Featured Posts

ஸ்ரீகுருதுதி


பெரியவா சரணம்

கலிகாலத்தில் நம் வாழ்வு உய்ய வேண்டி நமக்கு அறமுணர்த்தி நம்மை நல்வழியில் நடத்திட வேண்டி அந்த சர்வேஸ்வரனே குரு அவதாரமாக வந்து ரக்ஷித்துள்ளாரன்றோ!

த்யானம்

அயனும் மாலுமாய் முயலும் முடியினன் இயலும் காஞ்சியன் எனவும் வந்தனை. வந்தணை வந்தனை வந்தனம் செய்தனை வந்தஇவ் வாழ்விலே வரமணைத் தேற்கவே!

பிரமனும் மாலவனும் தலையையும் பாதத்தையும் காண முயன்றும் முடியாத அந்த ப்ரத்யக்ஷ பரமேஸ்வரனுடைய ஸ்வரூபியாக காஞ்சியிலே இருந்து நம்மை ஆட்கொண்டு, அவர் அருளாலே அவர் தாள் வணங்கி, அவருடைய கருணையாலே பிறந்திருக்கின்ற இந்த பிறப்பிலே நம் வாழ்விலே நம்மை ஆனந்திக்க வைக்கும் அந்த காஞ்சியனை, காஞ்சிப் பொக்கிஷத்தை சரண் புகுந்து வணங்கிப் போற்றி வரம் பெறுவோமே! என போற்றி மனதார நமஸ்கரித்ததும் இந்தப் போற்றுந்துதி மனதிலிருந்து கிட்டியதாம். இதற்கு "வேண்டல் பத்து" எனச் சூட்டிடலாமோ! இந்தத் துதியிலே நாம் கேட்கின்ற வரங்கள் எல்லாம் அனைவருக்கும் கிட்டிட வேண்டி ப்ரார்த்திப்பதாக வந்தமைந்ததும் அவர் கருணையாலன்றோ! ஜெகத்குருவிடம் ஜெகத்துக்காக ப்ரார்த்திப்பது தானே சரியும் கூட! சங்கரம் போற்றி!

ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர

#ஸ்ரீகுருதுதி வேண்டல் பத்து

ஓமெனும் அட்சரத்துள் ஒளிர்மேனி நீள்சடையன் மெல்லயெனைக் காத்தருள சசிசேகர சங்கரனாய் என்னிதயத் தாமரையில் ஏத்திநிதம் த்யானிக்க வல்லதொரு செகத்குருவாய் வந்தனையே! வந்தனமே!! (1) பதியினிற் பலர்போற்றும் அருளுமுரு கொண்டோனே இருகரமும் கூப்பியுனை உளமுருகித் தொழுதேத்தி இங்குயான் கேட்கலுற்ற இனியபல வரங்களெலாம் சொந்தமென உலகுக்கீந்து சுகமருள்வாய் சங்கரனே!! (2) உன்னிலே எம்ஆன்மம் ஒருநிலையில் சரண்புகவும் உன்நினைவில் வாழ்ந்துநிதம் உளமார செபித்திங்கு உன்னருளு மெங்கள்வழி காட்டிநலம் சேர்த்திடவும் உலகாளும் அஞ்செழுத்தா! வாழ்வுய்ய வந்தருளே! (3) எத்துன்பம் வந்தாலும் நோகுமுளம் இல்லாமல் வஞ்சனைகள் சூழ்ந்தாலும் சிங்கேறு போல்நின்று தக்கபொழு தேவந்து தஞ்சமென் றெனைக்காத்து சஞ்சலமு மில்லாது சீர்வாழ்வும் காத்தருளே! (4) நல்லதையுஞ் செய்வதுபோல் தீமைதரும் புல்லர்கள் மனமதனை அறிந்திடவும் மாசின்றி வாழ்ந்திடவும் வல்லதொரு நல்வினையும் வாடாத மனங்கொண்ட குணநலமும் அருள்கூடி வாழ்நலமும் தந்தருளே! (5) வேலைக் கடினமதில் விரைந்துன்னை மறவாது நாளும் நினைந்திருக்க நல்லறிவுத் திறம்ஈந்து போலிகள் மலிந்துள்ள பொல்லாத உலகமிதில் சங்கரம் பணிந்தோமே! சங்கடமும் களைத்தருளே! (6) என்றும் சிறுபிழையும் யாருக்குச் செய்தாலும் நன்றாம் எவர்மனமும் நோகிடவும் நடந்தாலும் என்பிழை பொறுத்தருளி இனிபிழையும் புரியாமல் நன்றாய் வாழ்ந்திடவே செவ்வருளும் புரிந்தருளே! (7) என்றோ அவர்வருவார் என்றபடி வீட்டினிலே எண்ணிக் காத்திருக்கும் பெண்டிர்தம் வாழ்வினிக்க இன்று வருவாளா என்றுநிசி வேளையிலே உருகும் காளையரின் வாழ்வினிக்க வரமருளே! (8) உழைக்கும் கரங்களுக்கு வலிமைபல தந்துநலம் பேணும் வளமோடே மனமகிழ்வை பெற்றிடவும் நோயின் கடுநீங்கி நீள்சுகத்தைப் பெற்றுவளம் காணும் வாழ்வுதனை வரமெனவே தந்தருளே! (9) நில்லா உலகிதனில் நிலையது என்றுணரும் புல்லறி வாண்மையினை போக்கிஎமை காத்துநிதம் ஆசையும் கோபமும்எம் வாழ்வொழிக்க வகையுமின்றி கோலநிலை தந்தருள்வாய் சங்கரனே போற்றி! போற்றி!! (10) அயனும் மாலுமாய் முயலும் முடியினன் இயலும் காஞ்சியன் எனவும் வந்தனை. வந்தணை வந்தனை வந்தனம செய்தனை வந்தஇவ் வாழ்விலே வரமணைத் தேற்கவே! பெரியவா சரணம்! பெரியவா சரணம்! ஸ்ரீமஹாபெரியவா அபயம்!

மனதார்ந்த திருப்திக்கான காரணமே தெய்வகுருவான ஸ்ரீசரணரை துதிக்கையிலே 'ஓம்' என ஆரம்பித்து 'போற்றி' என முடிக்கும் பாங்களித்த பரப்ருஹ்ம பரந்தாம பரமேஸ்வரருக்கு நமஸ்காரம். நமஸ்காரம். நமஸ்காரம்.

குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.