top of page
Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-14-பாகம்-II- சந்தரமதி


நீயின்றி நானில்லை குருவே சரணம்

குரு பூஜை அற்புதங்கள்-14-பாகம்-II-

சந்தரமதி

பிரதி திங்கள் தோறும்

மஹாபெரியவா ஆசிர்வாதம்

என்பது முழுமையானது

மஹாபெரியவா நம் வாழ்க்கையில்

ஒரு அடி எடுத்துவைத்தால்

இம்மை மறுமை இக வாழ்வு புற வாழ்வு

முக்கால வாழ்வு அனைத்தும் புனிதமடையும்

எந்த ஒரு தாய்க்கு தன் மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்து பார்ப்பது என்பது அவள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான தருணம். சந்தரமதியும் ஒரு தாய் என்ற ஸ்தானத்தில் மிகவும் மகிழ்சியாகவே இருக்கிறாள். பெண்ணும் பையணும் ஒருவருக்கொருவர் பார்த்து இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப்போயிருந்தது.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் சந்தரமதி எதிர்பார்த்தது கல்யாணத்திற்கு நிச்சயம் ஒரு ஆறு மாசமாவது அவகாசம் கிடைக்கும். இந்த நேரத்தில் சற்று ஆற அமர யோசித்து பணத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் நடந்தது என்ன? நாற்பத்தைந்து நாட்களுக்குள் சத்திரம் பார்த்து நல்ல நாள் பார்த்து கல்யாணம் செய்து வைக்க வேண்டிய நிர்பந்தம்.

மஹாபெரியவா ஆசிர்வதமென்பது பிரச்சனைக்கு எதிர்பாராத ஒரு தீர்வு தானே

எப்பவும் எதுவும் நடக்கும்

என்பது எப்படி நூற்றுக்கு நூறு உண்மையோ

அப்படி எப்படியும் நடக்கும் என்பதும் உண்மையே

எங்கிருந்து யார் வந்து உதவி செய்வார்கள் என்பது

யாருக்கும் எவருக்கும் தெரியாத தேவ ரகசியம்

ஆனால் நடக்கும் என்பது சர்வ நிச்சயம்

சந்தரமதி தன்னுடைய பயத்தையும் கஷ்டங்களையும் விலாவரியாக என்னிடம் சொன்னாள். ஆனால் என்னுடைய மஹாபெரியவா நம்பிக்கை என்பது

அந்த வானத்தை கூட வில்லாக வளைத்து விடலாம்

கடலை கூட வற்ற வைக்கலாம்

மலையையும் பெயர்த்து விடலாம்

எதுவும் சாத்தியமே

நான் சந்தரமதிக்கு புரிய வைத்தேன். மஹாபெரியவா அனுக்கிரஹம் என்பது ஏதோ அப்போதைக்கு மற்றவர்கள் செய்யும் ஆசிர்வாதம் போல அல்ல. மஹாபெரியவா ஆசிர்வாதம் என்பது நூறு வருடங்கள் ஆனாலும் அந்த ஆசிர்வாதம் யாருடைய வாழ்க்கையும் சரியான பாதையில் அழைத்துச்செல்லும். அவ்வளவு தீர்க்கமானது. நேர்தியானது

முக்காலமும் உணர்ந்த அறிந்த

பரமேஸ்வரன் அல்லவா

நம்முடைய மஹாபெரியவா

இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். கல்யாண ஏற்பாடுகளை தைரியமாக செய். யார் எப்படி எப்போது உதவி செய்வார்கள் என்பது எனக்கும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரியும். உனக்கு தேவையான பண உதவி யார் மூலமாவது வந்து சேரும் என்பது நிச்சயமாக எனக்கு தெரியும் என்று என்னுடைய நம்பிக்கை நக்ஷ்த்திரமான மஹாபெரியவளை வேண்டிக்கொண்டு சொன்னேன்.

அவளும் சரியென்று சொல்லி என் வீட்டில் உள்ள மஹாபெரியவாளை விழுந்து நமஸ்காரம் செய்து விட்டு கிளம்பினாள். சந்தரமதி ஒரு பெரிய பட்டியல் தயார் செய்ய ஆரம்பித்தாள். அவள் வேலை செய்யும் வீடுகள், தெரிந்த நண்பர்கள், தெரிந்த பணக்காரர்கள் என்று எல்லோரிடமும் மொத்தமாக ஒரு லக்க்ஷம் ருபாய் கடனாக வாங்கி கல்யாணம் முடிந்தவுடன் எல்லோரிடமும் மாதாந்திர தவணையாக கட்டிவிடலாம் என்று முடிவு செய்தாள்.

