top of page
Featured Posts

திருப்புகழ்- 7


மகா பெரியவா சரணம்.

அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம்.

திருப்புகழ்- 7

மகா பெரியவா என்னும் அருள் மழையில் தவம் புரியும் அடியார் எல்லாருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம் இன்று நாம் திருப்புகழ் பாடல் 7 பாராயணம் செய்வோம். முருகா என்று மெய் உருகி அழைக்கும் போது வரும் தெய்வத்தை தடுப்பது எது? நம்முள் இருக்கும் தேவை இல்லாத குணங்கள் , அவைகளை வென்று தெய்வத்தின் திருவடியை நம்முள் அடைய அருள்வதே திருப்புகழ்

நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம்

திருப்புகழ் 7 அருக்கு மங்கையர்  (திருப்பரங்குன்றம்)

......... பாடல் ......... அருக்கு மங்கையர் மலரடி வருடியெ      கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை          அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ...... இருதோளுற் றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ      உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட          அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென ...... மிகவாய்விட் டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய      சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்          உறக்கை யின்கனி நிகரென இலகிய ...... முலைமேல்வீழ்ந் துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு      பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற          உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது ...... தவிர்வேனோ இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற      உரைத்த சம்ப்ரம சரவண பவகுக          இதத்த இங்கிதம் இலகிய அறுமுக ...... எழில்வேளென் றிலக்க ணங்களும் இயலிசை களுமிக      விரிக்கும் அம்பல மதுரித கவிதனை          இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை ...... புனைவோனே செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற      நடித்த சங்கரர் வழிவழி அடியவர்          திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய ...... குருநாதர் திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு      குருக்க ளின்திற மெனவரு பெரியவ          திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் ......... அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின் அரைதனில் உடை தனை அவிழ்த்தும் ... அருமை வாய்ந்த விலைமாதர்களின் மலர் போன்ற அடிகளைப் பிடித்தும், (அவர்களுடைய) எண்ணத்தை அறிந்த பின்பு இடுப்பில் கட்டிய ஆடையை அவிழ்த்தும், அங்கு உள அரசிலை தடவியும் இரு தோள் உற்று அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட ... அங்குள்ள அரசிலை போன்ற உறுப்பைத் தடவியும், அவர்களுடைய இரண்டு தோள்களிலும் பொருந்தி அணைத்தும், அங்கையின் அடிப்பாகம் தோறும் நகக் குறிகள் இட்டும், இதழ்களை மென்று பற்களால் பல குறிகள் பதித்தும், அடிக் களம் தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு உருக்கும் அங்கியின் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறு பலம் உற ... அடி நெஞ்சில் மயில் குயில் புறா ஆகிய இப் பறவைகள் போன்று பெரிய ஒலி எழச் செய்தும், உருக்க வல்ல நெருப்பிலிட்ட மெழுகு போல உருகிய ஊக்கம் மிக்க அனுபவத்தால் வருகின்ற பயன்களைப் பெற, கையின் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து உருக் கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியின் முழுகி மெய் உணர்வு அற உழைத்திடும் கன கலவியை மகிழ்வது தவிர்வேனோ ... கையில் உள்ள பழம் போல் விளங்கிய தனங்களின் மீது விழுந்து உருவம் கலங்கி உடல் உருகி, அமுதம் பெருகும் பெருத்த உந்தித் தடத்தில் முழுகி, மெய் உணர்வு அற்றுப் போகும் வண்ணம் உழைக்கின்ற பெருத்த கலவி இன்பத்தில் மகிழ்ச்சி கொள்ளுவதை விட்டு ஒழியேனோ? இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று ... ரிக் வேத மந்திரத்தை (வசிஷ்டர் முதலிய) ஏழு வகை ரிஷிகளும் அறியும்படி உரைத்த சிறப்பு வாய்ந்தவனே, சரவணபவனே, குகனே, இதம் தருவதும், இனிமை தருவதுமாய் விளங்கும் ஆறு முகங்கள் கொண்ட அழகிய வேளே என்று, இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவி தனை இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசை புனைவோனே ... இலக்கணங்கள் பொருந்த இயற்றமிழாலும் இசைத் தமிழாலும் விரித்துரைக்கும் அழகிய பல மதுரம் மிகுந்த கவிகளாக இயற்றப்பட்ட செந்தமிழை வகைவகையாக திருப்புயத்தில் பாமாலையாக அணிந்தவனே, செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற நடித்த சங்கரர் வழி வழ அடியவர் திருக் குருந்தடி அருள் பெற அருளிய குரு நாதர் ... களிப்புடன் பொன்னம்பலத்தின் மீது அசைந்து கூத்தாடும் சங்கரரும், (தமக்கு) வழிவழி அடியவரான மாணிக்க வாசகருக்கு (திருப் பெருந்துறையில். திருக்குருந்த மரத்தடியில் அருள் பெறும் வண்ணம் அருள் செய்த குரு நாதரகிய சிவபெருமானது திருக் குழந்தையும் என அவர் வழி படு குருக்களின் திறம் என வரு பெரியவ திருப்பரங்கிரி தனில் உறை சரவண பெருமாளே. ... திருக் குழுந்தை என்ற நிலையிலும் அந்த சிவபெருமானே வழிபட்டு நிற்கும் பெரு நிலையிலும் எழுந்தருளியுள்ள பெரியோனே, திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே, பெருமாளே.

என்றும் உங்கள் செந்தில்நாதன்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page