• காயத்ரி ராஜகோபால்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-026


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் போதனைகள் என் வார்த்தைகளில்

“நீ வீட்டில் இஸ்லாமியனாயிரு

கிறிஸ்துவனாயிரு இந்துவாயிரு

ஆனால் வீதியில் மனிதனாயிரு”

பரம்பொருள் மஹாபெரியவாளின் அற்புதசாரல்களை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறோம்.பலவிதமான அற்புதங்கள் அவற்றில் எதுவுமே அறிவியலுக்கு உட்படாதது காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது.எந்த அற்புதமும் ஒரு வரையறைக்குள் அடங்காதது.

மேலும் மஹாபெரியவா ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஜாதிக்கு அப்பாற்பட்டவர் என்பதை எல்லோரும் அறிவோம். இந்த வார தொடரில் மஹாபெரியவா மதங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்பதையும் அந்தந்த மதத்தினர் வழிபடும் தெய்வமாகவே காட்சி கொடுத்து எல்லா மதங்களும் வழிபடும் ஒருமித்த தெய்வமும் நானே என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.அப்படிப்பட்ட ஒரு அற்புதத்தைத்தான் இந்த வாரம் அனுபவித்து மகிழப்போகிறோம்.

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவுக்கு அருகில் இருக்கும் மாவட்டம் சதாரா. ஒரு முறை மஹாபெரியவா இந்த சதாராவில் முகாமிட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து ஆசிர்வாதமும் வழங்கிக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் ஒருவரான மஹாலிங்கம் என்பவர். இவர் ராயல் என்பீல்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

கம்பெனி வேலை விஷயமாக இவர் பூனேவிற்கு செல்லவேண்டியிருந்தது. பூனேவில் இருக்கும்பொழுது தன்னுடன் வேலை பார்க்கும் இருவர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.உடனே விவரம் கேட்டார் மஹாலிங்கம். விவரம் இதுதான் "மஹாபெரியவா சதாராவில் முகாமிட்டு இருக்கிறார்." உடனே மகாலிங்கத்திற்கு எப்படியாவது சாதாரவிற்கு சென்று மஹாபெரியவாளை தரிசனம் செய்யவேண்டுமென்று ஒரு உந்துதல்.

உடனே தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களிடம் விசாரித்தார். தான் ஊருக்கு புதுசு என்பதாலும் தனக்கு யாரும் தன்னுடனே சாதாரவிற்கு வந்து உதவி செய்வார்களா. காலையில் சென்று மாலையில் திரும்பி விடலாம் என்று கேட்டார் மஹாலிங்கம்.

நண்பர்களுக்குள் பேசி ஒரு முடிவெடுத்தார்கள். ஒரு கிறிஸ்துவ நண்பர் நிச்சயம் உதவி செய்வார். அவருக்கு நன்றாக சாதரவைப்பற்றி தெரியும். மோட்டார் சைக்கிளும் நன்றாக ஓட்டுவார் என்று சொன்னவுடன் மஹாலிங்கம் அந்த கிறிஸ்துவ நண்பரை கேட்டார். அவரும் தான் உதவி செய்வதாக உறுதியளித்தார். இருவரும் மறுநாள் காலை சாதாரவிற்கு கிளம்பினார்கள்.

சதாரா மிகவும் அருகாமையில் இருப்பதால் மஹாலிங்கமும் அவரது கிறிஸ்துவ நண்பரும் எந்தவித சிரமும் இல்லாமல் பூனேவிலிருந்து சதாரா சென்றடடைந்தனர். மடத்தில் மிகவும் கூட்டமாக இருந்தது. ஏராளமான பக்தர்கள் தங்களுடைய குறைகளை சொல்வதும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கியவாறு இருந்தனர்.

மஹாலிங்கம் தன்னுடைய கிறிஸ்துவ நண்பரை மோட்டார் சைக்கிளிலேயே இருக்கச்சொல்லிவிட்டு தான் மட்டும் மடத்துக்குள் சென்று தரிசினம் செய்து விட்டு வரலாமென்று உள்ளே சென்றார். எல்லோரும் வரிசையில் நின்றுகொண்டு ஒவ்வொருவராக நமஸ்காரம் செய்த்துவிட்டு ஆசிர்வாதமும் வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

மகாலிங்கத்தின் முறையும் வந்தது. கீழே விழுந்து வணங்கி எழுந்த மஹாலிங்கத்திடம் மஹாபெரியவா கேட்டார்.

