குரு புகழ் -8

PERIYAVA CHARANAM ......... சந்தம் ......... தனதன தனதா தனனாத் தனனா தனதன தனதா தனனாத் தனனா தனதன தனதா தனனாத் தனனா .... தனதானா ......... பாடல் ......... அரகர சிவகாஞ் சியுறை முனியே ஜயஜய சிவமா வனிதை அருளே சிவசுத வுருவா யுறையே வருக .... திருவாசகா திரிபுர வுமையா ளுருவே குருவே சிவபுர மணியே மதிசூழ் திருவே குணமிகு வடிவே திருவா திரையே ..... மதிநாயகா சிவபதந் தனிலே உனதா ளிடையே மனமிகு திறமே யருளாய் பெறவே மிகுவர மருளே எனவேண் டிடவே .... திருமா'தவா குருவடி தனிலே தொழுதேத் திடவே குவலய முறையோர் குறைதீர் பரமே மனமிதி லினியே சுகமே நிறைக்கு ..... மதிரூபகா உனதிரு திருத்தா ளடிசேர் மனமே உளம்புகு வொளியா லருளேற் றிடவே திருபுய முயரேத் திடவே யருளே ..... குருநாதனாய் அரியரி யுடனே சிவமாய் அருளச் சிவபுர முயர்சேர் திருவே குருவே கழலடி பணிந்தே தொழுதேத் திடவே .... வரமீயவே செயசெய கருணாத் திரிசிவ னுருவே செயசெய மருளேற் றிடுவாய் குருவே செயசெய சிவனா ரருள்சேர் பதமே ...... வரவேணுமே திகழொளி யுருவாய் வழிவாழ் வருளே அறமுடை செயலாற் றிடவே வரமே இனியமு தெனவே அருள்வாய் குருவே ..... சசிசேகரா!
பாடல் விளக்கம்
ஹரியும் ஹரனும் உறையும் காஞ்சிமாநகரில் சிவகாஞ்சியில் எழுந்தருளியிருக்கும் மாமுனியாம் பெரியவாளுக்குஎப்போதும் ஜயமுண்டாகட்டும். காமாக்ஷி ஸ்வரூபியாகவும் அவளருளால் தோன்றிய ஸ்வாமிநாத உருக்கொண்ட பெரியவா,சசிசேகரா வருக! த்ரிபுரசுந்தரிஸ்வரூப குருவே, சிவபுரத்துமணியே, பிறைசூடா, மங்களகரமான குணவானே, திருவாதிரைத் தலைவனாம் இந்துநாயகமே!, உனது பொற்பாதங்களாம் சிவபதம் தன்னில் என் மனம் குவிந்திருக்க அருள்வாயப்பா! ஹேபரப்ரம்மமே, உன் பாதம் பணியும் குவலயத்தோர் அனைவரது குறைகளையும் போக்கி, அனைவரது மனங்களிரும் சுகமேநிறைந்திருக்க அருள்வாய், சந்திரனின் குளிரினையொத்த கருணாரூபனே! உன் இரு திருப்பாதங்களில் பணிவோரதுமனங்களில் புகுந்து ஒளியேத்திட உனது திருக்கரங்களை உயர்த்தி அபயமளித்து அருள்வாயப்பா, குருநாதா! ஹரிஹரனாக,சுபத்தைச்செய்யும் திருவே, குருவே, உனது மலரடி போற்றிப் பணியும் வரம் அருள்வாயப்பா! ஜய, ஜய! கருணாக ஈச்வரா!வெற்றியையே தரும் குருநாதா! சிவனார் அருளைத்தருவாய்குருவே, ஜய ஜய! ஒளி மிகுந்த வாழ்க்கை வாழ வழிசெய்வாயப்பா! என்றென்றும் அறப்பணிகள், அதாவது தார்மீக காரியங்களையே, செய்ய இனியமுதனாக அருள்வாயப்பா! ஹேசசிசேகர குரோ!
குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்