மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-034

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-034
மஹாபெரியவாளுக்கு ஜாதி தெரியாது
மதம் கிடையாது
தெரிந்தது ஒன்றே
அது ஆத்மா என்ற ஒன்றுதான்
இந்த ஒன்று போதுமே
மஹாபெரியவாளை சர்வ ரக்க்ஷகன்
என்று அழைப்பதற்கு
அன்று மட்டுமில்லை இன்றும் அப்படிதான்
இது என்றுமே உண்மை
ஒரு நாள் காலை வேளை. மணி சுமார் பத்து இருக்கும். காஞ்சி மடத்தில் பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா கைலாயத்தை போல கொலு மண்டபத்தில் வீற்றிருக்க பக்தர்கள் மஹாபெரியவா தரிசனத்திக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மஹாபெரியவா அன்று மௌனம்.
பக்தர்கள் அனைவரும் பிரசாதம் மட்டும் வாங்கிக்கொண்டு அங்கேயே அமர்ந்து மஹாபெரியவாளின் அருள் பார்வையை பெற்றுக்கொண்டிருந்தனர். மடத்து கைங்கர்ய மனுஷாளும் பக்தர்களை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார்கள். இத்தனை கூட்ட நெரிசல் இருந்தும் அங்கு குண்டூசி விழுந்தால் கூட சப்தம் கேட்கும் அளவிற்கு ஒரு அமைதி.
மஹாபெரியவா வாய்தான் பேசவில்லையே தவிர மனது ஒவ்வொருவர் பிரச்சனைகளையும் படித்துக்கொண்டுதான் இருந்தது. மஹாபெரியவா வாய் திறந்து சொன்னால்தான் பிரச்சனைக்கு தீர்வா?. இல்லையே. மஹாபெரியவா இருக்கும் இடத்தில் கால் வைத்தவுடன் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விட்டது என்பது எழுதப்படாத உண்மை.
மஹாபெரியவா பக்தர்களுக்கு அப்படியொரு நம்பிக்கை. இந்த அமைதியான சூழ்நிலையில் ஒரு பெண் கண்களில் கண்ணீர். பல நாட்களாக எண்ணெய் காணாத தலை முடி. வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த கண்கள். கைகளிலும் பாதங்களிலும் புழுதி படிந்த தோல். உடலில் இருந்த புடவை துவைத்து பல நாட்கள் ஆகியிருக்கும் என்று சொல்லாமல் சொல்லியது.
புடவையில் கிழிந்த பகுதிகள் அதிகமாக இருந்தன. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நெய்த நூல் இழைகளை விட தைத்த நூல் இழைகளே அதிகம் எனலாம்..
இந்த பெண்ணை பார்த்தவுடன் வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் தங்கள் மேல் பட்டுவிடுவாளோ என்று நினைத்து அந்த பெண்ணிற்கு வழியை விட்டு ஒதுங்கிக்கொண்டனர் விட்டனர். அந்த பெண்ணும் மஹாபெரியவா அமர்ந்திருந்த இடத்தில் ஒரு ஓரமாக நின்று கொண்டாள்.
அமைதியாக நின்று கொண்டிருந்தாலும் உதடுகள் எந்தநேரமும் எதையோ மஹாபெரியவாளிடம் சொல்லத்துடித்தன.. அந்தப்பெண் வாயை திறந்தாலே கத்தி கூச்சலிட்டுவிடுவாளோ என்ற பயம் அங்கிருந்தவர்களுக்கு.
கைங்கர்யம் செய்பவர்களும் அவ்வப்பொழுது இந்த பெண்ணிடம் வந்து கூச்சல்போடக்கூடாது என்று ஏச்சரித்து விட்டு சென்றார்கள்..மஹாபெரியவா மௌனத்தில் இருந்தார் என்ற உண்மையை மறந்து விடாதீர்கள்.
ஒரு சமயத்தில் தன்னையும் அறியாமல் சாமீ என்று கத்தி விட்டாள். அங்கிருந்தவர்கள் எல்லோருமே ஒரு வினாடி அதிர்ந்து போனார்கள். கைங்கர்யம் செய்பவர்கள் எல்லோரும் இந்த பெண்ணை நோக்கி ஓடி வந்தார்கள்.
மஹாபெரியவா அந்த பெண்ணை அருகில் அழைத்தார். அந்த பெண்ணும் மஹாபெரியவா வாயை பொத்தியபடி அருகில் சென்றாள். பெரியவா அந்த பெண்ணை என்ன என்று கேட்கும் தோரணையில் தலையை ஆட்டினார்.
