Featured Posts

திவ்ய தேச தரிசனங்கள் -004 உத்தமர் கோவில் அல்லது திருக்கரம்பனூர்


திவ்ய தேச தரிசனங்கள் -004

உத்தமர் கோவில் அல்லது திருக்கரம்பனூர்

உத்தமர் கோவில்

இந்த அற்புதமான திருக்கோவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் சமயபுரம் டோல் கேட்டிற்கு அருகில் உள்ளது. இந்த திருத்தலத்தின் சிறப்பு பிரும்மா சிவன் திருமால் மூவரும் ஒரே கோவிலில் தரிசனம் தருவது. உத்தமர்கோவிலை வைஷ்ணவ திருத்தலங்களின் பெயரான திருக்கரம்பனூர் என்றும் அழைப்பார்கள்..

மும் மூர்த்திகள் தங்களது மனைவிமார்களுடன் தரிசனம் தருவதால் இங்கு குடும்பத்துடன் வந்து வழிபட்டால் உங்கள் இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகம்.. இந்த திருத்தலம் திருமங்கை அழவாரல் மங்களா சாசனம் செய்யப்பட்து..

பிரும்மா தேவிமார்கள்

நூற்றி எட்டு வைணவ திருத்தலங்களில் உத்தமர் கோவிலும் ஒன்று. .சிவபெருமானின் திருக்கோலங்களில் ஒன்றான பிச்சாண்டார் இங்கு தான் திருக்கோலம் பூண்டது. அதனால் தான் இந்த திருத்தலத்திற்கு பிச்சாண்டார் கோவில் என்ற பெயரும் ஏற்பட்டது.

இங்கு பிரும்மா ஞான சரஸ்வதியுடன் தம்பதி சமேதராக தரிசனம் கொடுக்கிறார்... ஒரு முறை சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற போட்டியில் பிரும்மா சிவபெருமானின் அடிமுடியை காண முயன்று தோல்வி அடைந்து சிவபெருமானின் தலையில் இருந்து கீழே விழுந்த தாழம்பூவுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார்..

அதன்படி சிவபெருமான் அடிமுடியை பிரும்மா பார்த்து விட்டதாக தாழம்பூ பொய் சாட்சி சொல்லியது. உண்மையை உணர்ந்து கொண்ட சிவபெருமான் பிரம்மாவிற்கு ஒரு சாபம் இட்டார். இனிமேல் உனக்கென்று எந்தக்கோவிலிலும் தனியாக சன்னதி இருக்காது என்று.. அதே போல் தாழம்பூவிற்கு ஒரு சாபம் கொடுத்தார். உன்னை யாரும் பூஜிக்கும் மலர்களில் ஒன்றாக பயன் படுத்த மாட்டார்கள் என்று.,

பிறகு பிரும்மா மனம் வருந்தி சிவபெருமானை தியானித்து தவத்தில் இருந்தார். பிரும்மாவின் தவ வலிமையை பார்த்து மகிழ்ந்த சிவபெருமான் பிறகு இங்கயே உனக்கென்று ஒரு தனி சன்னதி உருவாகும் என்று வரம் கொடுத்தார்.. அதன்படி இங்கு பிரும்மா தன்னுடைய மனைவி சரஸ்வதியுடன் தரிசனம் கொடுக்கஆரம்பித்தார்.

உத்தமர் கோவில் மூன்று தேவிமார்களும்

இங்கு கல்விக்கடவுளான சரஸ்வதி தெற்கு பார்த்து தனி சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள். வழக்கமாக கையில் வைத்திருக்கும் வீணைக்கு பதிலாக ஏட்டு சுவடியை கையில் வைத்திருக்கிறாள். மற்றொரு கையால் அபய ஹஸ்த முத்திரை கொடுக்கிறாள்.

