மஹாபெரியவா குரு புகழ்-5

என் உரை -காயத்ரி ராஜகோபால்
வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் மஹாபெரியவா நிகழ்த்துகிறார் ஒரு இறை காரணத்திற்காக என்று பல முறை நான் உங்களுக்கெல்லாம் சொல்லி இருக்கிறேன்.. காரணம் அப்பொழுது நமக்கு தெரியாது..பின்னர் முடிவு தெரியும்பொழுது நமக்கு புரியும்.
அப்படி ஒரு நிகழ்வு சாணு புத்திரன் அவர்கள் வாழ்க்கையிலும் சில தினங்களுக்கு முன் நடந்தது. அந்த நிகழ்வு மஹாபெரியவா குரு புகழ் பாடலில் வந்து நின்றது.அவருடைய நடையிலே அந்த சம்பவத்தை படித்து அனுபவித்து மஹாபெரியவா குரு புகழ் பாடலையும் அனுபவியுங்கள்.
பெரியவா சரணம்
இன்று என்னவோ மனம் சற்று வித்தியாசமான சந்தத்திலே ஐயனைப் பாடிப் போற்றிட ஆவல் கொண்டது. சட்டென இந்த சந்தம் மனதுக்கு எட்டியது. காரணமும் உண்டு. ஆதம்பாக்கம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் ஒரு சிறுவன் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.
அவன் சற்று சத்தமாக சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டிச்சென்றான். அதாவது, தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் என்றபடியாகச் சொல்லிக் கொண்டே சென்றுகொண்டிருந்தான். அவன் அப்படியாகச் சொல்லிக் கொண்டிருந்ததன் காரணம் விளங்காமலே அவனையே பார்த்தபடி மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டு அவனருகாகவே அடியேனும் சிறிது தூரம் வரையில் செல்ல முடிந்தது.
ஒரு திருப்பத்திலே அவன் திரும்புகையில் சற்றே அழுத்தமாக அவ்வார்த்தைகளைச் சொல்லியபடியே என்னை திரும்பிப் பார்த்துவிட்டு சென்றது என் கண்களை விட்டு அகன்றாலும் மனதை விட்டு அகலவில்லை. சந்தியா வந்தனம் செய்துவிட்டு ஸ்வாமி நமஸ்காரம் செய்கையிலே இந்தச் சந்தம் மனதுக்குப் புலப்பட, ஆகாரம் முடித்து அமர்ந்து கொண்டேன். பெரியவா சரணம் என்ற ப்ரார்த்தனையோடு தொடங்குகிறேன். ஐயன் அருளிருப்பின் நல்லதொரு குருப்புகழ் இன்றும் கிட்டட்டும் என்றபடியாக எழுதத் தொடங்குகிறேன்.
சங்கரம் போற்றி!
#குருப்புகழ் ............ சந்தம் ......... தாத்தத் தனதன தாத்தத் தனதன தாத்தத் தனதன ... ... ... தனதான ............ பாடல் ........... போற்றித் தொழுபவ ராற்றிச் செயல்பட தேற்றித் திருவருள் ... ... ... புரிவோனே மாற்றத் தகவன தாற்றிச் சுகம்பெற வேற்றித் தருமுனை ... ... ... தொழுதோமே சாற்றித் தொழுபொரு லேற்றுச் சுவைபட கூற்றில் உரைதரு ... ... ... குருநாதா மாற்றுங் குறைகளைந் தேற்றிக் கவினுற வாற்றத் தெழிலருள் ... ... ... புரிவாயே ஊற்றுப் புரியதுந் தேற்றிச் சுவைபட சாற்றிச் சந்ததம் .... ... ... அருள்வோனே கூற்றத் துயர்வருங் காற்றுப் பொழுதினி லாற்றித் தொழுதிடு ... ... ... வரம்வேண்டி போற்றித் தொழுமன மாற்றிச் சுவைபட பேற்றுப் பொலிவதுந் ... ... ... தருவாயே ஏற்றித் தொழுமன மேற்கும் பொருள்பட கூற்றில் நெறிதரு ... ... ... பெருமானே!
பாடலின் பொருள்:
உனைப் போற்றித் தொழுபவர்க்கு ஆறுதல் அளித்து(ஆற்றி - ஆறுதல்) செயல்களைப் புரிய தேற்றி உனது திருவருளைப் பொழிபவனே! மாற்றத் தக்கவைகளாக மாற்றி சுகம் பெறுமாறு ஆறுதலளிக்கும் உன்னைத் தொழுதோமே! தற்பெருமையடித்துக் கொண்டு தொழுபவரையும் ஏற்று நயம்பட , சுவைபட ,அவர் மனம் நோகாவண்ணம் தன் கூற்றை உரைக்கும் குருநாதா! மாற்றக்கூடிய குறைகள் இருப்பின் அவற்றைத் தேற்றி அழகாக கவிபாடும் வல்லமை எனும் அழகான அருளைத் தருவாயே! ஊற்றுபோல வந்துவிழும் சொற்களை சுவைபட சாற்றுவதற்கு சந்ததம் அருள்பவனே! எமன் (கூற்றம்_ எமன்/உயிர் பிரியும் தருவாய் ) என்னை நெருங்கும் பொழுதினில் உன்னை போற்றித் தொழுதிடும் வரத்தை அருளுமாறு வேண்டி போற்றித் துதிக்கும் மனதிற்கு ஆறுதல் அளித்து இனிய பேறும் பொலிவும் தந்தருள்வாயே ! உன்னையே ஏற்றித் தொழும் மனதில் எதைக்கேட்டுப் பெறுகிறோமோ அந்த கூற்றில்(கேட்பதில்) என்றும் நெறி(தர்மம்) இருக்கச் செய்வாய் பெருமானே !
அன்பான உறவுகளே! இந்தக் குருப்புகழைப் படிப்பவர்களுக்கு ஒரு விண்ணப்பம். இதனைப் படித்ததும் தாங்கள் புரிந்து கொண்டது எதுவென, அதாவது பொருள் என்னவென்று உணர்ந்தீர்கள் என்பதையே கருத்தூட்டமாக நீங்களும் பதிவிடுங்களேன் என்பதே அடியேனின் விண்ணப்பம். தருவீர்களா...?!! கூடவே மறக்காமல் சங்கர கோஷமும் வேண்டும் உறவுகளே! குருவருள் நிறைவுகள் பல தந்து உங்கள் யாவதையும் வளமோடு வாழ வைக்க ப்ரார்த்தித்துக் கொண்டு ஸ்ரீசரண கமல பாதம்க்களிலே இன்றைய குருப்புகழைச் சமர்ப்பிக்கின்றேன்.
குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்