குரு பூஜை அற்புதங்கள் -16 புதிய அற்புதம்-விஷ்ணுமாயா

என்னை ஆளும் மஹாபெரியவா
குரு பூஜை அற்புதங்கள் -16
புதிய அற்புதம் -விஷ்ணுமாயா
விஷ்ணுமாயா இந்த பெயருக்கு அறிமுகம் தேவையா? உங்களுக்கு எல்லாம் மனதில் நன்றாக பதிந்த பெயர் தானே. இருந்தாலும் இந்த இணைய தளத்தில் புதிய வரவுகள் நிரம்பவே. அவர்களுக்காக மீண்டும் ஒரு சிறிய அறிமுகம். மஹாபெரியவா என்னை குரு பூஜை செய்யச்சொல்லி என்னிடம் முதல் முதலாக அனுப்பிய பக்தை விஷ்ணுமாயா.
எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை பக்தர்கள் இருக்கும் பொழுது ஏன் விஷ்ணுமாயாவை தேர்ந்தெடுத்து மஹாபெரியவா என்னிடம் ஏன் அனுப்பவேண்டும் அப்பொழுது எனக்கு புரியவில்லை.
ஆனால் போகப்போக எனக்கு தெளிவாக புரிந்தது.மற்றவர்களுக்கு உதவி தேவை என்றால் யாரும் விஷ்ணு மாயாவிடம் போய் உதவி கேட்க தேவையில்லை. நம்முடைய தேவையை அறிந்து தன்னுடைய தேவையையும் சௌகரியங்களையும் குறைத்து கொண்டு சக ஆத்மாவிற்கு உதவும் மனம் கொண்டவர்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் நம்முடைய இணையதளத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில் இருந்து எனக்கு ஊக்கத்தையும் உழைப்பையும் கொடுத்து மஹாபெரியவா கட்டிய இந்தஇறை சாம்ராஜ்யத்தில் ஒவ்வொரு செங்களுக்கும் நடுவில் தன்னுடைய உழைப்பை சிமெண்டாக வைத்து கட்டிடத்தை மேலே எழுப்பினார். பின்னர் சங்கரன் என்னும் ரகவானுடன் இணைந்து மேலும் மெருகூட்டினார்.
நான் ஆரம்பத்தில் இருந்து விஷ்ணு மாயாவிற்காக செய்யும் அத்தனை பிரார்தனைகளுக்கும் இன்று வரை மஹாபெரியவா அனுக்கிரஹம் செய்து கொண்டிருக்கிறார். இப்படி பட்ட மஹாபெரியவா பக்தை விஷ்ணுமாயாவிற்கு ஒரு தன்னுடைய குழந்தையின் மூலம் ஒரு சோதனை வந்தது.
சென்ற வாரத்தில் ஒரு நாள். விஷ்ணுமாயாவின் இரண்டு வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. விஷ்ணுமாயா தன்னுடைய சகோதரியுடன் வெளியில் சென்றிருந்தாள். விஷ்ணுமாயாவின் அம்மா வீட்டில் குழந்தையை பார்த்துக்கொண்டிருந்தார்.
அன்று மாலை சுமார் ஏழு மணி முப்பது நிமிடம். என் கைபேசி என்னை அழைத்து.அழைத்தவர் விஷ்ணுமாயா. விஷ்ணுமாயா என்னிடம் பேசுவதற்குமுன் குரல் உடைந்து மாமா என்று சொல்லி மேலே பேச முடியமால் உச்ச ஸ்தாயியில் அழுதாள்.
நான் சொன்னேன் விஷ்ணுமாயா அழுகையை நிறுத்தி விட்டு என்ன விஷயம் என்று சொல் என்றேன். அவளும் அழுகையை கொஞ்சம் கட்டுப்படுத்தி கொண்டு
"மாமா என்னுடைய குழந்தைக்கு பிட்ஸ் வந்து விட்டது . டாக்டர் அவருடைய அறையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார். மாமா என்னுடைய குழந்தை எனக்கு உயிருடன் வேண்டும் மாமா. நீங்கள் கொஞ்சம் மஹாபெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணுங்கோ மாமா என்றாள்.
நானும் விஷ்ணுமாவை தைரியமாக இருக்கும்படி சொல்லி விட்டு மஹாபெரியவா முன் நின்று பின் வருமாறு சொல்லி பிராத்தனை செய்தேன்.
