மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-033

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-033
பிரதி செவ்வாய்க்கிழமை தோறும்
இறைவனின் அவதாரங்கள்
எத்தனையோ
நாம் இப்பொழுது ஒரு அவதாரத்தையாவது காண இயலுமா
நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்த
பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவளை பார்த்திருக்கிறோம்
இறைவனின் குரலை கேட்டிருக்கிறோம்
நம் தேவைகளை சொன்னால்
உடனே தருவதையும் அனுபவித்திருக்கிறோம்
அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான் இந்த பதிவு
ஒரு வயதான தம்பதியினர். கணவர் கிருஷ்ணமூர்த்தி அரசாங்க உத்யோகத்தில் இருப்பவர். இவருடைய மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற ஒரு பெண். திருமணமாகி எல்லா சடங்குகளும் செய்தாகி விட்டது.பெண்ணும் தாயாகும் பாதையில் பயணித்து கொண்டிருந்தாள்.
பிரசவமாகும் நாளும் வந்தது. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினருக்கு அப்படியொரு சந்தோஷம். இருக்காதா பின்னே!. ஒரு மனிதன் எப்பொழுது பூரணத்துவம் அடைகிறான் தெரியுமா? பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்னும் வாழ்த்தில் பதினாறாவது செல்வம் பேரனை பெறுவது.இதைப்பற்றி என்னுடைய இந்து மதம் ஒரு வாழும் முறை பதிவில் எழுத்தின் இருந்தேன்.
சுப்ரமணியன் எல்லா குழந்தைகளையும் போல் நன்றாகவே தவழ்ந்தான். தாத்தாவும் பாட்டியும் இரு வேறு இடங்களில் உட்கார்ந்து கொண்டு பேரன் சுப்பிரமணியத்தை அழைப்பார்கள். பேரனும் தாத்தாவுக்கும் இடையே உள்ள தூரத்தை தவழ்ந்து தவழ்ந்து வருவதை கண்களில் ஆனந்த கண்ணீருடன் ரசித்தார்கள். பேரனை அள்ளி உச்சி முகந்தார்கள்.இது வரை சரி.
இதற்கு மேல்தான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பேரன் மெதுவாக பிடித்து கொண்டு நிற்கும் பருவம். நிற்க முடியவில்லை. நிற்க முயலும் பொழுது கால்கள் மடங்கி கீழே விழுந்து விடுவான். குழந்தைகள் தத்தி தத்தி நடை பயிலும் தருவாயில் கீழே விழுவதும் மீண்டும் எழுவதும் சகஜம் தானே என்று நீங்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.
நீங்கள் நினைப்பது சரியே. எதுவரை என்றால் ஒரு வயது வரை. ஆனால் இரண்டரை வயதாகியும் பேரன் சுப்ரமணியனால். எழுந்து நிற்க முடியவில்லை.. இறைவன் எல்லா சந்தோஷத்திலும் ஒரு குறையை வைப்பான் என்பதை நாம் சொல்ல கேள்ளிவிபட்டிருக்கிறோம். . ஆனால் இந்த குறை நெஞ்சை கசக்கி பிழியும் சோகமல்லவா.
தாத்தாவும் பாட்டியும் வயதான காலத்தில் தங்கள் சோகத்தை கூட மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. யார் என்ன சமாதானம் சொல்ல முடியும்.. வேண்டும் வரை இறைவனிடம் முறையிட்டார்கள்.
ஆனால் எந்த பதிலும் கிடைக்க வில்லை..சுற்றமும் சொந்தங்களும் பயமுறுத்தினார்கள். வேண்டமென்றே இல்லை. வேறு என்னசொல்ல முடியும். அவர்கள் சொன்னது இதுதான்.
பேரன் சுப்பிரமணியனை இப்படியே விட்டுவிட்டால் இருபத்தி ஐந்து வயதில் அவனுக்கென்றே ஒருவர் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட வேண்டும். . அவனை எதாவது ஒரு நல்ல மருத்துவரிடம் காண்பியுங்கள் என்று ஆலோசனை செய்து விட்டு சென்று விடுவார்கள்.
ஏதற்கும் ஒரு நேரம் காலம் வரவேண்டுமல்லவா. காலமும் வந்தது.நேரமும் வந்தது. கிஷ்ணமூர்த்தியின் குடும்ப நண்பர் ஒருவர் மஹாபெரியவாளை பற்றி சொல்லி அந்த பரமேஸ்வரன் மனது வைத்தால் எல்லாம் நல்ல படியாக முடியும். உங்கள்பேரன் நடக்க ஆரம்பித்து விடுவான்.என்றார்.
