• காயத்ரி ராஜகோபால்

G.R.மாமாவின் பிறந்தநாளும் மஹாபெரியவாளின் சன்யாச பிரவேசமும்


மஹாபெரியவா

நானும் பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன்

என்றில்லாமல் உலகத்திற்கு உபயோகமாக

வாழும் ஒரு ஆத்மாவாக மாற்றினாய்

நான் உனக்கு என்ன கைமாறு செய்ய முடியும்

என்னையே கோவிலக்கி அதில் உன்னை

பிரபஞ்ச தெய்வமாக பிரதிஷ்டை செய்து

நொடிப்பொழுதும் வழிபடுகிறேன்

உன்னுள் நான் என்னுள் நீ

நின் பாதமே சரணம்

G.R.மாமாவின் பிறந்தநாளும் மஹாபெரியவாளின் சன்யாச பிரவேசமும்

பிப்ரவரி பதிமூன்றாம் தேதி சனிக்கிழமை என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள்.ஆம் அன்றுதான் நம் மஹாபெரியவா காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக சன்யாச தீக்க்ஷை வாங்கிக்கொண்ட நாள்.

அந்த நன்னாளை இந்த பூவுலகில் காண்பதற்கும் அந்த நொடிப்பொழுதின் பேரானந்தத்தை அனுபவிக்கும் பொருட்டு தானோ என்னவோ என் ஜனனமும் அன்று நிகழ்ந்தது. வருடம் தான் வேறு. ஆனால் மாதம் கிழமை தேதி எல்லாமே அதே நாள் தான்.

பிப்ரவரி மாதம் பதிமூன்றாம் தேதி சனிக்கிழமை

இரண்டும் ஜனமும் ஒரே நாளில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு.. மஹாபெரியவா அன்றே உலகிற்கு பிரபஞ்சமே மஹாபெரியவாளாக அவதரித்த நாள். . மஹாபெரியவா, அறுபது வருடத்திற்கு பிறகு என் ஜனனத்தையும் அங்கீகரித்து G.R மாமாவாக உலகிற்கு என்னை அர்ப்பணித்தார்.

மஹாபெரியவா என்னை அக்னி பிரவேசம் செய்ய வைத்து ஒரு வேள்விக்கு இணையான வாழ்கை முறையை கற்றுக்கொடுத்து சுத்த ஆத்மாவாக மாற்றி இன்று காவி அணியாத சந்நியாசியாக உலகிற்கு என்னை அர்பணித்துள்ளார்.

நான் ஒருமுறை மஹாபெரியவாளிடம் ஒரு கேள்வியை கேட்டேன்.

"பெரியவா இத்தனை கோடி பேரில் என்னைமட்டும் அழைத்து ஆட்கொண்டு உங்கள் தவ வலிமையை எனக்குள் செலுத்தி இன்று அல்லல்படும் அத்தனை ஆத்மாக்களுக்கும் நான் பிரார்த்தனை செய்ய நீங்கள் என் கூடவே சூஷ்ம நிலையில் இருந்து கொண்டு நான் செய்யும்,அத்தனை பிரார்த்தனைகளுக்கும் அனுக்ராமும் ஆசிர்வாதமும் செய்கிறீர்களே.

அப்படியானால். நான் யார்? நமக்குள் என்ன உறவு என்று உங்களை விடாமல் துளைத்து எடுத்து தொந்தரவு செய்த பொழுது நீங்கள் சொன்ன காரணம் இன்றும் என் செவிகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது.

நீங்கள் சொன்ன பதில்.இதோ உங்கள் பக்தர்களுக்காக . "நான் சன்யாசம் வாங்கிண்ட நாளும் நீ பிறந்த நாளும் ஒரே நாள் டா. வருஷம் தான் வேறே.. இப்போதைக்கு இது போதும். போக போக உனக்கு எல்லாம் புரியும்.

உனக்கு இதுவே கடைசி ஜென்மம். இந்த ஜென்மாவின் கடைசியில் நானே வந்து உன்னை அழைச்சுண்டு போவேன். அது வரை கஷ்டத்தில் இருக்கும் உன் சக ஆத்மாக்களுக்கு நீ பிரார்த்தனை செய். நான் அவாளுக்கு உன் பிரார்த்தனை மூலம் பதில் கொடுத்து அனுக்கிரஹம் பண்ணறேன்,

உன் ஆத்மாவின் புனிதம் ஒரு கப்பலாக மாறி உன்னை என்னிடம் சேர்க்கும்.. நீ செய்யும் சஹஸ்ர காயத்ரி உன்னை ஒரு அக்னி ஜிவாலையாக மாற்றும். நான் ஸ்தூலத்தில் இருந்து சூஷ்ம நிலைக்கு உயர்ந்தும் உன் மூலமாக இன்றும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.உன் பணியை தெடர்ந்து நடத்து.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

நான் உங்களிடம் வேண்டுவது உங்கள் ஆசிகளும் பாசமும் வாழ்த்துக்களும்.

என்றும் உங்களுக்காக வாழும்

காயத்ரி ராஜகோபால்.