பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-034

மஹாபெரியவா சரணம்
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-034
பிரதி புதன் கிழமை தோறும்
N. வெங்கட்ராமன் மாமா
ஒரு ஆத்மா தன்னுடைய சந்தோஷத்தை
வெளிப்படுத்தும் விதம் எப்படி தெரியுமா
நம் கண்களின் கண்ணீர் மூலமாக
இந்த பதிவு முழுவதும்
நம் ஆத்மா அழுது கொண்டே
இருக்கும் என்பது நிதர்சனம்
காணொளியை காணுங்கள்
நாமும் வாரம்தோறும் மஹாபெரியவா பக்தர்கள் வாழ்க்கையில் பல வித அற்புதங்களை அனுபவித்து கொண்டு வருகிறோம். மஹாபெரியவா என்றுமே அற்புதங்கள் செய்ய மாட்டார். ஆனால் தன்னுடைய மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்ட நேரத்தில் அது தன்னால் நடந்து விடுகிறது. இந்தப்ரபஞ்சமே அவருக்குள் அடக்கமல்லவா.
இந்த காணொளியை பொறுத்தவரை நான் ஒன்றுதான் உங்களுக்கு சொல்ல முடியும். மஹாபெரியவாளின் மனித நேயத்தை பறை சாற்றும் நிகழ்வுகள் ஏராளம். அவைகளை கேட்கும் பொழுது என் கண்கள் கலங்கின. இந்த காணொளி சுமார் நாற்பது நிமிடத்திற்கும் மேலாக இருந்தாலும் ஒவ்வொரு வினாடியும் நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நிகழ்வுகள். சற்று கவனத்துடன் இந்த காணொளியை காணுங்கள்.
இன்னுமொரு விஷயத்தை உங்களுக்கு சொல்லவேண்டும். வெங்கட்ராமன் மாமா தன்னுடைய வெண்கல குரலில் மஹாபெரியவளை நினைத்து பார்க்கமாட்டாயா வர மாட்டாயா என்று பாடும்பொழுது மாமாவின் கண்கள் மட்டுமல்ல நம் கண்களும் கலங்கி விடும். அந்த குரல் நம் மனதையெல்லாம் சுண்டி இழுக்கும் காந்த சக்தி பெற்றது. நான் ரசித்த மூன்று இடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எஞ்சிய தருணங்களை நீங்கள் காணொளியில் கண்டு மகிழுங்கள்.
மஹாபெரியவாளின் மனித நேய பண்புக்கு மேலும் ஒரு சிகரம் இந்த நிகழ்வு:
உங்களுக்கெல்லாம் தெரியும் காஞ்சி ஸ்ரீ மடத்தில் யாரும் நவீன பானமான காபி டீ அருந்த கூடாது என்பது. ஒரு முறை மஹாபெரியவா ஆனந்த தாண்டவ புரத்தில் முகாமிட்டிருந்தார். அப்பொழுது மஹாபெரியவா தன்னுடைய காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு பத்து மணி சுமாருக்கு சந்திர மௌலீஸ்வரர் பூஜைக்கு வந்து விட்டார். (ஆனந்த தாண்டவ புரம் மாயவரம் அருகில் உள்ள சிறிய கிராமம்)
அப்பொழுது மடத்து கைங்கர்ய மனுஷாள் எல்லோரும் காபி குடித்து கொண்டிருந்தனர். மஹாபெரியவா இதை பார்த்தும் பார்க்காமலும் பூஜைக்கு சென்று விட்டார். காபி குடித்தவர்களுக்கு எல்லோர்க்கும் ஒரே பயம். மஹாபெரியவா கூப்பிட்டு கேட்டால் என்னசெய்வது என்று.
இதற்கிடையில் மஹாபெரியவா பூஜையை முடித்து விட்டு மடத்து மேனஜரையும் கைங்கர்ய மனுஷாளையும் கணக்கு புத்தகத்தை எடுத்து கொண்டு வருமாறு வெங்கட்ராமன் மாமாவிடம் சொல்லி அனுப்பினார்.
கணக்கு நோட்டும் வந்தது. கைங்கர்ய மனுஷாளும் வந்தனர்,. எல்லோரும் மஹாபெரியவா முன் வந்து நின்றனர். சிறிது அமைதிக்கு பிறகு மஹாபெரியவா சொன்னார்.