அவ்வளவுதான். அந்த பெண் மடை திறந்த வெள்ளம் போல் கொட்ட ஆரம்பித்தாள். அவள் பேசியதன் சாரசம்சம் இதுதான். “அவளுக்கும் அவள் கணவருக்கும் சரியான புரிதல் இல்லாமல் பிடிக்காமல் தலை விதியே என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எங்களுக்கு ஒரு நல்ல வாழ்கை வேணும் சாமீ. செய்வீங்களா என்று மஹாபெரியவாளை பார்த்து கேட்டாள். தவறாக நினைக்க வேண்டாம். அந்த பெண்ணுக்கு தெரிந்தது அவ்வளவுதான்,
ஆனால் அவள் செய்யும் பக்தி மிகவும் புனிதமானது. எப்படி பக்தி செய்வேண்டும். என்று அவளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவள் பக்தியை குறைத்து மதிப்பிட முடியாது.
மஹாபெரியவா அங்கிருந்த ஒரு மூங்கில் கூடையில் இருந்த இரண்டு வாழைப்பழங்களை எடுத்து அந்தப்பெண்ணிடம் கொடுத்து ஆசீர்வாதம் செய்தார். அந்த பெண்ணும் தனக்கு ஒன்று தன் கணவருக்கு ஒன்று என்று முடிவு செய்து தன்னுடைய புடவை தலைப்பில் முடிந்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றாள்.
அந்தப்பெண் காஞ்சிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணாகத்தான் இருக்கவேண்டும். தன்னுடைய வீட்டை அடைந்து இரண்டு பழங்களில் ஒன்றை தான் சாப்பிட்டுவிட்டு மற்றொண்டை தன் கணவருக்கு கொடுத்து சாப்பிடச்சொன்னாள். கணவரும் கேள்விகள் கேட்காமல் வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட்டார். இரண்டொரு மாதங்கள் கழிந்தன.
மீண்டும் காஞ்சிமடம்

அன்று வந்த அதே பெண். கூடவே கணவர் வெள்ளை வேஷ்டியும் இடுப்பில் துண்டும் கட்டிக்கொண்டு வந்தார். . கணவர் கையில் ஒரு பசு மாடு. அந்த பெண்ணின் கையில் சில நாட்களே ஆன கன்று குட்டி ஒன்று இருந்தது.
முதல்முதலாக அந்த பெண் மடத்திற்கு வந்த பொழுது இருந்த பக்தர்கள் சிலரும் கைங்கர்யம் செய்பவர்களும் இன்றும் இருந்தார்கள். அன்று அந்த பெண் இருந்த நிலையே வேறு. ஆனால் இன்று படிய வாரிய தலை. தலை நிறைய மல்லிகை. பூ. நன்றாக துவைத்த புடவை. நெற்றி நிறைய குங்குமம். அந்த மாடு கன்றுக்குட்டியுடன் மஹாபெரியவா கண்ணில் படும்படி நின்று கொண்டார்கள்.
இன்று மஹாபெரியவா பேசினார். என்ன பெண்ணே அன்னிக்கு தனியா வந்தே இன்னிக்கு கணவர் மாடு கன்னுகுட்டி சகிதமாக வந்திருக்கே. ரெண்டு பெரும் சமத்தா தாம்பத்தியம் பண்ணிண்டு இருக்கேளா என்று கேட்கவும் அந்த பெண்ணும் அவள் கணவரும் பதில் சொன்னார்கள்.
சாமீ அன்று நீங்கள்கொடுத்த பழங்களை சாப்பிட்டோம். இன்று நாங்கள் மன நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய அன்பு காணிக்கையாக இந்த பசு மாட்டையும் கன்னுக்குட்டியையும் உங்களுக்கு கொடுக்கலாம் என்று கொண்டு வந்தோம். சாமீ பெரிய மனசு பண்ணி இந்த காணிக்கையை ஏத்துக்கனும் என்றார்கள்.
மஹாபெரியவாளும் இரண்டு பூ மாலையை வாங்கி வரச்சொல்லி பசுவுக்கும் கன்றுக்குட்டிக்கும் போடச்சொன்னார்கள். பசுவும் கன்றும் மாலையை போட்டுகொண்டு அங்கிருந்தவர்களை எல்லாம் நாவால் நக்கிக்கொண்டிருந்தன. . கன்றுக்குட்டி தாயின் மடியில் வாயை வைத்து பால் குடிப்பதில் மும்மரமாக இருந்தது.
கணவனும் மனைவியும் தங்கள் இழந்த வாழ்க்கையை மீட்டசந்தோஷத்தில் கண்களில் கண்ணீர் மல்க தங்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். வளர்த்த பாசத்தால் பசுவும் கன்றும் அம்மா அம்மா என்று கத்தி இவர்களை கூப்பிட்டன.
நிலைகுலைந்த குடும்பம் கரை ஏறியது. நம்பிக்கை இழந்த மனதில் மீண்டும் நம்பிக்கை தீபம் ஏற்றப்பட்டு இரு மனமும் ஒன்றுபட்டு மஹாபெரியவா அருளாளால் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
மஹாபெரியவா ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்க்கு
சொந்தக்காரர் என்ற வார்த்தைகளை
பொய்யாகிய சம்பவம் எவ்வளவோ
அந்த சம்பவங்களில் இதுவும் ஒன்று
மஹாபெரியவா ஜகத்திற்கே குரு
என்பதுதான் உண்மை
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்-