மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-041

மஹாபெரியவா நீங்கள் காணும் அத்தனை குரங்கினங்களும் உங்களுக்கு
ஆஞ்சநேயர் தானோ? உங்கள் இறை சாம்ராஜ்யத்தில் தான் உயிரங்களின் பாகுபாடு கிடையாதே
மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-041
பிரதி செவ்வாய் கிழமை தோறும்
மஹாபெரியவாளுக்கு மானுட ஸ்நேக பாவம் என்பது அவருடைய குணங்களில் ஒன்று. விரோதம் கிடையாது துவேஷம் கிடையாது. எல்லோரிடமும் அன்புடன் ஒரு ஆத்ம ஸ்னேகத்துடன் பழகக்கூடியவர்.
இந்த ஆத்ம ஸ்நேக பாவம் மனிதர்களையும் தாண்டி விலங்குகளிடமும் இருந்ததை மெய்ப்பித்த நிகழ்வுகள் ஏராளம். அப்படியொரு நிகழ்வை இந்த பதிவில் நாம் காண்போம்.
மஹாபெரியவா ஒரு இடத்தில் முகமிட்டிருக்கிறார். அது ஒரு கிராமப்பகுதி. அந்த இடத்தில் குரங்குகள் ஏராளமாக போவோர் வருவோரிடம் எல்லாம் பழங்களை வாங்கி சாப்பிடும்.. யாரும் பழங்கள் தரவில்லை என்றால் பிடுங்கிகூட சாப்பிட்டுவிடும். அதில் ஒரு போக்கிரி குரங்கு எல்லோரையும் பயமுறுத்திக்கொண்டு இருந்தது.
அந்த குரங்கு ஒரு நாள் மஹாபெரியவா முகாமிற்கு வருகிறது. மஹாபெரியவா பூஜைக்கு வேண்டிய பழங்களை ஒரு தட்டில் வைத்திருக்கிறார்..அங்கு இந்த போக்கிரி குரங்கு வந்து விட்டது.ஆனால் யாரையும் எந்த தொந்தரவும் செய்யாமல் கைகட்டி உட்கார்ந்திருந்தது.
எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். எப்படி இந்த போக்கிரி குரங்கு இவ்வளவு அமைதியாக உட்கார்ந்திருக்கிறது என்று வியந்தார்கள். மஹாபெரியவா அந்த குரங்கை அன்புடன் அருகில் அழைக்கிறார்.
குரங்கும் அமைதியாக அருகில் வருகிறது. மஹாபெரியவா தான் பூஜைக்கு வைத்திருந்த பழங்களில் ஒன்றை எடுத்து அந்த போக்கிரி குரங்குக்கு கொடுக்கிறார். குரங்கும் அமைதியாக வாங்கி சாப்பிட்டுவிட்டு மஹாபெரியவாளை ஒரு கண்கள் கலங்க பார்க்கிறது. குரங்குக்கு கண்கள் கலங்குமா என்று என்னை கேட்காதீர்கள், இந்த குரங்கின் முக பாவம் அப்படி இருந்தது. இதுதான் ஆத்ம ஸ்நேக பாவமோ?
இந்த சிநேகம் அனுதினமும் வளர்கிறது. குரங்கு வருவதும் மஹாபெரியவா பழம் கொடுப்பதும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஸ்நேக பாவம் எப்படி வளர்ந்து விட்டது தெரியுமா? ஒரு நாள் அந்த போக்கிரி குரங்கு வரவில்லை என்றால் மஹாபெரியவா யோசிக்க ஆரம்பித்து விடுவார். அந்த அளவிற்கு வளர்ந்து விட்டது.
ஒரு நாள் அந்த ஊரில் ஒரு பெரியவர் மஹாபெரியவாளிடம் தன்னுடைய புதிய வீட்டு பத்திரத்தை கொடுத்து ஆசிர்வாதம் வாங்க எண்ணி பத்திரத்தை எடுத்துக்கொண்டு விட்டதாக நினைத்து வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினார். பெரியவர் வீட்டை பூட்டும் பொழுது அந்த போக்கிரி குரங்கு வீட்டிற்குள் நுழைந்து விட்டது.இது தெரியாமல் பெரியவர் வீட்டை பூட்டிவிட்டு மஹாபெரியவா முகாமிற்கு வருகிறார்.
முகாமிற்கு வந்தவுடன் அந்த பெரியவர் உணர்கிறார். வீட்டு பாத்திரத்தை வீட்டிலேயே வைத்து பூட்டி மறந்து போய் தான் மட்டும் வந்துவிட்டதைஉணர்கிறார். உடனே மஹாபெரியவாளிடம் நடந்ததை சொல்லி மீண்டும் வீட்டிற்கு சென்று பாத்திரத்தை எடுத்து வருவதாக சொல்கிறார்.
மஹாபெரியவா அந்தப்பெரியவரிடம் கேட்கிறார். வீட்டில் பாத்திரத்தை மட்டுமா வைத்து பூட்டினாய். இன்னும் என்னவெல்லாம் வைத்து பூட்டிவிட்டு வந்தாயோ, போ போய் பார் என்றவுடன் பெரியவர் வேர்க்க விறுவிறுவிறுக்க தன்னுடைய வீட்டிற்கு திரும்புகிறார்.
வீட்டின் கதவை திறக்கிறார். அந்த போக்கிரி குரங்கு புயல் வேகத்தில் வெளியே ஓடுகிறது. குரங்கு வெறும் கையில் ஓடினால் பரவாயில்லை. கையில் அந்த பெரியவரின் வீட்டு பத்திரத்தையும் எடுத்துக்கொண்டு ஓடுகிறது.
அந்த பெரியவர் கத்திகொண்டே அந்த வயதானகாலத்தில் குரங்கை துரத்துகிறார். ஊர் மக்களும் பெரியவருக்கு உதவ அந்த குரங்கை துரத்துகின்றனர். அந்த குரங்கு யார் கையிலும் சிக்காமல் நேராக மஹாபெரியவா முகாமிற்கு சென்று மஹாபெரியவா கையில் அந்த வீட்டு பத்திரத்தை கொடுத்து விடுகிறது. பிறகுதான் அந்தப்பெரியவருக்கு உயிர் வருகிறது, மஹாபெரியவாளும் அந்தப்பாத்திரத்தை ஆசிர்வதித்து அந்த பெரியவரிடம் நன்னாயிரு என்று சொல்லி பத்திரத்தை கொடுத்து விடுகிறார்.
அந்த பெரியவரும் சரி ஊர் மக்களும் சரி ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றனர். கைங்கயம் செய்பவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. இந்த குரங்கை மஹாபெரியவா ஆஞ்சநேயர் என்று தனக்குள் அர்த்தம் கொண்டாரோ என் வியந்து போகின்றனர்.
அந்த போக்கிரி குரங்கும் மஹாபெரியவாளிடம் ஒரு பழத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டு யாரையும் தொந்தரவு செய்யாமல் காட்டிற்குள் சென்று விட்டது. இந்த நிகழ்வை என்னவென்று சொல்ல. மஹாபெரியவாளின் ஞான திருஷ்டி மனிதர்களையும் தாண்டி விலங்குகள் இடத்திலும் பேசுகின்றனவே. இந்த பிரபஞ்சத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மஹாபெரியவாளுக்கு இந்த குரங்கு எம்மாத்திரம் .
மீண்டும் ஒரு அற்புத சாரலில் உங்களை சந்திக்கிறேன்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்