Featured Posts

திருப்புகழ் -1


உங்கள் கவனத்திற்கு: எழுத்தாளர் பற்றிய என் அறிமுக உரை தனிப்பதிவாக வெளியாகி உள்ளது. பார்க்கவும்

முருகப்பெருமான் அருணகிரி நாதருக்கு அருள் புரிகிறார்

மகா பெரியவா சரணம்

அன்னை லோபாமுத்திரா சமேத

அகஸ்தியர் திருவடிகள் சரணம்

மகா பெரியவா திருவடி பக்த பூக்களே வணக்கம். ஏன் எல்லா பக்தர்களையும்

பூக்கள் என்று சொல்லணும்? ஏனா பக்தி மணத்தால் நாம் அவர் திருவடி அடைகிறோம்,

அதனால நாம் எல்லாம் பூக்கள்.

அப்படி ஒரு பூ 16ஆம் நூற்றண்டு காலத்தில் தன் பக்தியாலும் ஞானத்தினாலும்

என்றும் அழியா புகழ் மாலை எம் பெருமாள் முருகனுக்கு சூட்டியது.

அதுவே திருப்புகழ்.

தெய்வமுடன் கலந்து உரையாடி நம் முக்திக்கும் சுக வாழ்விற்கும் பாதை தந்த

முருகன் அருள் பெற்ற அருள் ஞானி தெய்வப்புலவர் அருணகிரிநாதர் தந்த

திருப்புகழ் காட்டுமே ஆனந்த ஜோதி.

ஆனந்த ஜோதியில் நாம் கலந்து திளைத்திட வாரம் ஒரு திருப்புகழ் பதிவு வெளியிட ஆசை படுகிறேன். என் ஆசை நிறைவேற மஹாபெரியவாளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்..

திருப்புகழ் மொத்தம் பாடல்கள் 16000. அதில் நமக்கு கிடைத்தது 1334.

இன்று மிக சிறந்த நாள். தமிழை முருகன் அகஸ்தியருக்கு தந்தார். குரு அகஸ்தியர் அதை மானுடர்களுக்கு கற்பித்தார். இன்று குரு அகஸ்தியரின் நட்சத்திரம்

ஆயில்யம். குரு வாரத்தில் குரு கணபதியை வணங்கி துவங்குகிறேன்.

நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம்

வள்ளி தெய்வானையுடன் வயலூர் முருகன்

திருப்புகழ் 1 கைத்தல நிறைகனி (வயலூர்)

......... பாடல் ......... கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி      கப்பிய கரிமுக ...... னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ      கற்பக மெனவினை ...... கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்      மற்பொரு திரள்புய ...... மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை      மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்      முற்பட எழுதிய ...... முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்      அச்சது பொடிசெய்த ...... அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்      அப்புன மதனிடை ...... இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை      அக்கண மணமருள் ...... பெருமாளே.

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி      கப்பிய கரிமுக ...... னடிபேணிக் –

பாட்டின் பொருள்

கை தல பாத்திரம் இல்லனா வாழை இலை. கணபதிக்கு அருகம் புல் தந்தாலும்

அவர் ஏற்று கொள்வர். அருணகிரிநாதரோ, அவர் மனம் குளிர நிறைய கனிகளும் அப்பம், அவல், பொரி வாரி உண்ணும் கரிமுக -யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி,

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ      கற்பக மெனவினை ...... கடிதேகும்

கற்று கொள்ளும் அடியார்கள் புத்தியில் நிற்கும் கணபதி. கற்று கொள்ளும் அடியார்கள் என்றால் தினம் அறிவு சார்ந்த நூல்கள் கற்று வந்தால் கணபதி நம் புத்தியை காப்பார். அது மட்டுமா? கேட்டதை தரும் கற்பக விருச்சமாக, நம் தீய வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை தரும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்      மற்பொரு திரள்புய ...... மதயானை

ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும் சொல்லி, கணபதி தோள்கள் மற்போர் புரிய தயாராக, மதம் பிடித்த யானைக்கு வலிமை அதிகம், கணபதி தோள் அத்தனை வலிமை பெற்றது.

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை      மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன்

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்      முற்பட எழுதிய ...... முதல்வோனே

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே, இதுவே தமிழ் மிக தொண்மையான தெய்வ மொழி என்பற்கு சான்று.

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்      அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

 (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே. கணபதி வணங்கி சென்றால் வெற்றி, இல்லை என்றால் நம் அச்சு முறிந்து விடும்.

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்      அப்புன மதனிடை ...... இபமாகி

வள்ளி மீது கொண்ட காதலாகிய அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி,

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே. 

அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே.

என்றும் உங்கள்

செந்தில்நாதன்