Featured Posts

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-31


மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-31

மஹாபெரியவா நடமாடும் பிரபஞ்ச சக்தி

கல் வெட்டு என்பது கல்லில் மட்டும் எழுதுவதல்ல

மனதிலும் எழுதலாம்

இந்தஅற்புதத்தின் நாயகர்

தன்னுடைய இதயத்திலும்

எழுதிவிட்டார்

மஹாபெரியவாளை

இந்த அற்புதம் நடந்த ஆண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி நாலாம் (1964) வருடம். தற்போது சென்னையில் சூளை மேட்டில் வசித்து வரும் சுப்ரமணியம் என்பவரது வாழ்க்கையில் நடந்த அற்புதம்.

சுப்ரமணியம் கல்வெட்டு ஆராய்ச்சியில் ஒரு சிறந்த நிபுணர். கல்வெட்டு ஆராய்ச்சியில் இவர் படித்து பட்டம் வாங்க வில்லை.தன்னுடைய ஆர்வத்தால் தானே முயன்று பல ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்.

இவரது திறமையை மஹாபெரியவா நன்கு அறிந்திருந்தார். மஹாபெரியவா தனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் மடத்து சிப்பந்திகள் யாரையாவது அனுப்பி இவரை அழைப்பார். சுப்பிரமணியமும் உடனே எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு மஹாபெரியவாளுக்கு முன்னாள் கை கட்டி வாய் பொத்தி நின்று பவ்யமாக கேட்பாராம். பெரியவா உத்தரவு வந்தது. அதான் வந்தேன் என்பாராம். அவ்வளவு பக்தி.

பெரும்பாலும் மஹாபெரியவா கல்வெட்டு சுப்பிரமணியத்தை இரவு பதினோரு மணிக்கு மேல்தான் சந்திப்பாராம். அந்த சந்திப்பு மறு நாள் விடிந்தும் தொடர்ந்து கொண்டிருக்குமாம். மடத்து சிப்பந்திகள் மஹாபெரியவாளிடம் ஸ்னானத்திற்கு நேரமாகி விட்டது என்று நினைவு படுத்துவர்களாம். அப்பொழுதான் மஹாபெரியவாளுக்கு தெரியுமாம் விடிந்து விட்டது என்று.

இப்படி பலதருணங்களில் நேரம் போவது தெரியாமல் இருவரும் விவாதிப்பார்களாம். மஹாபெரியவாளுக்கு எவ்வளவோ கைங்கர்யம் செய்திருக்கிறாராம் சுப்ரமணியம். மஹாபெரியவாளுக்கு இவர் மேல் ஒரு பாசமும் அன்பும் எப்பவுமே இருக்குமாம்.

இந்த சமயத்தில் கல்வெட்டு சுப்ரமணியத்திற்கு அறுபதாம் கல்யாணம் வந்தது. இவருடைய சொந்த வீட்டில் தான் நடக்க இருந்தது. சென்னையில் உள்ள சூளை மேடு தான் இவரது சொந்த வீடு இருக்கும் இடம். சுப்ரமணியத்திற்கு ஒரு ஆசை. மஹாபெரியவா காஞ்சி மடத்தில் இருந்து பிரசாதம் அனுப்ப வேண்டும். அதை தான் அறுபதாம் கல்யாண நாளன்று பெற்றுக்கொள்ள வேண்டும் என்று.

சுப்ரமணியம் காஞ்சி மடத்திற்கும் பத்திரிகை அனுப்பினார். அசைக்க முடியாத நம்பிக்கை. எப்படியும் மஹாபெரியவா தன்னை ஏமாற்ற மாட்டார். நிச்சயம் பிரசாதம் அனுப்பி விடுவார் என்று நினைத்து கொண்டிருந்தார்.

வாசலுக்கும் மணவறைக்கும் நடந்து கொண்டே இருந்தார். நேரம் ஆக ஆக பிரசாதம் வருவதாக தெரியவில்லை. மிகவும் கவலை அடைந்தார். மதியம் சாப்பிடக்கூட இல்லை. யாருடனும் சகஜமாக பேசவில்லை.உதடு சிரித்தாலும் உள்ளம் அழுது கொண்டிருந்தது.

இப்பொழுது நான் உங்களை காஞ்சி மடத்திற்கு அழைத்து சென்று மஹாபெரியவா முன் நிறுத்துகிறேன். சுப்ரமணியத்தின் அறுபதாம் கல்யாணநாளன்று காஞ்சி மடத்தில் மதியம் இரண்டு மணிக்கு ஒரு சம்பவம். அன்று காஞ்சி மடத்தில் ஏராளமான கூட்டம்.எல்லா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர். நமது மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.

