Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -038


என் வாழ்வில் மஹாபெரியவா -038

பிரதி வியாழக்கிழமை தோறும்

உலகில் மிகப்பெரிய போராட்டம் உங்கள் மனசுடன் நீங்கள் போடும் போராட்டம்

*****

வாழ்க்கையில் வெற்றி என்பது

எப்பொழுது முழுமை பெறுகிறது தெரியுமா

உங்கள் நாவை வெல்லுங்கள்

உங்கள் மனதை வெல்லுங்கள்

சமுதாயத்தை வெல்லுங்கள்

இதுவே உங்களின் முழுமையான வெற்றி

சென்ற வாரம் என் வாழ்வில் மஹாபெரியவா -௦37 தொடரில் என்னை ஆட்கொண்ட மஹாபெரியவா உங்களை ஆட்கொள்ள எவ்வளவு நேரம் ஆகும் என்று என்ற கேள்வியை கேட்டு முடித்திருந்தேன்.

அதை தொடர்ந்து என்னை பலபேர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு எங்களுக்கு எங்கள் வாழ்விலும் மஹாபெரியவா எங்களை ஆட்கொள்ள வேண்டும்... இதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொன்னால் நாங்களும் எங்களை மாற்றி கொள்வோம். செய்வீர்களா என்று கேட்டார்கள்.

நானும் உங்களை எல்லாம் ஒரு நல்லசிஷ்யனுக்கு உண்டான குணங்களை கொண்ட ஆத்மாக்களாக சுய மாற்றம் செய்து கொள்ள என்னால் முடிந்தவரை உங்களை எல்லாம் வழி நடத்த ஒரு பதிவை வெளியிடுகிறேன்.. நீங்களும் ஒரு நல்ல மாற்றத்திற்கு உண்டான முயற்சிகளை துவங்கலாம்.. என் பாடங்கள் எல்லாமே என்னுடைய அனுபவத்தை மையமாக கொண்டு இருக்கும்..

என் அனுபவம் சரியா இல்லை தவறா என்று எனக்கு தெரியாது.ஆனால் ஒன்று நிச்சயம். மஹாபெரியவா போட்டுக்கொடுத்த ஆன்மீக பாதையில் பயணத்தை தொடங்கவும் தொடரவும் எனக்கு ஓரளவு அனுபவம் உண்டு.

இந்த அனுபவமும் மஹாபெரியவா போட்ட பிச்சை தான். மஹாபெரியவா எனக்கு இட்ட பிச்சையயை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். விரைவில் இந்த பதிவு வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இந்த தொடரின் தலைப்பு.

"சூஷ்ம மஹாபெரியவாளுடன் என் அனுபவங்கள்"

இனி என் வாழ்வில் மஹாபெரியவா தொடரை அனுபவிப்போம்.

சென்ற வாரம் என்னுடைய அறுபது வருட பழக்கமான அரிசியும் சாதமும் எப்படி என்னிடமிருந்து ஒரே இரவில் விடு பட்டன என்ற அற்புதத்தை அனுபவித்தோம். இந்த வாரம் என்னுடைய அறுபது வருட பழக்கமான காபி மற்றும் டீ பானங்கள் எப்படி ஒரே இரவில் என்னை விட்டு சென்றன என்பதை இந்த வாரம் அனுபவிப்போம்.

நம்முடைய வாழ்க்கையில் ஆத்மார்த்தமாக ஒரு நெருக்கத்தையும் உயிரை கொடுக்கும் காதலாக மாறி நம் உயிரை ஆதாரமாகக்கொண்டு வளரும் பழக்கங்கள் எவ்வளவோ.. அதில் ஒரு சிலது காபி டீ மற்றும் புகை பிடிக்கும் பழக்கம்.. இந்த மாதிரி நம் ரத்தத்திலேயே ஊறிய பழக்கங்களை நாம் விட தயாராக இருந்தாலும் அவைகள் நம்மை விட்டு பிரிய தயாராக இல்லை.