பக்தி விதைகளை எல்லோர்

இதய மண்ணிலும் தூவினால்

வளர்வது தனி மனித பக்தியல்ல

ஒரு சமுதாய பக்தி

சந்திரமதி மட்டும் விதிவிலக்கா என்ன

தூவினேன் தனி மனித பக்தி குடும்ப பக்தியானது

பல குடும்பங்கள் ஒன்றிணைந்ததுதானே சமுதாயம்

ஆனால் அவளுக்கு இரண்டு சந்தேகங்கள். ஒன்று கேட்ட பணம் வசூலாகுமா. பணம் கிடைத்தாலும் மாதா மாதம் பணம் கட்டிவிட்டு குடும்பம் எப்படி சாப்பிடும் என்ற கவலையில் சரியாக கூட சாப்பிடாமல் வேலை செய்தாள்.

நான் அவளிடம் மஹாபெரியவாளை பற்றி எடுத்துச்சொல்லி தைரியமாக இருக்குமாறு சொன்னேன். நான் சொன்னேன் என்னை உதாரணத்திற்கு எடுத்துக்கொள். கண்கூடாக நீயும் பார்க்கிறாய் எப்படியெல்லாமோ இருந்தேன். இதுதான் இனிமேல் உனக்கு வாழ்கை என்று சொல்லி என்னுடைய எல்லா வகையற்ற உணவு பழக்கவழக்கங்களுக்கு ஒரே இரவில் மஹாபெரியவா முற்றுப்புள்ளி வைத்து காண்பித்தார்.

தரையில் தவழ்ந்து கொண்டிருந்த என்னை எழுந்து நடக்க வைத்து ஒரு கை ஒரு கால் மூலமாக வீட்டில் அத்தனை பேருக்கும் இன்று சமைத்து போடுவேன் என்று நீ நினைத்து பார்த்தாயா. ஆனால் எல்லாமும் நடக்கிறதே. இதற்கு மேல் உனக்கு என்ன வேண்டும். தைரியமாக இறங்கு. உனக்கு உதவி எப்படி வரும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் சரியான நேரத்தில் தேவையான பணம் உன்னை வந்தடையும் என்று சொன்னவுடன் கண்கள் கலங்க விடை பெற்றுச்சென்றாள்.

கல்யாணத்திற்கு இன்னும் இருபது நாட்கள் கூட இல்லை.யாரிடமும் பணம் கேட்கவில்லை.பணம் கிடைத்தாலும் எப்படி திரும்ப கொடுக்கமுடியும் என்ற கவலை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நானும் மஹாபெரியவாளிடம் சென்று கீழ்வருமாறு வேண்டினேன்.

"பெரியவா சந்தரமதி செய்வதறியாமல் தவிக்கிறாள். அவளுக்கு அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா." என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன். எனக்கு மஹாபெரியவா கொடுத்த பதில் இதுதான்

"ஏன்டா அவளுக்கு நான் அனுக்கிரஹம் தான் செய்ய முடியும். நானே எல்லோரிடமும் அவளுக்காக பணம் கேட்க முடியுமா. அவளையே தெரிஞ்சவாளிடத்தில் பணம் கேட்கச்சொல். எல்லாம் நல்லபடியா முடியும் என்று சொல்லி தன் பதிலை முடித்துக்கொண்டார்.

எனக்கும் நான் பண்ணது தப்பு என்று பட்டது. நான் சந்தரமதியிடம் அறிவுரை சொன்னேன். நீ தெரிந்தவர்களிடம் போயி பணம் கேட்காமலேயே இருந்தால் அடுத்து என்னசெய்யவேண்டும் என்பது தெரியாமல் போய்விடும். நேரம் குறைந்து கொண்டே வருகிறது.

மஹாபெரியவாளும் கேட்க்கும் இடத்தில பணம் கேட்டால் பணம் கிடைக்கும். வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்கவும் மஹாபெரியவா அனுக்கிரஹம் செய்வார். முதலில் நேரம் கடத்தாமல் பணம் ஏற்பாடு செய்ய ஆரம்பி. எல்லாம் சரியாகிவிடும். மறு நாள் புதன் கிழமை. உன்னுடைய வேலையை ஆரம்பி என்று சொல்லி அவளை வீட்டிற்கு அனுப்பிவைத்தேன்.

அற்புதம்

புதன்கிழமை -காலை மணி நான்கு

புதன் கிழமை விடிந்தது. காலை மணி நான்கு. ஏதோ என் பிரச்சனை போல் நினைக்க ஆரம்பித்து விட்டேன்.மஹாபெரியவாளிடத்தில் மனமுருக கண்களில் கண்ணீர் வடிய நின்று கொண்டிருந்தேன் மஹாபெரியவா பதிலுக்காக.

மஹாபெரியவா கீழ் வருமாறு சொன்னார்.

"சந்தரமதிக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் இந்தக்கல்யாணம் நடக்கும். சூரிய அஸ்தமனத்துக்குள் அவளுடைய கவலையும் காணாமல் போகும் என்று சொல்லி தன்னுடைய பதிலை முடித்துக்கொண்டார்.

புதன்கிழமை மாலை மணி ஆறு.