மதியம் இரண்டு மணி சுமாருக்கு மஹாபெரியவா ஒரு பக்தரை அழைத்து

“எனக்கு ஒரு ஒத்தாசை பண்ணறயா” என்று கேட்டாராம். அந்த பக்தர் பதறி போனாராம். என்ன பெரியவா நீங்கள் உத்தரவு கொடுங்கள். அதை தலை மேல் வைத்து நிறைவேற்றுகிறேன் என்றாராம்

அந்த பக்தரிடம் கேட்டாராம் "உனக்கு கல்வெட்டு சுப்பிரமணியத்தை தெரியுமா” என்று கேட்டாராம். அவரும் பதில் அளித்தாராம் எனக்கு அவ்வளவாகத்தெரியாது. கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாராம்.

மஹாபெரியவா அவரிடம் சொல்கிறார் "இன்னிக்கு சுப்ரமணியத்துக்கு அறுபதாம் கல்யாணம்.எனக்கு மறந்து போயிடுத்து. அவனுக்கு நான் அனுப்பிய பிரசாதம் கிடைக்கலேனா ரொம்ப வருத்தப்படுவான். நீ என்ன பன்னரே மடத்து மேனஜர் கிட்டே போய் அறுபத்தியொரு ரூபாய் பணமும் ஒரு தங்கக்காசும் மடத்து பிரசாதமும் வாங்கிண்டு வா என்று சொன்னாராம்.

பக்தரும் மஹாபெரியவா சொன்ன அனைத்தையும் வாங்கிக்கொண்டு வந்து மஹாபெரியவா முன் நின்றாராம். மஹாபெரியவா கடிகாரத்தை பார்த்து விட்டு இப்போ மணி ரெண்டு ஆறது. சாயங்காலம் இருட்டறதுக்குள்ளே சுப்ரமணியத்திடம் இதை சேர்த்துடு என்று சொன்னாராம்.

அந்த பக்தரும் வேர்க்க விறுவிறுக்க மடத்தில் இருந்து கிளம்பி சென்னையை நோக்கி கிளம்பினாராம். இவருக்கு சென்னையும் ஓரளவிற்குத்தான் தெரியம். கோடம்பாக்கத்தில் ரயில்நிலையத்தில் இறங்கி ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தார்.

ஒரு வீட்டில் கூட்டமாக இருக்கவே அந்த வீட்டில் சுப்பிரமணியத்தை விசாரித்தாராம். பக்தரும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இருட்டறதுக்குள்ளே உங்களுக்கு இந்த பிரசாதத்தை சேர்க்க வேண்டும் என்பது மஹாபெரியவா உத்தரவு என்றாராம்.

அப்பொழுதுதான் சுப்ரமணியத்திற்கு உற்சாகமும் ஊக்கமும் வந்ததாம். தன்னுடைய அறைக்கு ஓடிப்போய் மஹாபெரியவா முன் நின்று கதறி அழுது விட்டாராம். என் மேல் என்ன ஒரு பாசமும் காருண்யமும் உங்களுக்கு பெரியவா. எப்படி நினைவில் வைத்து எனக்கு பிரசாதம் அனுப்பியிருக்கிறீர்கள்.என்று சொல்லி விழுந்து சேவித்தாராம்.

சுப்பிரமணியமும் அந்த வீட்டில் உள்ளவர்களும் இந்த பக்தரை சாப்பிட்டுவிட்டுதான் போக வேண்டம் என்று கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து விட்டார்கள். பக்தரிடம் சுப்ரமணியம் கேட்டாராம். உங்களுக்கு கோடம்பாக்கம் ரயில் நிலையம் செல்ல வழி தெரியுமா. இல்லை நாங்கள் யாராவது கொண்டு போய் விடவா என்று கேட்டாராம்.

பக்தர் சொன்னாராம் நான் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி இங்கு வருவதற்கு ஒன்றும் தெரியாம விழித்துக்கொண்டிருதேன். அப்பொழுது எனக்கு முன்னால் ஒரு ஜோதி என்னை அழைத்துக்கொண்டு இங்கு வந்து விட்டது. எனக்கு வழி தெரியாது என்பதை முன்பே தெரிந்து மஹாபெரியவாளே ஜோதி ஸ்வரூபமாய் உங்களுக்காக எனக்கு வழிகாட்டி என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தார். எனக்கு யாராவது வழி காண்பியுங்கள் என்றாராம் அந்த பக்தர்.

மஹாபெரியவா ஜோதி ஸ்வருபமாய் வழி காட்ட வந்த அற்புதத்தை நினைத்து வியந்து போயினாராம். மண்டபமே அதிரும் வண்ணம் எல்லோரும் ஒருமித்த குரலில்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர -மஹாபெரியவா சரணம்

என்று கோஷமிட்டார்கள்.சுப்பிரமணியமும் பிரசாதம் கொண்டு வந்த பக்தரும் காஞ்சி இருக்கும் திசை நோக்கி விழுந்து வணங்கினார்களாம்.

அண்ட சராசரங்களையும் படைத்த பரமேஸ்வரனுக்கு

பக்தரின் மன நிலை தெரியாதா

எதிர்பார்ப்பே இல்லாத உறவு

இறைவனுக்கு செலுத்தும் அஞ்சலி

இறைவனும் நல்ல மனதுக்கு பரிசளித்து விட்டார்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்