• காயத்ரி ராஜகோபால்

சக்தி பீடம்-மூன்று கன்னியாகுமாரி அம்மன்


சரணாலய பெரியவா

வேதமும் நீ வேதத்தின் பொருளும் நீ சக்தியும் நீ சக்தி பீடங்களும் நீ கர்ம பூமி பாரதத்தின் மண்ணில் குடி கொண்டிட்ருக்கும் அத்தனை பெண் தெய்வங்களும் நீ எங்கள் மனதில் நீ வாழுகின்றாய் எங்கள் மனது சலனமற்ற சாகரமாகிறது இதை உணர்ந்து நொடியோ பொழுதும்

அனுபவித்து கொண்டிருக்கிறோம் நீ எட்டாக்கனியாக இல்லாமல் எவருக்கும் எட்டும் கனியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நின் திருவடி சரணம்

சக்தி பீடம்-மூன்றுகன்னியாகுமாரி அம்மன்

கன்யாச்ரம்

பீடத்தின் பெயர் - கன்யாச்ரமம்

அங்கு விழுந்த தேவியின் உடல் பகுதி - முதுகு

பீட சக்தியின் நாமம் - ஸர்வாணி

«க்ஷத்திரத்தைக் காக்கும் பைரவர் - நிமிஷர்

«க்ஷத்திரம் உள்ள இடம் - கன்யாகுமரி

கன்னியாகுமரி! இப்பீடத்தின் பெயருக்கேற்ப அம்பிகை குமரித் தெய்வமாக தவத்திருக்கோலம் கொண்டுள்ளாள். இங்கு தேவியின் முதுகு அதாவது பின்பக்கம் விழுந்த காரணத்தாலே இந்த சக்தி பீடம் விழுமிய பீடத்தலமாக விளங்குகின்றது. இத்தலத்தில் அன்னையை பகவதி, கன்னி, குமரித்தெய்வம் என்றெல்லாம் போற்றி வழிபடுகின்றனர். பாரதியார் “நீலத் திரைக்கடல் ஓரத்திலே - நின்று நித்தம் தவஞ் செய் குமரி” - என்று பாடியுள்ளார்.

தென் குமரியில் அரபிக்கடல், இந்துமாக்கடல் மற்றும் வங்காளவிரிகுடா கடல் ஆகிய மூன்றும் ஓர் உருவாக நின்று அன்னையின் மலர்ப்பாதங்களை வருடிய வண்ணம் நீங்கா இன்பத்தில் திளைக்கின்றன. இங்கு அன்னை கன்னியாக அருள் பாலிப்பதால் இவ்விடம் கன்னியாகுமரி என்றழைக்கப்படுகிறது. சூரியனின் உதயத்தையும், அஸ்தமனத்தையும் ஒருங்கே காணும் வாய்ப்பு இங்கே உள்ளது.

கருணைப் பெருங்கடலான இந்த தேவி உயிர்களின் உற்ற துணையாக விளங்குபவள். தயை வடிவினள். பாவிகளுக்கும், பரிவோடு அருள் செய்யும் அவள் கருணைப் பொழிவினைக் கண்டு இவ்வுலகில் வியப்பும், மகிழ்வும் அடையாதவர்கள் இல்லை. பிறவிக் கடலைக் கடக்கும் வழி தெரியாது தவிக்கும் பக்தர்களுக்கு அருள் செய்ய மூன்று கடல்கள் கூடும் நகரத்தில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசும் மூக்குத்தி அணிந்து ஒய்யாரமாக நிற்கிறாள்

அவள். கலங்கித் தவிக்கும் மனதிற்கு நல்ல மருந்தாய் இருக்கிறாள். உதய சூரியனைப் போல் ஞான ஒளி வீசி அறியாமை இருளை இதயத்திலிருந்து விரட்டுகிறாள். அறிவொளி ஏற்றி அதி அற்புதமான அமைதியும் ஆனந்தமும் அளித்து அதிசய அழகு வடிவழகும் கொண்டு, உயிர்களின் உற்ற துணையாய் விளங்குகிறாள் அம்பிகை. இவ்வாறு கொலுவீற்றிருக்கும் அன்னையை, கடலாடி தாயைத் தரிசிக்கும் பக்தர்கள் கோடானு கோடியாகும். இவளின் பெருமைகளை உணர்த்த நிறைய சம்பவங்கள் உள்ளன.

