Featured Posts

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-038


என்னை ஆளும் தேவா மஹாபெரியவா

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-038

பிரதி செவ்வாய் கிழமை தோறும்

மேன்மையும் எளிமையும்

கை கோர்க்குமா

கை கோர்க்கும் என்று சொல்வதுதான்

இந்த அற்புத சாரலின்சாரலின் வாயிலாக

நமக்கு தெரிவது

மஹாபெரியவாளின் அற்புதங்களை நாமெல்லாம் அனுதினமும் அனுபவித்து வருகிறோம். மஹாபெரியவா இறை உயரத்தை நம் கண்களால் கூட காணமுடியாது. எல்லாவற்றிலும் உயரம் . இதை ஆன்மீக மொழியில் பரத்துவம் என்பார்கள். பரத்துவம் என்றால் மிக உயர்ந்த மேன்மை பொருந்திய என்று பொருள்.

பொதுவாக மேன்மையும் எளிமையும் கைகோர்த்து போகாது. மேன்மை ஒரு சாதாரண எளியனின் உயரத்திற்கு இறங்கி வந்தால் எப்படி இருக்கும். எப்பொழுதுமே மேன்மை இறங்கி வந்தால் தான் அந்த மேன்மைக்கு ஓர் அழகு மதிப்பு.

மஹாபெரியவா ஒரு சிறுவனுக்காக தன் நிலையில் இருந்து இறங்கி வந்த ஒரு அற்புத நிகழ்வை தான் இந்தப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஒரு நாள் காஞ்சி மடமே பக்தர்களின் வரவால் நிரம்பி இருந்தது.ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் மஹாபெரியவா வந்த பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் கொடுத்து கொண்டிருந்தார்.

வழக்கமாக பக்தர்கள் மஹாபெரியவாளை தரிசனம் காண வரும்பொழுது பூ பழங்கள் அல்லது மடத்திற்கு வேண்டிய காய் கறிகள் வாங்கி வருவது வழக்கம். அன்று நிறைய பக்தர்கள் மஹாபெரியவாளுக்கு சமர்ப்பணம் செய்ய எல்லாம் வாங்கி வந்தார்கள்.

ஆனால் ஒரு சிறுவன் மட்டும் கையில் ஒரு சிறிய நோட்டு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வேகமாக மடத்திற்குள் வந்து மஹாபெரியவா இருக்குமிடத்தை தேடினான்.எல்லோரும் அந்த சிறுவனிடம் என்ன விஷயம் என்று கேட்டார்கள்.

அந்த சிறுவன் பெரிய மனுஷன் தோரணையில் ஒன்னும் இல்லை. மஹாபெரியவாளை பார்க்கணும் என்று சொன்னான். அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.இந்த சிறுவனை நோட்டுப்புத்தகமும் கையுமாக பார்த்த கைங்கர்ய மனுஷாள் சிறுவனிடம் என்ன விஷயம் என்று கேட்க சிறுவன் விவரத்தை சொல்ல ஆரம்பித்தான்.

சிறுவன் கையில் ஒரு ஆட்டோகிராப் புத்தகம் வைத்திருந்தான்.அந்த ஆட்டோகிராஃபில் மஹாபெரியவாளிடம் கையெழுத்து வாங்க வந்திருப்பதாக சொன்னான். அங்கிருந்தவர்கள் எல்லாம் ஆடிப்போய் விட்டார்கள். ஏன் தெரியுமா மஹாபெரியவா ஒரு சன்யாசி.

அவருக்கென்று பெயர்கூட கிடையாது. மடத்து பாரம்பரிய பெயரான சங்கராச்சாரியார் என்ற பெயர் மட்டுமே அவருக்கு சொந்தம். பணத்தை கையால் தொட மாட்டார். கையில் இருக்கும் தண்டமும் அடுத்தவேளைக்கு உள்ள கஷாயம் போட்ட வஸ்திரமும் மட்டுமே அவருக்கு சொந்தம்.

ஒரு மடாதிபதியாக மடத்தின் வரவு செலவு கணக்குகளை தினந்தோறும் பார்த்து விட்டு இரவு படுக்க போகும் முன் காயத்ரி சொல்லி அந்த பாவங்களையும் தொலைத்து விட்டு கையை தலைக்கு வைத்து தரையில் தூங்கி விடுவார்.. தனக்கென்று எதுவும் கிடையாது, இத்தனை ஏன். தன்னுடைய பெற்றோர்களை கூட துறந்து விட்டுத்தான் சன்யாசம் ஏற்றுக்கொண்டார்.

