Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -045


என் வாழ்வில் மஹாபெரியவா -045

பிரதி வியாழன் தோறும்

ஏதாவது ஒரு ஜென்மத்தில்

தாய் மடியில் ஓய்வெடுக்கும் காலம் முதல்

பூமித்தாயின் மடியில் ஓய்வெடுக்கும் காலம் வரை

நான் உங்களுக்காக உழைக்க வேண்டும்

ஒரு மனிதன் முழு மனிதத்துவம் அடைய வேண்டுமானால் அவன் தன்னை மூன்று வழிகளில் சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்..அவைகள் சரீர சுத்தி ஆத்ம சுத்தி பூரண சுத்தி. இந்த மூன்று புனிதத்தையும் அடைந்து விட்டால் ஒரு மனிதனின் சத்துவ குணம் மேலோங்கி தமோ குணமும் ரஜோ குணமும் பின்னுக்கு தள்ள படும்..

இவைகளை மஹாபெரியவா என்னிடம் சொல்லாவிட்டாலும் என்னுடைய அனுபவத்திலிருந்து நான் தெரிந்துகொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இத்தனை நாளும் நான் அனுபவித்த மஹாபெரியவா அற்புதங்களை நாம் எல்லோருமே அனுபவித்து வந்தோம்.

அந்த சரீர சுத்தி என்னை எப்படி மாற்றியது. நான் உணர்ந்தது என்னென்ன. நான் எப்படிப்பட்ட அனுபவங்களை சந்தித்தேன். அவைகள் என்னை வாழ்க்கையில் எவ்வளவு தூரத்திற்கு முன்னெடுத்து சென்றது என்பதை எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொண்டால் தான் மஹாபெரியவா என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை எழுதும் என் எழுத்துக்கள் பருவம் எய்தும் என்பது என் கருத்து. அதாவது முயற்சி முழுமை பெரும்.

அதன் விளைவுதான் இந்த அனுபவ பகிர்தல்:

நான் சரீர சுத்தி அடைந்தவுடன் என்னுடைய வெளி உலகத்தை பற்றிய பார்வை மாறியது. முதலில் கோபம் காணாமல் போனது. மற்றவர்களிடம் குற்றம் குறைகள் கண்டுபிடிக்கும் எண்ணம் மாறியது.

என்னுடைய நாக்கும் மனதும் என் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் மனம் அமைதி அடைந்தது. நாம் வாழும் பூமியில் இருந்து என் கவனம் முழுவதும் வானத்தில் எதையோ தேட ஆரம்பித்தது.

நான் தூங்க ஆரம்பித்தால் என் தூக்கம் பிரபஞ்ச பயணத்திற்கு என்னை அழைத்து செல்லும்.....உலக விஷயங்கள் எதிலுமே எனக்கு ஈடு பாடு வரவில்லை. வெளி நாட்டிற்கு செல்லும் வாய்ப்புகள் பலமுறை வந்தும் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன்.. எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கூட வேண்டாம் என்கிறாயே என்று என் சொந்தங்கள் என்னை கேட்கும்.

நான் சொல்லுவேன் உங்களுக்கெல்லாம் இந்த பூலோகம் உலகம் என்றால் எனக்கு அந்த பூலோகத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவாதான் என் உலகமே. .

என்னுடைய உலகம் மேலே இருக்கிறது. என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லிவிடுவேன்.. ஆனால் மேலே வானத்தில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் எதையோ என் மனம் தேட ஆரம்பித்து விட்டது. வானத்தை பார்த்தாலே என்னுள் ஒரு ஏக்கமும் தாபமும் ஏற்பட்டுவிடும்..

தனி மனித ஒழுக்கத்தில் மனம் ஈடுபட ஆரம்பித்தது. எனக்கு தெரிந்தார்கள் அறிமுகம் இல்லாதவர்களுக்கு எல்லாம் அறிவுரை சொல்ல ஆரம்பித்தேன். ஒரு அதிசியம் என்ன தெரியுமா? எல்லோரும் நான் சொல்வதை ஏற்றுக்கொண்டார்கள். நான் ஒன்றை புரிந்துகொண்டேன். நாம் சொல்வதை என்று வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறோமோ அந்த வார்த்தைகள் சபை, ஏறும் என்னும் உண்மையை நான் உணர்ந்து கொண்டேன்.

“Practice before you Preach” என்னும் இந்த வார்த்தைகளை மஹாபெரியவா என்னை கடைபிக்க வைத்திருக்கிறார். என் அனுபவத்தை என் கண்களால் காணுகிறேன். இவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக எழுதும் பொழுதும் சரி இத்துடன் நிறுத்தி விட்டு அற்புகத்திற்குள் நுழைவோம் என்று நினைப்பேன்.

