Featured Posts

குரு கவிதை


பெரியவா சரணம்

எல்லாம் வல்ல பரம்பொருளான ஈசாவதாரியாம் காஞ்சி வேதவேந்தன், கருணாமூர்த்தியை இன்று ஓர் உரைகவிதை கொண்டேத்தித் தொழுதிட மனம் விழைகின்றதன்றோ! ஆலம் உண்டானை, ஆலிலையில் துயின்றானை, ஆகமாதி வேதங்களீன்றானை யொத்தத் தூமணியின் இன்றைய தரிசனம் அடியேனின் மென்மனத்திலே உருவாக்கிய உணர்வலைகளின் மூலமாய் உண்டாகிய வெளிப்பாட்டினை உங்கள் அனைவரோடுமாக ஒருசேர நின்று அந்த ப்ரத்யக்ஷ பரமேஸ்வர சசிசேகர சங்கரனைத் துதிக்கும் பாக்கிய பெற்றனமே!

#ஸ்ரீகுருகவிதை முக்கண்கள் கொண்டுத் திரிபுர மெறித்தவா ! மூல முதல்வனாய் காலடியில் தோன்றியவா ! மும்மை வினை தீர்த்தருள வேண்டி முனிவராய் காமகோடி பீடமும் ஏறிய கருணாமூர்த்தியே ! முழுமையாய் எம்மை மண்ணில் மாந்தராய் நிலைப்படுத்த வாழ்விலே முத்தி பெற நல்லறிவையும் படைத்தவா ! கங்கையாளை முடிதன்னில் முடிந்த ஈசா ! அங்கையாலே எமக்கருளவந்த ஆசார்யனே! பூவுலகில் எமக்குத் துணை நீயன்றி வேறேதையா! பாடித் துதித்தும்மை யாம் போற்றுகிறோம் பரமா! பார்த்து அருள் வழங்கி எம்மை ஆதரிப்பாய் ஆதிமா’தவா! மூவுலகும் ஆளுகின்ற மூத்தவளின் அருட்சுடரே! மூண்டுவரும் வினைகள் தீர முன்னின்று அருள்வாய் மூல முதல்வனே! வேதங்கள் போற்றுகின்ற மெய்ப்பொருளே! மதியழகா! வேதம் விளங்கச் செய்து வாழ்வழியும் இலங்கிய வாசா! நேசா! வடிவீசா! வேதனைகள் களைந்திடவே வேணுமைய்யா! பேதலித்து நிற்பவர்க்கெல்லாம் நாதி நின் திருப்பாதமன்றோ! ஒருவனே எனவுன்னை ஒருவி நின்றனமே! ஓதுவார் மூவரும் நீயே என ஓடோடி நாடி வந்து உந்தன் திருப்பாதம் சரணடைந்தோம் அப்பனே! நல்லருளை வழங்கியெமைக் காத்தருள்வாய் ஐயனே! துய்யவருள் மெய்யனே! கும்பிட்டோர்க் கருளும் குலக்கொழுந்தே! குலதெய்வமே! கதறும் முன்பாய் ஓடோடி வந்து எமைக் காப்பாய் வேதத்தேவா! பெரியவா சரணம்! பெரியவா சரணம்! ஸ்ரீமஹாபெரியவா சரணம்!

எழுத அறிந்தவனில்லை யான்! எழுத ஆவலுடையவன் மட்டிலுமே! இருப்பினும் எந்தன் எழுத்துக்கள் ஏதேனும் ஒரே ஒரு மனத்தினிலே குருபக்தியைத் தூண்டிவிடுமேயானால் அதுவே எந்தன் இப்பிறப்புக்குக் கிட்டிய பாக்கியமாகக் கருதுகிறேன், அவ்வளவே! எழுத்தறிந்த ஆன்றோர் பலருள்ள சபையிலே, தத்தித் தடுமாறி நடக்க முயலும் சிறு குழந்தை யான்! பீடு நடை போடத் தகுதியில்லாவிட்டாலும், பிறந்த குழந்தை போலே தத்தி நடைபோடத் துவங்கி முயல்கின்றேன். பெரியோர் வாழ்த்தும், ஆன்றோர் ஆசிகளும் என்றென்றும் எமக்கு வழிகாட்டும்; அதனை செவ்வென அருள ஆசார்யர்கள் அனைவருமுண்டு என நம்பிக்கையோடு வாழ்விலே மேற்கொண்டு பிரயாணிக்கின்றேன்… அவ்வழியிலே கிட்டிய ஒவ்வொரு உறவுகளோடும் ஒவ்வொரு நாளும் பிரார்த்தனைதனைத் தொடர்ந்து வருகின்றேன். எல்லோரும் இன்புற்று வாழ எம் ஐயனை பிரார்த்திக்கின்றேன்.

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.