Featured Posts

இந்து மதம் ஒரு வாழும் முறை -011


குருவே சரணம் குரு பாதமே சரணம்

இந்து மதம் ஒரு வாழும் முறை -011

மஹாபெரியவாளின் விநாயகர் சிந்தனை

செல்லப்பிள்ளையார்

மஹாபெரியவாளின்

இறை தத்துவத்தின் சிறப்பு

நம்முடைய வாழ்க்கையோடு

பின்னிப்பிணைந்து இருப்பதுதான்

விநாயக தத்துவமும் சரி

சிவ ஹரி தத்துவமும் சரி

எல்லா இறை அவதாரங்களும் சரி

நம்முடைய வாழ்க்கை தத்துவங்களை

உள்ளடக்கியே இருக்கும்

எப்படி ஓம் என்னும் சொல் பிரணவ மந்திரமோ அப்படி தான் விநாயகப்பெருமான் இந்து மத கடவுள்களின் பிரணவம்.. பிள்ளையாரின் தும்பிக்கையை பார்த்தால் கூட அது ஓம் என்னும் வடிவத்திலே தான் இருக்கும்.

ஓம் என்னும் பிரணவம் இரண்டாயிரத்து அறுநூறு மொழிகளுக்கு தாய். இதை ஓர் ஆராய்ச்சி சொல்கிறது..இசை வாத்திய கருவிகளின் இசை எல்லாவற்றுக்கும் மூலம் ஓம் என்னும் பிரணவம்.

விநாயகர் எப்படி அணுகுவதற்கு எளிமையானவரோ அப்படி ஆகமத்திலும் மிகவும் எளிமையானவர்.விநாயகருக்கு கோவில் வேண்டாம்.கோவிலில் இருக்கும் கொடி மரம் வேண்டாம். பூ வேண்டாம் மாலைகள் வேண்டாம்.ஆற்றங்கரையில் வளர்ந்திருக்கும் அருகம்புல்லை பறித்து அவர் தலையில் போட்டால் கூட அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் கடவுள்.

இந்த கனத்த உருவம் மூஞ்சூறு மேல் அமர்ந்திருப்பதை பார்த்த ஒரு சிறுவன் மஹாபெரியவாளிடம் ஒரு கேள்வியை கேட்டான்.பெரியவா “இந்த சின்ன எலி மேல் இவ்வளவு பெரிய பிள்ளையார் உட்கார்ந்திருக்காரே எலிக்கு வலிக்காதா” என்று.

அதற்கு மஹாபெரியவா சொன்னார். “பிள்ளையார் ஒம்மாச்சிக்கு எலி மேல் உட்கார்ந்த உடனே தன்னுடைய எடையை பஞ்சு போலெ மாற்றிக்கொள்ளும் சக்தி இருக்கிறது. கொஞ்சம் பஞ்சை எலி சுமக்காதா” என்று கேட்டவுடன் அந்த சிறுவன் தனக்கு புரிந்ததற்கு அடையாளமாக தலையயை ஆட்டினான்.

மஹாபெரியவா மேலும் தொடர்ந்தார்.”இந்த பிள்ளையார் உம்மாச்சியை நம்முடைய கனமான மனதில் வைத்து விட்டால் மனசு லேசாகிவிடும்.என்ன அழகான ஒரு வாழ்கை தத்துவம்.

இதை மஹாபெரியவாளை தவிர யார் சொல்ல முடியும்.. சிறுவன் என்று அலட்சிய படுத்தாமல் அவன் கேட்ட கேள்விக்கு பதில்கொடுத்து அந்த பதிலில் ஒரு வாழ்க்கை தத்துவத்தை எல்லோருக்கும் கொடுத்தாரே. இந்த பக்குவம் யாருக்கு வரும். மஹாபெரியவாளை தவிர.

ஸ்தூல காயர் தத்துவம்:

ஸ்தூலகாயர் பெயருக்கு காரணம் தேங்காய்

விநாயகர் ஒருமுறை தன்னுடைய தந்தையான சிவபெருமானை பார்த்துக்கேட்டாராம். உங்களுடைய தலை எனக்கு வேண்டும் என்று. உடனே சிவபெருமான் ஒரு தென்னை மரத்தை உருவாக்கி அதில் தேங்காயையும் அதில் மூன்று கண்களையும் வைத்து விநாயகருக்கு கொடுத்தாராம்.