ஆனால் என் மனம் என்னை விடாது.என்னுள் பல எண்ணங்களை தோற்றுவித்து என்னுடைய ஒரு விரல் என்னையும் அறியாது எழுத்துக்களை காதலிக்க ஆரம்பித்து தட்டச்சு பலகையில் நர்த்தனம் ஆட ஆரம்பித்து விடும். விரல் எங்கு நின்று என்னை பார்த்து இனிமேல் நீ எழுது என்று ஆணையிடும் பொழுதான் நான் மேற்கொண்டு எழுத முடியும்..

இது என் எண்ணங்களா அல்லது மஹாபெரியவா என்னுள் இருந்து என்னை இயக்குகிறாரா என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் என்னுடைய மஹாபெரியவா அனுபவங்கள் உங்களை சென்றடைய வேண்டும் என்பது மஹாபெரியவளின் குறிக்கோள். குறிக்கோள் நிறைவேறினால் எனக்கும் சந்தோஷம்.. உங்களுக்கும் ஆனந்தம். மஹாபெரியவாளுக்கும் குறிக்கோள் பூர்த்தியான ஒரு திருப்தி.

அப்பொழுது உங்களை இறைவனிடம் இழுத்து செல்லும் சக்தியாக உங்களுடைய சத்துவ குணம் செயல் படும்..எப்பொழுது சத்துவ குணம் உங்கள் ரஜோ குணம் மற்றும் தமோ குணங்களை விட .மேலோங்கி நிற்கிறதோ அந்த வினாடியே உங்கள் சத்துவ குணமும் ஆத்மாவும் கை கோர்த்து மனசின் துணையோடு உங்களை இறைவனின் பாதையில் அழைத்து சென்று விடும்.

மனிதனின் முழமையான மாற்றத்திற்கு இதுதான் அடிப்படை. ஆரம்பம். நாம் எல்லோருமே ஒரு முழுமையான மாற்றத்திற்கு தான் ஒவ்வொரு ஜென்மத்திலும் முயல்கிறோம். இந்த ஜென்மத்தில் நமக்கு பாதை தெரிய ஆரம்பித்து விட்டது. இப்பொழுது நாம் முயலவில்லை என்றால் இது போல் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

இந்த இறை பயணத்தின் அஸ்திவாரத்தை இத்துடன் இந்த பதிவில் நிறைவு செய்கிறேன். அடுத்த பதிவிலும் இந்த இறை பயணத்தின் பாதை தொடரும். இனி இந்த பதிவின் அற்புதத்திற்குள் செல்வோம்.

அற்புதத்தின் ஆரம்பம்:

எனக்கு சிறு வயதில் இருந்தே உலக விஷயங்களையும் அன்றாட நாட்டு நடப்புகளையும் தெரிந்து கொள்வதில் மிகவும் நாட்டமுடன் இருப்பேன்.. அதுவும் தொலை காட்சி வந்ததில் இருந்து செய்தி சேனல்களையும் இசை போட்டிகளையும் இரவு பத்து மணி வரை பார்த்து விட்டுத்தான் உறங்கச்செல்வேன். அதுவும் எனக்கு பிடித்த நிகழ்ச்சிகளாக இருந்தால் மிகவும் சப்தமாக வைத்து கேட்பேன்..

இப்படியே நாளொறுபொழுதும் தொலை காட்சியுமாக வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருந்தேன். வேறு என்னசெய்யமுடியும். வெளி உலகத்தை பார்க்க செல்ல முடியாது. புத்தகங்களை படிக்க தோன்றாது.

அதுவும் தேர்தல் நேர சிறப்பு செய்திகள் என்றால் எனக்கு சாப்பாடு கூட வேண்டாம்..இப்படி இருபத்தி நாலு மணி நேரமும் தொலை காட்சி முன் உட்கார்ந்து உலகை மறந்து நேரத்தை போக்கிக்கொண்டிருப்பேன்.. நல்ல வேலையாக அந்த நாட்களில் இருந்தே தொலை காட்சிகளில் வரும் சீரியல் கொடுமைகளை பார்ப்பதே கிடையாது..

ஒரு நாள் வியாழக்கிழமை இரவு மணி ஒன்பது இருக்கும்.சாப்பிட்டு விட்டு தொலை காட்சி முன் அமர்ந்து இசை நிகழ்ச்சிகளை ஒளி பரப்பிக்கொண்டிருக்கும் சேனலை ரிமோட் மூலம் வைத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஏண்டா என்னும் குரல் மஹாபெரியவா என்னை அழைக்கிறார். அந்த அழைப்புக்கு பிறகு நடந்த சம்பாஷணைகளை உங்களுக்கு வழக்கம் போல் இங்கு தருகிறேன்.

பெரியவா : ஏண்டா நான் சொன்னதையெல்லாம் கேட்டு சரீர சுத்தியை முடித்து விட்டாய். இனிமே உனக்கு ஆத்ம சுத்தி ஆரம்பிக்கப்போகிறேன். நீ ஒத்துழைக்கிறாயா? என்று கேட்டார்.

