top of page
Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -033 சிறப்பு பதிவு


குருவே சரணம் குரு பாதமே சரணம்

இந்து மத சித்தாந்தம்

காரணம் இல்லாமல் காரியம் இல்லை

நம்முடைய கர்ம வினைகளுக்கு

இறைவனை நொந்து என்ன பயன்

ஆத்மாவை சாட்சியாக வைத்து வாழுவோம்

பிறவியில்லா பெரும்பயனை அடைவோம்

என் வாழ்வில் மஹாபெரியவா தொடர் எண் 032 சிறப்பு பதிவில் மஹாபெரியவா என்னுடைய இல்லத்திற்கு விக்கிரஹ ரூபத்தில் வந்த அற்புதத்தை அனுபவித்தோம். மஹாபெரியவா பரமேஸ்வரன் அவதாரமல்லவா. வந்தவுடன் தன்னுடைய திருவிளையாடல்களை தொடங்கி விட்டார்.

அந்த விக்கிரஹத்தின் அழகு சொல்லி மாளாது. அப்படியொரு அழகு. அந்த விக்கிரஹத்தை இந்த பதிவிலோ அல்லது அடுத்து வரவிருக்கும் பதிவுகளிலோ வெளியிடுகிறேன். இப்பொழுது திருவிளையாடலை பார்ப்போம்.

ஒரு குழந்தைக்கு புத்தாடையோ அல்லது தனக்கு பிடித்த ஒரு பொம்மையையோ பெற்றோர்கள் வாங்கி கொடுத்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடையுமோ அந்த அளவு நான் மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கு தோன்றும்பொழுது எல்லாம் என் பூஜை அறையை திறந்து மஹாபெரியவாளை பார்ப்பதும் பிறகு வந்து படுத்து கொள்வதுமாக இருந்தேன்.

வெள்ளிக்கிழமை இரவு மணி 9,00.

நான் படுத்து உறங்குவதற்கு முன் மஹாபெரியவாளை தரிசித்து விட்டுத்தான் வழக்கமாக உறங்குவேன். அப்படித்தான் அன்றும் இரவு ஒன்பது மணிக்கு மஹாபெரியவாளை தரிசனம் காணச்சென்றேன். மஹாபெரியவாளை நமஸ்கரித்து விட்டு மஹாபெரியவாளை வாஞ்சையுடன் என் விரல்களால் தடிவினேன்.

அப்பொழுதுதான் கவனித்தேன் மஹாபெரியவா வைத்திருந்த தண்டத்தை காணவிலையென்று. ஒரு சந்நியாசியை தண்டமில்லாமல் வீட்டில் வைத்திருப்பது எவ்வளவு பாவம் என்று எனக்கு தெரியும்.. எனக்கு உடனே பதட்டமாகி விட்டது. மஹாபெரியவாளை எடுத்து தனியாக இன்னொரு பீடத்தில் வைத்துவிட்டு அறை முழுவதும் தேடினேன். கண்ணுக்கு தெரியவில்லை. ஒரு மணி நேரத்திற்கு பிறகு எனக்கு உடலும் மனமும் சோர்ந்து விட்டது.

இரவு மணி 10.00

நான் சோர்ந்து போன நிலையில் மஹாபெரியவாளிடம் கண்ணீர் மல்க வேண்டினேன். "பெரியவா இது என்ன சோதனை. நீங்கள். வந்த மறு நாளே. உங்கள் திருவிளையாடல்களை துவங்கி விட்டிர்கள். எனக்கு உங்கள் திருவிளையாடல்களை தாங்க மனதிலும் தெம்பு கிடையாது.. உடலிலும் வலுவில்லை. நான் பாவம் பெரியவா. என்னை சோதிக்காதீர்கள் பெரியவா” என்று வேண்டினேன்.

மேலும் நான் சொன்னது “ஆனால் ஒன்று பெரியவா நீங்கள் என்னை சோதனை செய்யவேண்டும் நினைத்தால் செய்யுங்கள். இன்று உங்களுடைய தண்டம் கிடைக்காமல் நான் படுக்க போக மாட்டேன். விடிந்தாலும் பரவாயில்லை.என்று சொல்லிவிட்டு பெரியவா பாதத்தில் தலையை வைத்து கண்ணை மூடினேன்.

என்னை சோதனை செய்யவேண்டும் நினைத்தால் செய்யுங்கள். இன்று உங்களுடைய தண்டம் கிடைக்காமல் நான் படுக்க போக மாட்டேன். விடிந்தாலும் பரவாயில்லை.என்று சொல்லிவிட்டு பெரியவா பாதத்தில் தலையை வைத்து கண்ணை மூடினேன்.

