மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-040

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-040
பிரதி செவ்வாய் கிழமை தோறும்
உறவுகளில் விரிசலா
தாம்பத்தியம் கசக்கிறதா
பாசம் அற்றுப்போன உறவா
பரமேஸ்வர அவதாரம்
மஹாபெரியவா உங்களுக்கு
அனுகிரஹமும் ஆசிர்வாதமும் பண்ண காத்துக்கொண்டிருக்கிறார்
பக்தியுடன் அழையுங்கள்
எல்லாமே நொடிப்பொழுதில் தீர்ந்து விடும்.
மஹாபெரியவாளின் அற்புதங்களை பல விதங்களில் ஒவ்வொரு வாரமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். எங்கும் எதிலும் மஹாபெரிபெரியவா பிரவேசித்து அந்த நொடியிலேயே பிரச்சனைக்கு தீர்வு காணும் அற்புதங்களையும் அனுபவித்திருக்கிறோம்.
பட்டாபி சாஸ்திரிகளின் மாப்பிள்ளையின் பூட்டிய வீட்டிற்குள் பிரவேசித்து பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்த்த அற்புதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம் கேட்கலாம் அலுக்கவே அலுக்காது. வாருங்கள் உங்களை அற்புதத்திற்குள் அழைத்து போகிறேன்.
கும்பகோணம். இந்தஊரின் பெயரை கேட்டாலே நமக்கு ஞாபகம் வருவது காவேரி ஆறும் சைவ வைணவ கோவில்களும் தான். எங்கு பார்த்தாலும் எப்பொழுது பார்த்தாலும் ஈசனின் வீதி உலா பெருமாளின் புறப்பாடு என்று தான் இருக்கும்.
இங்கு பக்திக்கு குறைச்சலே கிடையாது.சுற்றியுள்ள கிராமங்களிலும் வசிக்கும் மக்கள் காதுகளில் ஒன்று வேத கோஷம் ஒலித்துக்கொண்டிருக்கும். இரண்டு வயலில் நாற்று நடும்பொழுது பெண்கள் பாடும் கிராமிய பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டிருக்கும். பகலவனின் உதயத்திற்கு (சூரியனுக்கு இன்னொரு பெயர் பகலவன் )முன்பே இங்குள்ள மக்களின் நெற்றிகளில் திருநீறும் திருமணும் காட்சி கொடுக்கும்.
இப்படிப்பட்ட ஒரு கிராமத்தில் பட்டாபி சாஸ்திரிகள் அவரது மனைவி சரஸ்வதி அமைதியான வாழ்கை வாழ்ந்த்து வந்தனர். நிறைவான வாழ்க்கை என்றே சொல்லலாம். நிறைவான வாழ்க்கை என்றாலே இறைவனின் படைப்பில் ஒரு குறை இருந்து தானே ஆக வேண்டும். அப்பொழுதான் இறைவனை எப்பொழுதும் நினைத்து கொண்டே இருப்பார்கள்.இந்த தம்பதிகளுக்கும் ஒரு குறை இருக்கத்தான் செய்தது.
ஆம் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த குறை வெகு நாட்களாகவே இருவர் மனதிலும் நீறு பூத்த நெருப்பாக இருந்தது. அதுவும் இவர்கள் குழந்தைகளுக்கு நடுவில் இருக்கும் பொழுது தங்களுடைய ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்த முடியாமல் பல மணி நேரங்களை மௌனத்திலேயே கழித்த நாட்களும் உண்டு. யார் யாரை சாடுவது.
ஒரு நாள் இருவரும் முடிவு செய்தார்கள். காஞ்சிபுரம் சென்று ப்ரத்யக்க்ஷ பரமேஸ்வரன் மஹாபெரியவாளை தரிசனம் செய்து தங்களுடைய குழந்தை பாக்கியத்திற்கு ஆசிர்வாதமும் அனுகிரஹமும் பெற்று வரலாம் என்று முடிவு செய்தார்கள்.
முடிவு செய்த படியே காஞ்சி சென்றார்கள். மஹாபெரியவாளை தரிசனம் செய்தார்கள். ஆசிர்வாதமும் பெற்றார்கள்.தங்களுடைய கிராமத்திற்கு திரும்பினர். இந்த தம்பதிகளுக்கும் ஒரு நாள் காலை நல்ல பொழுதாக விடிந்தது.
