Featured Posts

ஸ்ரீகுருதுதி


பெரியவா சரணம்

அழகேசன், அடியார்க்கெளியோன், ஆனந்தவரதமூர்த்தி, அன்புச்சோலை, அதிகுருவழிமுறையோன், அத்புதப் பெரியோன், இப்படி அடுக்கடுக்காக செந்தமிழிலே உள்ள எந்த வார்த்தைகளைக் கோர்த்துப் பெயரிட்டாலும் அவ்வெழுத்துக்கு அவ்வார்த்தைக்கு பெருமை சேர்க்கும்படியான ஒரு அதியத்புத மனிதவுருத் தெய்வம் நம் மஹாபெரியவா. அவருடைய பாதாரவிந்தங்களைத் தொழுது நிற்க ஓர் திருவடித் துதி போற்றியை இன்றையதினம் உங்கள் எல்லோரிடமும் பகிர்கின்ற பாக்கியம் கிட்டியதே!

சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.

#ஸ்ரீகுருதுதி திருவடி போற்றிப் பாமாலை ஸ்ரீ மஹாஸ்வாமி திருவடி த்யானம்:

சீர்கொண்ட தெய்வீகத் திருமுகமும், திருக்கரத்தில் மெய்கொண்ட திருத் தண்டமும் மேனியில் உருகொண்ட சத்சிவமும், கனமாலையும், துளசியும் மெய்கொண்ட திருச்சாந்தும், சந்தனமும் தான்கொண்ட எம்ப்ருமான் ஆச்சார்யர் திருவடிகள் போற்றி! போற்றி! திருவடி துதி: பிறவிப் பெருங்கடலை பெருமகிழ்வாய் கடந்திடவும் திறமாய் குருவடியிற் சரணேகிப் பணிந்திடவும் வரமாய் வைராக்யம் மனதுள்ளே கூடிடவும் தரமாம் தண்ணொளியின் திருவடியே போற்றி! போற்றி!! (1) மனமாம் பெருங்கடலில் கவிபரப்பும் முழுமதியாம் வனத்தீ தணித்தருளும் வான்மேகத் திரளோனாம் மனதாய் அண்டிவரும் அடியாரைக் காத்தருளும் மனத்தூய் மாஹேசன் திருவடியே போற்றி! போற்றி!! (2) நிலையிற் றேகுநலம் கூட்டிவரும் பாதுகையாம் கலையிற் றொளியேற்றும் கற்பத்தாய் பேருருவாம் சிலையுட் சூட்சமத்தை உணர்த்துகின்ற பேரோளியாம் மலையன் அவதாரத் திருவடியே போற்றி! போற்றி!! (3) கோமகன் சிரமேறும் கொற்றகையின் தீரவொளி கோமகன் குருபரனாம் சங்கரத்துச் சீவவொளி கோமகன் குணசீலன் கச்சிவொளி ஏகம்பன் கோமகன் அருட்பாதத் திருவடியே போற்றி! போற்றி! (4) இருளாம் தீமைதனை அகற்றுமொளி தூயவனாம் மருளும் விடவரவம் நீக்குமருட் தீனனவன் திரளும் மூடமனந் தூய்ப்பிக்கும் சசிசேகரன் அருளும் திருப்பாதத் திருவடியே போற்றி! போற்றி! (5) மூவிரு குணத்தோடே ஞானமருட் குருநாதன் மூவிரு முகத்தோனின் நாமஞ்சேர் திருவாளன் மூதுரு பற்றுதரும் பிறந்திறக்கும் நிலையகற்றும் வேயுரு அவதாரத் திருவடியே போற்றி! போற்றி!! (6) திருவடி போற்றுவோர்க்கு திரளாயருள் புரிவோனின் குருவடி வாகிநின்று குவலயத்தைக் காப்போனின் மறுவடி வேகியிங்கு செகத்குருவாய் நின்றோனின் திருவடி நிழல்பெறவே திருவடியே போற்றி! போற்றி! (7) பற்றதனால் பெற்றதனைப் பற்றாது பற்றறிய பற்றதனைப் பற்றாமல் பத்திதனை உணர்த்துமருட் பற்றதனால் பெருவாழ்வைப் பேறெனவேப் பெற்றிடவே பற்றியதும் துயர்கலையும் திருவடியே போற்றி! போற்றி! (8)

சங்கர துதி: களவெற்றி கைகூட்டும் காமகோடி கற்பகமே மனமேற்றி த்யானிக்கும் அடியார்க்கும் அற்புதமே கதம்பவன சஞ்சரியே கயிலைபதி அணைமனமே பதம்சேரும் மனமிதிலே சுகமருள்வாய் சங்கரனே! பெரியவா சரணம்! பெரியவா சரணம்! ஸ்ரீமஹாபெரியவா அபயம்! குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை! பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square