Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -044


என் வாழ்வில் மஹாபெரியவா -044

பிரதி வியாழன் தோறும்

ஆத்மாவிற்கு மனம் உண்டா

ஆத்மாவிற்கு ருசி உண்டா

ஆத்மா இறைவனை சேர்ந்ததா

இல்லை மனிதனை சேர்ந்ததா

மேலே படியுங்கள்

உங்களுக்கு புரியும்

சென்ற வாரம் "என் வாழ்வில் மஹாபெரியவா" பதிவில் எண்ணங்களின் பிரபஞ்ச பயணத்தை பற்றி எழுதி இருந்தேன்.அதே போல் இந்த பதிவில் ஒரு ஆத்மாவின் பயணத்தை பற்றி சிறிது எழுதி விட்டு என்னுடைய அற்புதங்களுக்கு உங்களை அழைத்து செல்கிறேன்.

ஒவ்வொரு ஆத்மாவிற்கும் இரு பரிமாணங்கள் உள்ளன. அவைகள் பூத உடலின் பரிமாணம் மற்றொன்று பிரபஞ்ச பரிமாணம்.

ஒரு ஆத்மா இயங்க வேண்டுமானால் அதற்கு ஒரு உடல் தேவைப்படுகிறது. வாழ்க்கையில் ஆத்மா எப்பொழுதுமே உங்களை விண்ணுக்கு அழைத்து செல்ல முற்படும்.. ஆனால் உங்கள் மனசு உங்களை இங்கு மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க தூண்டும்.ஆத்மா இறைவன் என்றால் மனசு மனிதன்..

ஒவ்வொரு பிறப்பிலும் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் இந்த போரில் மனசு வெற்றி அடைந்து விடுகிறது. ஆனால் ஆத்மா தோல்வி அடைந்து விடுகிறது..

இறைவனும் நமக்குள் அந்தர்யாமியாக இருந்து கொண்டு இந்த ஜென்மத்திலாவது உண்மையை உணர்ந்து தன்னுடன் வந்து விடுவான் என்று உயிர் பிரியும் வரை காத்திருந்து விட்டு பிறகு அடுத்த பிறவிலியிலும் நமக்குள்ளே புகுந்து அந்தர்யாமியாக இருந்து விடுகிறான்.ஆனால் ஒவ்வொரு பிறவியிலும் நாம் அவனையும் ஏமாற்றி விடுகிறோம்.நம்மையும் நாம் ஏமாற்றிக்கொள்கிறோம்.

இந்த மனசுக்கும் ஆத்மாவிற்கும் நடக்கும் போரில் நம்முடைய ஆதரவு என்றுமே மனசுக்கு இருப்பதால் ஆத்மா தோற்று விடுகிறது. ஆத்மா இறைவனின் பிரதிநிதி.மனசு மனிதனின் பிரதிநிதி..

எப்பொழுதுமே நமக்கு கிடைக்கும் பலனை பற்றி தெரிந்துகொண்டால் நம்முடைய ஆதரவு ஆத்மாவிற்கு கிடைத்து விடும்.அந்தசமத்தில் ஆத்மா வென்று விடும். அப்பொழுது அந்த ஆத்மா புனிதத்தன்மை அடைந்து எப்படி விண்ணுலகம் செல்கிறது என்பதை அடுத்தப்பதிவில் எழுதுகிறேன்.

நாம் எங்கு செல்வோம். செல்லும் வழியில் எந்த எந்த உலகத்தை கடந்து செல்வோம்...நம்மை யார் அழைத்து செல்வார்கள்..உடலில் இருந்து ஆத்மா பிரியும் செயல் எப்படி பட்டது.. அதில் வலி இருக்குமா. அண்டவெளி பிரபஞ்சத்தின் இறுதியில் இருக்கும் நம்முடைய சொந்த நாடு எப்படி பட்டது என்பதை எல்லாம் அடுத்த பதிவில் இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

இந்த பதிவின் அற்புதம்:

எனக்கு சிறு வயதில் இருந்தே வாசனை தரக்கூடிய முகத்திற்கு போடும் பவுடர் உடல் வாசனைக்கு செண்டுகள் மற்றும் வாசனை தரக்கூடிய எல்லா பொருள்களையும் மிகவும் ஆசைப்பட்டு வாங்குவது மட்டுமல்ல. வெளி நாட்டில் இருந்து யார் வந்தாலும் அவர்களிடம் இந்த வாசனை பொருட்களை வாங்கி வருமாறு சொல்லுவேன்.

