Featured Posts

பெரியவா பார்வையில்


பெரியவா பார்வையில்

உபநயனமும் காயத்திரி மந்திரமும்

நினைத்துப்பாருங்கள். மஹாபெரியவா கால் நடை பயணமாகவே இந்தியா முழுவதும் பயணம் செய்து மறைந்து கொண்டிருந்த வேதத்திற்கு உயிர்கொடுத்து இன்று வேதம் தழைப்பது மட்டுமல்ல வேதம் ஸ்தாபித்து கொடுத்த தர்மம் நீதி நேர்மை வர்ணாஸ்ரம தர்மம் சமூக ஒழுக்கம் போன்றவைகளையும் மீட்டெடுத்து நமக்கு கொடுத்தார்.

வேதத்தை புனருத்தாரணம் செய்த மஹாபெரியவா சிதிலமான கோவில்களுக்கு உயிர் கொடுத்தார். இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அதில் குறிப்பிடும் படியான குழந்தை பருவத்திலேயே செய்ய வேண்டிய உபநயனத்தின் முக்கியத்துவத்தையும் காயத்திரி மந்திரத்தின் உன்னத அருமை பெருமைகளை எல்லாம் நமக்கு கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். நாம் ஒவ்வொன்றாக ஒவ்வொரு வாரமும் பார்ப்போம்.

இந்த வாரம் மஹாபெரியவாளின் பார்வையில் உபநயனமும் (பூணூல் பண்டிகை ) காயத்திரி மந்திரமும் என்ற தலைப்பில் சிறிது தெரிந்து கொள்வோம்,

உபநயனம் (பூணூல் ) என்றால் என்ன அர்த்தம்?.

நயனம் என்றால் கண் உப என்றல் மூன்றாவது கண். அதாவது ஞானக்கண்.பருத்தி பூவில் இருந்து எடுக்கப்பட்ட நூல் என்பதால் இதற்கு பூணூல் என்று பெயர் வந்தது. பூணூலை மார்பிலே அணிந்து கொள்கிற சடங்கு பூணூல் சடங்கு என்று அழைக்கப்படுகிறது.

பூணூல் என்று கேட்கும் பொழுதே யாருக்கும் ஞாபகத்தில் வருவது பிராமணர்கள் மட்டுமே. பூணூல் எப்பொழுது ஒரு பிராமணன் அணிய வேண்டும் தெரியுமா. கருவிலே இருந்து எட்டு வயது இரண்டு மாதம் ஆகும் பொழுது ஒரு பிராமணன் பூணூல் அணிய வேண்டும் .பிராமணர்களுக்கு உபநயனம் கட்டாயம்.

ஒரு ஆண் மகன் சற்று வேகமான வளர்ச்சியை கொண்டவன் அதனால் காமம் புகுவதற்குள் அவனுள் காயத்திரி புகுந்து விட வேண்டும் என்பது நியதி. எட்டு வயதிற்குள் காயத்திரி புகுந்து விட்டால் சமுதாய சீரழிவுகள் எதுவும் அவனை பாதிக்காது. அவனுடைய மனது ஒழுக்கத்தின் பாதையில் பயணம் செய்ய ஆரம்பிக்கும். நல்லசிந்தனை நல்ல ஞாபக சக்தி முகத்தில் ஒரு ஒளி எல்லாம் குடி கொண்டு விடும்.

பூணூல் எந்தக்காலத்தில் போட வேண்டும்:

பூணூல் போடுவதற்கு உகந்த மாதம் மாசி மாதம் என்று மஹாபெரியவா சொல்லுகிறார். இன்னும் சரியாக சொல்லப்போனால் உத்திராயண கால பூணூல் மிகவும் சிறந்தது என்று மஹாபெரியவா சொல்லுகிறார்.

உத்திராயண காலம் என்பது தை மாதம் தொடங்கி ஆணி மாதம் முதல் இருக்கும் காலம். பூணூலுக்கு மிக உகந்த மாதம் மாசி மாதம். மாசிப்பூணூல் பாசி படரும் என்பது பழமொழி. பூணூலுக்கு மட்டும் அல்ல திருமணத்திற்கும் ஏற்ற காலம் சித்திரை வைகாசி மாதங்கள் தான். இதை வசந்த காலம் என்பார்கள்.

வசந்த கால திருமணம் தான் திருமணம்.இன்று நாம் என்ன செய்கிறோம். இயற்கையின் பலத்தை புறக்கணித்துவிட்டு செயற்கையாக நாமே மாதங்களையும் நாட்களையும் தேர்ந்தெடுத்து கொள்கிறோம்.