என்னப்பா உன்னுடைய நண்பனை வாசலிலேயே நிக்க வச்சிட்டு நீ மட்டும் வந்திருக்கயா. போ போயி உன்னோட நண்பனையும் தரிசனத்திற்கு அழைச்சுண்டு வா என்று சொன்னார்.

மகாலிங்கத்திற்கு ஒரே அதிர்ச்சி. யார் சொல்லியிருப்பார்கள் தன்னுடைய நண்பன் வெளியில் காத்துக்கொண்டிருக்கிறான் என்று மஹாபெரியவளிடம்.

சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?

மஹாபெரியவாளுக்கு சொல்லாததும் தெரியும்

மனதில் இருப்பதும் தெரியும்

மகாலிங்கத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவவில்லை.தன்னுடைய நண்பன் ஒரு கிறிஸ்துவன் என்று எப்படி சொல்வது.. பொதுவாகவே மஹாபெரியவா ஒரு வேலையை கொடுத்தால் மறு கேள்வி கேட்காமல் செய்வதுதான் வழக்கம்.அதனால் மறு பேச்சு பேசாமல் மஹாலிங்கம் வெளியில் சென்று தன்னுடைய நண்பனை அழைக்க சென்றார்.

அப்பொழுதுதான் காபியோ பாலோ குடித்துவிட்டு மோட்டார் சைகிளின் மேலே உட்கார்ந்திருந்த நண்பனை உடனே என்னுடன் வா உன்னை மஹாபெரியவா அழைத்து வரச்சொன்னார். என்று சொன்னவுடன் கிறிஸ்துவ நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. அவரும் மஹாலிங்கத்திடம் சொன்னார் நான் ஒரு கிறிஸ்துவன் உங்கள் கடவுளை எப்படி கும்பிட வேண்டுமென்று கூட தெரியாது. நான் உள்ளே வந்து என்ன செய்வது என்று தயங்கினார். மஹாலிங்கமோ அதெல்லாம் எனக்கு தெரியாது.

மஹாபெரியவா கூப்பிட்டதற்கு உள்ளே என்னுடன் வந்து பார்த்துவிட்டு போயேன் என்று சொன்னவுடன் சரி என்று உள்ளே மஹாலிங்கத்துடன் மடத்தினுள் சென்றார். உள்ளே மிகவும் கூட்டமா இருந்தது. மஹாலிங்கமோ பெரியவா நம்ப பக்கம் திரும்பினால் நண்பனை அறிமுக படுத்திவிட்டு பூனேவிற்கு திரும்பலாம் என்று நினைத்துக்கொண்டே நின்றிந்தார். ஒரு வழியாக தன்னுடைய முறை வந்தது.

மஹாபெரியவா தன் பக்கம் திரும்பியவுடன் மஹாலிங்கம் பேச வாயெடுத்தார். மஹாபெரியவா மகாலிங்கத்தை பேசவிடாமல் நண்பரிடம் தன்னையே பார்க்க சொன்னார். தன்னுடைய கண்களையே உற்று பார்க்கச்சொன்னார். மஹாலிங்கம் வெளியில் வந்து மோட்டார் சைக்கிளின்மேலே உட்கார்ந்து விட்டார்.

உள்ளே நண்பர் மஹாபெரியவா கண்களையே உற்று நோக்கியவுடன் கிறிஸ்துவ நண்பரின் கண்களுக்கு மஹாபெரியவா மறைந்து யேசுநாதர் காட்சி கொடுத்தார். தன் கண்களை நம்பவே முடியவில்லை. கண்களில் தாரை தாரையாக கண்ணீர். இந்த மாதிரி ஒரு காட்சியை கனவிலும் கண்டதில்லை. கிறிஸ்துவ நண்பர் தன்னுடைய நிலைக்கு திரும்ப நீண்ட நேரம் ஆயிற்று. மஹாபெரியவா அவரிடம் சொன்னார். நீ போயி உன்னோட நண்பன் மகாலிங்கத்தை வரச்சொல் என்று உத்திரவு கொடுத்தார்.

கிறிஸ்துவ நண்பரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் மஹாலிங்கத்திடம் ஓடி வந்தார். மகாலிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. நண்பர் எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் சொன்னார். சொல்லுப்பொழுதே கண்ணீரும் அழுகையுமாக சொன்னார்.