மடத்து கைங்கர்ய மனுஷாள் சிறுவனிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள்.மஹாபெரியவா கையெழுத்து எல்லாம் போடமாட்டார். அவரிடம் ஆட்டோகிராப் கேட்பது பெரிய பாவம். உடனே இங்கிருந்து போய் விடு. என்று அறிவுரை சொன்னார்கள்.

இந்த வாக்குவாதத்தை பார்த்துக்கொண்டிருந்த பெரியவா அந்த சிறுவனை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டார். அந்த சிறுவன் மஹாபெரியவாளிடம் தனக்கு ஆட்டோகிராப் வேணும் என்று கேட்டான்.

அங்கு எல்லோரும் எதிர்பார்த்தது மஹாபெரியவா அந்தசிறுவனை கோபித்துக்கொண்டு கண்டிப்பார் என்று நினைத்தார்கள். ஆனால் அங்கு நடந்ததே வேறு.. எப்பவும் நாம் ஒன்று நினைப்போம் தெய்வம் ஒன்று நினைக்கும். அப்படிதான் தெய்வம் அன்றும் நினைத்தது. மஹாபெரியவா அந்த சிறுவனை அழைத்து பக்கத்தில் உட்காரவைத்து கொண்டு பேச ஆரம்பித்தார்.

மஹாபெரியவா அந்த சிறுவனிடம் தான் ஏன் ஆட்டோகிராப் போடக்கூடாது என்று விளக்க ஆரம்பித்தார். சிறுவனும் தனக்கு புரிந்தது போல் தலையை ஆட்டினான். மஹாபெரியவா என்ன நினைத்தார் என்று தெரியுமா. அந்த சிறுவனுக்கு இந்த சன்யாச இலக்கணம் எல்லாம் தெரிந்திருந்தால் தன்னிடம் ஆட்டோகிராப் கேட்டிருப்பானா. தெரியாததால் தான் ஆட்டோகிரா கேட்டிருக்கிறான்.

அந்த சிறுவன் திருப்தி அடையும் வகையியல் அவனுக்கு தன்னுடைய இயலாமைக்கு உண்டான காரணத்தை சொல்லிக்கொடுத்து விட்டு இருந்தாலும் உனக்கு கையெழுத்து தானே வேணும் கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டு மடத்து மேனேஜரை அழைத்தார்.

அவரிடம் "நாராயண ஸ்மிருதி" என்னும் ரப்பர் ஸ்டம்பை எடுத்து வர சொன்னார். கொண்டு வந்த மேனேஜரிடம் அந்த ரப்பர் ஸ்டம்பை அந்த சிறுவனின் ஆட்டோகிராப் நோட்டு புத்தகத்தில் வைக்கச்சொன்னார். அந்த சிறுவனும் மிகவும் மகிழ்ச்சியோடு அதை பெற்றுக்கொண்டு .நமஸ்கரித்தான். தான் கிளம்புவதற்கு உத்தரவு கேட்டான்.

மஹாபெரியவா அந்தசிறுவனிடம் இப்போது கேட்டார். எனக்கு நீ ஆட்டோகிராப் போடு தருவாயா என்று. அங்கிருந்தவர்கள் எல்லோருமே அதிர்ச்சி அடைந்தனர். மஹாபெரியவாளே காரணத்தையும் சொன்னார்.

இந்தசிறுவன் மூலமாக தான் நான் கையெழுத்து போடமாட்டேன் என்ற உண்மையை இன்று என்னால் உலகத்திற்கு சொல்லமுடிந்தது. அதனால் இந்தசிறுவன் எனக்கு ஆட்டோகிராப் போடு தர வேண்டும் என்று சொல்லிவிட்டு அந்தசிறுவனை பார்த்து சிரித்தார்.

மடத்து மேனேஜரும் ஒரு மடத்து நோட்டு புத்தகத்தை எடுத்து வந்து அந்த சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கினார். அந்தசிறுவனின் மனநிலையை சற்று யோசித்து பாருங்கள். மானுட சிறுவன் ஒருவனிடம் அந்த பரமேஸ்வரன் ஆட்டோகிராப் கேட்க. அந்தசிறுவனும் தன்னுடைய கையெழுத்தை போட்டு கொடுக்க என்ன திருவுளயாடல் இது.

விண்ணுலக இறைவன்

மண்ணுலக ஜீவனுடன்

விளையாடிய திரு விளையாடலை

இன்று நினைத்தாலும்

கண்களில் ஆனந்த கண்ணீர்

உங்களுக்கு எப்படி

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்