"இந்த கணக்கு புத்தகத்தில் எழுதிய கணக்குகள் எல்லாம் உங்கள் மனசாட்சி படி உண்மைதான் என்று சொல்லி விழுந்து இந்தக்கணக்கு புஸ்தகத்தை நமஸ்கரியுங்கள் என்று சொன்னார்.
எல்லோரும் நமஸ்கரித்தார்கள். நான்கு பேரை தவிர. அந்தநான்கு பேரிடமும் மஹாபெரியவா விவரம் கேட்டவுடன் அவர்கள் காப்பி கொட்டை வாங்கி விட்டு மாட்டுக்கு பருத்தி கொட்டை வாங்கியதாக கணக்கு எழுதி விட்டதாக சொன்னார்கள். மஹாபெரியவா எல்லோரையும் போக சொல்லிவிட்டார்.
எல்லோரும் பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தனர். நாம் எல்லோரும் என்ன எதிர்பார்த்திருப்போம்.அவர்களுக்கு என்ன விதத்தில் தண்டனை வரப்போகிறதோ என்று தானே. மஹாபெரியவாளின் அணுகுமுறையை கொஞ்சம் பாருங்கள்.
மஹாபெரியவா மடத்து மேனேஜரை அழைத்தார். நான் செய்யும் மூன்று கால பூஜையினால் தான் இவர்கள் காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறார்கள். ஒரு மனிதன் எத்தனை நேரம் சாப்பிடாமல் பட்டினி கிடைக்க முடியும். நான் செய்யும் தாமதத்தால் அவர்கள் தவறு செய்கிறார்கள்.
அவர்கள் தவறுக்கு நான் காரணமாயிருப்பதா. நிச்சயம் இருக்கக்கூடாது.என்று சொல்லிவிட்டு மடத்து மேனேஜரிடம் நாளையில் இருந்து முதல் கால பூஜையை சீக்கிரமே முடித்து இவர்கள் எல்லாம் நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.
நான் சன்யாசி நான் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடுவேன்.அவர்களை பட்டினி போடா நான் யாரு என்று சொன்னாராம்.இதை கேட்ட கைங்கர்ய மனுஷாள் கண்ணில் கண்ணீர் விட்டு மனம் நெகிழ்ந்து போனார்களாம்.நாமும் தானே. இதில் என்ன சந்தேகம்.
இரண்டாவது மனித நேய நிகழ்வு:
இந்த நிகழ்வும் ஆனந்த தாண்டவ புரத்தில் தான் நடந்தது.
வழக்கமாக மஹாபெரியவா காலையில் நான்கு மணிக்கெல்லாம் தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்து தன்னுடைய அன்றைய அனுஷ்டானங்களை செய்து கொண்டிருப்பாராம். ஒரு நாள் காலை மணி ஐந்தாகியும் மஹாபெரியவா வெளியில் வரவில்லை.
அங்கு காவலுக்கு இருந்த செக்யூரிட்டி ஒருவர் பெரியவா அறை கதவை மெதுவாக உள்புறமாக தள்ளினாராம். கதவு உள்ளே சென்றது. ஆனால் உள்ளே மஹாபெரியவாளை காணோம். இந்த விஷயம் மடத்து கைங்கர்ய மனுஷாளுக்கு எல்லாம் தெரிந்து விட்டது. எல்லோரும் வெங்கட்ராமன் மாமா வீட்டிற்கு விரைந்தனர். அங்கும் மஹாபெரியவாளை காணவில்லை.
பிறகு யாரோ ஒருவர் வந்து ஆனந்த தாடண்டவ புரத்தில் இருந்து இரண்டு கிலோமிட்டர் தூரத்தில் உள்ள ஒரு குளத்தில் மஹாபெரியவா குளித்து கொண்டிருப்பதை பார்த்ததாக சொன்னார். உடனே எல்லோரும் நெஞ்சு இறைக்க இறைக்க அந்த குளத்தை நோக்கி ஓடினார்கள்.