"பெரியவா. விஷ்ணுமாயாவின் கஷ்டங்கள் உங்களுக்கு தெரியும். விஷ்ணுமாயாவிற்கு இப்பொழுது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் யாருக்காக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ அந்தக்குழந்தைக்கு சற்று நேரத்திற்கு முன் வலிப்பு வந்த விட்டது. கொஞ்சம் அந்த குழந்தையை காப்பாற்றி உயிருடன் விஷ்ணுமாயாவின் கையில் கொடுங்கள் பெரியவா என்றேன்.
சிலநொடிகள் மௌனத்திற்கு பிறகு மஹாபெரியவா என்னிடம் சொன்னார் "கவலை படாதே குழந்தைக்கு ஒன்னும் ஆகாது. நான் இப்பவே குழந்தையை போய் பார்க்கிறேன். நீ கொஞ்சம் என்னுடைய விபூதியை வாயில் போட்டுண்டு தண்ணி குடி. எல்லாம் சரியாகி விடும் என்றார்.
நானும் உடனே விபூதியை வாயில் போட்டுகொண்டு தண்ணீர் குடித்தேன். நான் விஷ்ணு மாயாவை அழைத்து பிரார்த்தனை விவரத்தை சொல்லி விட்டு குழந்தை கண் விழித்த பின் எனக்கு தெரியப்படுத்துமாறு சொன்னேன்.அவளும் சரியென்றாள். விஷ்ணுமாயாவிடம் இருந்து எனக்கு அடுத்த தொலை பேசி அழைப்பு வரும் வரை மஹாபெரியவாளை தியானித்து கொண்டு இருந்தேன்.
ஒரு மணி நேரம் கழித்து விஷ்ணுமாயா என்னை அழைத்தாள். நானும் குரல் கொடுத்தேன். விஷ்ணுமாயா பேசுவதற்கு பதிலாக ஓவென அழுதாள். எனக்கு ஒன்றும் புரியாமல் அதிர்ந்து போனேன். நான் விஷ்ணுமாயாவிடம் சொன்னனேன் மஹாபெரியவா உன்னையும் என்னையும் ஏமாற்ற மாட்டர். கொஞ்சம் விவரமாக சொல் என்றேன்.
விஷ்ணுமாயா பின்வருமாறு சொன்னாள். மாமா குழந்தை கண் விழித்தவுடன் "உம்மாச்சி தாத்தா " அப்படின்னு சொல்லறான் மாமா. அவன் பெரியவா என்றுதான் எப்பவும் சொல்லுவான். இது எப்படி மாமா.
நான் சொன்னேன் அதுதான் மஹாபெரியவா. உனக்கும் எனக்கும் கிடைக்காத மஹாபெரியவா தரிசனம் உன் குழந்தைக்கு கிடைச்சிருக்கு.
என்னிடம் சொன்னமாதிரியே மஹாபெரியவா நேரில் வந்து உன் குழந்தையை குணமாக்கிட்டா..இதற்கு மேல் என்ன வேண்டும். இன்றும் நாம் பேசுவதை மஹாபெரியவா கேட்டுக்கொண்டு இருக்கிறார். கேட்பதோடு நில்லாமல் நமக்கு சத்தியமான பதிலையும் அளித்து கொண்டு இருக்கிறார்.
குழந்தை தன்னை மறந்து சிரித்தான். குழந்தையின் சிரிப்பை பார்த்த விஷ்ணுமாயா குழந்தையை அள்ளியெடுத்து உச்சி முகர்ந்தாள். இரவு பத்து மணிக்கு நானும் மஹாபெரியவாளுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரத்தை செய்து விட்டு என்னுடைய கண்ணீரால் மஹாபெரியவளுக்கு நன்றி சொல்லிவிட்டு அன்றைய பொழுதின் இறுதி கைங்கர்யமாக விஷ்ணுமாயாவின் குழந்தைக்கு பிரார்த்தனை செய்து விட்டு படுத்தேன்.
ஒவ்வொரு நாளும் இப்படித்தான் என் மஹாபெரியவா வாழ்க்கை. என்னால் எழுத முடிந்தவற்றை எழுதி உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இதற்கு பிறகும் மஹாபெரியவா பக்தர்களே இது எப்படி சாத்தியம்.என்று கேள்வி எழுப்புகின்றனர். எனக்கு என்ன தெரியும். நீங்கள் மஹாபெரியவாளையே கேட்டுக்கொள்ளுங்கள். பிரார்த்தனை செய்த நானும் இருக்கிறேன் அற்புதத்தை அநுபவித்தவரும் இருக்கிறார்.
என்னுடைய பிரார்த்தனை மஹாபெரியவாளிடம் இதுதான்.
உலகத்திற்கு புரிய வையுங்கள் பெரியவா. என் பிரார்த்தனைக்கு நீங்கள் பதில் அளிக்கிறீர்கள் என்று.
சங்கரா சரணம்
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்