இந்து மதம் ஒரு வாழும் முறை -012
இந்து மதம் ஒரு வாழும் முறை -012
காஞ்சி மடமும் அன்னை அபிராமி தாடங்கமும்
மஹாபெரியவளே சொன்ன கதை
சம்பவம் நடந்த வருடம்- 1843

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அன்னை அபிராமி
சம்பவம் நடந்த ஊர்: திருவானைக்காவல்
ஆயிரத்து எட்டு நூற்றி நாற்பத்தி மூன்றாம் வருடம் அப்போதைய காஞ்சி மடாதிபதி நீதி மன்றத்தில் ஒரு வழக்கை சந்திக்கிறார். வழக்கின் விவரம் இதோ உங்களுக்காக.
திருவானைக்காவலில் கோவில் கொண்டிருக்கும் அன்னை அபிராமி மிகவும் உக்கிரமாக இருந்த காலம். அப்பொழுது அன்னைக்கு உயிர் பலி கொடுத்து வழிபடும் வழக்கம் இருந்தது.
காஞ்சி மடத்தின் ஆதி சங்கர் தான் அபிராமியை சாந்தப்படுத்த ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து உக்கிரத்தை குறைத்தார். அந்த உக்கிரத்தை ஸ்ரீ சக்கரத்திலும் காதில் அணிந்து கொள்ளும் தாடங்கத்திலும் அடக்கி அன்னையை சாந்தப்படுத்தினார்.
அன்றில் இருந்து அன்னை அபிராமியின் காதில் அணியும் தாடங்கத்தை காஞ்சி சங்கர மட்டும்தான் செய்து அணிவிக்கும் வழக்கம் இருந்தது..ஒரு சமயம் அன்னையின் தாடங்கம் பழுதடைந்து விட்டது..
உடனே ஒரு புதிய தாடங்கத்தை காஞ்சி மடம் செய்ய முயற்சி செய்தது. அப்பொழுது அந்தஊரில் இருந்த பெரும் செல்வந்தர் ஒருவர் அந்த தாடங்கத்தை தான் செய்து போடுவதாக சொன்னார்.
அதற்கு அப்போதைய காஞ்சி மடாதிபதி இது காஞ்சி மடத்தின் உரிமை.. எங்களை தவிர யாரும் தாடங்கத்தை செய்ய உரிமை கிடையாது என்றார்..இந்த உரிமையை எதிர்த்து அந்த செல்வந்தர் நீதி மன்றத்தை நாடினார்.
நீண்ட காலம் நடந்த வழக்கில் தீர்ப்பு வந்த காலத்தை மஹாபெரியவா சொல்லும் முறையே அலாதி. நீதி மன்றத்தின் தீர்ப்பு அந்த பணக்கார புள்ளிக்கே சாதகமாக வந்தது. இந்த வழக்கை ஒட்டி கற்ற பாடங்களை மஹாபெரியவா சொன்ன முறை மிகவும் சுவாரசியமானது.
அதிலும் அந்தக்காலத்தில் நேரத்தை எப்படி கணக்கிடுவார்கள் என்பதையும் சொல்லி இந்த வழக்கின் காலதாமதத்தை எப்படி மஹாபெரியவா தனக்கே உண்டான பாணியில் சொன்னார் என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
இந்த வழக்கின் காரணமாக மடம் மிகப்பெரிய கடனில் மூழ்கியது. மீண்டும் மீண்டும் கடன் வாங்கி மடம் மீளா கடன்தொல்லையில் தவித்தது. அப்பபொழுது இருந்த மடாதிபதி தனக்கு தானே சொல்லிக்கொண்டது.
ஏன் இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருந்தோம்.
அன்னை அபிராமிக்கு வழக்கு நடந்த காலம் முழுவதும் தாடங்கம் இல்லாமலேயே அன்னை அபிராமி இருந்தாள்..
அவளுக்கு தாடங்கம் இல்லாமல் செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறது.