குழந்தை பாக்கியத்திற்கு அச்சாரமாய் பட்டாபி சாஸ்திரிகள் காயத்திரி ஜெபம் செய்து கொண்டிருக்கும் பொழுது சரஸ்வதி மாமி வயிற்றை பிடித்துக்கொண்டு வீட்டின் கொல்லை புறத்திற்கு ஓடினாள்.பட்டாபி மாமா "என்னடி சரஸ்வதி என்ன ஆச்சு என்று கேட்டுக்கொண்டே கொல்லை புறத்திற்கு ஓடினர். அங்கு மாமி வயிற்றை பிடித்து கொண்டு வாயிந்தி எடுத்துக்கொண்டிருந்தாள்.
பட்டாபி மாமாவிற்கு உலகமே மாமி தான். மாமிக்கும் இறைவனே மாமா தான். பட்டாபி மாமா கலங்குவதை பார்த்த சரஸ்வதி மாமி மாமாவிற்கு சொல்லி புரிய வைக்கிறார். ஏன்னா நம்மளோட குழந்தை இல்லை என்கிற குறை இன்னும் பத்து மாதத்தில் தீரப்போகிறது என்றாள். பட்டாபி மாமாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. எண்னெமோ செய்கிறார்.
மாமி “ஏன்னா கொஞ்சம் பூமிக்கு இறங்கி வாங்கோ.இப்பொழுது பரவாயில்லை பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடறேள்...இன்னும் பத்து மாதத்தில் துள்ளி விளையாட நம்மளோட வாரிசு வந்துடும். கொஞ்சம் அடக்கி வசிங்கோ” என்று சொல்கிறாள்.
ஆஹா என்ன அழகா ஒரு குடும்பம். தம்பதிகள் இருவருமே எதார்த்த வாதிகள். பால் நிறம் கொண்ட வெள்ளை மனது.இந்த குழந்தைகளை இவ்வளவு நாளும் .மாமி சேவிக்கும் அம்பாளும் மாமா சொல்லும் ருத்ரமும் தான் பாதுகாத்து வந்தனர்.
பட்டாபி மாமாவிற்கு வேதத்தையும் தாண்டி ஒரு பொறுப்பு வந்து விட்டது. மாமியை காலையிலும் மாலையிலும் வயல் வெளிகளில் நடக்க வைத்து வீட்டிற்கு கூட்டி வரவேண்டும்.என்ற பொறுப்புதான் அது. அபொழுதுதானே சுபபிரசவம் ஆகும்.
மாமியும் மாமாவும் வயல் வெளிகளில் காற்றில் தலையை அப்படியும் இப்படியும் அசைத்து ஆடும் பசுமையான நெல் பயிர்களை தடவி கொடுத்துக்கொண்டே நடந்து நடந்து நாட்களை கழித்தனர். நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து நெற்கதிர்கள் நாணம் கொண்டு தலையை கவிழ்த்துக்கொண்டது.
நெற் கதிர்களும் அறுவடைக்கு தயாராகின. சரஸ்வதி மாமியும் தன்னுடய வாரிசை பெற்றெடுக்க தயாராகி விட்டாள். ஒரு நாள் காலைப்பொழுது சரஸ்வதி மாமி தன்னுடைய வாரிசை பெற்றெடுத்தாள். பிறந்தவள் அம்பாள் காமாட்சி. அழகான அமைதியான குடும்பத்தில் மழலை சப்தம் கொடுக்க காமாட்சி வந்து விட்டாள்.
மாமாவும் மாமியும் காமாட்சியை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் சென்றனர். அங்கு தங்களுக்கு குழந்தை பாக்கியத்திற்கு அனுகிரஹித்த பரமேஸ்வரன் மஹாபெரியவாளின் திரு பாதங்களில் குழந்தையை சமர்ப்பித்தனர். மஹாபெரியவாளும் காமாட்சியை ஆசிர்வதித்து கொடுத்தார்.