என்னுடைய காபி டீ பழக்கமும் அப்படிதான்.. கடந்த அறுபது வருட காலமாக காலையில் எழுந்தவுடன் விழிப்பது காபியில்தான். . சிறு வயதில் என்னை தொற்றிக்கொண்ட இந்த பழக்கம் என்னை மஹாபெரியவா ஆட்கொள்ளும் வரை விடவில்லை. நான் ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் விழித்து கொண்டிருந்தால் ஆறு மணி நேரம் காபி குடிக்கவும் டீ அருந்தவும் மட்டுமே பொழுது போய் கொண்டிருந்தது.

நான் மாணவனாக இருந்தபொழுது பள்ளியிலும் கல்லூரியிலும் தேர்வுக்கு படிக்க என் நண்பர்களுடன் தெரு முனையில் இருக்கும் டீ கடைக்கு சென்று இரவு பன்னிரண்டு மணிக்குள் நான்கு முறை டீ குடித்து விடுவோம். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் நான் படித்த நேரத்தை விட டீ காபி குடித்த நேரம் தான் அதிகம்.

படிப்பு முடிந்து நான் வேலையில் இருந்தபொழுது இந்த காபி டீ பழக்கம் இன்னும் அதிகம் ஆயிற்று. அலுவலகத்தில் வேலை பளு வேலை நெருக்கடிகள் நண்பர்களின் வற்புறுத்தல் குடும்பத்தின் பிரச்சனைகள் இவைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து என்னை ஆட்கொண்டன. ஒரு சமயத்தில் உடலில் ஓடும் ரத்தத்திற்கு இணையாக என் உடலில் காபி டீ ஓடிக்கொண்டிருந்தது.

என் நலன் விரும்பிகளும் நண்பர்களும் என் பெற்றோர்களும் என்னை காபியை விடச்சொல்லி அறிவுரை சொன்னார்கள். நான் கேட்பதாக இல்லை. ஒவ்வொரு முறையும் இந்த போராட்டத்தில் காபியும் டீயும் மட்டுமே என்னை வெற்றி கண்டன.. இருந்தாலும் என்னுடைய பெற்றோர்களின் கண்டிப்பால் நானும் பலமுறை விட முயன்றேன்.. ஆனால் அவைகள் எதுவுமே பயனளிக்கவில்லை.

இந்த நாளில் நான் ஒன்றை உணர்ந்தேன். ஒரு பழக்கத்திற்கு நாம் அடிமையாகி விட்டால் அந்த பழக்கம் நம்மையும் நம்முடைய எதிர்காலத்தையும் மாயணமாக்கிவிடும் . என்னை பொறுத்தவரை மிகவும் நீண்ட போராட்டம் கடினனமான போர்க்களம் எது தெரியுமா நாம் நம்முடைய மனதுடன் போடும் சண்டைதான் நீண்ட நெடிய போராட்டம்,..

நம்முடைய அனுபவத்திலேயே நாம் பார்க்கலாம். நீண்ட நாள் பழக்கத்தில் இருந்து விடுபட்ட மனிதர்கள் உண்டா. மது அருந்துபவனை கேட்டால் மனம் மிகவும் கஷ்டப்படுகிறது கஷ்டத்தை மறக்க குடிக்கிறேன் என்பான். கஷ்டத்திலும் மட்டுமல்ல மனம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்த சந்தோஷத்தை கொண்டாட குடிக்கிறான்.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால் நம்மை ஒரு பழக்கத்திற்கு அடிமையாக காரணமான நண்பர்களும் சமுதாயமும் நம்முடைய சோதனை காலங்களில் நம்மை விட்டு விலகி விடுவார்கள்.. இறுதியில் நம்முடனேயே இருப்பது நாம் அடிமையான பழக்கம் மட்டுமே. அந்தப்பழக்கமும் நம்முடனேயே ஏதற்கு இருக்கிறது. அதற்கு தேவை நம்முடைய உயிர். அது கிடைத்து விட்டால் அந்தப்பழக்கமும் நம்மை விட்டு சென்று விடும்.

