top of page
Featured Posts

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-037


மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-037

பிரதி செவ்வாய் கிழமை தோறும்

பசிக்கு உணவளிப்பவன் மனைவி

பசிக்கும் முன்பே உணவளிப்பவன் தாய்

பசித்து விடுமோ என்ற கவலையில்

பார்த்து பார்த்து உணவளிப்பவர்

தாய்க்கும் ஒரு படி மேலே

அவர்தான் மஹாபெரியவா

நம்முடைய அற்புக சாரல்கள் தொடரில் மஹாபெரியவாளின் இறை அற்புத சக்தியை பல விதங்களில் பல கோணங்களில் அனுபவித்து வருகிறோம். இந்த தொடரில் இன்று மற்றுமொரு அற்பத்தை அனுபவிக்க போகிறோம்.

நமக்கெல்லாம் வாழ்க்கையில் ஒரு சோதனையான கால கட்டம் என்றால் மஹாபெரியவாளை நாடுகிறோம்.பலவருடங்களாக நம்மை எல்லாம் சாகடிக்கும் உடல் பிணிகளை போக்க மஹாபெரியவாளை அணுகுகிறோம். நம்முடைய பிரார்த்தனைக்கு என்றாவது மஹாபெரியவா செவி சாய்க்காமல் இருந்திருக்கிறாரா. இல்லையே.

சமயத்தில் அவரே நம்மை அழைத்து என்ன வேணும் என்று கேட்க நாமும் நமக்கு என்ன வேண்டும் என்று சொல்ல அவரும் நமக்கு அனுகிரஹித்து வேண்டியதை செய்து விடுகிறார். நமக்கு ஒன்று என்றால் மஹாபெரியவாளை நாடுகிறோம்.

ஆனால் மஹாபெரியவாளுக்கே சோதனை வந்த காலமும் உண்டு.அந்த சோதனையான காலத்தில் மஹாபெரியவா யாரை நாடினார். அழைத்தவர் அனுக்கிரஹம் செய்தாரா என்பதை இந்த பதிவில் காண்போம்.

ஒரு சமயம் மடம் மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருந்தது.பொருளாதார நெருக்கடியிலும் சிக்கி இருந்தது. இருந்தும் மஹாபெரியவா யாரிடமும் உதவி கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.ஆனால் ஒவ்வொரு இரவையும் சமாளிப்பதே மிகவும் கஷ்டமாக இருந்தது.

மடத்து சிப்பந்திகளும் மஹாபெரியவாளிடம் சென்று எந்த கஷ்டத்தையும் சொல்ல மாட்டார்கள்.சொல்லாமல் இருந்தாலும் மஹாபெரியவாளுக்குக்கு தெரியாதா என்ன.

இருந்தாலும் ஒரு நாள் இரவு மடத்தில் மணி அரிசி இல்லை. உப்பு கூட இல்லை பருப்பும் இல்லை. காய் கறிகளும் சுத்தமாக இல்லை. இந்தசமயத்தில் மஹாபெரியவாளிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

மஹாபெரியவா இரவில் அன்று சற்று தாமதமாக சந்திரா மௌலீஸ்வர பூஜையில் இருந்தார். மடத்து கைங்கர்யம் செய்பவர்கள் மஹாபெரியவா முன் நின்றார்கள். மஹாபெரியவா கண்ணை மூடிக்கொண்டு த்யானத்தில் இருந்ததால் வாய் திறக்காமல் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் சொல்லவில்லை என்றால் மஹாபெரியவாளுக்கு தெரியாதா என்ன?

மஹாபெரியவா கண்ணை திறந்து என்ன என்று கேட்கவும் கைங்கர்யம் செய்பவர்கள் மெதுவாக சொல்ல ஆரம்பித்தார்கள். "மடத்தில் மணி அரிசி இல்லை பெரியவா. உக்ராண அறையிலிருந்த அரிசியை அடியோடு வழித்து இன்று மதியம் வரை சமாளித்து விட்டோம்..நாளைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.நீங்கள்தான் ஏதாவது செய்யனும் என்றார்கள். நீங்கள் யாருக்காவது ஒரு போன் செய்தால் கொண்டுவந்து கொட்டி விடுவார்கள்.என்று யோசனை சொன்னார்கள்.

ஆனால் மஹாபெரியவா நிச்சயமாக சொல்லி விட்டார். யாரிடமும் கேட்க கூடாது என்று.. கைங்கர்யம் செய்பவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. விடிந்தால் அடுப்பு எரிய ஒன்றுமே இல்லையே.

இந்த சமயத்தில் மடத்திற்கு மஹாபெரியவாளை தரிசனம் செய்ய வெளி ஊர்களிலும் வெளி மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து விடுவார்கள்.நம்பிக்கையோடு வரும் அவர்களுக்கு எப்படி உணவளிப்பது.மிகவும் இக்கட்டான நிலைமை. மஹாபெரியவா என்ன செய்வார் பாவம். அவரோ ஒரு சன்யாசி. அவருக்கு தெரிந்தது எல்லாம் அம்பாள் காமாட்சி ஒருத்திதான்.

கைங்கர்யம் செய்பவர்கள் அமைதியாக மஹாபெரியவாளின் உத்தரவிற்கு காத்துக்கொண்டிருந்தார்கள். மஹாபெரியவா ஒரு நிமிடம் கண்ணை மூடி தியானித்து விட்டு "எல்லாம் அம்பாள் காமாட்சி பாத்துப்பா" என்றார். கைங்கர்ய மனுஷாளுக்கு மனசு ஒரு நிலையில் இருக்கவில்லை. இவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சுலபமாக எடுத்துக்கொள்கிறார் மஹாபெரியவா.