கண்ணை மூடி அப்படியே கண் அயர்ந்து விட்டேன். அப்பொழுது எனக்குள் ஒரு குரல் சொல்கிறது.. வழக்கமாக காலையில் மஹாபெரியவாளை அலங்கரிக்க சாத்தும் புஷபங்களை இரவு ஒரு கூடையில் எடுத்து போட்டு விடுவார்கள்.. மறு நாள் காலையில் சாத்தும் புஷ்பங்களுக்கு இடம் தயாராக இருக்கும்..

அலங்கரித்தபுஷ்பங்களை எடுத்து போடும் பொழுது மஹாபெரியவாளின் தண்டத்தையும் தவறுதலாக குப்பை கூடையில் போட்டிருக்கலாமோ என்ற சிந்தனை வந்தவுடன் அரைகுறை தூக்கத்தில் இருந்து கண் விழித்து அந்த கூடையில் கை விட்டேன். கூடையில் பழைய பூக்களும் மாலைகளும் இருந்தன.. கூடவே அன்று நறுக்கிய காய்கறிகளின் தோல்களும் காய்கறிகளின் பாகங்களும் கிடைத்தன மஹாபெரியவாளின் தண்டத்தை தவிர.

இரவு மணி 12.00

சோர்ந்து விட்டேன்.நான் பெரியவாளிடம் சொன்னேன். பெரியவா உங்களைப்போல் என்னால் ஒரு மணி நேரமும் அரை மணி நேரமும் தூங்கி விட்டு அதே புத்துணர்ச்சியுடன் என்னால் வேலை செய்ய முடியாது. நீங்கள் பரமேஸ்வரன். நான் மனிதன். என்னால் முடியாது பெரியவா..

எனக்கு உங்களிடம் சத்யாகிரஹமும் சரணாகதியும் மட்டுமே பண்ண முடியும்.என்னை ரொம்ம சோதிக்க வேண்டாம் பெரியவா. என்று சொல்லிவிட்டு மறுபடியும் மஹாபெரியவா பாதங்களில் சாய்ந்தேன்..

அப்படியே அரைகுறை தூக்கத்தில் மீண்டும் எனக்குள் ஒரு குரல். சமையல் அறை தவிர வெளிப்பக்கம் ஒரு குப்பை கூடை உள்ளது. சமயத்தில் குப்பைகள் அதிகமாக இருக்கும் பொழுது அந்த கூடையிலும் குப்பைகளை கொட்டுவார்கள்.அந்த கூடையில் பார்க்கலாமே என்று அந்த குரல் சொல்லியது. அந்த குரல் சொல்லியபடி அந்த கூடையில் தேடி பார்க்கலாமே என்று வேகமாக அந்த கூடை அருகில் போனேன்.

அந்த கூடையில் குப்பைகள் தவிர சாப்பிட்ட பத்துக்கள் எச்சில் என்று எல்லாமே இருக்கும். எனக்கு எதுவுமே தோன்றவில்லை. அந்த கூடையை அப்படியே தலைகீழாக கவிழ்த்து கீழே கொட்டினேன். அவசர அவசரமாக அந்த குப்பைகளில் கையை விட்டு தேடினேன்.

எனக்கு மஹாபெரியவாளின் தண்டத்தை தவிர வேறு எதுவும் என் அக கண்ணுக்கும் புறக்கண்ணுக்கும் தெரியவில்லை. ஒரு பிச்சைக்காரன் தெருவில் உள்ள குப்பையை வெளியில் இழுத்து போட்டு அந்த குப்பைக்கு நடுவில் உட்கார்ந்து இருப்பது போல நன் அந்த குப்பைகளுக்கு நடுவே அழுது கொண்டே உட்கார்ந்திருந்தேன்.

அழகாக தண்டத்துடன் வந்த பெரியவாளின் தண்டத்தை என் வீட்டில் வைத்து தொலைத்து விட்டோமே என்று அழுதேன்.இந்த சமயத்தில் இன்னும் என்னை காணோமே என்று தேடிக்கொண்டு என் மனைவியும் என்னுடைய மாமியாரும் வந்து விட்டார்கள்.

நான் பிச்சைக்காரன் போல் குப்பைக்கு நடுவில் உட்காந்திருப்பதை பார்த்து விட்டு பயந்து போய் விட்டார்கள். நான் காரணத்தை சொன்னேன். காலையில் தேடிக்கொள்ளலாம் இப்பொழுது வந்து படுங்கள் என்று சொன்னார்கள். நான் நிச்சயமாக மறுத்து விட்டேன்.