இந்த பதிவை படிப்பவர்கள் கொஞ்சம் சிந்தியுங்கள். உங்கள் சிந்தனையை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் அனுபவத்தில் இருந்து நாம் பாடம் பயின்று வாழ்க்கையை நடத்துவதுதான் புத்திசாலித்தனம். எல்லா தவறுகளையும் நமே செய்து வாழ்க்கை படாம் கற்க வேண்டுமானால் இந்த ஒரு ஜென்மம் போதுமா. நிச்சயம் இல்லை. இந்த ஜென்மம் போதாது.

பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருக்க ஒரே வழிதான் நீங்கள் எந்த காரணத்தை கொண்டும் உங்கள் மனத்திடம் தோற்று போகாதீர்கள். முதல் மூன்று முறை உங்கள் மனசுடன் போராடி வெற்றி கண்டு விட்டால் உங்கள் மனம் புரிந்து கொள்ளும்.. உங்களை வெற்றி காண்பது என்பது நடக்காத காரியம் என்பதை உங்கள் மனசு புரிந்து கொண்டுவிடும்.

மனதை வென்று விடீர்களானால் உங்கள் நாவையும் மனிதர்களையும் நொடி பொழுதில் வென்று விடலாம். இது வாழ்க்கையில் எந்தருணத்திலும் பொருந்தும்.. என்னுடைய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டு விட்டேன்.

என் அனுபவம் என்பது நான் கடந்து வந்த பாதை.. பாதையில் உள்ள குண்டு குழிகள் எனக்கு தெரியும்... கரடு முரடான பாதைகள் என் கண்களுக்கு தெரிகிறது.. நல்லபாதை கண்ணுக்கு முன் தெரியும் பொழுது ஏதற்கு கரடுமுரடான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.. அது நமக்கு நமே வெட்டிக்கொள்ளும் குழியல்லவா.

இது அறிவுரை அல்ல. .எனக்கு உங்கள் மேலுள்ள அக்கறை. தயவு செய்து இந்த என் அனுபவத்தை புறம் தள்ளி விடாதீர்கள். நீங்களும் வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். மற்றவர்களுக்கும் இதை சொல்லிக்கொடுங்கள்.

மஹாபெரியவா என் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்து என்னை ஆட்கொள்ள விட்டால் என்னால் முடிந்தவரை இந்த தீய பழக்கங்களை நியாயப்படுத்தி இருப்பேன். நல்ல காலம் மஹாபெரியவா என்னை ஒரே இரவில் மீட்டெடுத்தார். மஹாபெரியவாளும் என்னிடம் என் அனுபவத்தை பகிர்ந்து கொள் என்று சொல்லாமல் இருந்தாலும் அவருடைய எதிர்பார்ப்பு இதுவாகத்தான் இருக்கும். எனவே இந்தப்பதிவில் இந்த அக்கறையான அறிவுரையும் இடம்பெற்றுள்ளது.

இனி உங்களை என்னுடைய அற்புத அனுபவத்திற்கு அழைத்து செல்கிறேன். உங்களுக்கு தெரியும் மஹாபெரியவாளின் சரீர சுத்தி கட்டளைகள் இரவு படுக்க செல்வதற்கு முன் ஒன்பது மணி சுமாருக்கு தான் வரும் ஏண்டா என்ற குரலோடு.

அன்று காலையிலிருந்தே நான் மஹாபெரியவாளை வேண்டிக்கொண்டே இருந்தேன். இன்று மஹாபெரியவா உத்தரவில் காபி டீ இடம் பெறக்கூடாது என்று.. நினைத்து பாருங்கள் காலையில் நான்கு மணிக்கு எழுந்து கொதிக்க கொதிக்க சுத்தமான பசும்பாலில் கள்ளிச்சொட்டு போன்ற டிக்கெக்ஷனை விட்டு காபி குடித்தால் அந்த சுவையே பல மணி நேரம் நாவுலயே இருக்குமே. இந்த சுகத்திற்கு ஒரு கேடு வந்து விடக்கூடாதே என்று மஹாபெரியவாளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.அன்றைய பகல் பொழுது முடிந்து மாலை பொழுதும் வந்தது.

