குரு ஸ்துதி
குரு சரணம்

என் உரை
காயத்ரி ராஜகோபால்
இன்றைய சாணு புத்திரன் அவர்களின் மஹாபெரியவா குரு ஸ்துதி மஹாபெரியவாளின் ஒவ்வொரு அங்க அசைவையும் ரசித்து அழகான வர்ணனையுடன் எழுதியிருக்கிறார்.
பொதுவாக காதலில்தான் வார்த்தை ப்ரவாகங்களும் வர்ண ஜாலங்களும் வெளிப்படும். ஆனால் இந்த குரு ஸ்துதியில் மண்ணில் அவதரித்த பரமேஸ்வரனுக்கும் விண்ணில் அவனுடைய சாம்ராஜ்யத்திற்கும் வார்த்தைகளால் கட்டிய ஒரு இணைப்பு பாலம் என்றால் அது மிகவும் சரி.
இங்கு மஹாபெரியவா மேல் இருக்கும் காதல் முதிர்ச்சி அடைந்து பக்தியாக மாறியதா. இல்லை பக்தி முதிர்ச்சி அடைந்து காதலாக மரியாதை தெரியவில்லை. ஒன்று தெரிகிறது சாணு புத்திரனின் உடலில் ஒவ்வொரு அணுவிலும் மஹாபெரியவா கோவில் கொண்டுள்ளார் என்பது நிதர்சனமாக தெரிகிறது.
வாழ்க சாணு புத்திரனும் அவரது குடும்பமும் வளர்க சாணு புத்திரனின் குரு ஸ்துதி.
*******
பெரியவா சரணம். ஸ்ரீகுருதுதி:
அம்மா... அப்பா... குரு... தெய்வம் என்பதையும் தாண்டிய ஒரு உணர்வு உணரமுடிகிறது ஐயனைக் கண்டமாத்திரத்தில் இந்த அடியேனுக்கு மட்டும் தானா என்ன? லோக ஜீவர்கள் ஒவ்வொருவருக்கும் இப்படித் தானே இருக்கிறது. மேடையிலே அமர்ந்டதபடி மைக்குக்கு முன்னாடி காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு கையையும் காலையும் அழகாக அபிநயம் புடிச்சுண்டு பேசற பெரியவாளைப் பாக்கறப்போ பாட்டி மாதிரி தோணும்... ஓடுப்போய் மடியிலே தலை சாச்சுக்க மாட்டோமான்னு தோணும். பலகாலே சாஞ்சுண்டு கால்கலிரண்டையும் உபக்கமா மடிச்சுண்டு பேசறச்சே அப்பப்போ மூக்கை தடவிண்டு கழுத்தை அழகா வளைச்சு எல்லாரையும் பாத்துண்டு.. பாக்காதமாதிரி.. லயிச்சு ஈஸ்வரனை நமக்கு காட்டிண்டே பேசறப்போ... தாத்தா மாதிரு தோணும்... அந்த பாதங்களை மெதுவா வருடிப் பார்க்கத் தோணும். கொஞ்சூண்டு இடுக்கு வழியா மல்லிப்பூ மாலை சாத்திண்ட தலையை நீட்டி எட்டிப்ப்பார்த்து வணக்கம்னு சொல்ற மாதிரி கையை குவிச்சுண்டு பாக்கறதை நினைச்சாலோ... அப்பப்பா... கோடானு கோடி தேவர்களும் ஒரே உருவில் சங்கமமாக வந்து நிக்க்றாப்போல... ச.ங்..க...ரா...நு சாஷ்டாங்கமா துபுக்கடீர்னு நெடுஞ்சாண்கிடையா விழுந்துடனும்னு தோணும்... உங்களுக்கும் அப்படித்தானே...?!!!! இன்றைய தினம் பகிரவுள்ள குருதுதியானது, ஸ்ரீமான் வரகூர் கல்யாணசுந்தர சாஸ்திரிகள் ஸ்ரீமஹாஸ்வாமிகள் மேல் பாடிய தோடகாஷ்டகத்தினைத் தழுவி எழுதப் பெற்றதாகும். இதனைத் தோடகாஷ்டக மெட்டிலேயே பாடி நமஸ்கரிக்கலாமே! சங்கரம் போற்றி!
சர்வம் ஸ்ரீ சந்த்ரசேகரம்!!
மறை யாவையும் போற்றிடும் சற்குருவே – அருட் சாத்திர போதமும் உணர்த்தியவா | இறை யாவையும் ஒன்றென போற்றியவா – சசி சேகர சங்கரரே சரணம் || நிறை பாரதம் முழுவதும் நடைபயின்றே – செகம் மேவிய துயரமும் கலைந்தனவா | நிறை பூரண குணமுடை புண்ணியமே – சசி சேகர சங்கரரே சரணம் || பிறை சூடிய சந்திர மௌளிபதம் – தினம் பூசனை செய்தருள் பூதியமே | வகை இல்லற நல்லறம் உணர்த்தியவா – சசி சேகர சங்கரரே சரணம் || இடர் யாவையும் கலிதனில் போக்கியவா – வினை யாவையும் நீக்கிடும் சந்திரரே | சுடர் போலருள் நாயகன் ஆதியனே – சசி சேகர சங்கரரே சரணம் || நினைந் தேயுனை அனுதினம் போற்றிடினும் – நிலை ஏகிலடும் நல்வழி சுடரொளியே | மனை ஏகிடு நன்னிலை பேரருளால் – சசி சேகர சங்கரரே சரணம் || கொடி மேலுரு நந்தியும் கொள்சிவமாய் – நிறை நாமமும் கொண்டொரு தூயவனே | கதி யாமிங்கு நின்பதம் நாடினமே – சசி சேகர சங்கரரே சரணம் || இருள் நீக்கிட பேரொளி பொங்கியவா – எமை காத்திடும் பெருமிறை நாயகனே | மருள் நீக்கிட நின்பதம் போற்றிடுவோம் – சசி சேகர சங்கரரே சரணம் || கலி வென்றிட தோன்றிய சங்கரரே – குரு நாயக மாயுரு கொண்டவரே | கிலி யில்லை யுனைதினம் துதிப்பவர்க்கே – சசி சேகர சங்கரரே சரணம் || பெரியவா சரணம்! பெரியவா சரணம்!! ஸ்ரீமஹா பெரியவா அபயம்!!! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.