நான் மட்டும் சொகுசாக படுத்து தூண்ட வேண்டும். மஹாபெரியவா மட்டும் தன்னுடைய தண்டத்தை காணாமல் அவதிப்பட வேண்டுமா?. தண்டம் கிடைக்காமல் நான் வர மாட்டேன் என்று அங்கேயே குப்பைகளை சிறு சிறு பகுதிகளாக பிரித்து அதற்குள் கையை விட்டு தேடினேன்.அவர்களும் படுக்க சென்று விட்டார்கள்.

மணி. 12.30

ஒரு சமயத்தில் அந்த குப்பையிலேயே தலை வைத்து படுத்து விட்டேன். நானும் அசந்து தூங்க ஆரம்பித்து விட்டேன். அப்பொழுது என்னை சோதித்தது போதும் பெரியவா என்று எனக்குள் முனகிக்கொண்டே மஹாபெரியவா மடியில் தலை வைத்து படுப்பதுபோல் படுத்து விட்டேன். என்னையுமறியாமல் என்ன கண்கள் அழுகின்றன.

தண்டம் இல்லாமல் மஹாபெரியவாளை பார்த்த என் கண்களுக்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்.நான் என பாவம் செய்திருக்க வேண்டும். அப்பொழுது எனக்குள் ஒரு குரல் சொல்லியது. உன் கைக்குள் கடைசி ஒரு பிடி குப்பையை வைதித்திருக்கிறாயே அதற்குள் பார் என்றது. நானும் அசந்து போய் தூங்கி விட்ட காரணத்தால் என்னையும் அறியாமல் விரல்கள் நான் கையில் வைத்திருந்த கடைசி பிடி குப்பையில் என் துழாவின. விரல்களில் ஒரு கம்பி போல் நெருடியது. தூக்கத்தில் இருந்து எழுந்து வெளிச்சத்தில் பார்த்தேன்.

மஹாபெரியவா தண்டமேதான். அழுது கதறி விட்டேன். எனக்கு இப்படிப்பட்ட சோதனையா பெரியவா. ஆனால் எனக்கு ஒரு விதத்தில் சந்தோஷமே. உங்களுடைய திருவிளையாடலில் இதுவும் ஒன்றே. உங்கள் பக்தி சரித்திரத்தில் நானும் ஒரு ஓரத்தில் இருப்பேனே.

அந்த தண்டத்தை சுத்தமான நீரில் அலம்பி இருக்க வேண்டிய இடத்தில் வைத்தேன். மறுபடியும் மஹாபெரியவளை தண்டத்துடன் பார்த்து தரிசித்தேன்.திருவிளையாடலை நல்ல படியாக முடித்து வைத்த மஹாபெரியவாளுக்கு என் நெஞ்சம் நெகிழ நன்றி சொன்னேன்.

நான் படுக்க போகும்முன் மஹாபெரியவாளிடம் ஓரே ஒரு வேண்டுதலை சமர்பித்தேன்.. அந்த வேண்டுதல் இதுதான்.

"பெரியவா இது எனக்காக நீங்கள் செய்த திருவிளையாடல்தான் என்பது உண்மையானால் நாளைக்கு காலையில் நான் எழும் பொழுது எனக்கு உங்கள் பிரசாதம் காஞ்சி மடத்தில் இருந்து வர வேண்டும்.. அப்படி பிரசாதம் வந்து விட்டால் இந்த திருவிளையாடலை பக்தர்களுக்கு சமர்பிப்பதில் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியாக இருக்கும்.

பெரியவா நாளைக்கு என்னால் நாலு மணிக்கு எழுந்திருக்க முடியாது. இப்பவே மணி இரண்டு ஆகப்போகிறது. எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பேன் பெரியவா. நாளைக்கு எனக்கு உங்கள் பிரசாதம் வேண்டும். என்று வேண்டிக்கொண்டு படுத்து விட்டேன்.

அப்பொழுதுதான் எனக்கு தோன்றியது. சாத்தியமே இல்லாத ஒன்றை மஹாபெரியவாளிடம் கேட்டு விட்டோமோ என்று. மடத்தில் இருந்து எனக்கு யார் பிரசாதம் கொண்டு வருவார்கள். நன் என்னஅவ்வளவு பெரிய ஆளா? நான் வெளி உலகை பார்த்து ஏறக்குறைய பத்து வருடங்கள் ஆயிற்று. எனக்கு மடத்தில் யாரையும் தெரியாதே..ஒரு இரவுக்குள் இது எப்படி சாத்தியம். இருந்தாலும் மஹாபெரியவா நினைத்தால் எதுவும் சாத்தியமே என்ற நம்பிக்கையில் தூங்கி விட்டேன்.