ஒரு இரவில் இத்தனை நேரத்திற்கு பிறகு யார் என்ன கொண்டு வருவார்கள். எங்கிருந்து கொண்டு வருவார்கள் என்று அங்கலாய்த்தார்கள். எல்லாம் காலையில் பார்த்துக்கலாம் என்று மஹாபெரியவா சொல்லி விட்டார்.

அன்று இரவு பூராவும் ஸ்ரீ கார்ய மனுஷாளுக்கு இருப்பு கொள்ளவில்லை. தூக்கமும் வரவில்லை. விடிந்தால் பக்தர்கள் வந்து விடுவார்கள்.. மடத்தின் நிலைமை அவர்களுக்கும் தெரிந்து விடுமே என்று கவலை பட்டார்கள்.

அன்று இரவு விடை பெற்றுக்கொண்டு பகலவனின் உதயத்தை வரவேற்கும் நேரம். மடத்து பசு மாடுகள் அம்மா என்று கூப்பிட்டன. "இன்னும் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் வந்து பாலை கறந்து கொண்டு கன்று குட்டியை ஊட்ட விடுங்கள் என்று சொல்லாமல் சொல்லின மடத்து பசு மாடுகள்.

கைங்கர்ய மனுஷாள் கவலையை மஹாபெரியவா பாதங்களில் போட்டுவிட்டு தங்கள் காலை வேலைகளை பார்க்கத்தொடங்கினார்கள். சூரியன் கூட முழுமையாக இன்னும் வெளி வரவில்லை. செவ்வானம் தேரோட்டி அருணனோடு வானத்தில் இருந்து வெளிவர தொடங்கியது

விடிவகற்கு முன் மடத்து வாசலில் ஒரு பெரிய வண்டி நிற்கிறது. வண்டி நிறைய அரிசியும் தானியங்களும் காய் கறிகளும் மூட்டை மூட்டையாக இருந்தன. ஒருபெரிய மனுஷன் கையில் ஒரு புஷ்பம் உள்ள பையோடு கையை கட்டி வாய் பொத்தி மஹாபெரியவா முன் நின்றார்.

மஹாபெரியவாளும் என்ன என்று கேட்க மிகவும் பவ்வியமாக அந்த பெரிய மனுஷர் சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்னதின் விவரம் இதோ உங்களுக்காக.

இன்று என்னுடைய மகள் திருமணம்.. இத்தனை நேரம் கல்யாண சத்திரமே நிரம்பி வழிய வேண்டியது.. ஆனால் இன்று கல்யாணம் நடக்க வில்லை என்றார். மஹாபெரியவா ஏன் என்று கேட்க பெரிய மனிதர் சொன்னார் மாப்பிளைக்கு இரவோடு இரவாக அம்மை போட்டுவிட்டது.

முகம் எல்லாம் பெருமளவில் முத்து முத்தாக அம்மை கொப்பளங்கள் கல்யாணம் நின்று விட்டது. இந்த சாமான்கள் எல்லாம் வீணாகக்கூடாது என்று நினைத்தோம், எங்களுக்கு ஞாபகம் வந்தது உங்களின் மடம் ஒன்றுதான்..தயவு செய்து இந்த மளிகை சாமான்களையும் காய் கறிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

மஹாபெரியவாளும் கண்ணை மூடிக்கொண்டு காமாட்சிக்கு ஒரு சிரிப்புடன் நன்றி சொல்லிவிட்டு வந்தவரை வாழ்த்தினார். உங்கள் மகள் கல்யாணம் அமோகமாக நடக்கும்.. அவள் தீர்க்க சுமங்கலியாக ஐஸ்வர்யங்களோடு வாழ்வாள்.. கவலை படாதே என்று வாழ்த்தினார். வந்த பெரிய மனிதரும் மஹாபெரியவாளிடம் விடை பெற்றுக்கொண்டார்.

கைங்கர்ய மனுஷன் வாயடைத்து போய் நின்று கொண்டார்கள். எத்தனை நேரம் வாயடைத்து நின்று கொண்டிருக்க முடியும். மஹாபெரியவா முன் வந்து நின்றார்கள்.

மஹாபெரியவா சிரித்துகொன்டே அவர்களிடம் கேட்டார். என்னடா அம்பாள் காமாட்சி உங்களுக்கு படியளந்து விட்டாள் போல இருக்கு என்றார்.

அவர்களால் என்ன பேச முடியும். அம்பாள் காமாட்சியே மஹாபெரியவா உருவில் வலம் வந்து கொண்டிருக்கிறாள். அம்பாள் காமாட்சிக்கே மஹாபெரியவா ஸ்தூல சரிரத்தில் அவளுடைய பாத கமலங்களில் புஷ்பங்களை சமர்ப்பித்து பூஜித்து இருக்கிறார். மஹாபெரியவாளின் குரலுக்கு செவி சாய்க்காமல் இருப்பாளா அம்பாள் காமாட்சி.

அம்பாள் காமாட்சி எங்கோ வானத்தில் இல்லை

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாள்

நம்மிடையே இந்த நொடி கூட இருக்கிறாள்

மஹாபெரியவா ரூபத்தில்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page