top of page
Featured Posts

குரு ஸ்துதி


பெரியவா சரணம்

கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகட்கு முன்பாக சிறுமணவை என தற்போது பெயரிடப்பட்டுள்ள அக்காலத்திய சிறுமணவூரில் வாழ்ந்த அருட்திரு முனுசாமி முதலியார் எனும் சிவனடியார் தில்லையம்பலத்து ஆடலரசனாம் நடராசப் பெருமானை ஸ்மரித்து இயற்றியருளிய “நடராசப் பத்து” பாக்களை அனைவரும் அறிவீரே! அவ்வண்ணமாய் விருத்தவகையைச் சார்ந்த அந்த் அற்புதமான துதியைப் போலே,

நம் நடைராசனாம் காஞ்சிப் பொக்கிஷம் கருணாமூர்த்தியான ஸ்ரீமஹாஸ்வாமியின் பேரிலே “நடைராசப் பத்து” எனும் போற்றிப் பாடலை எழுதி அவருடைய பாதாரவிந்தங்களிலே சமர்ப்பிக்க ஆவல் எழுந்தது. அதிகபட்சமான இப்பாடல் நடராசப்பத்தின் சந்தவரிசையிலேயே அமையப் பெற ஆத்மார்த்தமாக பிரார்த்தித்துக் கொள்கின்றேன். பாரத தேசம் முழுவதுமாக நிறைந்துள்ள பக்தர்களை அவர்கள் வசிக்கும் இடங்களுக்குத் தேடிச் சென்று, அதுவும் பாத நடையாய் நடந்து சென்று, அருள்புரிந்த அந்த ஆசார்யத் தெய்வத்திற்கு “நடராசப் பத்து” படைப்பதிலே பேரானந்தம் கொள்வதோடு, பிறந்துள்ள இவ்வாழ்க்கைக்கு ஓர் உன்னத அர்த்தத்தினை அடியேனுக்கு அருளியமைக்காக அவருடைய கமலபாதங்களிலே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கின்றேன். 2018-ம் ஆண்டின் தொடக்கத்திலே இதனை அனைவருடனுமாகப் பகிர்வதிலே பேரானந்தம் கொள்கின்றேன்.

ஸ்ரீகுருதுதி

“நடைராசப் பத்து”