G.R: நிச்சயம் பெரியவா. சரீர சுத்தி பயிற்சியில் நான் உங்களுடன் கொஞ்சம் தர்க்கம் பண்ணியிருந்தாலும் இப்போ என்னால் எதையும் விடமுடியும் என்ற நிலைக்கு என்னை தயார் படுத்தி விடீர்கள். சொல்லுங்கள் பெரியவா நான் எதற்கும் தயார் என்றேன்.

பெரியவா நீயும் காத்தலே இருந்து ராத்திரி வரைக்கும் டிவி முன்னாடியே உட்கார்ந்து பொழுதை போக்கறே. வேண்டாம் அது உன்னுடைய மனசை கெடுக்கும். நீ இவ்வளவு தூரம் எல்லாத்தையும் விட்டுவிட்டு சத்துவ குணத்தை மேலோங்கி வைத்திருக்கிறாய். இந்த டிவி ஒண்ணு போறும் உன் சத்துவ குணத்தை மாத்தறதுக்கு. இனிமே உனக்கு டிவி வேண்டாம் என்றார்.

G.R பெரியவா நான் டிவியில் வேண்டாததை எல்லாம் பார்ப்பது இல்லை பெரியவா. வெறும் செய்திகள் கச்சேரிகள் இவைகளைத்தான் கேட்கிறேன்.நான் வெளி உலகத்தையும் பார்ப்பது கிடையாது.எனக்கு வேறு பொழுது போக்கு கிடையாது. டீவியும் பார்க்கக்கூடாது என்றால் எனக்கு பைத்தியமே பிடித்து விடும்பெரியவா என்றேன்.

பெரியவா: உனக்கு ஆத்ம சுத்தி வேண்டுமானா உன்னுடைய சிந்தனையில் பகவானை தவிர வேறே சிந்தனை எதுவும் இருக்கக்கூடாது...உனக்கு சரீர சுத்தியோ ஆத்ம சுத்தியோ கிடைப்பது பெருசு இல்லை. அதை வைத்து காப்பாற்றுவது ரொம்ப கஷ்டம்..ஒரு க்ஷண பொழுதிலே நீ மறுபடியும் பழைய நிலைமைக்கே போயுடுவே..

உன்னை சுற்றி ஒரு உலகத்தை கட்டிகோ. வெளி உலக விஷயங்களோ வஸ்துக்களோ உள்ள நுழைய விடாமல் பார்த்துக்கணும். இது சாதாரணமில்லை. இது யாகம் செய்வதற்கு சமம். இது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு வேள்வியை போன்றது.இது ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். நீ உருவாக்கிய உன்னுடைய உலகத்தை புரிந்து கொண்டு அதில் வாழ ஆரம்பித்து விட்டால் உன்னை எந்த சக்தியாலும் ஒன்னும் செய்ய முடியாது..

மனித மனம் எப்பொழுது என்ன செய்யும் என்று யாருக்கும் தெரியாது. உன்னுடைய கட்டுப்பாட்டில் உன் மனம் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருப்பாய். ஆனால் ஏதாவது வேண்டாத உலக விஷயங்கள் உள்ளே நுழைந்து விட்டால் உன்னுடைய மனமும் லௌகீக விஷயங்களும் கைகோர்த்து விட்டால் நீ தோற்றுப்போவாய்..

எப்படி சத்துவ குணமும் பிரபஞ்சமும் மனசுடன் ஒன்று சேர்ந்தால் உன்னை இறைவனின் பாதைக்கு அழைத்து செல்லுமோ அதே போல் ரஜோ குணமும் தமோ குணமும் மனசும் ஒன்று சேர்ந்தால் உன்னை இந்த லௌகீக வாழ்க்கைக்கு அழைத்து சென்று சீரழித்து விடும். .

உன்னுடைய மூன்று குணங்களுக்குமே உன் மனதை ஆட்டிப்படைக்கும் சக்தி உண்டு. ஆனால் சத்துவ குணமும் ஆத்மவும் மனதை மையமாக வைத்து ஒன்று சேர்ந்து விட்டால் மற்ற இரண்டு குணங்களும் ஒன்றும் செய்ய முடியாது.. அதுவரை நீ ஒரு பட்டுப்பூச்சி கூட்டிற்குள் இருக்கும் புழுவை போன்றவன் .

உனக்கு இறக்கை முளைக்கும் வரை கூட்டிற்குள்ளயே அமைதியக வெளி உலகிற்கு பலியாகாமல் வாழ்ந்து விட்டால் வானத்தில் தெரியும் ஏழு நிறங்களின் வானவில்லை போன்று ஆகி விடுவாய். அதுவரைக்கும் போராட்டம் தான். இதை நன்றாக தெரிந்து கொள்.