Featured Posts

இந்து மதம் ஒரு வாழும் முறை -006 இந்து மதமும் ஜோதிடசாஸ்திரமும் மஹாபெரியவாளின் சிந்தனை


இந்து மதம் ஒரு வாழும் முறை -006

இந்து மதமும் ஜோதிடசாஸ்திரமும்

மஹாபெரியவாளின் சிந்தனை

நவக்கிரஹ கோள்கள்

நம் வாழ்க்கை

நம் கையிலா இல்லை

நம் கர்மாக்கள் கையிலா

வாருங்கள்

மஹாபெரியவா என்ன செல்கிறார்

என்று கேட்போம்.

வானியல் சாஸ்திரங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அறிவியல் என்றால் என்னவென்று தெரியாத காலத்தில் கிரஹங்களின் சஞ்சாரம் அவைகளின் தூரம் அவைகள் சூரியனை சுற்றி வர எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை எல்லாம் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். அவைகளை இன்று அறிவியல் வல்லுநர்கள் ஆராய்ந்து ஆமாம் உண்மைதான் என்று சொல்லுகிறார்கள.

மஹாபெரியவா சொல்லுகிறார்.நம்முடைய மூதாதையர்கள் அன்றே கிரஹங்களின் நிறங்கள் அவைகளின் குணாதிசயம் என்று எல்லாவற்றையும் பதிவு செய்து விட்டு போயிருக்கிறார்கள்.. மஹாபெரியவா மேலும் சொல்லுகிறார். ஜோதிடம் என்பது நமது வேதத்தில் ஒரு பகுதி என்று.தன்னுடைய பார்வையில் பல விதமான ஜோதிட கேள்விகளுக்கு சரியான பதிலை கொடுத்திருக்கிறார்.. அவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதல் கேள்விக்கு மஹாபெரியவா பதிலை பார்ப்போம்.

கேள்வி: மனிதனுடைய சுக துக்கங்களுக்கு அவனுடைய கர்மாக்கள் தான் காரணம் என்றால் அவன் ஏன் உழைக்க வேண்டும் . கையை கட்டிக்கொண்டு பேசாமல் இருக்கலாம் அல்லவா?

மஹாபெரியவாளின் பதில்: பெரியவா ஒரு உண்மை நிகழ்வின் மூலம் விளக்குகிறார். கேளுங்கள்... அந்த காலத்தில் ஜோதிடத்தில் சிறந்து விளங்கிய மனிதர்களுள் பாஸ்கராச்சாரியாரும் ஒருவர். .

ஜோதிடத்தில் சக்கரவர்த்தி என்று பெயரும் பெற்றவர். இவர் ஒரு ஜாதகத்தை கணித்தால் அது சத்தியம்.. மாறிப்போக வாய்ப்பே இல்லை.அப்படியோரு ஜோதிட சாஸ்திரத்தை கரைத்து குடித்தவர். இறைவனும் இவருக்கு எப்பொழுதுமே பக்க துணையாக இருப்பார். அப்படியொரு ஒழுக்க சீலர்.

இந்த பாஸ்கர சரியாரிடம் ஒரு நாள் காலை ஒரு வாலிபன் தன்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வருகிறான். தனக்கு எப்பொழுது திருமணம் ஆகும் என்று கேட்கிறான்.

பாஸ்கரா சரியாரும் வாலிபனின் ஜாதகத்தின் பலன்களை கணிக்க ஆரம்பிக்கிறார். அந்தசமயத்தில் ஜோதிடருடைய கணிப்பில் ஒன்றை கண்டு பிடிக்கிறார். அந்தவாலிபனுக்கு அன்றுதான் இறுதி நாள். அவனுக்கு அவனுடைய ஆயுள் முடியும் நேரம் வந்து விட்டது.

ஆனால் இந்த செய்தியை அந்த வாலிபனிடம் எப்படி சொல்வது. ஜோதிடர் ஒரு இறுதியான முடிவை எடுக்கிறார். அந்த வாலிபனிடம் எதுவும் சொல்லாமல் இன்று நாள் சரியில்லை. ஆகவே நாளை காலை நீங்கள் வந்தால் நான் உங்க திருமண நாளை குறித்து கொடுக்கிறேன் என்று சொன்னார்.. இந்த விஷயத்தை வாலிபனிடமும் சொல்லிவிட்டார். வாலிபனும் சரி நாளை வருகிறேன் என்று சொல்லி கிளம்பி விட்டார்.

