மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-042

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-042
பிரதி செவ்வாய் கிழமை தோறும்

என்னால் உங்களுக்கு ஒரு நல்ல அக்ராஹாரத்தை
கண் முன்னே காண்பிக்கமுடியாவிட்டாலும்
ஒரு அக்ராஹரா உணர்வை தர முடியும். இது போலத்தான் அக்ராஹாரம் இருக்கும்.
கும்பகோணம். இந்த ஊரின் பெயரை கேட்கும்பொழுதே நமக்குள் எழும் எண்ண அலைகள் புராதன கோவில்களையும் சைவ வைணவ கோவில்களையும் பற்றி தானே.. இந்த ஊரில் காலடி எடுத்து வைத்தவுடன் நாம் காணும் எதார்த்தம் கோவில்களையும் கோவில்களின் புராண கால தொடர்பும் மட்டுமே.
இப்படிப்பட்ட கும்பகோணத்தின் கிராமங்கள் என்றாலே நமக்குள் நம் மனத்திரையில் ஓடும் காட்சிகள் பொங்கி ஓடும் காவிரி நதி பசுமை வனங்கள் காவேரி ஆற்றை மையமாக கொண்டு அமைந்துள்ள கிராமங்களும் வேதங்கள் வாழும் அக்ராஹாரங்களும் தானே.
வாருங்கள். இப்படிப்பட்ட கிராமம் ஒன்றிற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பயணிப்போம்.இப்பொழுது நாம் இருக்குமிடம் திம்மக்குடி என்னும் கிராமம். இந்த கிராமம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த ஊரில் உள்ள அக்ராஹாரத்தில் ஸ்ரீனிவாச என்பவர் வசித்து வருகிறார். அக்ராஹாரத்து வீடுகள் என்றாலே நான்கு கட்டு வீடுகள் ஆறு கட்ட வீடுகள் தான் அன்றிலிருந்து இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த திம்மக்குடி மஹாபெரியவாளுக்கு மிகவும் பிடித்த கிராமம். கும்பகோணம் வரும் பொழுதெல்லாம் தவறாமல் மஹாபெரியவா இந்த கிராமத்திற்கு வந்து விடுவார்.
மஹாபெரியவா சன்யாசம் வாங்கிய பின் காவிரி ஆற்றின் படுகையில் அமைந்துள்ள மஹேந்திரமங்கலம் என்னும் கிராமத்தில்தானே தன்னுடைய இளமைக்கால கல்வி மற்றும் புராண இதிகாசங்கள் மற்றும் சாஸ்திரங்கள் ஆசாரங்கள் தர்க்க சாஸ்திரங்கள் போன்றவற்றை கற்று தேர்ந்தார்.
இந்த திம்மக்குடியில் மஹாபெரியவாளுக்கு மிகவும் பரிச்சயமான ஸ்ரீனிவாச ஐயர் என்பர் வசித்து வருகிறார்.. திம்மக்குடி அக்ராஹாரத்தில் வசிக்கும் இவர் மஹாபெரியவா கும்பகோணம் வரும்பொழுதேல்லாம் எல்லா ஏற்பாடுகளையும் செய்வார். ஸ்ரீனிவாச ஐயருக்கு அந்த அக்ராஹாரத்தில் மூன்று நான்கு வீடுகள் உள்ளன.. அந்த வீடுகளில் ஒன்றை காலி செய்து மஹாபெரியவா தங்குவதற்கு கொடுத்து விடுவார்.
இது மட்டுமல்ல. மஹாபெரியவாளுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் இவர்தான் செய்வார். இந்த அக்ராஹாரத்தில் ராஜம் என்ற சிறுமியின் வீடும் உள்ளது. இவள் வீடு ஸ்ரீனிவாச ஐயரின் வீட்டிற்கு அருகில் உள்ளது. அக்ராஹாரம் என்றாலே மொத்தமே ஒரு இருபது வீடுகள் தானே இருக்கும். இந்த இருபது வீடுகளில் சிறுமி ராஜம் வீடும் ஒன்று.
ஒரு முறை மஹாபெரியவா கும்பகோணத்திற்கு வந்த பொழுது திம்மக்குடிக்கும் சென்றார். அங்கு சில நாட்கள் முகாமிட்டு இருந்தார். அப்பொழுது மஹாபெரியவாளின் விஸ்வருப தரிசனத்தை காண சுற்றிலும் இருக்கும் கிராமங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.
விஸ்வரூபம் என்பது என்னவென்றால் மஹாபெரியவா அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் தன்னுடைய அறையின் திரையை விலக்கி வெளியே வரும் பொழுது ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஏன்னும் கோஷத்தோடு விழுந்து நமஸ்காரம் செய்வதைத்தான் விஸ்வரூப தரிசனம் என்பார்கள்.
அப்படி ஒரு நாள் காலையில் அந்த திம்மக்குடி கிராமமே மஹாபெரியவாளின் விஸ்வரூபத்தை காண காலை மூன்று மணியில் இருந்தே கூட்டம் அலைமோதியது. அதில் இந்த சிறுமி ராஜமும் ஒருத்தி.. ராஜம் காலையில் மூன்று மணிக்கே எழுந்து குளித்து விட்டு தன்னை மஹாபெரியவா விஸ்வரூபம் காண தயார் படுத்தி கொண்டிருந்தாள்..
தழைய தழைய பட்டு பாவாடை கட்டிக்கொண்டு இரட்டை சடை பின்னல் போட்டுகொண்டு தலை நிறைய பூ வைத்து கொண்டு பெரிய மனுஷி மாதிரி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தாள்.
