Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -041


எங்களை இயக்கும் மஹாபெரியவா

என் வாழ்வில் மஹாபெரியவா -041

பிரதி வியாழன் தோறும்

குரு = சரீர சுத்தி +ஆத்ம சுத்தி =

பூரண சுத்தி =மஹாபெரியவா

நாமும் பல வாரங்களாக மஹாபெரியவா எனக்கு நடத்திய சரீர சுத்தியையை அனுபவித்து கொண்டு வருகிறோம்...என்ன தான் இந்த சிகிச்சை அறுவை சிகிச்சையை போல வலி இருந்தாலும் அந்த வலியை தாங்கிக்கொள்ளும் சக்தியையும் மஹாபெரியவா தான் எனக்கு கொடுத்தார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

என்னுடைய இந்த அனுபவம் போகப்போக எனக்குள் ஒரு வைராக்கியத்தை விதைத்தது.. அந்த வைராக்கியம் இன்று தகர்க்க முடியாத கோட்டையாக என் மனசை மாற்றியது.

என்னுடைய பஞ்ச இந்திரியங்களுக்கும் மனசுக்கும் நடந்த போராட்டத்தில் நானும் கொஞ்சம் தளர்ந்து போனேன். ஏன் தெரியுமா?. மனசுக்கும் மற்ற இந்திரியங்களுக்கும் நடந்த போரில் நானே போர்களமானேன்.

ஒரு சில பழக்கங்களை விடுவதற்கு வேண்டுமானால் நான் சற்று கஷ்டப்பட்டேன் என்று சொல்லலாம்...உதாரணத்திற்கு காபி டீ வெங்காயம் பூண்டு போன்ற குழந்தையில் இருந்து என்னுடனே பயணித்த இந்த உணவுப்பழக்கங்களை எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் தூக்கி போட முடியாமல் திணறினேன்..

என்னுடைய இந்த சரீர சுத்தி பாடத்தில் மஹாபெரியவா அனுக்கிரஹம் இருந்ததால் ஓரளவிற்கு சமாளித்து நீண்ட கால பழக்கங்களை தூக்கி எறிந்தேன். நான் இந்த நீண்ட கால பழக்கங்களை விட்டேன் என்று சொல்வதை விட மஹாபெரியவா என் மனசை முதலில் தயார் படுத்தி விட்டு தான் ஒவ்வொரு பழக்கங்களையும் விட வைத்தார்.

ஒவ்வொரு பழக்கங்களையும் விட விட என்னுள் ஒரு மாற்றத்தை உணர ஆரம்பித்தேன்...உதாரணத்திற்கு என் கண் முன்னே இனிப்பு வகைகள் கொட்டி கிடந்தாலும் எனக்கும் அந்தஇனிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல உதாசீன படுத்தினேன்.

என்னுடைய வைராக்கியம் மற்றவர்கள் கவனத்தை ஈர்த்தது.. ஏன் தெரியுமா வைராக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத நான் இன்று வைராகியத்தின் மறு பெயர் காயத்ரி ராஜகோபால் என்பது போல என்னுடைய நடத்தைகள் இருக்கின்றன.. மற்றவர்களுக்காக என் நடத்தை மாற வில்லை... வைராக்கியம் என்பது என் குணத்தில் ஒன்று என்பது போல மாறியது.

அன்று என்னை புறம் பேசியவர்கள் எல்லாம் இன்று என்னை பார்த்து ஆச்சரியப்பட்டு போகிறார்கள்.. எனக்கும் இதில் சந்தோஷமே... சமுதாயத்தை வென்று விட்டேன் என்பதற்காக அல்ல.. சமுதாயம் என்னை புரிந்துகொண்டதே அதற்காக.

உங்களை பற்றிய சமுதாயத்தின் பார்வை மாற்றம் என்பது வாழ்க்கையில் எந்த நொடியிலும் வரலாம்.

நீங்கள் ஐம்பது வயதை கடந்தவரா?

இது நாள் வரையிலும் ஒன்றும் சாதிக்கவில்லையா?

இனி என்ன செய்யப்போகிறோம் என்ற பயமா?

வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்து விடீர்களா?