சந்திரமதி என்னை பார்க்க வந்தாள். அவள் முகத்தை பார்த்தால் ஒரு நிம்மதி ரேகை ஓடியது. அவள் பின் வருமாறு சொன்னாள்.

"எல்லா வீட்டிற்கும் சென்று உட்கார்ந்து ஆற அமர ஒரு புது வித உத்வேகத்துடன் பணம் கேட்க ஆரம்பித்தேன். அவர்கள் எல்லோரும் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்கள். நானும் உங்களால் முடிந்த பணத்தை கொடுங்கள். நான் சிறுக சிறுக மாதா மாதம் கொடுத்து அடைத்து விடுகிறேன் என்று சொன்னேன்.

ஆனால் எல்லோரும் ஒரே குரலாக ஒன்று சொன்னார்கள். சந்திரமதி உன்னால் திரும்ப கொடுக்க முடியாது. நீ மிகவும் கஷ்டப்படுவதை நாங்கள் பார்க்கமுடியாது. இதுனால எங்களால் முடிந்த பணத்தை உனக்கு கொடுத்து உதவி செய்கிறோம். இந்த பணத்தை நாங்கள் பெண்ணுக்கு கொடுத்த மொய் பணமாக வைத்துக்கொள்.

இப்படியே வசூலான மொத்த பணம்

எவ்வளவு தெரியுமா

ஒரு லக்க்ஷத்து எழுபத்தைந்து ஆயிரம் ருபாய்

இந்த பணம் ஒரு பகுதிதான். கல்யாணப்பெண் வேலை பார்க்கும் அலுவலகத்தில் எல்லோரும் சேர்ந்து ஒரு லக்க்ஷ ரூபாயும் அவர்களுடைய தேன் நிலவிற்கு கேரளாவிற்கு போக வர குளிர் வசதியுடன் கூடிய பயணசீட்டு முன் பதிவு செய்தும் கொடுத்தார்கள்.

கல்யாணம் மட்டுமில்லாமல் கல்யாண வரவேற்பு தனியாக சென்னையில் ஒரு “எ” வகுப்பு ஹோட்டலில் சீருடை அணிந்த சர்வர்களுடன் சாப்பாடு பரிமாற ஏகோபித்த மஹாபெரியவா அனுகிரஹத்துடனும் ஆசிர்வாதத்துடனும் நினைத்துப்பார்க்கமுடியாத அளவில் கல்யாணம் நடந்தது.

இந்த அற்புதத்தை என் கண்ணால் கண்ட பிறகு என்னால் அழுது கதறாமல் இருக்கமுடியவில்லை. மஹாபெரியவா முன் நின்று என் கண்கள் சிந்தும் கண்ணீரை மஹாபெரியவாளின் பொற்பாதங்களில் காணிக்கையாக சாம்ப்பித்தேன்.

சற்று சிந்தித்துப்பாருங்கள் சந்திரமதி ஒரு மஹாபெரியவா பரம்பரையை பின்புலமாக கொண்ட பக்தை கிடையாது. ஒரு ப்ராமணப்பெண்ணும் இல்லை. என்னுடைய வாழ்க்கை மாற்றங்களை பார்த்து மஹாபெரியவா பக்தையாக மாறியவள். அவள் மட்டுமல்ல அவள் கணவன் இரு மகள்கள் எல்லோருமே மஹாபெரியவா பக்தர்களாகி விட்டனர்.

மஹாபெரியவா ஜாதியை பார்ப்பதில்லை

பரம்பரையை பார்ப்பதில்லை

சமுதாய அந்தஸ்தை பார்ப்பதில்லை

பார்ப்பது ஒன்றே ஒன்று தான்

மனித ஆத்மா

கெட்டவனை கூட நல்லவனாக்கி

அவனுக்கும் சமுதாயத்தில் ஒரு

அந்தஸ்த்தையும் அங்கீகாரத்தையும்

எற்படுத்தி கொடுத்து

நல்ல மனித ஆத்மாவாக

மாற்றி வாழ வைப்பதை

என்னவென்று சொல்ல

நான் சந்தரமதியிடம் சொன்னது இதுதான்." இந்த நன்றிக்கடனை மஹாபெரியவாளுக்கு எந்த விதத்திலும் திருப்பி செலுத்த முடியாது. ஆனால் உன்னை போல் யாராவது கஷ்டத்தில் இருந்தால் அவர்களுக்கு மஹாபெரியவாளின் வழியை காட்டி உன் நன்றிக்கடனை தீர்த்துக்கொள்.என்று சொல்லி மணமக்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தேன்.

மஹாபெரியவா

ஸ்தூலத்தின் அற்புதத்தை விட

சூஷ்மத்தின் அற்புதம்

விண்ணையும் தொட்டுவிடும்

இதற்கு என்ன விலை தெரியுமா

உங்கள் குறையாத நம்பிக்கையும்

உருகும் பக்தியும் தானே

****

சந்திரமதி அடுத்த வாரமும் வருவாள் மற்றுமொரு அற்புத அனுபவத்தோடு

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page