முன்னொரு காலத்தில் பகன், முகன் என்ற இரண்டு அசுரர்கள் தேவர்களுக்குத் துன்பம் இழைத்து வந்தனர். தேவர்கள் காசி விஸ்வநாதரிடம் முறையிட அவர் இரு பெண்களைப் படைத்தார். இவ்விருவரும் அசுரர்களை அழித்ததோடு வடக்கே காளி கட்டில் (கல்கத்தா) உள்ள காளிதேவியாகவும், தெற்கே கன்னியாகுமரியாகவும் வீற்றிருந்து பாரத பூமிக்கு எவ்விதத் தீங்கும் நேராமல் காக்கின்றனர் என்கிறது புராணங்கள்.

அன்னை குமரித் தெய்வம் தென் எல்லையில் தவம் புரிந்ததற்கான காரணம் யாதெனில்-

பாரத பூமியை ஆதியில் ஆண்ட பரதமன்னனுக்கு எட்டுப் புதல்வர்களும், ஒரு புதல்வியும் இருந்தனர். பரதன் தன் பிள்ளைகள் அனைவருக்கும் நாட்டைப் பங்கிட்டான். அவனுடைய ஒரே புதல்வி தான் கன்னியாகுமரி. அவள் குமரியிலிருந்து ஆண்ட இடமே, இன்றைய குமரிமுனை. குமரி அன்னை இத்தலத்தில் வாழ்கிறாள் என்று வரலாறு கூறுகிறது.

அன்னையின் தவக்கோலம்: பாணாசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகுந்த தொல்லையில் ஆழ்த்தினான். ஒரு கன்னிகையினால் மட்டுமே தன்னை அழிக்க முடியும் என்று பிரமனிடம் வரம் பெற்று அவ்வரத்தின் பலத்தால் எல்லோரையும் துன்புறுத்தினான்.

இந்நிலையில், கன்னியாக உருவமெடுத்து கன்னியா குமரியில் தவமிருந்தாள் பராசக்தி. இத்திருத்தலத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள சுசீந்திரத்திலிருந்து தாணுமாலயக் கடவுள் அம்பிகையைக் கண்டு அவள் மேல் விருப்பம் கொண்டார். அதன் பொருட்டு தேவர்களை அழைத்து தன் விருப்பத்தைக் கூறினார்.

தாணுமாலயரின் விருப்பம் அறிந்த தேவர்கள் மிகவும் கவலைப்பட்டனர். அன்னையின் தவம் கலைந்து விடுமே என்பது தான் அவர்களது பெருங்கவலை. பிறகு பாணாசுரனை யார் அழிப்பது? அப்போது அங்கு வந்த நாரதர், தேவர்களை சமாதானம் செய்து தாணுமாலையரிடம் தாமே முன்னின்று திருமணம் செய்து வைப்பதாகவும், ஆனால் இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டுமென்றும் கூறினார். இறைவனுக்கே நிபந்தனையா? வேறு வழி? அவரும் ஏற்றுக் கொண்டார். அதன் படி

1. கண்ணில்லாத தேங்காய், நரம்பில்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு, இதழ் இல்லாத மலர், காம்பில்லா மாங்காய் ஆகியவற்றை சீதனப் பொருளாக எடுத்துவர வேண்டும்.

2. திருமண முகூர்த்தம் சூரிய உதயத்தில் நிகழும். அதற்கு ஒரு நாழிகைக்கு முன்னரே மணமகன் மணவறைக்கு வந்து விட வேண்டும்.