உடலுக்கு தேய்க்கும் சோப்பு கூட சந்தன வாசனை அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். பள்ளி நாட்களில் இருந்தே இந்த ஆசை எனக்கு உண்டு. தூங்க போகும் பொழுது கூட வாசனை பொருட்களில் சிலவற்றை மேலே அடித்துக்கொண்டுதான் செல்வேன்.

பள்ளி நாட்களில் இருந்தே எனக்கு நண்பர்களும் வீட்டில் உள்ளவர்களும் வைத்த பெயர் அலங்கார பூஷணன்..மண்ணில் விழுந்து மக்கிப்போகும் உடலுக்கு அப்படியொரு முக்கியதுவம் கொடுத்து வாழ்ந்ததை நினைத்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது.. நமக்கு அன்று எல்லாமே தெரிந்து விடுகிறது. ஆனால் புரிவதற்கு எத்தனை ஆண்டுகள் பிடிக்கிறது.. அதுவும் எனக்கு மஹாபெரியவா புரிய வைத்ததால் புரிந்தது. இல்லையென்றால் இன்றும் அலங்கார பூஷணன் தான்.

ஒரு நாள் இரவு அன்றும் வியாழக்கிழமை இரவு ஒன்பது இருக்கும். நான் உறங்கப்போவதற்கு முன் மஹாபெரியவாளிடம் அன்றைய என்னுடைய நடவடிக்கைகளை சமர்ப்பித்து விடுவேன்.அப்பொழுதெல்லாம் மஹாபெரியவாளிடம் நான் பேசுவேன்..

அவர் என் பேச்சை நிச்சயம் கேட்கிறார் என்பது எனக்கு தெரியும்.முதலில் நானும் என்னை நானே திட்டிக்கொண்டு சென்ற நாட்களும் உண்டு. என்னை சுற்றி இருப்பவர்களும் என்னை ஒரு லூசு என்றுதான் சொல்லுவார்கள்.

ஆனால் ஓர் சமயத்தில் நான் பெரியவாளிடம் பேசுவதும் அதற்கு மஹாபெரியவா கொடுக்கும் பதிலும் நடக்கும் சம்பவங்களும் அப்படி ஒன்றை ஒன்று சார்ந்தே இருந்தது.பிறகுதான் நான் சகஜமாக பேச ஆரம்பித்தேன். அங்கு மௌனமே ஒரு மொழியானது.

அன்றும் நான் என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பித்து விட்டு விடை பெற திரும்பினேன். ஏண்டா என்ற வழக்கமான வார்த்தையுடன் மஹாபெரியவா பேசஆரம்பித்தார். அந்த பேச்சை ஓரு சம்பாஷணை வடிவில் தருகிறேன்.

G.R. சொல்லுங்கோ பெரியவா என்றேன்.

பெரியவா: ஏண்டா நீ என்ன பெருமாளா? அலங்கார பிரியானா?

G.R. இல்லை பெரியவா. அது ரொம்ப பிடிச்சிருக்கு. அதுனாலே போட்டுப்பேன் என்றேன்

பெரியவா: அதெல்லாம் இனிமே உனக்கு வேண்டாம் என்றார்.

G.R. அது ஏன் பெரியவா. ஏதாவது உள்ளுக்கு சாப்பிட்டால் அது சத்துவ குணத்தை பாதிக்கும். இது வெளியில் போடற வஸ்து தானே பெரியவா என்றேன்

பெரியவா:: நீ ஒன்னு தெரிஞ்சுக்கோ. எல்லா ஆத்மாக்களுக்கும் வாசனை இருக்கு ருசி இருக்கு.. அது தனித்து செயல் படாது.