எல்லா வீடு வாசல்களிலும் வண்ண வண்ண கோலங்கள் போடப்பட்டிருந்தன. ராஜம் வீடு வாசலில் மட்டும் கோலம் போட வில்லை. ராஜத்தின் தயார் வாசலுக்கு வந்து ராஜத்தை வண்ணக்கோலம் போடும்படி உத்தரவிட்டு தான் மட்டும் மஹாபெரியவா விஸ்வரூபம் காண சென்றாள்.. சிறுமி ராஜத்திற்கு இது ஒரு மிகப்பெரிய ஏமாற்றம்.
இரவு முழுவதும் மஹாபெரியவா விஸ்வருபம் காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு தூங்கியும் தூங்காமலும் இரவை கழித்து அதிகாலை எழுந்து எல்லோருக்கும் முன்னால் தயாராகி விஸ்வரூபம் காணவிலையென்றால் எப்படி இருக்கும்.
ஆனால் அந்தக்காலத்தில் பெற்றோரை யாரும் எதிர்த்து பேசுவதோ இல்லை பணிவின்மையோ கிடையாது.. தனக்கு பிடிக்கிறதோ இல்லையோ பெற்றோர்களின் கட்டளையை செய்து விட்டுத்தான் வேறு வேலையை கவனிப்பார்கள்..
சிறுமி ராஜமும் பாவாடையை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு கோலப்பொடி டப்பாவை எடுத்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் கோலம் போட்டுஓண்டிருக்கும் பொழுதே சங்கர கோஷம் கேட்க ஆரம்பித்து விட்டது.
அந்த சமயத்தில் ராஜம் போட்டுக்கொண்டிருக்கும் கோலத்திற்கு அருகில் ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து இரண்டு மாமிகள் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு இறங்கி சிறுமி ராஜத்திடம் விஸ்வரூபம் ஆயிடுத்தா பெண்ணே என்று கேட்டார்கள்.
சிறுமி ராஜம் தலையை நிமிராமலேயே "போங்கோ இப்போதான் சங்கரகோஷம் கேட்கறது. போங்கோ போய் பெரியவாளை சேவிங்கோ. எனக்குதான் கொடுத்து வைக்கலை. நீங்களாவது போய் விஸ்வரூப தரிசனம் பண்ணுங்கோ.என்றாள்.
தான் தரிசனம் காண முடியவில்லை என்றாலும் போட்டுக்கொண்டிருக்கும் கோலத்தில் சிறு கோணல் கூட இல்லாமல் கோலத்தை சரி எய்து கொண்டிருந்தாள். அங்கு சங்கர கோஷம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. குனிந்த தலை நிமிராமல் சிறுமி ராஜம் கண்களில் கண்ணீருடன் கோலத்தில் முழுகி இருந்தாள்.
ராஜம் சிறுமிதானே. ஏமாற்றம் தாங்காமல் தன்னுடைய பாவாடை நுனியால் மூக்கை துடைத்து கொண்டிருந்தாள். அந்தசமயத்தில் இரண்டு தாமரை பாதங்கள் கோலத்திற்கு அருகில் வந்து நின்றது.
ராஜம் அலட்சியமாக ஒரு வினாடி அந்த பாதங்களை பார்த்தாள். பிறகு நிமிர்ந்தாள். பார்த்தாள். அங்கு மஹாபெரியவா நின்று கொண்டிருக்கிறார். ஆனால் சங்கர கோஷம் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
அவளுக்கு என்னசெய்வதென்று தெரியவில்லை.அப்படியே கோலத்தின் மீது விழுந்து மஹாபெரியவாளை நமஸ்கரித்தாள்..பாவாடையை வாரி சுருட்டிக்கொண்டு வீட்டிற்கு ஓடினாள்,
மஹாபெரியவா அந்தசிறுமியை ஒரு நிமிட நிற்கச்சொல்லிவிட்டு நீ போய் எல்லார் கிட்டேயும் சொல்லு முதலில் நீதான் மஹாபெரியவளை பார்த்தேன் என்று. .நீங்கள் எல்லோரும் எனக்கு அப்புறம்தான் பெரியவாளை தரிசனம் செய்யப்போறேள்.என்று சொல்லச்சொன்னாவுடன் சிறுமியின் முகத்தில் ஆயிரம் வாட்டஸ் பிரகாசம்.
மஹாபெரியவா முகத்தில் கருணை கரை புரண்டு ஓடியது.சிறுமியின் பக்தியும் பெருமையும் ஒரு சேர பிரவாகித்தது. சிறுமி ராஜத்தின் ஏமாற்றம் தன்னுடைய அறையில் அமர்ந்திருக்கும் மஹாபெரியவாளுக்கு எப்படி தெரிந்தது. இந்த பிரபஞ்ச சுற்று சூழலில் எங்கும் நிறைந்திருக்கும் பரமேஸ்வரனுக்கு தெரியாதா என்ன. கருணையின் ஊற்றுக்கண் மஹாபெரியவா அல்லவா ?
மஹாபெரியவா
ஞானியா அவதாரமா தெய்வமா
எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா
இந்த பிரபஞ்சத்தையும் பஞ்ச பூதங்களையும்
தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
ஒரு பிரும்ம வஸ்து
விவரிக்க முடியாது.
இந்த சிறுமி ராஜம் திருமணம் செய்து கொண்டு மாமி ராஜலக்ஷ்மி ஆனாள். அப்பொழுதும் அதே கும்பகோணத்தில் அந்த மாமி அனுபவித்த வேறொரு மஹாபெரியவா அற்புதத்துடன் உங்களை அடுத்தப்பதிவில் சந்திக்கிறேன்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்