Featured Posts

பெரியவா பார்வையில்-001 – இந்த புதிய தொடரின்  முதல் பதிவு


என் உயிர் காக்கும் மஹாபெரியவா

முழுமுதல் கடவுள் பிள்ளையார்

பெரியவா பார்வையில்-001 –

இந்த புதிய தொடரின் முதல் பதிவு

பிள்ளையார்

நம் வாழ்வில் எந்த ஒரு முயற்சிக்கும் முதலில் நாம் வணங்குவது விநாயகரைத்தான். இந்த பிரபஞ்சத்தின் முதல் எழுத்து ஓம் என்னும் பிரணவம் தானே. தும்பிக்கையுடன் விநாயகரை பாருங்கள். அது ஓம் என்ற எழுத்தை ஒத்திருக்கும். நம்முடைய இந்த "பெரியவா பார்வையில்" முயற்சி வெற்றி அடைய முழுமுதல் கடவுளான விநாயகரை நமஸ்கரித்து இந்த தொடரை துவங்குகிறேன்.

இந்த முதல் பதிவும் பெரியவா பார்வையில் பிள்ளையார் பற்றித்தான். வாருங்கள் இனி பதிவுக்குள் செல்வோம்.

பிள்ளையார் என்று சொல்லும்பொழுதே நம் மனக்கண் முன்னே அந்த பருத்த உருவம் வந்து செல்லும்.மாற்று மதத்தினர் கூட அந்த தோற்றத்தை ரசித்து பார்ப்பார்கள்.மற்ற கடவுள்களை கோவிலில் மட்டுமே தரிசிக்க முடியும்.

ஆனால் பிள்ளையாரை எங்கும் தரிசிக்கலாம்.மரத்தடி வாய்க்கால் கரை தெரு முனைகள் இன்னும் எத்தனையோ சாதாரண இடங்களிலும் தரிசிக்கலாம். அவ்வளவு எளிமையானவர் பிள்ளையார்.

ஆகம சாஸ்திரங்களுக்கு அப்பாற்பட்டவர். விநாயகர் அணுகுவதற்கு மிக எளிமையானவர். பிள்ளையார் பார்க்கத்தான் கனமானவராக காட்சி அளிப்பார். அவர் முஞ்சூரின் மேல் உட்காரும் பொழுது அவர் லேசாகி விடுவார். அதே போல் நம் மனம் கனத்து இருக்கும் பொழுது நம் மனதில் பிள்ளையாரை வைத்து விட்டால் நம் மனமும் லேசாகி விடுகிறது.

எந்த ஒரு காரியத்தையும் பிள்ளையாரை நினைத்து வேண்டி ஆரம்பித்தால் அந்த காரியம் நிச்சயம் கைகூடும் என்பது நம்முடைய அனுபவ உண்மை. இதற்கு நம் புராணத்தில் இருந்தே ஒரு உதாரணத்தை சொல்லலாம்.

ஒரு முறை சிவபெருமான் திரிபுரங்களை எரிக்க தன்னுடைய ரதத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார். ஆனால் வழியில் தேரின் அச்சு முறிந்து மேலே பயணிக்க முடியாமல் போனது.

பிறகுதான் சிவபெருமான் தன்னுடைய தவறை உணர்ந்தார். என்னதான் பிள்ளையார் தன்னுடைய மகனாக இருந்தாலும் அவரை துதித்துவிட்டு கிளம்பி இருந்தால் ஒரு இடைஞ்சலும் இருந்திருக்காது என்று. பிறகு விநாயகரை வணங்கினார். சிவபெருமானுடைய ரதம் கிளம்பியது. தந்தைக்கே இப்படி என்றல் நாமெல்லாம் எம்மாத்திரம்.

இப்பொழுது மஹாபெரியவா பார்வையில் பிள்ளையார்:

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு கையில் தீர்வை வைத்துக்கொண்டு தீர்வை வானத்தில் தேடுகிறோம்.ஆனால் மஹாபெரியவா என்னசொல்கிறார் தெரியுமா. எந்த காரியத்தை ஆரம்பிக்கும் பொழுது பிள்ளையாரை நினைத்து ஆரம்பித்தால் அந்த காரியம் கைகூடுவது சத்தியம் என்கிறார்.

அதுமட்டுமல்ல விநாயகருக்கு என்று பதினாறு பெயர்கள் உள்ளன. அந்த பதினாறு பெயர்களை கண்களை மூடி தியானம் செய்து விட்டு ஒரு காரியத்தை தொடங்கினால் அந்த காரியத்தில் வெற்றி உறுதி என்பது பெரியவாளின் வாக்கு.

அந்த பதினாறு பெயர்களை கீழே கொடுக்கிறேன். இந்த பெயர்களை மஹாபெரியவாளே உங்களுக்கு உபதேசம் செய்ததாக நீங்கள் உறுதியாக வைத்து கொள்ளலாம்,ஏன் தெரியுமா. இந்த புதிய தொடரை ஆரம்பிக்க சொன்னது பெரியவா.

உங்களுக்கெல்லாம் தெரியும். என்னுடைய சக்தியையும் தாண்டி ஒரு விரலில் இத்தனை பதிவுகள் என்றால் அது மஹாபெரியவாளின் அற்புதம் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. என் ஒரு விரல் பிரசவிக்கும் அத்தனை வார்த்தைகளும் மஹாபெரியவாளின் குழந்தைகள்.

சில வார்த்தைகள் என்னுடைய மொழி மாற்றியில் சரியாக வரவில்லை. ஆகவே அந்த வார்த்தைகளுக்கு மட்டும் ஆங்கிலத்தில் அந்த வார்த்தைகளுக்கு பக்கத்திலேயே கொடுத்துள்ளேன்.

இந்த பதினாறு பெயர்களை ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ங்கள்.எந்த ஒரு காரியத்தை துவங்கும் முன் இந்தப்பதினாறு பெயர்களை மனசுக்குள் தியானம் செய்துவிட்டு துவங்குங்கள் வெற்றி உங்களுக்கே. இது சத்தியம்.

உங்கள் அனுபவங்களை இந்த இணைய தளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.மற்றவர்களுக்கும் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.எப்படி இந்து தர்மத்திற்கு வேதம் ப்ரமாணமோ அதுபோல இறை நம்பிக்கைக்கும் பிரார்த்தனைகளுக்கும் மஹாபெரியவா பிரமாணம். நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யுங்கள். வெற்றி உங்களுக்கே.

நீங்கள் த்யானம் செய்ய வேண்டிய பிள்ளையாரின் பதினாறு பெயர்கள்.

 1. சுமுகர்

 2. ஏகதந்தர்

 3. கபிலர்

 4. கஜகர்ணகர்

 5. லம்போதரர்

 6. விகடர்

 7. விக்னராஜர்( vignarajar )

 8. விநாயகர்

 9. தூமகேது

 10. கணாத்யக்ஷர்

 11. பாலச்சந்தரர்

 12. கஜானனர்

 13. வக்ரதுண்டர்

 14. சூர்பகர்ணர்

 15. ஹேரம்பர்

 16. ஸ்கந்த பூர்வஜர்

மேற்கூறிய நாமத்தை ஜெபிப்போம். வாழ்க்கையை எதிர்கொண்டு பிரச்சனைகளை வெல்லுவோம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்