நேற்று நாள் சனிக்கிழமை 25/11/17 மணி காலை 7.50

மறு நாள் காலை என்னால் எழுந்திருக்க முடியவில்லை. உடலிலும் இரண்டு கால்களிலும் அப்படியொரு வலி.. எழுந்தவுடன் என்னுடைய காலைக்கடன்களை முடித்துக்கொண்டிருக்கும் பொழுதே என் கைபேசி என்னை அழைத்தது. மணி சரியாக எட்டு.

மறு முனையில் குரலுக்கு சொந்தக்காரர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தன பெயர் கணேச சாஸ்திரிகள் என்றும் காஞ்சி மடத்தில் இருந்து எனக்கு பிரசாதங்கள் எடுத்து வர வேண்டும். என்று சொல்லிவிட்டு என்னுடைய சௌகரியமான நேரத்தை கேட்டார்.

நான் மாலையில் ஆறு மணிக்கு மேல் வந்தால் சௌகரியமாக இருக்கும் என்றேன்.அவரும் சரியென்றார். கணேச சாஸ்திரிகளிடம் பேசிவிட்டேன். ஆனால் எனக்கு தலையை சுற்றியது. இது எப்படி சாத்தியம்.நான் மஹாபெரியவாளிடம் இரவு வேண்டிக்கொண்டது கணேச சாஸ்த்திரிகளுக்கு எப்படித்தெரியும். யார்சொல்லியிருப்பார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் கணேச சாஸ்திரிகளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். சம்பந்தமே இல்லாத ஒரு குரல் எனக்கு எப்படி பிரசாதம் கொண்டு வரும்.

நான் கணேச சாஸ்திரிகளிடமே கேட்டு விடலாம் என்று முடிவு செய்தேன்.ஆனால் என்னுடைய ஆத்மாவின் குரல் சொல்லிற்று "அவரை மறுபடியும் அழைத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லிற்று" நானும் என் ஆத்மாவின் குரலுக்கு மரியாதையை கொடுத்து கணேச சாஸ்திரிகளை அழைப்பதை தவிர்த்தேன்.

நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் சாத்தியமான வார்த்தைகள். மஹாபெரியவாவளிடம் செவ்வாய்க்கிழமை இரவு புலம்பினேன். என்ன புலம்பினேன் என்பது உங்களுக்கு தெரியுமே " என்னால் உங்களுக்கு எதுவுமே செய்யமுடியவில்லை ஒரு கையால் சாப்பிட்டு என் உடம்பை வளர்க்கிறேன் என்று புலம்பியது எனக்குள் இந்த வினாடிகூட என்னுள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

மறு நாள் அதிகாலை மஹாபெரியவா என் கனவில் தோன்றி "உனக்கு என்னடா வேணுமென்று கேட்க நானும் எனக்கு உங்கள் விக்கிரஹம் வேண்டும் என்று கேட்க அந்த விக்கிரஹமும் வந்த கதை உங்களுக்கு தெரியும். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் மஹாபெரியவாளின் திருவிளையாடல் மழையில் நனைந்து களைப்பு தீர மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொண்டபடி அவருடைய பிரசாதம் . சனிக்கிழமை வருகிறது.

காலை பிரசாதம் சம்பந்தமா எனக்கு ஒரு தொலை பேசி வருகிறது. மாலை பிரசாதமே வருகிறது. ஓரே இரவில் இத்தனை விஷயங்களை ஒருவரால் தொகுத்து செய்ய முடியுமா. ஆனால் நடந்து முடந்ததே. இதற்கு யார் சூத்திரதாரி.இன்னும் என்ன சந்தேகம். பிரபஞ்ச தெய்வம் பரமேஸ்வரன் மஹாபெரியவா தானே. விளக்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சொல் மஹாபெரியவா.

இப்பொழுது மஹாபெரியவா பிரசாதம் வந்த அற்புதத்தை அனுபவிப்போம்.

ஐரோப்பிய நாடுகளில் மிக அழகான ஒரு நாட்டில் குடி உரிமை பெற்று அங்கேயே பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஒரு இந்தியர்.. மனைவி குழந்தைகளுடன் அந்த நாட்டிலேயே வாழ்ந்து வருபவர். நான் எழுதும் பதிவுகளை பார்த்து படித்து விட்டு தன்னுடைய கருத்துக்களை வழக்கமாக பகிர்ந்து கொள்ளும் மஹாபெரியவா பக்தர் அவர்.

