குரு புகழ் -9

பெரியவா சரணம்
வலக்கரமுயர்த்தி அண்டிவந்தோர் துயர்துடைக்கும் அருணாத்ரி ஈசனாம் ஐயன், கருணாகரானந்த மூர்த்தியான, நம் ப்ரத்யக்ஷ பரமேஸ்வரனான ஸ்ரீமஹாபெரியவாளின் அனுக்ரஹம் வேண்டி இன்றும் ஓர் குருப்புகழ் கொண்டு துதிபாடிடும் பேறு பெற்றனமே! எல்லாமே அந்த அருளாலனின் கருணையாலன்றோ! ஆக்கத்திற்கான ஆவல் மட்டுமே அடியேனுடையது; ஆயினும் அதனை தம் கருணையாலே அழகுற ஆக்கப்படுத்துவது அவருடைய அவ்யாஜ கருணை தாமே!
ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர
#குருப்புகழ் ....... சந்தம் ........ தானதன தானதன தானதன தானதன தானதன தான தனனா .... தனதனா ........ பாடல் ......... ஆதியரு ளாசியென ஈசனருள் ரூபகுரு நாதனென தான பரமே ... ... ... குருபரா நாதியென தாகவென வாகியரு ளாசிதரு நாயகமு மான திறமே ... ... ... சங்கரா மீறிவரு மாகொடிய சூரனென மூளைபுக தீயவினை தீர அருளே ... ... ... குருபரா மேதினியெ லாமதிர வேபரத மாடுசிவ ஞானமென தான குருவே ... ... ... சங்கரா சீரியபு ராதனமு மானதல சீலனென சிவபுரமு மேகு திருவே ... ... ... குருபரா வாரியென கரைசேர வரமருள காஞ்சிதனி லேயுறையு மௌன குருவே ... ... .. சங்கரா கூறியம னோகரமு லாவுசர வாவிதனி லேநடன மாடு மிறையே ... ... ... குருபரா வாரிடரு மாடவரு ளாசிதரு மாமுனியு மானகுரு சசி சேகரா ... ... .. சங்கரா! பிரார்த்தனை
ஆதியனான அந்த பரப்ரஹ்மத்தின் ஆசியான ஈசனருள் பரிபூரணமாகக் கொண்டதோர் குருவுருவிலே தோன்றிய பரம்பொருளான குருதேவா! எங்களுக்கெல்லாம் நாதியாக இருந்து காத்து ரக்ஷிக்கும் தலைவனான சங்கரா! அட்டகாசம் புரிந்த சூரர்களுடைய செயல்களைப்போலே தீய வினைகள் எம்மனதிலே தோன்றுகையிலே அவற்றை விளக்கி எம்மைத் தூய்ப்பிக்கும் குருதேவா! அண்டசராசரமும் அதிர்ந்து ஸ்தம்பிக்கும்படியாக நடனமாடிய சிவபிரானின் அருட்கடாக்ஷமாகத் தோன்றிய சங்கரா! சிறப்பு வாய்ந்த புராதன ஸ்தலமான காஞ்சியிலே குடிகொண்டு எமைகாக்கும் சங்கரா! சடசடவென வெகுவேகமாக கீழே நீராய் பாய்ந்து வந்தாலும் குளிர்ந்த உணர்வினை யருளும் அருவி போலே நல்வாழ்வுக்கான சந்ததங்களைத் தந்த இறைவா! முன் வினையின் தாக்கத்தினாலே யாம் படுகின்ற துயர்தனை நீக்கி எம்மை வாழ்விப்பாய் சசிசேகர சங்கரா! முன் வினைப்பயனை நீக்கி நம்மை ரக்ஷிக்கக் கூடியதோர் க்ருபையைத் தரவல்லவர் இந்தக் கலியுகத்திலே குருநாதர் ஒருவர் மட்டும் தானே! இன்று வரையிலும் சம்பூர்ணமாக 70 ஆச்சார்யர்களைக் கொண்ட நம் குருபீடமான ஸ்ரீகாஞ்சி காமகோடி மூலாம்னாய சர்வக்ஞ பீடாசார்யர்களுடைய கருணை வேண்டி அனுதினமும் அவர்தம் திருப்பாதங்களை ஸ்மரித்து நமஸ்கரித்து ஆனந்தமாக வாழ்வோமே!
குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்