Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா - 040


நீங்கள் இருக்கிறீர்கள் பெரியவா

அதனால்தான் நானும் இன்று இருக்கிறேன்

என் வாழ்வில் மஹாபெரியவா -040

பிரதி வியாழக்கிழமை தோறும்

பிறவி ஒன்று

ஆனால் ஜென்மங்கள் பல

என் வாழ்க்கையைத்தான் சொல்கிறேன்

இந்த பதிவை எழுதும் நாள்

புதன் கிழமை 10/01/2018 நேரம்: காலை மணி 9.00

இந்த பதிவு என்னுடைய மறு ஜென்மத்தின் பதிவா இல்லை இந்த ஜென்மத்தின் தொடர்ச்சியா எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. நான் இன்று காலை மஹாபெரியவளால் காப்பற்றப்பட்டு உங்களுடன் இந்த நொடியில் உயிருடன் இருக்கிறேன்.

ஏற்கனவே மஹாபெரியவா என்னை இமயத்தில் எமன் கையிலிருந்து பிடுங்கி மிகப்பெரிய மருத்துவ மனையில் மூன்று நாளைக்கு அவசர சிகிச்சை பிரிவில் வெறும் ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்த்து என்னை விமானத்தில் சென்னை கொண்டு வந்தது உங்களுக்கெல்லாம் தெரியும்..

அன்றிலிருந்து இன்று வரை என்னுடைய சுய கௌரவம் சுய மரியாதை சமூக அந்தஸ்து தேக ஆரோக்கியம் எல்லாவற்றையும் கொடுத்து கொண்டிருக்கிறார்.. தரையில் தவழ்ந்து கொண்டிருந்த எனக்கு இனிமேல் நடக்க வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் கை விட்ட நிலையில் எனக்கு உங்கள் அற்புத சக்தியால் என்னை இன்று நடக்க வைத்திருக்கிறீர்கள்.. மருத்துவர்களே ஆச்சரியமும் அதிசயமும் கொள்கிறார்கள். இது என்ன விந்தை என்று.

இது மட்டுமா எனக்கு வாயில் இருந்த புற்று நோயை மருத்துவர்களாலும் மருத்துவ பரிசோதனைகளாலும் உறுதிப்படுத்தப்பட்ட புற்று நோயை ஒன்றுமே இல்லாமல் செய்தார்..

நேற்று இரவு வழக்கம் போல் தூங்கபோவதற்கு முன்னால் மஹாபெரியவாளிடம் சென்று அன்றைய என் நடவடிக்கைகளை சமர்ப்பித்து விட்டு வருவது வழக்கம்.இப்படி சமர்ப்பிக்கும் பொழுது என்னுடைய மனசஞ்சலம் என்னுடைய ஆத்ம சாக்க்ஷத் காரமாக தவறு செய்தேனா இல்லையா என்பதையெல்லாம் சொல்லுவேன்.

என்னுடைய தாத்தாவிடம் பேசுவது போல பேசுவேன். அன்று என்னுள் ஒரு புதிய சிந்தனை. மஹாபெரியவா என்னை அழைத்துக்கொண்டால் இந்த கலி கால விஹாரத்தில் இருந்து விடுதலை கிடைக்குமே என்று நினைத்தேன். பிறகு வந்து படுத்து விட்டேன்.

மறு நாள் வழக்கம் போல் காலை நான்கு மணிக்கு எழுந்து என்னுடைய ப்ரம்ம முகூர்த்த பிரார்த்தனைக்கு தயாரானேன். ஆனால் என்னவோ தெரியவில்லை எனக்குள் ஒரு சஞ்சலம். என் மனசு ஒரு புதிய அனுபவத்திற்கு தயாராவது போலெ ஒரு உணர்வு. எனக்கு சொல்ல தெரியவில்லை. ஆனால் பெரியவா பெரியவா என்று என் மனசு சொல்லிக்கொண்டே இருக்கிறது.காரணம் தெரியவில்லை.

பிரார்த்தனைகள் முடிந்து நான் சமைக்க ஆம்பித்தேன். எங்கள் வீட்டு காஸ் அடுப்பில் ஒரு அடுப்பில் ரசத்திற்கு தக்காளி பழங்களையும் ரசப்பொடியும் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்து அடுப்பை பற்ற வைத்தேன்.. மஹாபெரியவா என்னை புளி சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஆகவே புளி இல்லாமல் ரசம் கொதித்து கொண்டிருந்தது.

இன்னொரு அடுப்பில் மஹாபெரியவாளுக்கு நைவேத்தியம் செய்ய அரிசியும் பருப்பும் ஒரு குக்கரில் வைத்து அடுப்பை ஏற்றி எரியும் தீ ஜவாலையை சிறியதாக்கி வைத்து விட்டு நான் என்னுடைய மற்ற அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தேன். இங்கு கவனத்தில் கொள்ளுங்கள்.