மடமும் இவ்வளவு பெரிய மீளா கடனில் மூழ்கி இருக்க வேண்டாம்.
இந்தசமயத்தில்தான் தஞ்சை மன்னன் இந்த மடத்தை மீட்டெடுத்தார் . இந்த இக்கட்டான சமயத்தில் அன்னை அபிராமி எப்படி வந்து அருள் பாலித்தார் என்பது தனி கதையானாலும் அது மிகவும் அசர வைக்கும் சம்பவம்.. அந்தசம்பவத்தை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்
மஹாபெரியவா இந்த வழக்கை பற்றி குறிப்பிடுகையில் காஞ்சி மடமே கைதான சம்பவம் உங்களுக்கு தெரியுமா என்று இது வரை நீங்கள் படித்த விவரங்களை சொன்னார்.
மிகவும் காலம் கடந்து வந்த நீதிமன்ற வழக்கின் தீர்ப்பை பற்றி மஹாபெரியவா சொன்னது..
அந்த காலத்தில் நேரத்தை கணக்கிடுவதற்கு கடிகாரமோ மணிகூண்டோ எதுவும் கிடையாது. ஒவ்வொரு கிராமத்திற்கும் தினந்தோறும் காலையில் தண்டோரா போட்டு விட்டு அன்றைய நாள் என்ன மாதம் வருடம் எல்லாவற்றையும் ஒருவர் சொல்லுவார்.
ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு பெரிய கம்பத்தை நட்டு வைத்திருப்பார்கள். சூரியஒளி கம்பத்தின் மீது பட்டு தரையில் விழும் கம்பத்தின் நிழலின் நீளத்தை வைத்து நேரத்தை கணக்கிடுவார்கள். அது ஏறக்குறைய சரியாக இருக்கும்.
இந்த வழக்கின் தீர்ப்பை பற்றி சொல்லும்பொழுது காலத்தை கணக்கிட்ட விதம் எல்லோரையும் வியக்க வைத்தது. அது என்ன?
நீதி மன்றத்தில் வழக்கை எதிர்கொண்ட நாளில் மடத்தில் எலுமிச்சம்பழம் சாறை பிழிந்து சமையலுக்கு சேர்த்து விட்டு எலுமிச்சம்பழ கொட்டைகளை வீசி எரிந்து விடுவார்கள்.
வீசி எரிந்த விதைகள் தீர்ப்பு வந்த நாளில் பெரிய மரமாக வளர்ந்து அந்த மரத்தில் இருந்து எலுமிச்சம் பழங்கள் இன்று காய்த்து குலுங்குகின்றன.. .இதில் இருந்து இந்த வழக்கின் நீண்ட நெடிய காலத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று மஹாபெரியவா சொன்னார்.
மஹாபெரியவா ஒரு பத்து நிமிடங்கள் யாருடனாவது பேசிக்கொண்டிருந்தால் அந்த பேச்சில் இருந்து எவ்வளவோ அறிய தகவல்களை நாம் பெறலாம்..பன்னிரண்டு வயதில் சன்யாசம் ஏற்ற ஒரு சிறுவன் எங்கு எந்த பல்கலை கழகத்தில் படித்து பட்டம் வாங்கியிருக்க முடியும்..அறிவியல் மருத்துவம் ரொக்கெட் சயின்ஸ் வானசாஸ்தரம் போன்ற எந்த விஷயத்திலும் நிபுணர்களுக்கு இணையாக பேச முடியும்.

திருவானைக்காவல் உள் பிரஹாரம்
இதில் இருந்து ஒன்று புரிகிறதா உங்களுக்கு.
மஹாபெரியவா
ஒரு
பிறவி ஞானி
கர்ப ஸ்ரீமான்
பிறவி சர்வகஞன்
பரமேஸ்வர அவதாரம்
கலியுக கண்ணன்
கலியுக ஆத்மாக்களின்
ஒரே விடிவெள்ளி
மஹாபெரியவா சரணம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்