கவலை படாதீர்கள்.இனி மேல் தான் உங்களுக்கு வாழ்க்கை ஆரம்பிக்கப்போகிறது. இத்தனை காலம் நீங்கள் பட்ட உங்களுடைய அனுபவங்கள் உங்களை கை விடாது.. நீங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து சோதனைகளை சந்தித்தவரா. கவலையே வேண்டாம்..

இறைவன் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களை தயார் படுத்துகிறான்... கலங்க வேண்டாம் எழுந்து நில்லுங்கள்...வாழ்கையில் எத்தனை முறை .விழுகிறீர்கள் என்பது உங்கள் தலை எழுத்தை தீர்மானிக்காது.. . ஆனால் ஒவ்வொரு முறையும் வீறு கொண்டு எழுகிறீர்களா நிச்சயம் அது உங்கள் தலை எழுத்தை மாற்றிவிடும்...இது என் சொந்த அனுபவம்.

நான் பட்ட துன்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் கிடைத்த பரிசுதான் மஹாபெரியவா.. வாழ்க்கையில் குருவின் தேடலிலேயே இருங்கள்.. ஒரு குரு உங்களை அழைப்பார். இல்லை இறைவன் உங்களை ஒரு குருவிடம் கொண்டு விடுவார்... இது இந்த பிரபஞ்சத்தின் எழுதப்படாத விதி..

நான் சம்சாரம் என்னும் சாகரத்தை நீந்தியே கடந்து இக்கரைக்கு வந்தவுடன் என் அனுபவத்தை எழுதுகிறேன்.. மற்றவர்கள் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை.. நாமே எல்லா அனுபவங்களையும் பட்டுத்தான் வாழ்க்கை வாழவேண்டுஎன்றால் இந்தஒரு ஜென்மம் போதாது.

மஹாபெரியவா என் வாழ்வில் நிகழ்த்திய விண்ணை பிளக்கும் அற்புதங்களை சமுதாயம் ஒரு பொறாமையுடன் தான் பார்த்தது. இதனால் எதிர்கொண்ட பிரச்சனைகளை தனியாக ஆங்கிலத்தில் ஒரு புத்தகமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். புத்தகத்தின் பெயர்

“The Paradoxical Judgement”

(A perception analysis of

Transformation between society and divinity)

இதற்கு அர்த்தம் சமுதாயம் எனக்கு இறைவன் அருள் கிடைக்க அருகதை இல்லை என்கிறது.. ஆனால் இறைவனோ உனக்கு எல்லா அருகதையும் இருக்கிறது என்கிறது. . இந்த மாறுபட்ட சிந்தனையையும் என்னுடைய வாழ்க்கையையும் மையமாகக்கொண்டு எழுதப்படும் புத்தகம் இது.

எத்தனையோ பேரின் மிக சிறந்த வாழ்கை சாதிக்கக்கூடிய வாழ்க்கை தான்.. ஆனால். சமுதாயத்தின் தட்டிக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலும் ஏதோ ஒரு விதத்தில் எதிர்ப்பும் ஒருவனது முன்னேற்றத்திற்கு தடை கல்லாய் இருந்து விடுவதால் எத்தனை பேருடைய வாழ்க்கை கனவுகளுடனேயே கல்லறையில் இறந்து கிடக்கிறது..

நான் இத்தனையும் எழுதுவது இரண்டு காரணத்திற்காக.

ஒன்று மஹாபெரியவாளின் ஒவ்வொரு அற்புதங்களும் சமுதாயத்திற்கு சொல்ல வந்த செய்தியை தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த செய்தியை என் வாழ்கை அனுபவத்தின் மூலம் தோண்டி எடுத்து வெளிச்சத்துக்கு கொண்டு வருவது..

இரண்டு என் அனுபவத்தால் சமுதாயம் செய்யும் அதே தவறை நானும் செய்து விடக்கூடாது. தோல்வியின் விளிம்பில் இருக்கும் எல்லோரையும் என்னால் முடிந்த அளவு என் அனுபவம் என்ற கையை கொடுத்து மேலே தூக்கி விடுவது..