தேங்காயாயை தன்னுடைய தலையாக பாவித்து ஏற்று கொள்ளுமாறு கொடுத்தாராம். அதனால் தான் இன்றும் யானைக்கு தேங்காய் என்றால் கொள்ளை பிரியம். இந்த நிகழ்வின் காரணமாக சிவ பெருமானுக்கு ஸ்தூல காயர் என்ற பெயரும் உண்டு.

விநாயகர் சதுர்த்தியின் தாத்பர்யம் :

இந்த நாளில் நாம் நடந்து போகும் காலடி மண்ணை எடுத்து பிடித்தால் கூட விநாயகப்பெருமான் ஆகி விடுகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது பக்தியுடன் காலடி மண்ணை கூட பிடித்து பிள்ளையாராகிவிட்டால் பிள்ளையார் அதையும் ஏற்று கொள்கிறார். பெருமானுக்கு கொழுக்கட்டை மற்றும் பலகாரங்கள் செய்து படைத்தது வழி படுகிறோம். பிறகு ஊர்வலமாக எடுத்து சென்று கடலிலோ ஆற்றிலோ கரைத்து விடுகிறோம். இதை விசர்ஜனம் செய்வது என்று சொல்லுவார்கள்.

இதன் தாத்பர்யம் என்ன தெரியுமா? மானுட வர்கத்தின் அத்தனை கலி விகாரங்களையும் துன்பங்களையும் நம்முடைய பாவங்கள் இன்னும் எல்லாவற்றையும் தான் வாங்கிக்கொண்டு கடலில் கரைத்து விட்டு நமக்கு வேண்டிய மன அமைதி இனிய உள்ளம் இன்பம் போன்றவைகளை நமக்கு கொடுத்து விட்டு செல்கிறார்.

பிள்ளையார்

புராண கதையும் விஞ்ஞானமும்:

ஒரு முறை மஹாவிஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டு மகாலட்சுமியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது அங்கே விநாயகப்பெருமான் சென்றாராம். விநாயகரும் தனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் செய்து காட்டினாராம். மஹாவிஷ்ணு மகிழ்ந்து போனாராம்..

அப்பொழுது மஹாவிஷ்ணு மேல் ஏறி மகா விஷ்ணுவின் கையில் இருந்த சங்கு சக்கரத்தை பிடுங்கிக்கொண்டு வந்து விட்டாராம்.விநாயகர் சக்கரத்தை தன்னுடைய வாயில் போட்டு கொண்டாராம்..

சக்கரத்தை எப்படியாவது திரும்ப வாங்கிக்கொள்ளவேண்டும் என்ற கவலையில் எல்லா வழிகளையும் கையாண்டாராம் மஹாவிஷ்ணு. .ஆனால் எதுவும் பலிக்கவில்லை. இறுதியில் தன்னுடைய கைகளால் இரண்டு காதுகளையும் பற்றி கொண்டு தோர்பிகரணம் போட்டாராம் மஹாவிஷ்ணு..

தோர்பி என்றல் கைகள் கரணம் என்றால் காது என்று பெயர். இதை பார்த்த விநாயகர் குலுங்கி குலுங்கி சிரித்தாராம். அப்பொழுது வாயிலிருந்த சக்கரம் வாயில் இருந்து கீழே விழுந்து விட்டதாம். பிறகு சக்கரத்தை எடுத்து கொண்டாராம் மஹாவிஷ்ணு.

இதில் உள்ள விஞ்ஞானம் என்ன தெரியுமா?

கைகளால் காதை பற்றிக்கொண்டு உட்கார்ந்து எழுந்தால் நம்முடைய தடைபட்ட ரத்த ஓட்டம் சரியாகி விடும். நம்முடைய உடலில் உள்ள சுரப்பிகள் அனைத்தும் ஒரு புத்துணர்ச்சி பெற்று தேவையான அளவு சுரப்பிகள் சுரக்காரம்பிக்கும்.

மஹாப்பெரியாவா நமக்கெல்லாம் ஆசீர்வாதத்தையும் அற்புதங்களையும் தாண்டி இந்து மதத்தின் அருமை பெருமைகளையும் தன்னுடைய இறை சிந்தனைகளையும் நமக்கு ஏராளமாக சொல்லிக்கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். அவைகளை வரும் வாரங்களில் பார்ப்போம்.

மஹாபெரியவாளின்

இறை சிந்தனைகளை உள்வாங்கிக்கொள்வோம்

நம்முடைய சந்ததியினருடன் அவைகளை பகிர்ந்து கொள்வோம்

ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்

மன நிம்மதியான வாழ்க்கை வாழுவோம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்