Featured Posts

Showers of Miracles in my life by Mahaperiyava -36-Part-1(Tamil Version)


என் வாழ்வில் மஹாபெரியவா -036 – பாகம்--1

பிரதி வியாழக்கிழமை தோறும்

குருவே சரணம் குரு பாதமே சரணம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

மஹாபெரியவா அற்புதம் என்றாலே நமக்கெல்லாம் வாழ்க்கையில் ஏற்படும் நம்பிக்கையை சொல்லவும் வேண்டுமா? மற்றவர்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ்த்திய மஹாபெரியவா நம் வாழ்க்கையிலும் அற்புதம் நிகழ்த்துவார் என்ற நம்பிக்கை பலமடங்கு நம் மனதில் பெருக்கெடுக்கிறது. இது வழக்கமான ஒன்றுதான்.

நான் இன்னும் ஒரு படி மேல் போய் எந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் அந்த அற்புதங்கள் நடந்தன. அப்பொழுது என்ன மன நிலையில் நான் இருந்தேன் போன்ற விளக்கங்களை கொடுத்தால்தான் நடந்த அற்புதத்தின் ஆழத்தையும் அர்த்தத்தையும் அடி நாதத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்..

என்னுடைய அதிக எழுத்து சுமையை பற்றி கவலை படவில்லை..உங்களுக்கு நடந்த அற்புதத்தை புரியவைப்பது மட்டுமல்ல என் நோக்கம். என் எழுத்துக்களும் விளக்கங்களும் உங்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இது என் நோக்கம் மட்டுமல்ல மஹாபெரியவாளின் எதிர்பார்ப்பும் அதுதான்.. இதன் தொடக்கம் தான் இந்த இந்த பதிவு..

என் பதிவுகள் நீளமாக இருக்கிறது என்ற கவலை வேண்டாம். உங்கள் நல்லதற்குத்தான் எழுதுகிறேன். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு இதை படிக்கும் சிரமம் ஒரு தீர்வாக அமையும் என்பது நிச்சயம்..

மாதா பிதா குரு தெய்வம். இந்த வரிசையில் இறைவன் கடைசியில் தான் இருக்கிறான். தாய் தந்தை ஒரு ஆத்மாவை குழந்தை ரூபத்தில் பெற்றெடுத்து அந்தக்குழந்தையை சீராட்டி பாராட்டி யுவப்பருவரம் வரை நல்லவை கெட்டவை நியாயம் அநியாயம் பாவம் புண்ணியம் ஆகிய எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்து சமுதாயத்தில் வாழ்க்கை என்னும் விளையாட்டை கற்றுக்கொடுத்து வாழுவதற்கு தயார் செய்து அனுப்புகின்றனர்.

தாய் தந்தைக்கு பிறகு இந்த யுவனுக்கு குரு என்பவர் மேலும் பல வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை சொல்லிக்கொடுத்து ஓரளவிற்கு ஒரு ஞானியாக சமுதாயத்தில் வாழ விடுகின்றனர். இது எப்படி என்றால், ஒரு செடியயை விவசாயீ நிலத்தில் நடுவது போல நடப்படுகிறான்.. அதற்கு பிறகு செடி மரமாவதும் பட்டுபோவதும் அவன் கையில் தான் உள்ளது.

செடி குருத்திலேயே பட்டுபோவதற்கு காரணங்கள் பல இருந்தாலும் சமுதாயம் என்ற அமைப்பு ஒரு தவிர்க்க முடியாத காரணமாகவும் இருந்து விடுகிறது. இந்த கலி காலத்தில் கலியின் விகாரங்கள் எத்தனையோ.

அதில் ஒன்று செடி முளைக்கும் தருவாயில் கேலியும் கிண்டலும் பரிகாசமும் செய்து வளரும் வேரில் வெந்நீரை ஊற்றும் மனப்பாங்குதான் இன்று அதிகமாக காணப்படுகிறது. எந்த ஒரு செடி சமுதாயத்தின் இத்தகைய கொடுமையான சுபாவத்தில் இருந்து தப்பித்து பெரிய மரமாக வளர்ந்து விடுகிறதோ அப்பொழுது உங்களை பேசிய சமுதாயம் உங்கள் நிழலில் ஒதுங்கவும் தயங்காது..