மாலை மணி சுமார் ஆறு மணி முப்பது நிமிடம் இருக்கும். இதை இந்த மாலை நேரத்தை மந்த மாருதம் என்பார்கள். இரவும் பகலும் சந்திக்கும் நேரம். எனக்குள் எதையோ பறிகொடுத்த மனசுடன் இருந்தேன். என்னை அந்த பரமேஸ்வர அவதாரமே என்னை சம்சாரம் என்னும் புதை குழியில் இருந்து மீட்டெடுக்க வந்தும் என் கண் முன்னே அந்த கன்றாவி காபியும் டீயும் தானே தெரிந்தது.

இப்பொழுது தெரிகிறதா நாவிற்கு அடிமையாகி விட்டால் அது . உங்கள் வாழ்க்கையை மாயணமாக்கி விடும். தீய பழக்கங்களால் இறைவனையே இழக்கும் சம்பவம் தான் சம்பவிக்கும்.. புதை குழியில் இருந்து வெளியில் வந்து பாருங்கள். உலகம் எவ்வளவு அழகானது என்று.. என்னால் இயன்ற வரை உங்களுக்கு என் கரங்களை கொடுக்கிறேன். பிடித்து மீண்டு வாருங்கள்.

காபி உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதாக நீங்கள் நினைக்கலாம். அது நிச்சயம் தவறான அபிப்ராயம். உங்கள் எதிர்காலத்தையும் வாழ்க்கையும் ஒவ்வொரு நொடியும் அழித்துகொண்டிருக்கிறது.

மஹாபெரியவா என் வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதற்கு முன் என் சொந்தங்களும் சுற்றங்களும் என் காது படவே பேசுவார்கள். மனுஷனாய் இருந்தால் வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் காண வேண்டும். அப்படியென்ன நாக்கிற்கு ஒரு அடிமைத்தனம் என்று சொல்லுவார்கள்.இதில் கொடுமை என்ன தெரியுமா?.

இப்படி பேசுபவர்கள் எல்லோரும் காபியை அருந்திக்கொண்டே வெட்கமில்லாமல் மனசாட்சியை கழற்றி வைத்து விட்டு பேசுவார்கள்.. ஏதோ இவர்கள் எல்லாம் மேட்டுக்குடி மக்களை போலவும் வைராகியத்தின் ஊற்றுக்கண் போலவும் பேசுவார்கள்.. இவர்களுக்கு பரிந்து பேச ஒரு கும்பல் எப்பொழுதும் இருக்கும்.. ஏன் தெரியுமா அவர்களிடம் பணம் இருக்கிறது. தர்மத்தை கூட விலக வளைப்பார்கள்.

ஆனால் அன்று என்னை பழித்து பேசிய ஜென்மங்கள் இன்று என் காலில் விழுகிறார்கள். அப்பொழுது நான் அவர்களை கேட்பது வழக்கம். நான் தவறை உணர்ந்து கரையேறிவிட்டேன். நீங்கள் எல்லோரும் எப்பொழுது கரையேற போகிறீர்கள் என்று கேட்பேன்.

பொதுவாக வாழ்க்கை சக்கரம் இப்படி ஒரே இரவில் மாறுவது என்பது சினிமாவிலும் புராண கதைகளில் மட்டுமே நடக்கும்.. ஆனால் நாம் வாழும் கலிகாலத்தில் பரமேஸ்வரன் வந்து இது சினிமா அல்ல. நிஜ வாழ்க்கையிலும் சாத்தியம் என்பதை என் மூலம் சொல்லிவிட்டார்.

இந்த அற்புதத்தை அனுபவியுங்கள்::

நேரம் சரியாக இரவு ஒன்பது மணி.. மஹாபெரியவாளின் குரல் கேட்டுவிட்டது. அந்தக்குரல் என் காதுகளில் கேட்கும் பொழுது நான் மஹாபெரியவா முன் நின்று கொண்டு அன்றைய நாளின் என்னுடைய செயல்களை மஹாபெரியவாளிடம் சமர்ப்பித்து கொண்டிருந்தேன்.. இது என்னுடைய அன்றாட கடமைகளில் ஒன்று.