அங்கு மஹாபெரியவா குளித்துக்கொண்டிருந்தார்கள்.யாரிடமும் எதுவும் பேசவில்லை. அவர்கள் கொடுத்த மாற்று துணியை கூட வாங்க வில்லை. ஈரத்துடன் அங்கிருந்து கிளம்பி தன்னுடைய முகாமிற்கு கிளம்பினார்.
இத்தனை களேபரத்துக்கும் காரணம் டூட்டியில் இருந்த காலை செக்யூரிட்டி தூங்கி விட்டார். இது எல்லோருக்கும் தெரிந்து போனது. அந்த செக்யூரிட்டி ஆளும் தன்னுடைய தவறினால் தான் இன்று மஹாபெரியவாளுக்கு சிரமம் ஏற்பட்டு விட்டது என்று நினைத்து பயமும் குற்றவுணர்வும் கலந்த மனநிலையில் இருந்தார்.
அங்கு எல்லோரும் என்ன எதிர்பார்த்தார்கள் தெரியுமா. மஹாபெரியவா செக்யூரிட்டி ஆளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறார் என்றுதான். ஆனால் இந்த செக்யூரிட்டி தூங்கியதை அவருடைய பொறுப்பின்மை என்று பார்க்காமல் தன்னுடைய மனதிற்குள் தான் இதற்கு காரணமாக இருந்தால் அது மிகவும் தவறு.என்று ஆராய ஆரம்பித்தார்.
முகாமிற்கு திரும்பினார் மஹாபெரியவா. மானேஜரை அழைத்தார். செக்யூரிட்டி ஆட்களுக்கு எத்தனை மணி நேரம் டியூட்டி என்று கேட்டாராம். அதற்கு மேனஜர் சொன்னாராம்.பன்னிரண்டு மணி நேரம் பெரியவா என்று.அதற்கு மஹாபெரியவா சொன்னாராம். அவனும் மனிதன் தானே. அவன் தூங்க வேண்டாமா.
நாம் சம்பளம் தரோம் என்பதற்காக பன்னிரண்டு மணி நேரம் வேலை வாங்குவது தப்பு. நாளையிலிருந்து இந்த டூட்டியை எட்டுநேரமா மாத்திடு என்றாராம். அருகில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி கண்களில் கண்ணீர். தளும்புகின்றது. அங்கிருந்த மற்றவர்களுக்கும் இது நல்ல ஒரு மனித நேய பாடமாக இருந்தது என்றால் அது சத்தியம்.
மூன்றாவது மனித நேய நிகழ்வு:
மடத்தில் உக்ராண அறை என்று ஒன்று இருக்கும். சமையலுக்கு வேண்டிய மளிகை சாமான்களை அங்குதான் வைத்திருப்பார்கள். அந்தஅறைக்கு ஒரு ஏழை பிராமணன் காவலுக்கு இருந்தார்.
ஒரு நாள் தன்னுடைய வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு கிளம்பும் பொழுது தன்னுடைய தோளில் போட்டிருந்த துண்டில் உளுத்தம்பருப்பை இரு கைப்பிடி அளவிற்கு எடுத்து கட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றாராம்.
அந்த ஏழை பிராமணனின் துண்டு எப்படி இருக்கும். கிழிந்துதானே இருக்கும். அந்த கிழ்ந்த பகுதியில் இருக்கும் ஓட்டை வழியாக உளுத்தம்பருப்பு செல்லும் வழியெல்லாம் கொட்டிக்கொண்டே சென்றது.
இதைப்பார்த்த கைங்கர்ய மனுஷாளில் ஒருவர் மஹாபெரியவாளிடம் சென்று இந்த நிகழ்ச்சியை சொன்னாராம்.மஹாபெரியவா சிறிது நேரம் சிந்தித்து விட்டு வெங்கட்ராமன் மாமாவை அழைத்து "நீ மேனேஜரிடம் ஒரு பாத்திரத்தில் அறை வீசை தேங்காய் எண்ணெய் வாங்கிக்கொண்டு உளுத்தம்பருப்பு எடுத்துண்டு போன மாமா ஆத்துக்கு போய் பெரியவா இதை உங்களிடம் கொடுக்க சொன்னார் என்று சொல்லி கொடுத்து விட்டு வா என்றாராம்.