வாழ்க்கை என்பது என்ன?. வாழ்க்கை என்பது ஒரு கால் பந்தாட்ட விளையாட்டு போல. பத்துபேர் கூடி பதினோரு பேரை எதிர்த்து விளையாடி வெற்றி பெறுவது போல சமுதாயத்தில் உள்ள அத்தனை போட்டிகளையும் பொறாமைகளையும் எதிர்கொண்டு வாழ்க்கை என்னும் விளையாட்டில் வெற்றி பெற்று வெற்றிக்கொடி நாட்டுபவர்கள் ஒரு சிலர்தான்.

சமுதாயத்தில் பலருக்கு ஐம்பது வயது ஆகும்பொழுது ரத்தம் சுண்டிப்போய் நரம்புகள் நாதம் இழந்து வாழ்க்கை என்னும் பந்தயத்தில் நாம் பெற்றது தோல்வியா வெற்றியா என்பது தெரியாமல் பந்தயத்தில் ஓடிய குதிரை போல வாயில் நுரை தள்ள சாய்வு நாற்காலியில் சாயும் அந்த ஆத்மா. இந்த சமயத்தில் இறைவன் ஒவ்வொருவர் மனத்திரையிலும் தன்னுடைய வாழ்க்கையை குழந்தை பருவத்தில் இருந்து அந்தநொடி வரை அத்தனை நிகழ்வுகளும் மனத்திரையில் ஓடவைப்பான்..

இழந்தது எவ்வளவு பெற்றது எவ்வளவு என்ற சுய பரிசோதனை எண்ணத்திரையில் ஓடும். இதில் கொடுமை எண்ண தெரியுமா? தந்தை வாழ்க்கை என்னும் பந்தயத்தில் ஓடி களைத்து வென்றோமா தோற்றோமா என்று சுய சோதனையில் ஈடு பட்டுக்கொண்டிருக்கும் பொழுது மகனோ மகளோ தந்தைக்கு வாழ்ந்த வாழ்க்கைக்கு மதிப்பெண் போடுவார்கள்.என்ன கொடுமை இது.

தன்னுடைய மகளோ மகனோ குழந்தை பருவத்தில் இருக்கும்பொழுது நெஞ்சில் உதை வாங்கி குழந்தை கழிக்கும் சிறுநீரை வாயில் வாங்கி இந்தக்குழந்தைதான் தான் அறுபது வயதை எட்டி பிடிக்கும்பொழுது தனக்கு தோள் கொடுக்கும் என்று நம்புகிறார்கள். .

ஆனால் வயது அறுபதை எட்டும் பொழுது அன்றைய குழந்தைகள் இன்றைய யுவன் யவதிகள் என்ன செய்கிறார்கள்.. பெற்றோர்களுக்கு மதிப்பெண் கொடுக்கிறார்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால் அதற்குரிய தண்டனை அப்பொழுதே நிறைவேற்றப்படுகிறது.. என்ன தண்டனை முதியோர் இல்லமும் தெருவில் விடுவதுதான்

.

நான் எல்லா குழந்தைகளையும் சொல்லவில்லை . இன்றும் பல குழந்தைகள் மற்றவர்களுக்கு எடுத்து காட்டாக இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு என் மகனையும் மருமகளையும் சொல்லலாம். வெளி நாட்டில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு நாளும் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொள்கிறார்கள்.

நான் ஒரு சில பெற்றோர்களை பார்க்கும் பொழுது என் நெஞ்சில் ரத்தம் வழியும் அதன் வெளிப்பாடுதான் இந்த வார்த்தை வரிகள்.. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பெற்றோரின் வாழ்க்கை முடிவுகள் தவறாக போயிருக்கலாம். ஆனால் அவர்கள் தவறானவர்கள் நிச்சயம் இல்லை. ஒரு குடும்பத்தில் தாய்க்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே அளவு தந்தைக்கும் கொடுங்கள்.

தாயை புரிந்து கொள்ள ஞானம் அவசியமில்லை. அந்த அன்பு பாசம் எல்லாம் எதையும் எதிர் பார்த்து இல்லை. தாய் என்பவள் அன்பின் பொருள் இரக்கத்தின் தாய். ஆனால் பொதுவாக தந்தைக்கு தனக்குள் இருக்கும் பாசத்தை அவருக்கு வெளி படுத்த தெரியாது. தந்தையை புரிந்து கொள்ள ஞானம் தேவை.

உங்களுடைய இருபதாவது வயதில் உங்கள் தந்தை சொல்வது அணைத்தும் அபத்தம். அர்த்தம் அற்றது என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் உங்கள் அறுபது வயதில் உங்கள் பேற்றோர்கள் சொன்னது அர்த்தமுள்ளது உண்மையே என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.. உங்கள் குழந்தைகளுக்கு அறுபது வயது ஆகும் பொழுது அவர்கள் உணர்வார்கள் நீங்கள் சொல்லியது அர்த்தம் உள்ளது.உண்மையே என்று.