G.R: பெரியவா ஆத்மாவிற்கு குணம் இல்லை. ஆத்மாவை நிர்குணன் அப்படின்னு சொல்லறாளே.

பெரியவா:: ஆமாண்டா ஆத்மாவுக்கு குணம் கிடையாது. எதுவுமே கிடையாது தனித்து இருக்கும் வரை. எப்போ ஒரு ஆத்மா ஒரு உடலை எடுத்துக்கொண்டதோ அப்பொழுது அந்த உடல் ஆத்மாவின் மனத்தையும் குணத்தையும் வெளிப்படுத்தும்.

அதுனாலே ஒரு மனிதனுக்குள் இருக்கும் பொழுது அந்த மனிதன் மூலமா அதனுடைய வாசனையை வெளிப்படுத்தும். ஒரு மனித உடம்பிற்குள் ஒரு ஆத்மா ரொம்பவும் சந்தோஷமா இருக்கு.. அந்த ஆத்மா பிரபஞ்சத்துடன் தொடர்பில் இருக்கிறது என்றால் அந்த ஆத்மாவை உள்ளே கொண்டுள்ள உடம்பில் இருந்து வரும் வாசனை சந்தானம் சாம்பிராணி விபூதி போன்ற வாசனைகளை வெளிப்படுத்தும். .

இதே ஒரு ஏமாற்றம் அடைந்த ஆத்மா மனசிடம் தோல்வி அடைந்த ஆத்மா என்னதான் விண்ணை தொட்டாலும் மனசிடம் தோற்ற அந்த ஆத்மா அந்த உடம்பில் இருந்து வெளிப்படுத்தும் நாற்றம் அழுகிபோன பழங்களின் நாற்றம் ஊசிப்போன தின்பண்டங்களின் துர் நாற்றம் இவைகளை வெளிப்படுத்தும்.

பெரியவா: ஒருவன் தம் குணங்களையோ ரஜோ குணங்களையோ கொண்டிருந்தால் இந்த ஆத்மா தன்னுடைய புனிதத்தன்மையை இழந்து மனிதன் கொடுக்கும் சுவைகள் அத்தனையும் வெளிப்படுத்தும். அப்பொழுது ஆத்மாவின் ருசியும் வெளிப்படும்.

G.R: பெரியவா ஆத்மாவுக்கு சுவை எல்லாம் உண்டா பெரியவா? என்றேன்.

பெரியவா: ஆத்மாவிற்கு சுவை கிடையாது. ஆனால் அந்த ஆத்மா ஒரு செயலில் ஈடுபடும்பொழுது அந்த செயலை செயல்படுத்தும் ஒருவனின் ராஜா குணமோ தமோ குணமோ மேலோங்கி இருந்தால் நிச்சயம் அந்தச்செயலின் இறுதி வடிவம் ஒரு மோசமான ருசியை கொடுத்து விடும்.

உதாரணத்திற்கு ஒருவர் சமைக்கும் போது அந்த பண்டம் நன்னனா வாசனையை இருக்கு. அதே பண்டத்தை இன்னொருத்தர் சமைக்கிறார். அந்த பண்டத்தில் ருசி இருக்கறது இல்லை. .ருசி இருக்கும் பண்டத்தை சமைத்தவர்களுக்கு கை மணம்னு சொல்லுவா.. இது அந்த ஆத்மா அந்த பண்டத்தின் மூலமா தன்னுடைய வாசனையயை வெளி படுத்தறது

அது போல சாப்பாடு பரிமாறும் பொழுது இந்த ஆத்மாவின் எண்ணங்கள் வெளிப்படும்.. சிலர் பரிமாறும்பொழுது இன்னும் சாப்பிடலாம் என்று இருக்கும். ஒரு சிலர் பரிமாறும் போது வயிறு அடைத்து விடும்.கொஞ்சம் சாப்பிட்ட உடனேயே வயிறு அடைத்து விடும். போறும் என்று ஆயிடும்.