இவ்விரு கட்டளைகளை செவியுற்ற ஈசன் சீர்வரிசைத் தட்டை அனுப்பிவிட்டு ஐந்து மைல் தூரத்தைக் கடக்க நள்ளிரவிலேயே புறப்பட்டார். விடுவாரோ நாரதர்! உடனே சேவலாக மாறி நள்ளிரவில் கூவ, ஈசனோ, பொழுது புலர்ந்து விட்டது: தாம் குறித்த நேரத்தில் மணவரையில் இருக்கத் தவறி விட்டோம்; முகூர்த்த நேரம் நெருங்கி விட்டது என்று கருதி சுசீந்திரத்திற்கே திரும்பிவிட்டார். அவ்வாறு அவர் திரும்பிய இடமே “வழுக்குப்பாறை” என்று அழைக்கப்படுகிறது. இதனால் அம்பிகையின் தவமும் கலையவில்லை. திருமணம் தடைப்பட்டதால் தேவர்கள் மகிழ்ந்தனர். கன்னித் தெய்வமான அம்பிகை, பின்னர், பாணாசுரனை கொன்று தேவர்களை காப்பாற்றினாள்.

இத்தலத்தில், அன்னையானவள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், இலுப்பை பூ மாலையை ஒரு திருக்கரத்தில் தரித்து, மற்றொரு திருக்கரத்தைத் துடை மீது வைத்து தவக்கோல நாயகியாய் காட்சி தருகின்றாள். இவ்வன்னையின் திருமுடியில் விளங்கும் கிரீடத்தில் பிறைமதி ஒளிர்கிறது. இவள் அணிந்திருக்கும் வைர மூக்குத்தி பேரொளி வீசுகின்றது. அழகின் அற்புத உருவாக அன்னை விளங்குகின்றாள்.

குமரி அன்னையைப் போல கோயிலின் அருகில் அமைந்திருக்கும் கன்னி தீர்த்தம் மிகவும் பெருமை வாய்ந்தது. இத்தீர்த்தம் ஆதிசேதுவாகக் கருதப்படுகிறது. இராமர் கட்டிய சேது இத்திருத்தலத்திருந்தே தொடங்கியிருக்கிறது. இத்தலத்திலிருந்தே இலங்கைக்கு பாலம் அமைக்கப்பட்டதாக மணி மேகலையும் தெரிவிக்கிறது. குமரி தெய்வத்தின் அருளுடன் புறப்பட்ட இராமன் போரில் ராவணனை வென்று சீதையை மீட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமல்லவா!

இத்திருத்தலத்தில் ஆதிசங்கருக்கான ஆலயம் உள்ளது. காந்தி மண்டபமும் 133 அடிகள் உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் காண்போர் கண்ணைக் கவரும். ஏப்ரல் மாதத்தில் கன்னியாகுமரிக் கடலில் காலையில் சூரிய உதயத்தையும், அதே நேரத்தில் சந்திரனின் அஸ்தமனத்தையும் ஒரே சமயம் காணும் பேருதான் என்னே! இங்கு அமைக்கப்பட்டுள்ள் விவேகானந்தர் மண்டபம் யாத்ரீகர்களை மகிழ்விக்கிறது. பண்டைத் தமிழிலக்கியங்கள்.

கன்னியாகுமாரி அம்மன் கோவில் தோற்றம்

“தென்றிசைக் குமரி யாடிய வருவோள்” என்று மணிமேகலையும்,

“கங்கையாடிலென் காவிரி யாடிலென்

பொங்கு நீர்க்கும ரித்துறை யாடிலென்” - என்று தேவாரமும் இத்திருத்தலத்தின் பழமையினை உணர்த்துகின்றன.

அன்னை பகவதியைப் பணிவோம்! அவள் திருவருள் பெறுவோம்!!

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் நாடும் உங்கள் காயத்ரி ராஜகோபால்