பெற்றோர்களுக்காக நான் வக்காலத்து வாங்கவில்லை. பெற்றோர்கள் இறைவனுக்கு சமமானவர்கள். பெற்றோர்களுக்கு செய்யும். கடமைகள் இறைவனுக்கு செய்யும் அர்ச்சனை பூக்கள். பெற்றோர்களுக்கு சேவை செய்வதின் மூலம் உங்களுடைய ஈரேழு ஜென்மத்து பாவங்கள் அத்தனையும் அழிந்து போகும்.

ரத்த சம்பந்த உறவுகளான தாய் தந்தை குழந்தைகள் எல்லாம் நாம் இறைவனிடம் கேட்டு வாங்கி வருவதல்ல. இறைவன் நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப ஒரு உறவை கொடுத்து வாழ்ந்துவிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறான். இறைவன் கொடுத்த உறவு என்பதற்காக உறவுகளை கொண்டாட சொல்லவில்லை கேலிக்கூத்தாக்கமால் வாழ்ந்து விட்டு போனால் மேலும் பாவங்களை சுமக்காமல் தப்பிக்கலாம்.

ஆனால் என் போன்ற வயதான காலத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு அதுவும் கை கால் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது அந்த தாய் தந்தை எங்கே போவார்கள்.. அவர்களுக்காகத்தான் இந்த தொடரில் இந்த பகுதி இடம் பெறுகிறது.

இன்றைய பெற்றோர்கள் காலையில் இருந்து மாலை வரை வேலைக்கு சென்று வீடு திரும்பும் வரை ஒரு மஹாபாரப்போரை சந்தித்து விட்டுத்தான் வீடு திரும்புகிறார்கள். ஒன்றை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு வேண்டியதை எல்லாம் காலம் தவறால் செய்யும் அதே நேரத்தில் தாய் தந்தை என்னும் இரு உயிர்கள் கரைகின்றன என்பதை மறந்து விடாதீர்கள்,

நீங்கள் நினைப்பது எனக்கு காதில் விழுகிறது. மஹாபெரியவா செய்த அற்புதத்தை எழுதாமல் எதையோ எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று நினைப்பது எனக்கு புரிகிறது.

எந்த நிலையில் மஹாபெரியவா என்னை வாழ்க்கை என்னும் புதை குழியில் இருந்து இருந்து ஒரே இரவில் மீட்டெடுத்தார் என்பதை எழுதினால்தான் மஹாபெரியவா என்வாழ்வில் நிகழ்த்திய அற்புதரத்தின் ஆழத்தையும் அடி நாதத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்..

மேலும் எனக்கு நிகழ்ந்த மஹாபெரியவா அற்புதங்கள் என்னைப்போல் இருக்கும் எத்தனையோ பெற்றோர்களுக்கு ஒரு மருந்தாகவும் குழந்தைகள் தர்மத்தின் பாதையில் இருந்து விலகி விடாமல் பார்த்துக்கொள்ளவும் எழுதுகிறேன்.

இத்தனை எழுதும்பொழுது என் விரலைகளுக்கு வலியே இல்லை. மாறாக இன்னும் வலிமை பெறுகிறது. இந்த அறிவுரையை இதோடு நிறுத்திக்கொண்டு எனக்கு கிடைத்த அற்புத அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மேலே நீங்கள் படித்த ஒரு தந்தையை போல நானும் ரத்தம் சுண்டிப்போய் நரம்புகள் நத்தம் இழந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தேன். வயதான காலத்தில் உடல் நிலை சரியில்லாமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பொழுது யாருக்குமே என்ன தோன்றும்.

இப்பொழுது இறைவன் நம் கண் முன்னே தோன்றி என்ன வேணும் என்றும் கேட்க மாட்டானா என்ற ஏக்கம் வரம் அல்லவா. எனக்கும் வந்தது. நான் கடவுளை அழைக்கவில்லை. கடவுள் என்னை அழைத்து ஆட்கொண்டான்.என்ன காரணமோ தெரியவில்லை.

இந்த பதிவின் தொடர்ச்சி பாகம்- II இன்றே வெளியாகி இருக்கிறது. இந்தப்பதிவில் மஹாபெரியவா என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதத்தை படித்து மஹாபெரியவாளின் விஸ்வரியப்ப தரிசனத்தை காணுங்கள்.

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்