உபநயனத்தின் மேன்மை:

உபநயனத்தின் மேன்மைக்கு மஹாபெரியவா நமக்கு இரண்டு உதாரணங்களை சொல்லுகிறார். ஒன்று ஞான சபந்தர் மற்றொருவர் ஆதி சங்கரர். ஞான சபந்தர் முருகனின் அவதாரம். ஆதி சங்கரர் பரமேஸ்வரனுடைய அவதாரம்.ஞான சபந்தருக்கு மூன்று வயது இருக்கும் பொழுதே தோடுடைய செவியன் என்று பாட ஆரம்பித்து விட்டார். இவர்களுக்குள் காயத்ரி புகும் முன்பே கலைமகள் புகுந்து விட்டாள்

இவர்களுக்கு பூணூல் என்பதே அவசியம் இல்லை. ஏனென்றால் பிறவி ஞானிகள். இருந்தாலும் உபநயனம் என்பது எவ்வளவு முக்கியமான சடங்கு என்பதை உலகிற்கு எடுத்து காட்ட தங்களை உபநயன சடங்கிற்கு உட்படுத்தி கொண்டார்கள்.

காயத்ரி மந்திரம் ஒருவரின் மனதில் தூய்மை தன்னம்பிக்கை ஒழுக்கம் மனோ தைரியம் ஆத்ம பலம் இவைகள் எல்லாவற்றையும் அளிக்க வல்லது. மஹாபெரியவா சொல்கிறார் காயத்ரி மந்திரத்திற்கு இணையான மந்திரம் நேற்றும் இல்லை இன்றும் இல்லை நாளையும் இருக்கப்போவது இல்லை. ‘அப்படியொரு சக்தியும் புனிதமும் நிறைந்தது காயத்ரி மந்திரம்.

மூன்று தலை முறையாக ஒருவர் காயத்திரி சொல்லவில்லை என்றால் அவர்கள் பிராமணனாக பிறப்பு எடுத்திருந்தாலும் அவர் பிராமண பந்துக்கள் என்றே கருதப்படுவார். ஒரு பிராமணன் உத்தமமான பிராமனாக திகழ்வதற்கு அடிநாதமே கயாத்திரிதான் என்கிறார் மஹாபெரியவா. இல்லறவாழ்கையில் வாழ்ந்து கொண்டே ஒருவன் எல்லா இறை செல்வங்களையும் அடைய முடியும் என்றால் அது காயத்திரி மந்திரம் தான்.

மேலும் மஹாபெரியவா சொல்கிறார். நாம் காயத்திரி ஜெபம் செய்யும் பொழுது விடும் அஃஞ நீர்தான் நமக்கு மழையாக திரும்ப கிடைக்கிறது. இன்று மழை பொய்த்து போவதற்கு என்ன காரணம். பிராமணர்கள் பெரும்பாலும் இன்றைய வேகமான வாழ்க்கையில் காயத்திரியை மறந்து விட்டார்கள். மழையும் நம்மை ஏமாற்றுகிறது.

காயத்ரி செய்யும் முறை:

காயத்ரி மந்திரம் இருபத்திநான்கு அட்சரங்களை கொண்டது.

உபநயனம் ஆன பின்புதான் காயத்ரி உபதேசிக்க படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு மூன்று வேளை ஜெபிக்க வேண்டும் என்பது நியதி. காலையில் நூற்றி எட்டு முறை மதியம் முப்பத்தி இரண்டு முறை மாலையில் அறுபத்திநான்கு முறை என்று இன்றைய லௌகீக வாழ்க்கைக்கு ஏற்றாப்போல் விதித்து விட்டு போயிருக்கிறார்கள்

.

பெண்கள் காயத்ரி சொல்லக்கூடாதா?

இதற்கு உடற்கூறு கரணங்கள் சொல்லப்படுகிறது. மஹாபெரியவா சொல்கிறார். காயத்திரி மந்திரம் கர்ணம் வழியாகத்தான் நம் உள்ளே செல்ல வேண்டும்.கர்ணம் என்றால் காது. கர்ப்பிணி பெண்கள் காயத்திரி சொன்னால் வயிற்றில் இருக்கும் குழந்தையின் காதுகளில் காயத்திரி விழும். ஒரு குருவின் துணையுடன் மட்மே காயத்திரி மந்திரத்தை உபதேசம் பெற்று ஜெபிக்க வேண்டும்.

மேலும் பெண்கள் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கும்பொழுது மந்திரத்தின் அதிர்வுகளை பெண்களால் தாங்கிக்கொள்ள முடியாது. மஹாபெரியவா இன்னும் சொல்கிறார். ஒரு பெண்ணுடைய கணவர் வாழ்நாள் முழுவதும் காயத்திரி ஜெபிக்கிறார் என்றால் அந்த ஜெபித்த பலனில் சரி பாதி மனைவிக்கு சென்று சேர்கிறது.

இதே போல் ஒரு கணவர் இந்த காயத்திரி சொல்லும் கடமையில் இருந்து தவறினால் அதன் பாதிப்பு மனைவிக்கும் சென்று சேர்கிறது. பிராமணர்களுக்கு இந்த உலகம் ஷேமமாக இருப்பதற்கு காயத்திரி ஜெபித்தே ஆக வேண்டும். காயத்திரி மந்திரத்தை நீங்கள் ஒரு தாய்ப்பாசத்தோடு அணுகுங்கள். வேத மாதா காயத்ரியும் உங்களை ஒரு குழந்தை போல பார்த்துக்கொள்வாள்

அடுத்த வாரம் மற்றுமொரு மஹாபெரியவா பார்வையில் சந்திப்போம்..

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்திரி ராஜகோபால்