மண்ணாளும் மனமாளும் வேதமறை நாதன்நீ மதியோரும் போற்றும் குருநீ மிகிரன்நீ மகிரன்நீ மகரிநீ மகலிநீ மண்டல மிரண்டேழும் நீ பரமன்நீ பவதிநீ பரமாத்ம ரூபம்நீ பரவுயிர்க் குயிரும் நீயே பாதாதிகேசன்நீ பரம குருதேவன்நீ பெற்றவரும் உற்றவரும்நீ பொலிவும்நீ ஒளியும்நீ யிருளும்நீ பகலும்நீ பரம தயவாளன் நீயே புவனங்கள் பதினான்கும் போற்றும் குருபீடத்தின் திறமாளும் பரமேசன் நீ எண்ணறிய தருமங்கள் நியாயங்கள் நிறைந்தோங்க கருணையுரு கொண்டவனும் நீ ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர காஞ்சிவாழ் நடைராசனே! (1) மிகிரன் - சந்திரன் மகிரன் - சூரியன் மகரி - சமுத்திரம் மகலி - அல்லொமொ பரமன் - சிவம் பவதி - சக்தி வானாட வளியாட வழியாட விதிமாட வனிதை காமாக்ஷியாட, நாளாட, நூலாட, நதியாட, திரையாட நிறைவோடு மறையுமாட, கோனாட, குலமாட, கலியோட, குறைஓட குமரிவரை குழவியாட, தண்டமொடு கமண்டலம், துறவுரியில் மண்டலம் வளமோடு திரையுமாட, ஒளியாட, ஒலியோடு மதியாட, மாமுனியின் தலமோடு நிறையுமாட, வினையோட, வாழ்வோங்க, வழியோங்க, வரமீய்ந்து வளமோடு மகிழ்வுமோங்க, நினைவோங்க நின்னருளில், உனைப் பாட, இதுவேளை நடமாடு தேவனுருவே ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர காஞ்சிவாழ் நடைராசனே! (2) படகென்ற வாழ்வினில் துடுப்பின்றி யல்லலுறு சேராத கரையை எண்ணி கடமுள்ளி லுறைஆவி கரைகின்ற நிலைதேடி கட்டுண்டு நித்த நித்தம் உடலுக்கு முயிராசை உள்ளத்தி லுளவாசை ஓயாம லிரைச்சல் எனவும் தடமின்றி தடுமாறு நிலைதன்னி லுழலூடி வினையாலும் வலிகூடவே தாயென்று சேயென்று உறவென்று புறம்நிற்கு மிகையான பதம்யாவிலும் நானின்று கதிதேடி யலையாத படியாக நானுளேன் என்று காக்கும் இதமாக பதமாக சந்ததந் தந்தருளும் தயவான குருபரனுமாய் ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர காஞ்சிவாழ் நடைராசனே! (3) வினையள்ள வகையல்ல, விடமுள்ள அரவல்ல, வித்தையுங் கூட்டவல்ல, கனையல்ல, கனலல்ல, குறையுள்ள கனவல்ல, மனதூறு மயக்கமகல, சூதல்ல, வசியல்ல, மதியின்றி உழலல்ல, இடருமோர் துயரமல்ல, நானல்ல, தானல்ல, நயம்பிடும் நிலையல்ல, நாணிகோ ணுதலுமல்ல கொங்கணர் முதலாகு சித்தர்கள் ஓருருவில் வாய்த்தநல் குருவுருவிலே நானுண்டு குறையகல வேயென்ற பதமோடு நீயுண்டு வாழ்வு விளங்க என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க ஏதுளது புகலவருவாய் ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர காஞ்சிவாழ் நடைராசனே! (4) நொந்துவந் தேநின்று துயரமுஞ் சொல்முன் னுகந்துநல் லாசிநல்கி சந்ததமுந் தந்துயெமக் கருளாசி புரியவு மவதாரம் புரிந்தகுருவாய் பெற்றவர் உற்றவர் இகழாத நிலைகாண தருமநெறி ஒழுகுவழியை கற்றவர் மற்றவர் அறியுவகை மறைவிளங்க வகையதனுந் தந்தகுருவாய் தந்திமுகச் சோதரன் அழகுமுக குமரனின் அவதாரம் நீயல்லவோ! செந்தூர மணியுமுக மலைவாழு வனிதையவ ளருளாலன் நீயல்லவோ! கற்றவன் நானல்ல, கொற்றவன் நீகுரு பெற்றவ ருற்றவர் நீயே! ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர காஞ்சிவாழ் நடைராசனே! (5) நற்றுணை நீயென்று நம்பியே நாடிவர வரமதைப் பெற்ற வகையால் கொற்றவன் நின்பதம் சரணேகு மடியவர்க் கினியேதும் குறையுமுண்டோ! வேதமுஞ் சாத்திரமுந் தோத்திரமு மறியாத படியுந்தன் தாளதனிலே பேதமுஞ் சாபமும் வேண்டாத நிலைவேண்டி வந்தனையு மறிகிலேனே! குருவுண்டு பயமில்லை குறையேது மினியில்லை உனைகண்டு அடிபோற்றவே நிறைவுண்டு குறையில்லை அருளுண்டு இருளில்லை எனவொன்றி புகழ்பாடவே வரமுண்டு வலியில்லை கனிவுண்டு துயரில்லை எனவோடி அருள வருவாய் ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர காஞ்சிவாழ் நடைராசனே! (6) முன்பிறப் பென்னவினை செய்த னென்றழுமுன்ன மெய்பொருளு மறியச் செய்வாய்! முன்னிலென் வினைவந்து மூண்டிடும் முன்பாக மோடோடி காத்தருளுவாய்! தன்னைநொந் தழியாமல் தான்தேடி யலையாமல் தவிப்பதும் இனியேகுமோ! அன்னை காமாக்ஷியின் அருளாலன் சன்னதி நாடிநல் லருள் பெறுவனோ! தானென்று கர்வத்தில் தருமநெறி பிழறாமல் தளிர்வாழ்வு தடமோடிட தான்நின்று நாணாமல் கோணாமல் வாழ்ந்திடவு மாகேசன் பதம் நாடிட இன்னுமென பிறவிவரு மென்றழுது நின்சரணம் தஞ்சமென நாடிவந்தேன் ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர காஞ்சிவாழ் நடைராசனே! (7) வஞ்சமது நெஞ்சமதில் வாயுரையி லஞ்சுகமு மாகவுள சுற்றமிதிலே கஞ்சமட மனதோடு குறையான வினையுடனு மாகவுள வீதியிதனில் தறிகெட்டு தடந்தேடி யலைவதென விதியாகி மாற்றுவழி தேடாமலே நெறியின்றி தருமவழி சிந்தாம லொழுகாமல் காலமதும் வீண்போனதோ! வந்தவழி தெரியாமல் போகுவழி புரியாமல் நெஞ்சமுறு துயரங்களாய் உந்துவழி தான்நொந்து சோகமதி லேயலயு மடியார்க்கு கதியும் நீயே! மேகமும் மாரிவள மீய்ந்தருள விளங்குநிலம் போலருளும் செகத்குரு நீ ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர காஞ்சிவாழ் நடைராசனே! (8) மனதார பொய்யாது தருமவழி பிழறாமல் உளமார வொழுகி நாளும் குணமோடு பண்புநிறை வழியேநல் வினைபுரிய மகிழோடு வாழ்வமையவே தந்தது எந்தன்னை கொண்டது முந்தன்னை பகருமொரு பத்தியாளன் தந்தது நல்பத்தி வழியாடி தடமோடி கண்டநின் திருத்தாளிலே மனதார நாளுமினி சரணேகு வழிநல்கி மனமிதனில் நிறையுமுருவே வனமாலி வல்லொளிய னுருகூடி வாய்த்தவொரு குருபாத அருளும்பெறவே பண்ணுகிற வினையெதிலு மாதியன் நின்னருளும் பணியுவகை செய்தருளுமே ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர காஞ்சிவாழ் நடைராசனே! (9) கண்மூன் றுடையானின் கனியுவுரு கொண்டோனே நிலையாமை தாம்போக்குவாய்! வண்ணாளு வளமாக வனிதையென வுருவான காமாக்ஷி கருணைபுரிவாய்! என்னாளு மினியுந்தன் னடிபோற்றி வாழ்ந்திடவும் வகையான அருள்புரியுவாய்! என்னிலே நீக்கமற நிறைகின்ற சோதியே எம்பெரும சசிசேகரா! விண்ணாளு வேதமறை யொலியாகி தரணியிதை என்னாளும் காத்தருளுவாய்! மண்ணாளு மதியோனே! மங்கலமு மருள்வாயே மதிகூட்டும் கலைவானியே! நடைராசப் பத்திதனை மனதார ஒலிப்போர்க்கு மகிழ்வான வாழ்வருளுவாய்! ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர காஞ்சிவாழ் நடைராசனே! (10)

இசையும் பக்தியும் இசைவும் ஒரு சேர உள்ள எவரேனும் இந்தத் துதியினைப் பக்கவாத்யங்களுடனாகப் பாடிப் பகிர்வீர்களேயாயின் அதுவே நம் உம்மாச்சீ தாத்தாவின் பிரசாதமாக அனைவரும் ஆகர்ஷித்துக் கொள்ள ஏதுவாகுமே! ப்ரார்த்தனை நமது; அதனை செவ்வுற அருள்வது அவராச்சே! எல்லாம் வல்ல பேரீசனான பரப்ரஹ்ம ஸ்வரூபத்தை ஸ்மரித்து நமஸ்கரிப்போர்க்கு குறையெல்லாம் நீங்கி நிறைவைத் தந்தருள வேண்டுமென அனைவருமாக அனைவர்க்குமாக பிரார்த்திப்போமே!

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page