Featured Posts

குரு புகழ்


பெரியவா சரணம்

குன்றாடும் குமரனுக்குத் திருப்புகழாம் - எங்கள் மனதாளும் மஹாஸ்வாமிக்கு குரு புகழாம்”

என்பதாக அருணகிரியாரின் சந்தமெடுத்துச் சங்கரனுக்கு புகழ்மாலை சூட்டிட இன்னுமொரு குரு புகழ் எழுத வரம் கிட்டியதாம். எல்லாம் வல்ல ஐயனின் அருளாலே என்றேனும் ஓர் நாள் குருகானாம்ருதமாக இந்த குரு புகழ்உலகெங்கொலும் ஒலிக்கத் தொடங்கிட ப்ரார்த்திக்கின்றேன். எக்காலத்திற்கும் “திருப்புகழ்” போற்றுதலுக்கு வரமளிக்கும் அந்த ஸ்வாமிநாத குரு போலே, இந்த “குருப்புகழ்” போற்றுதலுக்கு எங்கள் ஸ்வாமிநாத குருவான (ஸ்ரீமஹாபெரியவாளின் (பூர்வாஸ்ரமப் பெயர் ஸ்வாமிநாதன்) தாங்கள் எல்லோருக்கும் வரம் தந்து காத்து ரக்ஷிக்க வேண்டும் மஹாபிரபோ! என ப்ரார்த்தித்துக் கொண்டு இன்றைய குருப்புகழை ஐயனின் பாதாரவிந்தங்களிலே

சமர்ப்பிக்கின்றேன். ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

#குரு புகழ் ....... சந்தம் .......... தந்ததன தான தந்ததன தான தந்ததன தான ...... தனதான ....... பாடல் .......... அஞ்சுவித மாக முந்துவினை யாவு மண்டுநிலை யேதும் …… வாராது உந்தனரு ளாசி கிட்டிடவு மாறு பெற்றிடவு வேண்டி ….. அடிபேண செந்தமிழி னோடு உம்புகழும் பாடி தண்டனிடு வரமும் ….. பெறுமாறு சந்தமிதி லேகி மங்கலமுஞ் சேர செவ்வருளி லூர ….. வரம்தாராய்! சங்கரனு மாகி சந்திரனு மாக வந்தகுரு நாத …… னுனைநாடி கொண்டவுற வேது முந்திதரு பாச முண்டநிலை யோடு …. சரணேக உந்தஞ்சர ணார விந்தமது நாட பொன்னருளு மாக ……. புரிவாயே குஞ்சிதனி னாசி பொங்குபத மோடு கச்சிதல மேவு …… குருநாதா! ....... பதம் .......... அஞ்சும் விதமாக முந்து வினையாவும் அண்டும் நிலையேதும் …… வாராது உந்தன் அருளாசி கிட்டிடவுமாறு பெற்றிடவும் வேண்டி ….. அடிபேண செந்தமிழினோடு உம்புகழும் பாடி தண்டனிடும் வரமும் ….. பெறுமாறு சந்தமிதில் ஏகி மங்கலமும் சேர செவ்வருளில் ஊர ….. வரம்தாராய்! சங்கரனும் ஆகி சந்திரனும் ஆக வந்த குருநாதன் …… உனைநாடி கொண்ட உறவேதும் முந்திதரும் பாசம் உண்ட நிலையோடு …. சரணேக உந்தன் சரணாரவிந்தமது நாட பொன்னருளுமாக ……. புரிவாயே குஞ்சிதனின் ஆசி பொங்கும் பதமோடு கச்சிதலம் மேவும் …… குருநாதா! குரு புகழ் விளக்கம்

அஞ்சி நடுங்கி அவதிப்படும் விதமாக நம் பூர்வஜென்ம வினையின் தாக்கங்கள் ஏதும் நம்மை அண்டுகிறபடியான நிலை எதுவும் வாராமல், உங்கள் அருளாசி கிட்டுவதான நிலையை அடைய வேண்டி திருப்பாதங்களிலே சரண் புகவேண்டி, செந்தமிழ் எனப் பெயர் பெற்ற யாம் அறிந்த நல் மொழிதனிலே உங்கள் புகழ் (மகிமை) தனைப் பாடி நமஸ்கரிக்கின்ற வரமும் பெறுகின்ற பாக்கியத்தோடு, இந்தப் பாக்களின் சந்தத்திலே மங்கலம் சேர உங்கள் செவ்வருளைப் பொழியுங்கள்!

இவ்வுலகை ச்ருஷ்டித்து ஆண்டருளுகின்ற சர்வேஸ்வரனான சங்கரனே ஆதி சங்கரனாக அவதரிக்க, அவர் வழியிலே யாம் பெற்ற சந்திரசேகரனுமாக வந்த குருநாதா! உங்களை நாடி, இவ்வுலகிலே பந்தபாசங்களோடு கூடிய சொந்தங்கள் யாவருடனுமாக உங்களிடம் சரணாகதி அடைய ப்ரார்த்தித்துக் கொண்டு, உங்களுடைய பாதார விந்தங்களை நாடி வருகின்றோம். பொன்னருள் புரியுங்கள், அழகிய வளைத்த கால்களுடனே ஆடலரசனான நடராசனின் அருளைப் போலே காத்து ரக்ஷிக்கும் கமல பாதங்கள் கொண்ட காஞ்சியிலே மேவுகின்ற குருநாதா! அலைமகளும் மலைமகளும் கலைமகளும் என முப்பெருந்தேவிகளும், மலையவன், மாலவன்,மதியவன் எனும் முப்பெருந்தெய்வங்களும் ஓருருவிலே உதித்து நம்மை ரக்ஷித்துக்கொண்டுருக்கின்றது ஸ்ரீமஹாஸ்வாமிகள் எனச் சொன்னால் மிகையாகாதே! அனுதினமும் ஐயனைப் போற்றிடும் வரம் இப்பிறப்பின் கடைசி நொடிவரையிலும் இருக்கத் தாஐயனே எனத் தொழிவதை விடவும் மேலானதொரு வரம் கேட்க இயலுமோ?

சங்கரம் போற்றி! அவர் அருளாலே அவர் தாள் வணங்கி அனைவருமாக அனைவர்க்குமாக ப்ரார்த்திப்போம். சுகம்பருவோம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்