அப்பொழுது

பெரியவா:"ஏண்டா நீ வேண்டிண்டே இருந்தாயா பெரியவா எதையும் விட சொல்ல கூடாது என்று. என்னை கேட்டார்.

GR: இல்லை பெரியவா நீங்கள் எதை விட சொன்னாலும் விட்டுடறேன் பெரியவா என்று நான் சொன்னேன்

பெரியவா காபி டீயை தவிரவா? என்று கேட்டார்.

GR: நான் அதிர்ந்து போய் விட்டேன். காலையில் இருந்து நான் மனதுக்குள் வேண்டிக்கொண்டிருந்தது மஹாபெரியவாளுக்கு எப்படி தெரிந்தது.

நான் பெரியவா சொன்னேன் இல்லை பெரியவா என்று இழுத்தேன்.

பெரியவா : என்னடா குரல் தழு தழுக்கிறது

GR: அது இல்லை பெரியவா நீங்கள் எதை விடச்சொன்னாலும் நான் விட்டுவிடுகிறேன். என்றேன்.

பெரியவா: நீ காத்தலே இருந்து வேண்டிண்டு இருந்தயே அந்த காபி டீயை தான் நாளையில் இருந்து விடப்போகிறாய் என்றார்.

GR: எனக்கு இதயமே வெடித்து விடும் போல இருந்தது.என் கண்கள் கண்ணீர் சிந்த ஆரம்பித்தது. நான் ஒன்னுமே பேசவில்லை. இது நான் நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்று.

பெரியவா: என்னடா ஒண்ணுமே பேசாமே நிக்கறே. ஏதாவது பேசு.உன் மனசு கஷ்ட படறது தெரியறது. சொல்லு நாளையில் இருந்து என்னசெய்யப்போறே.

GR: : சிறிது மௌனத்திற்கு பிறகு மெதுவாக ஆரம்பித்தேன். பெரியவா இதை நிச்சயம் நான் எதிர் பார்க்கவில்லை.மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பெரியவா.

பெரியவா : சரி என்னசெய்யப்போறே சொல்லு.

GR:.: பெரியவா நீங்கள் என்னை திட்டாமல் இருந்தால் நான் ஒண்ணு சொல்லட்டுமா

.

பெரியவா : சொல்லுடா

GR: பெரியவா நீங்கள் விட சொன்னதை எல்லாம் விட்டுட்டேன். இந்த காபி டீயை மட்டும் ஒரு மாசத்துக்குள்ளே விடுதறேன் பெரியவா. என்றேன்

பெரியவா: அப்போ எல்லாத்தையும் நீயேதான் விட்டாயா? உனக்கு அவ்வளவு மனோ பலம் இருந்தால் இந்த காபியையும் விட்டிடு.

GR: நான் என் தவறை உணர்ந்தேன். மஹாபெரியவா தான் எல்லாவற்றையும் விட வைத்தார். என் நாக்கில் அன்று சனி. தவறாக சொல்லி விட்டேன்.

பெரியவா: இதோ பார் மனசை போட்டு குழப்பிக்காதே.உன்னோட சொந்தக்காரா எல்லாம் உன்னை பேசறது உனக்கு பிடிசிருக்கா. உனக்கு இந்த வாழ்க்கை வாழ மனசாட்சி இடம் கொடுக்கிறதா சொல்லு.

GR: : இல்லை பெரியவா.

பெரியவா: இங்கே பாரு. உன்னை பார்த்தா பாவமா இருக்கு. உனக்கு இந்த வாழ்க்கை வேண்டாண்டா.. உன்னை மனுஷனா மாத்தி உனக்கு எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு வாழ்க்கை அமைத்து தர உன்னோட நான் போராடறேன்..உனக்கு போறும்டா இந்த வாழ்க்கை. நீ பொறந்த காரணமே வேறடா. போறும் இந்த லௌகீக வாழ்க்கை.

