் என் சன்யாச இலக்கணத்திற்கு இழுக்கல்லவா.

உடனே அந்த பக்தர்களிடம் சொன்னார். இந்த தங்க கிரீடம் என் தலையில் இருப்பதைவிட தஞ்சை பெரியகோவிலில் இருக்கும் ராஜ ராஜ சோழன் தலையிலிருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி இதை ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது சதய விழா வரப்போகிறது.

அந்த நன் நாளில் இந்த தங்க கிரீடத்தை அவன் தலையில் சாத்தி விடுங்கள். அது தான் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி தான் கிரீடத்தை அவர்களிடமே கொடுத்து விட்டார்கள். இதை கேட்ட பக்தர்களின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஸ்ரீகார்ய மனுஷாளின் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர்.

இதை நான் என் ஒருவிரலில் இந்த நிகழ்வை எழுதும்பொழுது என் கண்களிலும் கண்ணீர். நான் ஒவ்வொரு முறை மஹாபெரியவா என்று அடிக்கும் பொழுதும் என் உடம்பில் என்னமோ இனம் தெரியாத ஆனந்தம். கோடி ருபாய் கிடைத்தால் கூட அப்படியொரு ஆனந்தம் கிடைக்காது. ஏதோ எனக்கு அந்த கைலாயத்திலேயே ஒரு இடம் கிடைத்து விட்ட ஆனந்தம். என்னால் இதற்கு மேல் விவரிக்க முடியவில்லை.

கண்களில் கண்ணீருக்கு காரணம்" ஒரு சிற்பி சிலையை உளி கொண்டு செதுக்குவது போல் தன்னையே ஒரு சிற்பி போல் செதுக்கி செதுக்கி நொடிப்பொழுதும் தன் பரமேஸ்வர ஸ்வரூபத்தை காப்பாற்றிக்கொண்டிருந்தார்.

நம்முடைய வாழ்க்கையும் அப்படித்தானே

நம்முடைய வாழ்க்கை நம்மையெல்லாம்

அனுபவம் என்னும் உளி கொண்டு செதுக்குகிறது.

உளி வலி என விழுந்தால் கற்கள் சிற்பம் ஆகாது.

நாமெல்லாம் அனுபவம் என்னும் சிற்பி செதுக்கிய சிற்பம்.

படிக்கற்களாக இருக்கலாம்

அமரும் இருக்கைகளாக இருக்கலாம்.

நாமெல்லாம் ஒருவிதத்தில் நல்லவர்கள் தான்.

ஆனால் நல்லவர்கள் என்ற பட்டியலில்

நம்மையும் ராஜராஜ சோழனையும் ஒன்றாகப்பார்க்கமுடியுமா.

தன்னயே சிற்பி போல் செதுக்கிக்கொள்ளும்

மஹாபெரியவாளுக்கு

ஈடு இணை ஏது

மஹாபெரியவா -பரமேஸ்வரன் இருவரும் ஒருவரே

சிற்பம் என்ற பட்டியலில் வேறு இடம் இல்லை

உங்கள் கண்களில் உள்ள கண்ணீரை துடைத்துக்கொண்டு மேலே படியுங்கள்.

பக்தர்கள் அனைவரும் ஏதும் புரியாமல் பெரியவாளின் இந்த முடிவுக்கு காரணம் கேட்டார்கள். அப்பொழுது மஹாபெரியவா சொன்னார்.

"பெரியபுராணத்தை எழுதியது சேக்கிழார். இது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. பெரியபுராணம் எழுதுவதற்கு காரணமாக இருந்தவர்கள் அறுபத்துமூவர் நாயன்மார்கள் ஆவார்கள். சைவ சமய சித்தாந்தத்தின் முன்னோடிகள் நால்வர்.

இந்த நால்வரும் பெரியபுராணத்தை ஓலையில் எழுதிய கைப்பிரதிகளை சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோவில் உள்ள சிவனடியார்களிடம் இந்த ஓலை பிரதிகளை பத்திரமாக வைத்திருக்குமாறு கொடுத்தனர். அவர்களும் எல்லா ஓலை பிரதிகளையும் ஒரு அறையில் போட்டு பூட்டிவைத்தனர்.

ராஜ ராஜ சோழனுக்கு இந்த விவரம் தெரிந்ததும் சிதம்பரம் கோவில் சிவனடியார்களிடம் அந்த ஓலை பிரதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி அவை எல்லாவற்றயும் தன்னிடம் கொடுக்குமாறு வேண்டினான்.

