திருச்சேறை-010 சரநாதப்பெருமாள்
திருச்சேறை-010
சரநாதப்பெருமாள்

திருச்சேறை மூலவர் சரநாதப்பெருமாள்
கோவில் அமைவிடம் :தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் திருச்சேறை அமைந்துள்ளது. திருச்சேறை கும்பகோணத்தில் இருந்து பதினான்காவது கிலோமீட்டரில்அமைந்துள்ளது.கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பேருந்துகள் திருச்சேறை வழியாகசெல்லுகின்றன.
பழமை: இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

திருச்சேறை பெருமாள் தேவிமாருடன்
கோவில் அமைப்பு: கோவில் முன்னூற்றி என்பது அடிநீளமும் இருநூற்றி முப்பத்தி நான்கு அடி அகலமும் கொண்டது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள ராஜகோபுரம் தொன்னூறு அடி உயரம் கொண்டது.கோவிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்காரணியில் மேற்கு கரையில் அகத்தியர் பிரும்மா காவேரி ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளது.
இந்தக்கோவிலின் மூலவர் சார நாத பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு முகமாக உள்ளார். இந்தக்கோவிலில் மட்டுமே பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி மஹாலக்ஷ்மி சார நாயகி நீலா தேவி ஆகிய ஐந்து தேவியருடன் தரிசனம் கொடுக்கிறார்.

தயார் சாரகுடத்துடன்
இத்தலத்து மண் மிகவும் சத்து வாய்ந்தது.சாரமானது.இதனாலேயே பெருமாள் இங்கு சார நாதர் என்று அழைக்கப்படுகிறார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்கண்டேயரும் இடது புறம் காவேரிதாயும் அமர்ந்துள்ளனர்.
விமானம்: சார விமானம்
சார புஷ்காரணி சார தீர்த்தம்
புஷ்காரணி: சார புஷ்காரணி
ஸ்தல வரலாறு: ஆதி சேஷனின் குடையின் கீழ் மஹாக்ஷ்மியுடன் திருமால் வீற்றிருந்த பொழுது பெருமாள் பிரம்மாவை அழைத்து பிரளய காலம் வருகிறது. உடனே பூலோகம் சென்று ஒரு புனித இடத்தில் மண் எடுத்து குடமாக செய்து அந்தக்குடத்தில் சாஸ்திர வேத ஆகமங்களை ஆவாகனம் செய் என்று கட்டளையிட்டார். பிரும்மனும் பல இடங்களில் முயன்றும் குடம் உடைந்து கொண்டே இருந்ததாம்.
எங்கும் பலனளிக்காமல் போகவே திருமாலை நினைத்து த்யானம் செய்தார். திருமாலும் தரிசனம் கொடுத்து பூலோகத்தில் மிகவும் சாரமான திருத்தலமான திருச்சேறையில் சார தீர்த்தத்தில் நீராடி அங்கு மண் எடுத்து குடம் செய்து அந்த குடத்தில் வேதங்களை ஆவாகனம் செய்துவிட்டு வா என்று ஆணையிட்டாராம்.. பிரளய காலத்தில் பிரும்மாவும் குடம் செய்து வேதங்களை காப்பாற்றிய காரணத்தால் பிரம்மாவிற்கு இங்கு பெருமாள் காட்சி கொடுத்தாராம். எப்படி தெரியுமா?

பெருமாள் சாரநாதன் தாயார் சார நாயகி புறப்பாடு
காவிரித்தாயின் மடியில் குழந்தையாக ஐந்து தேவியருடன் காட்சி கொடுத்தார். மார்க்கண்டேயர் இங்குதான்முக்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
விஜயநகர பேரரசு வீழ்ச்சிக்கு பின் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் ராஜகோபால ஸ்வாமிக்கு மன்னார்குடியில் ஒரு கோவில் அமைக்க தீர்மானித்து வண்டியில் கற்களை ஏற்றி மன்னார்குடிக்கு அனுப்பினான்.
மன்னரின் அமைச்சர் கற்களை ஏற்றி செல்லும் ஆட்களிடம் போகும் வழியில் திருச்சேறையில் ஒவ்வொரு வண்டியிலிருந்தும் ஒவ்வொரு கல்லை இறக்கி விட்டு போகுமாறு ஆணையிட்டார்.. இதை அறிந்த மன்னர் மிகுந்த சினம் கொண்டு திருச்சேறைக்கு விரைந்தாராம். அங்குள்ள பெருமாள் ராஜகோபால ஸ்வாமியை போல இருந்ததால் சினம் நீங்கி அந்த பெருமாளையும் ஏற்றுக்கொண்டாராம்.
ஒரு முறை காவேரித்தாய் தனக்கு கங்கையின் புனிதம் வேண்டு என்று கேட்க பெருமாளை நினைத்து த்யானம் செய்தாளாம். பெருமாளும் காவேரி தாயின் தவத்தை மெச்சி இங்கு கருட வாகனத்தில் சங்கு சக்கரத்துடன் ஐந்து தேவியுடன் காட்சி கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது.
திரு விழா:: தை பூச நாளில் கொண்டாடப்படும் பத்து நாட்கள் தேர் திருவிழா இங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.பத்தாவது நாளில் பெருமாள் ஐந்து தேவியருடன் காவிரித்தாய்க்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு எல்லோரலும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்படுகிறது.
மங்களாசாசனம்: திருமங்கையாழவரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
பிரார்த்தனைகள்: ஸ்திரமற்ற வாழ்வு ஸ்திரமாக மாறவும் கடன் தொல்லைகள் நீங்கவும் பிரிந்த மனங்கள் ஒன்று சேரவும் குழந்தை பேறு வேண்டியும் நாட்பட்ட நோய்கள் குணாகவும் இங்கு வேண்டிகொள்ளலாம்.
பெருமாளுக்கும் தாயாருக்கும் வஸ்திரம் வாங்கி சாத்தலாம். சர்க்கரை பொங்கல் வெண் பொங்கல் புளியோதரை செய்து பெருமாளுக்கும் தாயாருக்கும் நெய்வேத்தியம் செய்யலாம்.
உங்கள் பிராத்தனைகள் அனைத்தும் நிறைவேறி வாழ்கை ஸ்திரமாக அமைய பெருமாளையும் மஹாபெரியவாளையும் பிரார்த்தனை செய்து கொள்வோம்.

சாரநாதப்பெருமாள் தேவியருடன்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்