இதற்காகத்தான் நான் இவ்வளவு எழுதுகிறேன். என் விரல் வலியை விட என் மன வலி என்னை நொடிபொழுதும் சிந்திக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. தோல்வியின் வலியை நான் அனுபவித்திருக்கிறேன். இந்தப்பதிவில் இது போதும் என்று நினைக்கிறேன். உங்கள் மீது நான் கொண்டுள்ள அக்கறை இன்னும் தொடரும்...

வாருங்கள் உங்களை மஹாபெரியவா அற்புதகங்களுக்குள் அழைத்து செல்கிறேன்.

அற்புதங்களை அனுபவிக்கும் அதே நேரத்தில் அற்புதங்கள் சொல்ல வந்த செய்தியயை நாம் புரிந்து கொண்டு வாழ ஆரம்பித்தால் உங்களுக்கு தேக பலத்தை விட ஆத்ம பலம் உங்களை வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பது சத்தியம். இதற்காகத்தான் இவ்வளவு எழுதுகிறேன். வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.

இந்த வார அற்புதம்:

சென்ற வாரம் மஹாபெரியவா என்னுடைய வெங்காயம் பூண்டு போன்றவைகளை விட வைத்தது. அதனால் நான் என் மனதுடன் போட்ட சண்டை எல்லாவற்றையும் விவராக எழுதினேன்.

இன்னும் சரீர சுத்தி பற்றி எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் நான் புத்தகத்தையும் எழுத வேண்டும்.. புதிய தொடர்களையும் துவங்க வேண்டும். ஆகவே இந்த சரீர சுத்தி அற்புதங்களை எழுதி விட்டு பிறகு என் ஆத்மசுத்தி அற்புதங்களை எழுத ஆரம்பிக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை மஹாபெரியவா சீர்திருத்தத்தில் நான் ஓரளவு வெற்றி பெற்று விட்டேன் என்றே சொல்லலம்...இனிமேல் விடுவதற்கு எதுவும் இல்லை என்று மன நிம்மதியுடன் இருந்தேன்..

அன்று வியாழக்கிழமை காலையில் இருந்தே நான் எழுதிக்கொண்டு இருந்தேன். இரவு உணவு முடிந்து படுப்பதற்கு முன் மஹாபெரியவாளிடம் அன்றைய நிகழ்வுகளை சமர்பித்துவிட்டு உறங்க போகலாம் என்று கண்களை மூடி மஹாபெரியவளை த்யானத்தில் அழைத்தேன்.

வழக்கமான ஏண்டா என்ற குரல் கேட்டுவிட்டது. நானும் சொல்லுங்கள் பெரியவா என்றேன். இனி சம்பாஷணை வடிவிலேயே இந்த அற்புதத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

பெரியவா: ஏண்டா நீயோ எல்லாத்தையும் விட்டுட்டே.இனிமே வெளியில் இருந்து வாங்கி சாப்பிடுவதை நிறுத்துடா. நீயோ வெளியில் எங்கும் போவது இல்லை. ஆத்துலயே சமைச்சு நீயும் சாப்பிடு. மத்தவாளுக்கும் சமைச்சு போடு என்றார்.

G.R: பெரியவா நீங்கள்தான் எல்லாவற்றையும் விட வைத்து விட்டீர்கள். வெளியில் இருந்து வாங்கினாலும் இட்லி தோசை வகைகள் தான் சாப்பிடுவேன். அது மட்டும் இருந்து விட்டு போகட்டும் என்றேன்.

பெரியவா: என்னடா இருந்துவிட்டு போகட்டும் என்று நீயே சொல்லறே. உனக்கு நான் பெரியவாளா இல்லை எனக்கு நீ பெரியவாளா என்றார் சிரித்துக்கொண்டே.

G.R:: அதில்லை பெரியவா. இதை மட்டுமாவது சாப்பிடுகிறேன் என்றுதான் கேட்டேன்.

பெரியவா: இத்தனை நாள் நான் சொன்னதை எல்லாம் விட்டது பெரிசு இல்லை இனிமேல் தான் நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

G.R:: எனக்கு புரியலை பெரியவா.

பெரியவா: உனக்கு சொல்லிகொடுத்திருக்கேன். ஒரு மனுஷனுக்கு மூன்று குணங்கள் உண்டு என்று.அவைகள் சத்துவ குணம் ரஜோ குணம் தமோ குணம். இவைகளில் சத்துவ குணம