சிவனடியார்களுக்கோ பயம். இதை கொடுத்தது நால்வர் பெருமக்கள்( அப்பர் -சுந்தரர் -மாணிக்கவாசகர் -திருஞானசம்பந்தர் ) . அவர்கள் அனுமதியின்றி கொடுத்தால் தெய்வ அபச்சாரம் வந்துவிடுமோ என பயந்து கொடுக்க மறுத்துவிட்டனர்.

ராஜ ராஜ சோழன் நெடு நேரம் யோசித்து ஒரு நல்ல வழியை கண்டுபிடித்தான்.

சிவனடியார்கள் நால்வர் விக்கிரஹங்களை செய்து பொது மக்களுடன் சேர்ந்து ஊர்வலமாக சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று கோவிலின் நான்கு வாசலிலும் ஒவ்வொரு வாசலுக்கும் ஒவ்வொரு சிவனடியாரை நிறுத்திவிட்டு கோவில் தீக்க்ஷதர்களை அழைத்து பின்வருமாறு சொன்னான். வந்தவர்களிடம் சொன்னான்

“சிவனடியார்கள் நால்வரும் வந்திருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு என் மூலமாக ஆணையிடுகிறார்கள்.எல்லா ஓலை பிரதிகளையும் என்னிடம் ஓப்படைக்குமாறு. கொடுங்கள் அவையனைத்தும் எனக்கு வேண்டும் .மக்களுக்காக அவையனைத்தையும் பாதுகாக்க வேண்டும்.

தீக்ஷதர்கள் கொடுக்க மறுத்துவிட்டனர். சிலைகள் எப்படி அந்த சிவனடியார்கள் நால்வர் ஆவார்கள்.

இதை கேட்ட மன்னன் சொன்னான் "அப்படியானால் கோவிலுக்குள் இருக்கும் நடராஜர், தில்லை நாயகி சிலைகளும் சிலைகள் தானே அந்தவிகிரஹங்களை கடவுள் என்று சொன்னால் இந்த நால்வர் விகிரஹங்களையும் சிவனடியார்கள் நால்வராகவே கருத வேண்டும் என்று வாதிட்டான். இதற்கு பதில் சொல்ல முடியாமல் பூட்டிய அறைக்கதவை திறந்து விட்டார்கள். ராஜ ராஜன் உள்ளேசென்று பார்த்தால் பாதிக்குமேல் கரையான் அறித்திருந்தது.

எல்லாவற்றயும் ஒரு வழியாக எடுத்து அறிஞர்களை வைத்து மீதமிருந்ததை வைத்து பெரியபுராணம் என்னும் நூலை எழுதி மக்களுக்காக கொடுத்தான். இன்று வரை நாம் அனுபவிக்கும் பெரியபுராணம் நமக்கு கிடைத்ததென்றால் அதற்கு காரணம் ராஜ ராஜ சோழன் தான்.

சற்று யோசித்துப்பாருங்கள் மெய் சிலிர்க்கும்

வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளுக்கும்

ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது

மேல படியுங்கள் உங்களுக்கு புரியும்

மஹாபெரியவா சஷ்டியப்தபூர்த்தி

பக்தர்களின் தங்க கிரீட காணிக்கை

ராஜ ராஜ சோழன்

சேக்கிழார் –பெரியபுராணம்

பல நூற்றாண்டுகளுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு பின்

அது எப்போதோ இது இப்போது

இதுதான் தெய்வீகமோ

இப்பொழுது புரிகிறதா?

மஹாபெரியவாளின் ஞான திருஷ்டி பல யுகங்களின் ஆரம்பத்தையும் முடிவையும் இணைக்கும் ஒரு பாலம். விட்டுப்போன சங்கிலித்தொடரின் விடுபட்ட கன்னிகள் எப்போது வேண்டுமானாலும் பொருத்தப்படும்.

இது ஒரு உதாரணமே!

மஹாபெரியவாளின் எந்த ஒரு செயலிலும் ஒரு ஆழமான அர்த்தமும் சிந்தனையும் இருக்கும்.

இந்த நிகழ்வும் அப்படியொரு நிகழ்வுதான்.

சன்யாச இலக்கணமும் காப்பாற்றப்பட்டது.

ராஜ ராஜனுக்கும் மணிமகுடம் சூட்டப்பட்டது.

நல்லவர்களின் நற்செயல்கள்

காலம் கடந்து நிற்கும்

மஹாபெரியவா சரணம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரிராஜகோபால்