சாணு புத்திரன் அவர்களின் அனுபவம் என் மனதை தொட்ட சம்பவம்

சாணு புத்திரன் அவர்களின் அனுபவம்
என் மனதை தொட்ட சம்பவம்
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் ஏராளம்.பொதுவாகவே சம்பவம் நிகழ்ந்த அடுத்த வினாடி அந்த சம்பவம் நம் மனதை விட்டு அகன்று விடும். ஆனால் ஒரு சில சம்பங்கள் மனதிலேயே தங்கிவிடும்.வாழ்நாள் பூராவும் அந்த சம்பவத்தை நினைத்து நினைத்து அசைபோடுவோம்.
ஏன் தெரியமா நடந்த சம்பவம் நம்மையும் தாண்டி நம்முடைய ஆத்மாவின் கதவுகளை தட்டி விடுகிறது. ஆத்மாவின் கதவை தட்டுகிறது என்றால் என்ன. இறைவன் உங்களுக்குள் நுழைகிறான் ஒரு இறை காரணத்திற்காக.இப்படி பட்ட ஒரு சம்பவம் சாணு புத்திரன் அவர்களின் வாழ்க்கையில் நடந்தது.அந்த சம்பவத்தை ஆத்மார்த்தமாக படியுங்கள்.நீங்களும் கண்ணீர் வடிப்பீர்கள். உங்கள் ஆத்மாவும் அழும். இறை காரணமும் உங்களுக்கு புரியும்.
காயத்ரி ராஜகோபால்
*******
சம்பவம் நிகழ்ந்த வருடம் December 02, 2013 இன்று அலுவலகத்திலிருந்து வரும் வழியில் வியக்கத்தக்கதொரு நிகழ்வு. வீடு திரும்பியதும் சந்தியா வந்தனம் செய்து ஸ்ரீ மஹாபெரியவாளை வணங்கிவிட்டு முதற்கண் உங்கள் யாவரிடமும் பகிர்கிறேன். மவுண்ட் ரோடில் வந்து கொண்டிருந்தவன் காமதேனு கூட்டுறவு கடையினருகே ஒரு கிழவி சாலையினோரமாய் நடைபாதையில் உட்கார்ந்தபடி தனது துணி மூட்டையில் முன்புறமாய் தலைசாய்த்து படுத்திருப்பதைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி – ஒருவேளை பசிமயக்கத்தில் சாய்ந்து விட்டாரா என வண்டியை நிறுத்திவிட்டு அருகே சென்று அந்த அம்மாளை எழுப்பி, “இந்தாங்கம்மா! ஏதாச்சும் வாங்கி பசியாறுங்க! எனச் சொல்லி கையில் பணத்தினைத் திணித்தேன். கையில் வாங்கியவர் அதனை வாய்முன்பு எடுத்துச் சென்றுவிட்டு அது பணம் என்பதை உணர்ந்து மௌனமாக என்னை ஏறேடுத்துப் பார்த்தார். எனக்கு கண்கள் பணித்து விட்டது. அவருக்கு பசி மயக்கம் தானென புரிந்து கொண்டேன். உடனே அருகில் ஏதேனும் கடையிருக்கிறதா என நோக்கினேன். ஒரு பெட்டிக்கடை. அங்கு போய் ஒரு கப் டீயும், இரண்டு சமோசாவும் வாங்கி வந்து அந்த அம்மாளிடம் தந்தேன். சமோசாவை வாங்கியவுடனேயே கிடுகிடுவென சாப்பிட்ட அவர், பின்பு ஒர் ஆஸ்வாசப்பார்வையுடன் என்னை நோக்கி புன்சிரிப்பொன்றை உதிர்த்தார். எனக்கு மனசுக்கு ரொம்பவும் இனிமையாக தோன்றியது. நானும் ஒரு சிரிப்பினை வரவழைத்துக்கொண்டேன்.
அந்த அம்மாள், டீ கப்பை கையிலெடுத்து, “இந்தா கண்ணு, நீயும் ஒரு வா குடிச்சுட்டு எனக்குந்தாயேன்” என்றார். எனக்கு அழுகையே வந்து விட்டது. என் அம்மாவே திரும்ப என் முன்பாய் வந்து சொல்வது போலுணர்ந்தேன். “சாணு” என்றுமே என்னை விட்டகலவில்லை! சந்தோஷத்துடன் அந்த கப்பை வாங்கி ஒரு வாய் டீயைக் குடித்தேன் – என்னையுமறியாமல்.
சுடச்சுட வாங்கி வந்த டீ தற்போது மிதமான சூட்டில் இருந்தது. அந்த அம்மாவும் டீயை அருந்திவிட்டு என்னை ஆசிர்வதித்து விட்டு, துணிமூட்டையைப் பிரித்து ஒரு சிறிய படத்தினை கையிலெடுத்து, “இந்தாப்பா, இத உங்கூடவே வச்சுக்க. உன்னய இவரு காப்பாத்துவாரு”நு என் கைகளில் திணித்தார். வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன். காரணம், அந்த சிறிய படம் நான் சென்ற பிப்ரவரி முதலாக எல்லா இடங்களிலும் பக்தகோடிகளுக்கு வழங்கி வரும் மஹாபெரியவா படம்! முழுமையாக அதில் எழுதிய பாடலை அந்த அம்மா வாய்விட்டு சொல்ல என்னால் நிற்க முடியாமல் உணர்வுத்தினைப்பின் உச்சியில்! சீர்கொண்ட தெய்வீகத் திருமுகமும் திருக்கரத்தில் மெய்கொண்ட திருத் தண்டமும் மேனியில்
உருகொண்ட சத்சிவமும் கனமாலையும் துளசியும் மெய்கொண்ட திருச்சாந்தும் சங்தனமும் தான்கொண்ட எம்பெருமான் ஆச்சார்யன் திருவடிகள் போற்றி! போற்றி! என அந்த அம்மாள் கடகடவென மனப்பாடமாக கூறிமுடித்தாள். அவளுக்கு ஒரு அறுவதவயதாவது இருக்கும். குளித்து குறைந்தது பத்து நாட்களாவது ஆகியிருக்கும். சாலை மணலின் வாடை அவளது மேனியினின்று வீச்சம் தந்தாலும், அவளது குரலில் வழிந்த வாசம் என்னைத் திக்குமுக்காடவைத்தது.
என்னையுமறியாமல் நான் முணுமுணுக்க ஆரம்பித்தேன். “எம்பெருமான் ஆச்சார்யன் திருவடிகள் போற்றி! போற்றி!!” கண்ணீருடன் அந்த அம்மாளின் கைகளைத்தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு அந்த படத்தினை எனது சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டு அந்த அம்மாவுக்கு எனது அலுவலகப் பைக்குள்ளிருந்த கட்டிலிருந்து அதே படமொன்றை தந்தேன். கண்ணு, வேற யாருக்காச்சும் கொடு! பல நாட்களாக இந்த பாடலைப் படிச்சு மனப்பாடம் ஆகிருச்சு. தா, இப்ப கூட பசி மயக்கத்துல அந்த பாடலைத்தான் சொல்லிக்கினுருந்தேன். பாரேன்! நீ எங்கிருந்தோ வந்து என் வயிற நிறைச்சுபுட்ட” நல்லா இரு கண்ணு!… பீறிட்டு வந்த அழுகைதனை வெளிக்காட்ட தைரியமின்றி, “பிறகு ஒரு நாள் சந்திப்போம் தாயீ”நு சொல்லிட்டு என் மோட்டார்சைக்கிளை நோக்கி நகர்ந்தேன்! வீடு வரும் வரையிலும் மௌனம் என்னில் கரைபுரண்டோடியது…வீட்டிற்குள் நுழைந்தது ஸ்ரீமஹாபெரியவாள் விக்ரஹத்துக்கு ஒரு நமஸ்காரம் செய்யும் வரை! ஹே! பரமதாயாளா! அனாத ரக்ஷகா! அம்மாவும் அப்பாவும் இல்லே நேக்கு! தாத்தா, பாட்டி தெரியாது! எல்லாமே நீ தான் நேக்கு. சந்தர்ப்பத்தில் ஒருமுறை எனக்குக் கிடைத்த உந்தன் படத்தினை ஓரிருவருக்கு கொடுக்கையில் அவர்கள் முகத்தில் நான் கண்ட சந்தோஷத்தினைக் கண்டு, எனது மகனின் உபநயனத்தின்போது கலந்துகொண்ட உறவினர்களுக்குக் கொடுக்க முதன்முதலாக இந்தத்திருவுருவைப் ப்ரிண்ட் செய்தேன்.
அருமை நண்பனொருவனது கட்டளைப் படி காதல் கவிதைகளையும், வாழ்த்துக் கவிதைகளையும் எழுதிக்கொண்டிருந்த நான் அந்தபடத்தில் உன் உருவைக் கண்டு மனதில் தோன்றியதை எழுதினேன் அந்த பாடலுடனேயே படத்தினை நண்பர்களின் அறிவுரைபேரில் ப்ரிண்ட்டும் செய்தேன். என்னை இந்த 2013 வருடம் முழுவதுமாக திரும்பத்திரும்ப ப்ரிண்ட் செய்து அனைவருக்கும் வழங்கச் செய்தாய்!
இதுவரை எனது இந்த யக்ஞம் ஒரு லட்சம் பூர்த்தியாகி விட்டது. மீதம் கிடடத்தட்ட 3800 படம் கையில் உள்ள நிலையில்… உந்தன் பிரசாதமாக இன்று ஒரு அம்மா கையால் எனக்கும் கிடைக்கச் செய்துள்ளாயே! மறுக்கவே முடியாது எவராலும்! நீ அனாத ரக்ஷகன் தாம்! கண்களில் பொலபொலவென நீர் பணிக்க மண்டியிட்டு வேண்டினேன். அன்பான உறவுகளே! பெரியவா பத்தி எது இருந்தாலும் இன்றுவரை உங்கள் யாவரிடமும் பகிர்ந்துள்ளேன். இதோ! இந்த பகிர்வை எழுகைதுயிலும் அழுதுகொண்டே எழுதுகிறேன – ஆனால் ஆனந்த அழுகையுடன்! பரமேஸ்வரா! பரந்தாமா! பரப்ரும்ம ஸ்வரூபியே! அம்மையப்பனாச்சார்ய ஸ்வாமீ! இனி என்வாழ் நாளில் என்றென்றும் உந்தன் திருவுருவப் படத்தினைத் தொடர்ந்து அனைவருக்கும் “பெரியவா சரணம், பெரியவா சரணம்”னு உன் னாமத்தை உச்சரித்தவண்ணம் கொடுத்துவரும் பாக்கியமொன்றை மட்டும் என்றென்றும் தா! எனும் எந்தன் ப்ரார்த்தனைக்கு நீங்களும் உங்கள் ப்ரார்த்தனைகள் மூலமாக பலம் தாருங்கள். பவதி பிக்ஷாந்தேஹி! முதற்பதத்திற்கு பாடல் எழுதும்போது நான் சாணு புத்திரன். இப்போது இரண்டாம் படத்திற்கு பாடல் எழுதும் போது என் தாத்தாவின் ஊர்மக்களில் பல பேரையும் என்னை அறியவைத்து உடையாளூர் சாணு புத்திரனாக அவர்களே எனக்கு பேர் சூட்டுமளவு தயை புரிந்த “உம்மாச்சி தாத்தா”வுக்கு ஆயிரமாயிரம் நமஸ்காரங்கள்!! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம். உடையாளூர் சாணு புத்திரன்