அவரிடம் இருந்து அனுமதி பெறாததால் அவருடைய பெயரை என்னால் குறிப்பிட இயலவில்லை. அவர் அனுமதி வழங்கினால் நிச்சயம் அடுத்த பதிவிலேயே அவருடைய பெயர் மற்றும் வசிக்கும் நாடு ஆகியவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த அற்புதத்தின் துவக்க நாளான செவ்வாய் இரவு என்னுடைய பதிவை படித்து கொண்டிருக்கும் பொழுது அவருக்குள் ஒரு எண்ணம், G.R மாமா இத்தனை பேருக்கு பிரார்த்தனை செய்கிறாரே. அவருக்கு மஹாபெரியவா பிரசாதம் அனுப்பினால் பொருத்தமாக இருக்குமே என்று யோசித்தார். இவர் மனதில் எனக்கு பிரசாதம் அனுப்ப வேண்டும் என்னும் எண்ணத்தை யார் விதைத்தது.?

விளைவு தன்னுடைய காஞ்சி மடத்தின் நெருக்கமான பக்தர் ஒருவரின் உதவியை நாடி தொலை பேசியில் அவரை தொடர்பு கொண்டு இந்த அற்புதத்தின் முடிவுரையை மிகவும் அழகாக எழுதி விட்டார். இந்த பதிவை படிக்கும் அவர் அனுமதி கொடுத்தால் நிச்சயம் அவர் யார் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

சங்கரன் மனதில் G.R. மாமாவிற்கு விக்கிரஹம் வாங்க வேண்டும் என்று யார்சொன்னது. அதுவும் அனுஷம் திரு நக்க்ஷத்ரம் அன்று வாங்க வேண்டும் என்று எப்படி சங்கரனுக்கு தோன்றி இருக்கும். அவர் விக்கிரஹம் வாங்கி வருவதும் எனக்கு தெரியாதே. மஹாபெரியவா தண்டம் தொலைந்து போனது யார் செய்த செயல். ஐரோப்பிய நாட்டு பக்தர் மனதில் இந்த பிரசாத விதையை யார் விதைத்திருப்பார்கள்.

இந்த அற்புதத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் நம் கண் முன்னே இருக்கிறார்கள். பிரசாதம் கொடுத்த கணேச சாஸ்திரிகளும் நம்முடனே இருக்கிறார். இந்த அற்புதத்தை அனுபவித்த காயத்ரி ராஜகோபால் உங்களில் ஒருவன் நானும் இருக்கிறேன்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் பரமேஸ்வரன் மஹாபெரியவா நம்மையெல்லாம் பார்த்துக்கொண்டே தனக்குள் சிரித்துக்கொள்கிறார். இந்த திருவிளையாடல் பதிவை எழுதிய என்னுடைய ஒரு விரலும் களைப்பு தீர என்னை பார்த்து சிரிக்கிறது.

ஒவ்வொரு வினாடியும் என் ஆத்மா இந்த அற்புதத்தை நினைத்து நினைத்து அசை போடுகிறது.எனக்கு ஒன்று புரிகிறது. இந்த அற்புதத்தில் பங்கேற்ற அத்தனை ஆத்மாக்களும் புண்ணிய ஆத்மாக்கள். இந்த அற்புதத்தை படிக்கும் நீங்களும் மஹாபெரியவளின் செல்ல குழைந்தைகள்.

பொதுவில் இது ஒரு மஹாபெரியவா இறை சாம்ராஜ்யம். இந்த இறை சாம்ராஜ்யத்தில் ஒரு அற்புதத்தின் உதயம் ஒரு நாளின் உதயம். இங்கு வெளிச்சத்திற்கு மட்டுமே இடமுண்டு. இரவு அல்லது இருட்டு என்பது கிடையாது.

உங்கள் ஆத்மாவை சாட்சியாக வைத்து

உங்கள் எண்ணங்கள் மலரட்டும்

உங்கள் பேச்சுக்கள் பூக்கட்டும்

உங்கள் செயல்கள் நடக்கட்டும்

உங்கள் ஆத்மா உங்களுக்கு

நம்பிக்கை நிம்மதி இறைவனின் நெருக்கம்

இத்தனையும் கொடுக்கும்

மஹாபெரியவா உங்கள்

இல்லத்திலும் உள்ளத்திலும்

கோவில்கொண்டு விடுவார்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

உங்களில் ஒருவன்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page