தம்பதிகள் இருவரும் தங்கள் இல்லத்திற்கு திரும்பினர். நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் சென்றன வருடங்கள் கடந்தன. இன்று காமாட்சி பருவம் எய்தி நான் திருமணத்திற்கு தயார் என்பது போல் தன்னுடைய பெற்றோர்களுக்கு புரிய வைத்தாள்.
மாமாவிற்கும் மாமிக்கும் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு வந்து விட்டது. இறைவன் அருளால் ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்தார். அதுவும் மாயவரம் அருகிலேயே ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் குடும்பத்தை சேர்ந்த பையன்.திருமணமும் நல்ல முறையில் முடிந்தது. பெண்ணையும் மாப்பிளையையும் அழைத்து கொண்டு காஞ்சி சென்று மஹாபெரியவாளை தரிசனம்செத்து விட்டு வீடு திரும்பினார்கள்.
திருமணம் முடிந்து மாமாவும் மாமியும் தங்கள் கடமை முடிந்த சந்தோஷத்தில் தங்கள் வீட்டில் தவழ்ந்த்து வரப்போகும் வாரிசை நினைத்து நாட்களை கழித்தனர்.
வாழ்க்கை என்பதே அமைதியான மனதில் அவ்வப்பொழுது அடிக்கும் புயல் தானே. ஒரு நாள் மதியம் மாமா ஹாலில் உள்ள ஊஞ்சலில் படுத்திருந்தார். மாமி ஒரு முறத்தில் எதையோ புடைத்துக்கொண்டிருந்தாள்.மாமியும் மாமாவும் தங்களுடைய பழைய நாட்களை ஆசை போட்டுக்கொண்டிருந்தனர். அப்பொழுது வாசலில் ஒரு நிழல் ஆடியது. மாமி யாரது என்று கேட்க பதிலுக்கு ஒரு அழுகையின் விசும்பல் குரல் கேட்டது. கேட்ட குரல் தன்னுடைய மகள் காமாட்சியின் குரல் என்று புரிந்து கொண்டாள்.
மாமாவும் மாமியும் அலறி அடித்துக்கொண்டு வாசலுக்கு வந்து பார்த்தனர். வாசலில் காமாட்சி கையிலொரு துணிப்பையுடன் அழுத கண்களுடன் நின்று கொண்டிருந்தாள். மாமிக்கும் மாமாவிற்கு நடந்திருப்பதை ஓரளவு யூகிக்க முடிந்தது..மாமி மனதை தேற்றிக்கொண்டு காமாட்சியை கைத்தாங்கலாக அழைத்து கொண்டு உள்ளே அழைத்து சென்றாள்.
மாமா காமாட்சியின் தலையை வருடிக்கொடுத்து தைரியம் சொன்னார். மாமா மாமியிடம் சொன்னார் குழந்தை காமாட்சிக்கு வயிற்றுக்கு ஏதாவது கொடு என்று கண்ணீர் தளும்பும் கண்களுடன் காமாட்சியை பார்த்துக்கொண்டே சொன்னார். சாப்பாடு முடிந்தது. காமாட்சி முகத்தில் களைப்பு நீங்கியதே ஒழிய மனதில் இருக்கும் கவலை அப்படியே தான் இருந்தது.
இப்பொழுது காமாட்சி தன்னுடைய வீட்டில் நடந்ததை சொல்கிறாள். என்னுடைய கணவர் என்னுடன் வாழ விருப்பம் இல்லை. அதனால் உன்னுடைய வீட்டிற்கே சென்று விடு என்று சொன்னார். மேலும் தான் வேறொரு கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக சொல்கிறார்.என்று எல்லாவற்றையும் சொல்லி விட்டாள்.
நாட்கள் நகர்ந்தன. சரஸ்வதி மாமி மாமாவிடம் ஒரு யோசனை சொல்கிறாள். ஏன்னா நீங்கள் வேணா ஒரு முறை மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று வாருங்களேன் என்று யோசனை சொல்கிறாள்.ஒரு மாதத்திற்கு பிறகு பட்டாபி மாமா மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறார்.