இங்கு பள்ளிக்கு போகும் குழந்தைகள் வேண்டி வணங்கிக்கொண்டால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதே போல் உத்தியோகத்தில் பதவி உயர்வு போன்றவற்றிற்கு வேண்டிக்கொண்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இங்கு விஷ்ணு பகவான் புருஷோத்தமன் என்ற பெயரால் கிழக்கு நோக்கி பள்ளிகொண்டு திருமார்பில் மஹாலக்ஷ்மியை தாங்கிக்கொண்டிருக்கிறார்.. தாயாரின் திருநாமம் பூரணவல்லி தயார் தனி சன்னதியில் அழகின் மறு உருவமாக காட்சி தருகிறார்.

ஒரு முறை சிவபெருமான் பிரும்மாவின் நான்கு தலைகளில் ஒன்றை கொய்து விட்டதால் பிரும்மஹத்தி தோஷத்திற்கு ஆளாகி பிச்சை பாத்திரம் ஏந்தி அலைந்தார். பிறகு இங்குள்ள பூரணவல்லி தயார் தான் பிச்சையிட்டு தோஷ நிவர்த்திக்கு வழி வகுத்தாள்.இந்த தாயாரை வழிபட்டால் உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். சங்கடங்கள் விலகும் என்பது அன்றில் இருந்து இன்று வரை கடைபிடிக்கும் ஒரு பிரார்த்தனை..

பிச்சாடனராக காட்சி கொடுக்கும் சிவபெருமானை இங்கு வழிபட்டால் துர் சிந்தனைகள் அகலும் கெட்ட செயல்கள் அறவே அற்றுப்போகும்.தசரத சக்கரவர்த்தி பிள்ளை பாக்கியம் வேண்டி வழிபட்ட சிவலிங்கம் இன்றும் இங்கு உள்ளது. இதற்கு தசரத லிங்கம் என்று பெயர். பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து அர்ச்சித்து வழிபட்டால் நிச்சயம் பிள்ளை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

இங்கு ஏழு குருமார்களும் ஒரு சேர காட்சி கொடுக்கின்றனர். சிவ குரு, விஷ்ணு குரு பிரும்ம குரு ஸ்ரீ சக்தி குரு தேவா குருவாகிய பிரகஸ்பதி அசுரர் குருவான சுகராச்சாரியார் ஸ்ரீ சுப்ரமணிய குரு ஆகிய சப்த குரு மார்களும் இங்கு தரிசனம் கொடுக்கின்றனர். இவர்களை வழிபட்டால் உங்களுக்கு குருவே இல்லை என்ற ஏமாற்றமும் ஏக்கமும் தொலைந்து போகும்.

வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஏழு குரு மார்களையும் வணங்கி பிறகு மும் மூர்த்திகளையும் தம்பதி சமேதராக வணங்கினால் கல்வி ஞானம் கேள்வி ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம். .இவ்வாறு வணங்கினால் கல்வியில் மேன்மை தெளிந்த ஞானம் சகல யோகம் வியாபார அபிவிருத்தி மனதுக்கு பிடித்த திருமணம் கண்ணுக்கு அழகான குழந்தைகள் போன்றவைகள் வாய்க்கப்பெறுவர்கள்.

மாணவர்கள் இங்கு ஒரே ஒரு முறை வழிபட்டாலும் குரு யோகம் கைகூடும். கல்வி மேன்மை பெறும். அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வில் நல்ல முறையில் தேர்ச்சி அடைவார்கள்.

வழிபாட்டு நேரம் : காலை 06.30 மணி முதல்12.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல 08.00 .மணி வரை

தொலை பேசி : 0431-2591-466 - 2591040

உங்கள் பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் அதாவது கண்ணுக்கும் மனதுக்கும் பிடித்த கணவன் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகான குழந்தைகள் உங்கள் குழந்தைகளுக்கும் உங்களுக்கும் கேள்வி ஞானம் சிறந்து விளங்கவும் உங்கள் இல்லங்களில் ஐஸ்வர்யம் பெருகவும் இறை அமைதியும் ஆனந்தமும் நிரம்பி இருக்கவும் உத்தமர் கோவிலுக்கு ஒரு முறை குடும்பத்துடன் சென்று தரிசித்து வரவும்.நீங்கள் கேட்டது அனைத்தும் கிடைக்கும்.

ஓம் நமோ நாராயணா

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்