குரு கானம்

பெரியவா சரணம்
உள்ளம் உருகுதல்லவோ உமையொரு பாகன் அவதாரியின் இந்தத் தரிசனத்தைக் காணுங்கால்..?!!! ஹ்ருதய கமலத்தினின்று உருகி வழிந்தவோர் கான நெய்யூற்றி போற்றுதல் எனும் தீபத்தை ஏற்றிடுவோமே ஐயன் முன்னமாக! ஆசார்யனின் பேரருள் என்றென்றும் நம்ஐக் காக்கும். கவலை வேண்டாம். இரண்டு விஷயங்களை நினைவிற் கொண்டால் போதும். ஒன்று அனுதினமும் அவருடைய கமலபாதங்களிலே சரணாகதி என வீழ்ந்து கிடப்பது. மற்றொன்று நம் பிரார்த்தனையிலே தர்மம் நிறைந்திருக்கச் செய்து கொள்வது. இவையிரண்டுமே போதுமே ஐயனின் கருணாகடாக்ஷத்திற்குப் பாத்திரமாவதற்கு! பாடலுக்குச் செல்வோமா, உறவுகளே!
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
சிந்தை விளங்குதய்யா சங்கரா சீலனுன் ஆசியிலே கந்தை மனத்தினிலே நிறைவாய் தூய்மை பெருகுதய்யா சங்கரா... (சிந்தை...) நாடி நலம்பெறவே உன்னையே பாடிடத் தோணுதய்யா தேடிச் சரண் புகுந்தோம் உன்னையே ஆசி தருவாயப்பா (சிந்தை...) காலம் கனியுமன்றோ, நின்னருள் காந்தம் இழுக்குதய்யா நாளும் உனைப் பாடும் என்னிலே சாந்தம் நிறைப்பாயப்பா (சிந்தை...) வேதம் விளங்கிடவும் வையத்தில் பேதம் மறையுதய்யா நேசன் நின்னருளில் நலங்கள் தேடித் தருவாயப்பா (சிந்தை...) நீறு திருமுகமும் நெஞ்சத்தில் சோகம் நீக்குதய்யா தீரமிகு வேலாம் தண்டமும் காத்திட வேணுமப்பா (சிந்தை...) கண்கண்ட தெய்வமய்யா நீயெங்கள் கலியுக வரதனய்யா நாதி நீயென்று பணிந்தோம் நாளும் அருள்வாயப்பா (சிந்தை...)
இந்தப் பாடலை அருட்கூர்ந்து பாடி அனுப்பி எங்கள் எல்லோருக்கும் உம்மாச்சீ தாத்தா பிரசாதமாக ஏற்க அருள்வீர்களா அன்புச் சகோதரர் Raju Veeramani அண்ணா. தங்களுடைய அருட்கானமழையினிலே இப்பாடலை நினைந்து பார்த்தேன். மனம் ஏங்கியதை அனைவருடனுமாக இங்கே பகிர்கின்றேன். பிரதி தினமும் அனைவரும் கேட்டு ஆனந்தமாக ஐயனைப் போற்றுவோமே!
குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்
சரியாக மாலை 3:21க்கு அன்புச் சகோதரர் வீரமணி ராஜு அவர்களிடமிருந்து பதில் வந்தது.. விரைவில் பாடிப் பகிர்கிறேன் சாணூ என்று. ஆசார்யாளிடத்திலே அவர் கொண்டுள்ள பக்தி அனைவரும் அறிந்ததே. ஐயனின் அருளிலே அவரும் அவர் குடும்பத்தாரும் நலமோடு வாழ ப்ரார்த்திக்கின்றேன். குறிப்பாக அவரின் தவப்புதல்வன் தனது பக்தி கானங்களால் உலகத்தவர் அனைவரையும் ஆனந்திக்க வைக்கும் பாக்கியத்தை நல்கிட வேண்டுமென ஸ்ரீசரணாளிடம் ப்ரார்த்திக்கின்றேன்.
குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை
பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்