சென்றவுடன்தான் தெரிந்தது. மாப்பிள்ளை வேறொரு கல்யாணம் செய்து கொண்டார் என்பது.என்னபேச முடியும் வேதம் படித்த பிராமணன். வேதத்தை தவிர வேறு எதுவும் தெரியாத ஆத்மா. அவர்களுக்கு ஒரே ஆபத் ஆபத்பாந்தவன் மஹாபெரியவா தான்.
மாமியும் மாமாவும் மகள் காமாட்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய மஹாபெரியவாளை தரிசிக்க காஞ்சி சென்றனர்.மஹாபெரியவாளை சேவிக்கும் முன்பு நெஞ்சம் வெடித்து எதோ சொல்ல வாயெடுத்தனர். மஹாபெரியவா கை ஜாடையிலேயே எதுவும் சொல்ல வேண்டாம் என்றார்.
இவர்கள் சொன்னால்தான் தெரியுமா அந்த பரப்பிரும்மத்திற்கு. அந்த பிரும்ம ஸ்வரூபத்திற்கு முக்காலமும் தெரியுமே. இருவருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டார் மஹாபெரியவா. மஹாபெரியவா எதுவும் பேசவில்லையென்றாலும் இவர்களுக்கு தெரியும். பரமேஸ்வரன் நிச்சயம் தகுந்த நேரத்தில் அனுக்கிரஹம் செய்வார் என்பது. வீட்டிற்கு திரும்பினர்.
ஒரு மாதத்திற்கு பிறகு மாயவரம் அருகில் இருக்கும் கிராமம் ஒன்றுக்கு வருகை புரிந்தார் மஹாபெரியவா. சுற்றி இருக்கும் கிராமத்தில் இருந்து மக்கள் சாரி சரியாக மஹாபெரியவாளை தரிசனம் செய்யச்சென்றனர்.
பட்டாபி சாஸ்திரிகளும் சரஸ்வதி மாமியும் மஹாபெரியவாளை தரிசிக்க சென்றார்கள். தரிசிக்கும்பொழுது தங்கள் மகள் காமாட்சி வாழ்க்கையை பற்றி பேச வாயெடுத்தார்கள். அப்பொழுதும் மஹாபெரியவா ஜாடையில் காட்டி பேசவேண்டாம் என்றார்கள். இருவரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
பிறகு நடந்தது என்ன தெரியுமா?
மேலே படியுங்கள் தெரியும். காமாட்சியின் கணவர் வீட்டை உள் பக்கமாக தாழிட்டுக்கொண்டு ஊஞ்சலில் படுத்துக்கொண்டிருந்தார். பூட்டிய வீட்டிற்குள் யாரோ நடப்பது போல தனக்கு தோன்றியது. உண்மைதான் மஹாபெரியவா தண்டத்துடன் நின்று கொண்டிருந்தார். ஊஞ்சலில் இருந்து பதறிப்போய் எழுந்து கன்னத்தில் போட்டுகொண்டு நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்தார். அப்பொழுது மஹாபெரியவைச்சொன்னது இதுதான். "
நீ காமாட்சியுடன் சேர்ந்து வாழனும்.என்பதுதான்"
தவிர்க்க முடியாமல் மாப்பிள்ளை காமாட்சியின் வீட்டிற்கு விரைந்தார். மாமனார் காலிலும் காமாட்சி காலிலும் விழுந்து தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு வேண்டி இப்பவே காமாட்சியை என்னோட அனுப்புங்கோ என்று கெஞ்சினார். மாமாவும் மாமியும் சென்று வா என்று ஜாடையில் உத்தரவு கொடுக்க காமாட்சியும் தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு கணவருடன் தன்னுடைய வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.
இன்றைய தேதியில் இருவருக்கும் இரண்டு குழந்தை செல்வங்கள் குடும்பத்தில் மீண்டும் அமைதி திரும்பியது. அந்த பிரபஞ்ச தெய்வம் பரமேஸ்வரன் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழும் பாக்கியம் கிடைத்ததே. அப்படியானால் நாம் எல்லாம் யார். புண்ணியவான்கள் தானே.
“மஹாபெரியவா”
நான் உங்களுக்கு சொல்லுகிறேன்
இந்த சொல்லை
நீங்கள் உள்ளத்தில் எழுதுங்கள்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்