ஜோதிடர் என்ன நினைத்தார் தெரியுமா?

வாலிபர் நிச்சயம் மறுநாள் வர முடியாது., அவன் ஆயுள் முடிந்த செய்தியை யாரோ ஒருவர் தன்னிடம் செய்தியாக வந்து சொல்லுவார் என்று எதிர்பார்த்தார்.. தன்னுடைய ஜோதிட கணிப்பில் இது வரை பொய்யானது கிடையாது.அப்படி ஒரு நம்பிக்கை.

மறு நாள் பொழுது நன்றாகவே விடிந்தது. ஜோதிடர் வாலிபனின் மரணச்செய்தியை எதிர்பார்த்தார். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? அந்த வாலிபனே ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரை பார்க்க வந்து விட்டான்..ஜோதிடருக்கு ஒரே அதிர்ச்சி. தன்னால் தன கண்களை நம்பவே முடியவில்லை..

ஆனால் தன்னுடைய அதிர்ச்சியை வெளி காட்டிக்கொள்ளாமல் வாலிபனை வரவேற்று உட்கார வைத்து மறுபடியும் அந்த ஜாதகத்தை பார்க்க ஆரம்பிக்கிறார், ஏதேனும் தவறு நேர்ந்த விட்டதா என்று. நிச்சயம் தவறில்லை. தனுடையகணிப்பு சரியே என்பதை உணர்கின்றார்.

ஜோதிடர் ஜாதகத்தை மூடி வைத்து விட்டு அந்த வாலிபனிடம் கேட்கிறார். நேற்று இங்கிருந்து கிளம்பி எங்கே சென்றாய் என்று கேட்கிறார்.வாலிபனும் நேராக வீட்டிற்குத்தான் சென்றேன். வேறு எங்கு போக முடியும்? என்று கேட்கிறார். ஜோதிடர் அந்தவாலிபனிடம் சொல்லுகிறார் இதோ பாரப்பா.

இந்த நொடி வரை என்னுடைய ஜோதிட கணிப்பு தவறியதே இல்லை. ஆனால் உன் விஷயத்தில் தவறி விட்டது. ஜோதிட சாஸ்திரம் என்னை விட்டு போய் விட்டதா. என்னுடைய இறை அருள் குறைந்து விட்டதா.தயவு செய்து கொஞ்சம் யோசித்து சொல்லு வீட்டிற்கு போகும் முன் எங்கு சென்றாய் என்று கேட்கிறார்..

வாலிபனும் சற்று யோசித்து சொல்லுகிறான். நேற்று நான் வீட்டிற்கு திரும்பும் பொழுது பெரிய மழை பெய்தது. அப்பொழுது மழைக்காக ஒதுங்குவதற்கு ஒரு இடம் தேடியபொழுது அங்கு இருந்த சிதிலம் அடைந்த பழைய சிவன் கோவில் ஒன்று கண்ணில் பட்டது.. உடனே அந்தக்கோவிலுக்குள் நுழைந்து ஒதுங்கினேன் என்றான்.

அங்கு என்ன நடந்தது என்று கேட்டார் ஜோதிடர்... வாலிபன் பதில் சொல்லுகிறான். கொட்டிய மழையில் உள்ளே மழைநீர் ஒழுக ஆரம்பித்தது. சிவன் மேலும் மழை நீர் ஊற்றிக்கொண்டே இருந்தது.. சிவனுடைய வஸ்திரமும் கிழிந்து தொங்கிக்கொண்டு இருந்தது.

அப்பொழுது எனக்கு தோன்றியது. ஆண்டவா எனக்கு மட்டும் கொஞ்சம் ஆயுளும் கைவசம் பணமும் இருந்தால் இந்தக்கோவிலை மட்டுமல்லாது இது போல இருக்கும் இன்னும் எத்தனையோ கோவில்களை புனரமைத்து எனக்கு படியளக்கும் ஈசனுக்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும். என்று நினைத்தேன்.

பிறகு வீட்டிற்கு வந்து விட்டேன்.இன்னொரு விஷயம் மறந்து விட்டது என்று சொல்ல ஆரம்பிக்கிறான் வாலிபன்....மழை கொஞ்சம் நின்றது.. அப்பொழுது சரி கிளம்பலாம் என்று முடிவு செய்து வெளியில் வரும் ;பொழுது என்னுடைய தலைக்கு மேல் இருந்த உத்திரம் இடிந்து விழுந்ததது. நல்ல வேலை நான் அந்த இடத்தை கடக்கும் பொழுது என் தலைக்கு பின்னால் இடிந்து விழுந்தது..ஒரு நொடிபொழுது வித்யாசம். என் தலை மேல் விழுவதற்கு..