கிருஷ்ணமூர்த்தி தம்பதியினருக்கு அந்த இறைவனே நேரில் வந்து சொன்னது போல இருந்தது. நாம் ஒரு இக்கட்டில் இருக்கும் போது எல்லா வழியும் அடைபட்ட பிறகு ஒரு சிறு நம்பிக்கை கூட கடவுளாக காட்சியளிக்கும். அப்படிதான் இவர்களுக்கும். மஹாபெரியவா பரமேஸ்வரனாகவே காட்சி அளித்தார். இவர்களுக்கு அவ்வளவாக மஹாபெரியவாளை பற்றி தெரியாது.
ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்து வாடகை கார் அமர்த்திக்கொண்டு காஞ்சிபுரம் சென்றனர். அன்று மடத்தில் ஏகப்பட்ட கூட்டம்.வழக்கத்தை விட கூட்டம் அதிகம். எல்லோரும் வரிசையில் நின்று தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.
தாத்தா கிருஷ்ணமூர்த்தி பேரனை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டே வரிசையில் நகர்ந்து கொண்டே இருந்தார். கூட்டத்தை பார்த்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இன்னொருநாளில் வந்து மஹாபெரியவாளை சாவகாசமாக தரிசனம் செய்து விட்டு அப்பொழுது தங்களுடைய பேரன் பிரச்னையை சொல்லி விடலாம் என்று நினைத்தார்.
தாத்தா நினைப்பதை மஹாபெரியவா நன்றாக படித்து விட்டார். இவர்களின் முறையும் வந்தது.கூட்டம் அதிகமாக இருந்ததால் கைங்கர்யம் செய்பவர்கள் நகருங்கள் என்று கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார். மஹாபெரியவா தன்னுடைய ஒரு விரலால் அந்த கைங்கர்யம் செய்பவரை கண்டித்தார்.
இந்த சமயத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மஹாபெரியவாளிடம் பேரனுடைய பிரச்னையை சொல்ல முயன்றார். மஹாபெரியவா அவரை நிறுத்த சொல்லிவிட்டு ஒரு ரஸ்தாளி வாழைப்பழத்தை உரித்து பேரன் சுப்ரமணியத்திடம் நீட்டினார்.
கிருஷ்ணமூர்த்தியும் பேரன் சுப்பிரமணியத்தை குனிந்து மஹாபெரியவா அருகில் வாழைப்பழத்தை வாங்கும் படி கொண்டு போனார். பேரனும் பழத்தை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான்.
அங்கு கூடியிருந்த பக்தர்கள் எல்லோரும் குழந்தை சுப்பிரமணியத்தை ஆசையோடு பார்த்தார்கள். மஹாபெரியவாளே வாழை பழத்தை உரித்து குழந்தையின் கையில் கொடுத்தால் அந்த குழந்தை எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமா. அந்த குழந்தை நடந்திருக்கும் என்று.
காஞ்சியில் மஹாபெரியவாளிடம் விடை பெற்றுக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் தங்களுடைய வீட்டிற்கு திரும்பினர். வீடு வந்து சேந்த சில நாட்களில் நண்பர் ஒருவர் இந்த மாதிரி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ஒரு மருத்துவமனை இருப்பதாகவும் அங்கு சுப்பிரமணியனை கொண்டு சேர்க்க சொல்லி பயிற்சி கொடுக்க சொன்னார்.
குழந்தை சுப்பிரமணியமும் அந்த மருத்துவமனையில் சேர்ந்து பயிற்சி எடுத்து கொண்டான். இன்று பேரன் சுப்ரமணியத்திற்கு வயது இருபத்திநாலு ,அவருக்கு இணையாக யாரும் நடக்க முடியாது. அவ்வளவு ஒரு வேகம் நடையில்.
நடக்கும் என்பர் நடக்காது
நடக்காது என்பர் நடந்து விடும்
இது நம்முடைய லௌகீக வாழ்க்கையில்
மஹாபெரியவா இறை சாம்ராஜ்யத்தில்
நிச்சயம் எதுவும் நடக்கும்
என்ற எழுதப்படாத விதி
இங்கு நடக்காது என்பதற்கு
இடமே இல்லை
இந்த இறை சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி
பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா
காயத்ரி ராஜகோபால்