இன்னொரு அடுப்பில் ரசம் கொதித்து கொண்டிருக்கிறது. நான் மற்ற வேலைகளை கவனிக்க சென்று விட்டேன்..ஒரு அரை மணி நேரம் ஆகியிருக்கும். குக்கர் இன்னும் கத்தவே இல்லை.நான் சென்று பார்த்தேன். ஒரு அடுப்பில் ரசம் கொதிக்கிறது. குக்கர் இருந்த அடுப்பு எரியவில்லை. அணைந்து போயிருந்தது.

உடனே எனக்கு உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. கைகால்கள் நடுங்காரம்பித்து விட்டன.

உங்களுக்கு கரணம் புரிகிறதா? அடுப்பு எரியவில்லை. ஆனால் காஸ் சிறிய அளவிலாவது வெளியேறி கொண்டிருக்கும் அல்லவா. மற்றுமொரு அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் பொழுது இன்னொரு அடுப்பில் இருந்து சிறிய அளவில் காஸ் வெளியேறி கொண்டிருந்தாலும் காஸ் காட்டு தீயை போல் பற்றி கொள்ள எத்தனை நேரம் ஆகும்.. நொடி பொழுது போதுமல்லவா. ஒரு அடுப்பில் காஸ் வந்து எரிகிறது. மற்றொரு அடுப்பு எப்படி எரியாமல் போகும். வெளியேறிய வாயுவை அடைத்தது யார்?

எனக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றி விட்டது. காஸ் அடுப்பை அணைத்து விட்டு வந்து படுத்து விட்டேன். நான் ஒரு நிலைக்கு வந்தவுடன் மஹாபெரியவா முன் நின்று கதறி அழுதுவிட்டேன்.

அழுது கொண்டே மஹாபெரியவாளிடம் பேசினேன்.

G.R. பெரியவா என்னை இந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றியது நீங்கள்தானே என்றேன். சிறிது அமைதி நிலவியது. பிறகு மஹாபெரியவா குரல் கேட்கிறது.

பெரியவா: ஏண்டா நான்தான் உன்கூடையே இருந்து உன்னை கவனிச்சுண்டு இருக்கேன். கேள்வியே அவசியமில்லையேடா.என்றார்.

G.R மனம் உடைந்து அழுகிறேன். அழுது கொண்டே பேசுகிறேன். எத்தனை கண்டங்களில் இருந்து என்னை காப்பாற்றி இருக்கிறீர்கள். என் இடது கை சுவாதீனம் இழந்த நிலையில் வலது கை ஒரு விரலில் பதிவுகளை எழுத வைத்து உங்கள் போதனைகளை மற்றவர்களுக்கு எடுத்து செல்லும் கைங்கர்யத்தை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள்.

எனக்கு இத்தனை செய்யும் உங்களுக்கு எப்படி நான் என் நன்றியை காட்டப்போகிறேன். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னால் உங்களுக்கு நன்றி கடனை தீர்க்கவே முடியாது பெரியவா என்றேன்.

பெரியவா: நீ ஒன்னும் மனசை போட்டு அலட்டிக்காதே. இன்று மாலையில் எனக்கு முன் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து த்யானம் செய் என்றார்

G.R சரி பெரியவா என்று விடை பெற்றேன்.

இதற்கு பிறகு எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு முதியவரிடம் நடந்தவைகளை சொல்லி மஹாபெரியவா மாலையில் நெய் தீபம் ஏற்றி த்யானம் செய்ய சொன்னார் என்றேன்.

இதற்கு அந்த முதியவர் கொடுத்த விளக்கம்.

ஒரு காஸ் அடுப்பு எரிகிறது. இன்னொரு அடுப்பு எரியாமல் காஸ் வெளியேறிக்கொண்டிருக்கிறது. நிமிஷபொழுதில் பற்றி எரிந்திருக்க வேண்டுமே. நிச்சயம் உனக்கு இது மறு பிறவிதான். மஹாபெரியவா தான் உன்னை காப்பாற்றி இருக்கிறார். என்றார்

ஒருவர் இறந்து போனால் வீட்டில் இறந்தவரின் தலைமாட்டில் மோக்க்ஷ தீபம் ஏற்றுவார்கள். பிறகு பதிமூன்றாம் நாள் நெய் தீபம் ஏற்றுவார்கள். நீ இறந்து பதிமூன்றாம் நாள் ஏற்ற வேண்டிய நெய் தீபத்தை மஹாபெரியவா இன்று உன்னை ஏற்ற சொல்கிறார். உனக்கு ஒரு ஜென்மா முடிந்து இது அடுத்தஜென்மம். அடுத்தது மஹாபெரியவா என்னசெய்யப்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

நானும் அந்த முதியவருக்கு நன்றி சொல்லிவிட்டு நான் என் வீட்டிற்கு வந்து விட்டேன்.மாலையில் நெய் தீபம் ஏற்றி என்னுடைய மறுபிறப்பை நினைத்து வாழ்க்கையை ஆரம்பித்தேன். .

பிறவி எத்தனையானாலும்

எந்த பிறவியிலும்

மஹாபெரியவா நினைவு

என்னை விட்டு அகலக்கூடாது

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்