நல்ல வேளை உயிர் தப்பினேன் என்றான் அந்த வாலிபன். எல்லாவற்றையும் கேட்டஜோதிடர் மறுபடியும் வாலிபனின் ஜாதகத்தை பார்த்தார்.அப்பொழுது ஜோதிடர் ஒன்றை உணர்ந்தார்.மரணத்தை கணிக்க தெரிந்த எனக்கு அதற்குரிய பரிகாரத்தை கணிக்க தவறி விட்டேன்.

அந்த வாலிபனின் ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்து அந்த வாலிபனை அந்தக்கோவிலுக்குள் அனுப்பி அவன் இறை சிந்தனையை தூண்டி வாலிபனை மரணத்தில் இருந்து காப்பாற்றி மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கையை கொடுத்தது. அந்த ஜோதிடரும் என் கண்ணை திறந்து விட்டாய் தம்பி உனக்கு என் நன்றிகள் என்று சொல்லி விடை பெற்றார்...

இங்குதான் மஹாபெரியவா ஒன்றை சொல்லுகிறார். எல்லாம் கர்மப்படியும் ஜோதிடப்படியும் தான் நடக்கும் என்றால் நாம் கைகாட்டிக்கொண்டு எல்லாம் கர்மா என்று இருந்து விடலாமே?.

அது அப்படியல்ல. கர்மாக்களில் இரண்டுக்கு வகை கர்மாக்கள் உண்டு. . பரிகாரத்திற்கு அடங்கிய கர்மாக்கள்.பரிகாரத்திற்கு உட்படாத கர்மாக்கள். எப்பொழுதுமே நம்முடைய சிந்தனைகள் உயர்வானதாகவும் கற்பனையில் கூட இறை சிந்தனையும் இருந்தால் நாம் கர்மாக்களை வென்று விடலாம்.

நாம் கை கட்டி ஒரு வேலையும் செய்யாமல் கர்மாக்கள் மேல் பழியை போட்டுவிட்டு உட்காந்து கொண்டிருந்தால் கர்மாக்கள் படி தான் நம் வாழ்க்கை அமையும்.. மாறாக நாம் எழுந்து செயல் படும்பொழுது வானத்தில் இருக்கும் கிரகங்களும் எழுந்து செயல்பட்டு நம்முடன் ஒத்துழைக்க ஆரம்பிக்கும்.

ஜோதிடரிடம் சென்ற வாலிபன் கற்பனையில் கட்டிய கோவிலுக்கே அவ்வளவு பலன் இருந்ததென்றால் உண்மையில் நாம் அந்தமாதிரி புனிதமான செயல்களில் இறங்கினால் நம்முடைய வாழ்க்கை கர்மாவை மீறிய வாழ்க்கையாக அமையும். இது .மஹாபெரியவா நமக்கு சொல்லிவிட்டு சென்றது.

எப்பொழுது நம் வாழ்க்கையை நம்முடைய கர்மாக்கள் தான் முடிவுசெய்கின்றன என்று தெரிந்ததோ நாம் ஏன் கர்மாக்களை மேலும் மேலும் சேர்க்க வேண்டும் நம் கண் முன்னே இரண்டு விஷயங்கள் நமக்கு தெரிகின்றன.

1) ஒன்று இனி பிறப்பே வேண்டாம் என்று முடிவு செய்து இறைவனை அடையும் வழியினை தேர்ந்தெடுத்து அதன் வழி நடக்கலாம்.

2) இறைவன் பாதங்களை அடையா விட்டாலும் அடுத்த ஜென்மம் கர்மாக்கள் இல்லாத ஜென்மமாக அமையும். இல்லாவிட்டால் இந்த ஜென்மத்திலேயே கர்மாக்களை சேர்க்காமல் அடுத்தபிறப்பில் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

சிந்திப்போம் செயல் படுவோம்.

நம்முடைய துன்பங்களுக்கு நாம்தான் காரணம்

நாம் ஏன் இறைவனை சாட வேண்டும்.

நம்மிடம் ஞானம் இருக்கிறது

முடிவு நம் கையில்

சிந்தித்து செயல் படுவோம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square