உன்னை காஞ்சிபுரத்துக்கு அழைத்து நான் உனக்கு பிரசாதமும் ஆசிர்வாதமும் எதுக்கு என்று உனக்கு போகபோகத்தெரியும். என்றார். இப்போ நீ காபி டீயை விடணுமுன்னு மட்டும் நினை.. உன்னை விட வைக்கிறது என் வேலை என்றார்.

GR: மஹாபெரியவா நிச்சயம் எனக்கு மனோ திடத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கையில் சரி பெரியவா நாளையில் இருந்து நான் காபி டீயை விட்டுடறேன்.. நீங்கள் அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா என்றேன்.

பெரியவா: நீ போய் தூங்கு. மனசிலே எதையும் போட்டு குழப்பிக்காதே. . நான் எல்லாவற்றையும் பாத்துக்கறேன்.போ தூங்கு என்றார்.

GR:: பெரியவா நீங்கள் என்னோட போராடறேன்னு சொன்னேளே. நான் ரொம்ப படுத்தறேனா பெரியவா என்று கேட்டேன்..

பெரியவா: அப்படி சொன்னாதான் நீ காபியை விடுவே. நீதான் நான் சொன்னதை எல்லாம் சமத்தா செய்யறாயே.. நீ நன்னா இருப்பே போய் தூங்கு என்றார்.

GR:: மஹாபெரியவாளிடம் விடை பெற்று என் படுக்கையில் வந்து அமர்ந்தேன். அமர்ந்து கொண்டே யோசித்தேன். நான் எப்படி காபி டீயை விடப்போகிறேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

என்னுடைய அஃஞானம் உங்களுக்கு புரிகிறதா. என்னுடன் பேசிக்கொண்டிருப்பது பரமேஸ்வர அவகாரம் மஹாபெரியவா என்று தெரிந்தும். என்னுடைய காபியை பரமேஸ்வரனை விட சக்தி வாய்ந்ததாக நினைத்தேனே. என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்.. உணவுப்பழக்கத்திற்கு அடிமையானால் அது உங்கள் கண்களை மறைத்து விடும். சமயத்தில் உங்களையே விழுங்கி விடும்.. உங்கள் மனதிடம் இருந்து உங்களை பார்த்துக்கொள்ளுங்கள்

என் ரத்தத்திலேயே ஊறிவிட்ட அறுபது வருட பழக்கம் என்னை விழுங்குவதற்கு முன்னால் மஹாபெரியவா அந்த அடிமைத்தனத்தை என்னிடம் இருந்து அடியோடு ஒழித்தார்.

மறு நாள் காலை: மணி 4.00

மறு நாள் காலை : மணி நான்கு. எழுந்து என்னுடைய காலை கடன்களை முடித்தேன்.சொன்னால் நம்ப மாடீர்கள். எனக்கு காபி நினைவே இல்லை. என்னையும் அறியாமல் அரை லிட்டர் பாலை எடுத்து காய்ச்சி ஒரு டம்பளரில் விட்டு ஹாலில் இருக்கும் சோபாவில் வந்து அமர்ந்தேன்..

எனக்கு காபியை பற்றிய நினைவு அறவே இல்லை. குழந்தை பருவத்தில் இருந்து காபியை கண்ணால் கூட காணாத அனுபவம்.. மஹாபெரியவா என்னை என் மனசை வெற்றி கொள்ளச்செய்தார். மனசு அடங்கியதால் என் நாக்கு தன்னால் அடங்கி விட்டது. வாழ்க்கையின் ரகசியம் எனக்கு புரிந்து விட்டது.

உலகில் மிகப்பெரிய போராட்டம் எது தெரியுமா

இரண்டு நாடுகளுக்குள் சண்டை

இரண்டு ஊர்களுக்குள் சண்டை

இரண்டு கிராமங்களுக்குள் சண்டை

உறவுகளுக்குள் சண்டை

இவற்றில் எதுவுமே இல்லை

உங்கள் மனதுடன்

நீங்கள் போடும் சண்டைதான்

மிகப்பெரிய சண்டை

மஹாபெரியவாளின் அருளை பெறுங்கள்

வாழும் வாழ்க்கையின் பாதையை

சரியாக மாற்றி அமைத்து கொள்ளுங்கள்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square