வெங்கட்ராமன் மாமாவும் எண்ணையை வாங்கிக்கொண்டு ஓடிப்போய் உளுத்தம்பருப்பு மாமாவிடம் பெரியவா கொடுக்க சொன்னார் என்று சொல்லி எண்ணெயயை கொடுத்து விட்டு வந்தாராம்.
எண்ணெயை வாங்கிக்கொண்ட மாமாவிற்கு ஒன்றும் புரியவில்லை.உண்மையிலேயே மஹாபெரியவாளுக்கு தான் உளுத்ததம்பருப்பை எடுத்தது தெரியாது என்று உறுதியாக நம்பினார். சரி மஹாபெரியவாளிடமே சென்று கேட்டுவிடலாம் என்று வேகமாக மஹாபெரியவாளை நோக்கி நடையை காட்டினார் மாமா.
உளுத்தம்பருப்பு மாமா மஹாபெரியவளிடம் வந்து நின்று தேங்காய் எண்ணெயை பற்றி கேட்டாராம்.மஹாபெரியவா சொன்னாராம். உனக்கு வடை சாப்பிடணும் போலெ இருக்கிறது எனக்கு தெரிந்தது. வெறும் உளுத்தம்பருப்பில் எப்படி வடை பண்ணி சாப்பிடுவாய். அதனால்தான் நானும் உனக்கு தேங்காய் எண்ணெய் கொடுத்தனுப்பினேன் என்று சொன்னாராம்.
அடுத்த வினாடி கதறிக்கொண்டே மஹாபெரியவாளின் காலில் விழுந்தாராம். பெரியவா நானோ ஏழை பிராமணன். ஆத்துலே ஆத்துகாரி வடை கேட்டாள். என்னால் ஆத்திலே வடை பண்ண முடியல. திருடபுட்டேன் பெரியவா. நான் ஒரு பாவி. எண்ணெய் தண்டிச்சுடுங்கோ பெரியவா என்று அழுது கொண்டே கெஞ்சினாராம்.
சுற்றிலும் எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள். எப்படி இருக்கும் நல்ல குடும்பத்தில் பிறந்து ஒருவர் வறுமையின் காரணமாக வயிற்று பசிக்காக திருடி விட்டு நிற்கும் ஒவ்வொரு நொடியும் உயிர் போகாதா. இதைத்தான் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதா?
நாமாக இருந்தால் என்னசெய்திருப்போம். அந்த பிராமணனை மேலும் துன்பப்படுத்தி அவருடைய சுய மரியாதையை கிழித்து எறிந்திருப்போம்.
மஹாபெரியவா நமக்கு கற்று கொடுத்த பாடம்:
நீ ஏண்டா திருடிப்புட்டேன்னு சொல்லறே. நீ திருடல்லை.. உனக்கு தேவையாய் இருந்தது. எடுத்துண்டு போனே.உனக்கு உரிமை இல்லையடா. இது சிவன் சொத்துடா இனி மேலகேட்கமே எடுக்காதே. சிவன் சொத்து குலா நசம்டா. நீ நன்னா இருடா. இனிமேல் உனக்கு ஏதாவது வேணும்னா என்கிட்டே கேளு. நான் உனக்கு தருகிறேன்.
சரி நீ போய் உன்னோட மனசில இருக்கிற குற்ற உணர்வை தூக்கி போட்டுட்டு நீயும் உன் ஆத்துகாரியும் நிறைஞ்ச மனசோட வடை பண்ணி சாப்பிடுங்கோ.க்ஷேமமா இரு என்று சொல்லி அவருடைய தவறையும் உணர வைத்தார்.
சத்தியமாக சொல்லிறேன் இந்தப்பதிவை எழுதும்பொழுது அழுது கொண்டே எழுதினேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளி மூலம் மஹாபெரியவாளின் உச்சகட்ட மனித நேயத்தை கண்டு தரிசியுங்கள்.
https://www.youtube.com/watch?v=iEZp74VlYBk
துன்பத்திலும் கஷ்டத்திலும் தான்
அழுகை வருமா
மனித நேயத்தின் உச்சத்தை பார்த்தால் கூட
நம்முடைய ஆத்மா அழும் நம்முடைய
கண்ணின் வழியாக
மனிதநேயத்தின் மறு பெயர் தான் மஹாபெரியவா
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்