சொன்னது என்ன தெரியுமா " நான் எங்கள் ஜீசஸ் கிறிஸ்டை உங்கள் மஹாபெரியவாளிடம் பார்த்தேன். உங்கள் மஹாபெரியவா உங்கள் கடவுள் மட்டுமில்லை. எங்களுக்கும் அவர் இயேசு நாதர்தான். சீக்கிரம் உள்ளேபோயிட்டு வா. நான் ஊருக்கு போயி எல்லாருகிட்டேயும் சொல்லணும் என்று அவசரப்படுத்தினார்.

மஹாலிங்கமும் வேகமாக உத்தரவு வாங்க உள்ளே சென்றார். மஹாலிங்கத்தைப்பார்த்தவுடன் மஹாபெரியவா கேட்டார். என்னப்பா மஹாலிங்கம் ஊருக்கு எப்போ கிளம்பறே என்றவுடன் இதோ கிளம்பிண்டே இருக்கேன் பெரியவா என்று சொன்னவுடன் மஹாபெரியவா உத்தரவு கொடுக்காமல் நீ இணைக்கு ராத்திரி இங்கேயே தூங்கிட்டு நாளைக்கு கார்த்தாலே கிளம்பி போங்கோ என்று சொன்னவுடன் சரி பெரியவா என்று சொல்லிவிட்டு வெளியில் காத்திருந்த நண்பரிடம் மஹாபெரியவா சொன்ன விஷயத்தை சொன்னார்.

ஆனால் நண்பருக்கோ மிகவும் அவசரம்.தனக்கு ஜீசஸ் தரிசனம் கிடைத்ததை தன்னுடைய வீட்டிலும் நண்பர்களிடமும் சொல்லி பெருமை போட்டுக்கொள்ள வேன்றுமென்று ஆசை. ஆகவே வா சீக்கிரம் கிளம்பலாம் என்று வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்தார். மஹாலிங்கத்துக்கும் ஒன்றும் சொல்லமுடியவில்லை. வண்டியில் ஏறி உட்கார்ந்து விட்டார். சிறிது தூரம் கூட சென்றிருக்கமாட்டார்கள். வண்டி ஒரு பெரிய கல்லில் மோதி இருவரும் கீழே விழுந்து கை கால்களில் அடிபட்டுக்கொண்டார்கள்.

பக்கத்தில் இரவு ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொண்டிருந்த எல்லோரும் இவ்ரகளை எழுப்பி ஆசுவாசப்படுத்தி சோடா வாங்கிக்கொடுத்து சரி செய்து அவர்களை பழைய நிலைக்கு கொண்டுவந்தார்கள். கிறிஸ்துவ நண்பர் மஹாலிங்கத்திடம் மன்னிப்பு கேட்டார். உங்கள் மஹாபெரியவா சொல்லியும் நான்தான் உங்களையும் கிளப்பி நானும் கிளம்பி இப்போ வீதியில் விழுந்து அடிபட்டுக்கொண்டோம். மடத்திற்கே திரும்ப முடிவு செய்து அங்கு செய்து சென்றனர். கை கால்களை அலம்பிக்கொண்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு தூங்கினார்கள்.

மறு நாள் காலை சீக்கிரமாகவே எழுந்து மஹாபெரியவளை விழுந்து சேவித்துவிட்டு உத்தரவு கேட்டார்கள். மஹாபெரியவா அவர்களிடம் கேட்டார்கள் ஏன்டா மஹாலிங்கம் அவ்வளவு சொல்லியும் ராத்திரியே கிளம்பி போயி கீழே விழுந்து அடிபட்டுண்டேள். சரி இப்பவாவது பாத்து மெதுவா உங்க ஊர் போயி சேருங்கோ என்று சொல்லி ஆசிர்வாதம் செய்து அனுப்பினார்.

நட்பில் நம்பிக்கையை தேடு

கற்பனையில் கவிதையை தேடு

வேதனையில் உறுதியை தேடு

வாழ்க்கையில் நீ உன்னை தேடு

இறை உலகில் மஹாபெரியவாளை நாடு

தேடலும் நாடலும் நிறைவு பெரும் இடம் அது

அதுவே மஹாபெரியவா என்னும் இறை சாம்ராஜ்யம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்