பெரியவா பார்வையில்-009 பெரியவா பார்வையில் மஹான்கள் வேதாந்த தேசிகர்

சைவத்தையும் வைணவத்தையும்
இந்து மதத்தின் இரு கண்களாக பார்த்த
மஹாபெரியவா

பெரியவா பார்வையில்-009
பெரியவா பார்வையில் மஹான்கள்
வேதாந்த தேசிகர்
சென்ற பதிவில் மஹான்களுக்கு மனம் இறங்கிய மஹாலக்ஷ்மி என்னும் தலைப்பில் விஜயநகர பேரரசு உருவாக காரணமாக இருந்த வித்யாரண்யர் பற்றி அறிந்து கொண்டோம். இந்தப்பதிவில் வேதாந்த தேசிகருக்கு மஹாலக்ஷ்மி எப்படி மனம் இறங்கினாள் என்பதை மஹாபெரியவா சொன்னதை பற்றி பார்ப்போம்.
வைஷ்ணவத்தில் ஏராளமான ஸ்லோகங்களையும் பிரபந்தங்களையும் எழுதி வைணவத்திற்கு என்று வழிபாட்டு முறையை அளித்தவர்களில் ஒருவர் வேதாந்த தேசிகர்.
வேதாந்த தேசிகர் மனம் உருகி அழைத்தால் மஹாலக்ஷ்மி தரிசனம் கொடுத்து என்ன வரம் வேண்டுமோ அந்த வரத்தை அளித்து விட்டு சென்று விடுவாள். இவருக்கு ஊரில் உள்ள எல்லோரும் மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் அளித்தார்கள்.
எப்பவுமே ஒருவருக்கு நல்லது நடந்தால் மற்றவர்களுக்கு அது பொறுக்காதே. அப்படியொரு ஒருவர் அந்த ஊரில் இருந்தார். வேதாந்த தேசிகரை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டுமென்று ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தார் அந்தபொறாமை பேர்விழி.
அந்தகாலத்தில் ஒரு பெண்ணை மணம் முடிக்க வேண்டுமானால் பெண் வீட்டாருக்கு ஆண் மகன் வர தக்ஷினை கொடுத்துதான் திருமணம் முடிக்க வேண்டும். அந்த ஊரில் ஒருவன் இருந்தான்.. அவன் வளர்ந்து விட்டானே தவிர சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை.திருமணம் செய்து கொள்ள வசதியும் கிடையாது.
ஒரு நாள் அந்த பொறாமைக்கார ஆசாமி இந்த நபரை அழைத்தார். இவனுடைய திருமண ஆசையை தெரிந்து கொண்டு தேசிகரை பற்றி சொல்லி அவரிடம் சென்று மகாலட்சுமியிடம் பேசி பொன்னும் பொருளும் வாங்கி நீ திருமணம் செய்து கொள் என்று ஆலோசனை சொல்கிறார்.
இந்த அரைகுறை ஆசாமியும் சரி என்று சொல்லி தேசிகரிடம் சென்றாராம். அந்த பொறாமை பேர்விழிக்கு ஒரே சந்தோஷம். தேசிகர் பெருத்த அவமானத்திற்கு ஆளாகப்போகிறார் . ஊரே அவரை காறி உமிழ்ப்போகிறது என்று நினைத்து மனப்பால் குடித்துக்கொண்டிருந்தாராம்..இந்த அரைகுறை ஆசாமியும் வேதாந்த தேசிகரிடம் சென்று அந்த பொறாமைக்காரர் சொன்னதை அப்படியே சொன்னாராம்.
தேசிகரோ திரிகால ஞானி. அவருக்கா தெரியாது. அவருக்கு தெரிந்து விட்டது. இவன் வெறும் அம்புதான். எய்தவன் எங்கோ இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு சிறிது நேரம் காத்திருக்க சொல்லி மனம் உருகி த்யானம் செய்து மஹாலக்ஷ்மியை அழைத்தாராம். மகாலட்சுமியும் நேரில் பிரசன்னமாகி வேதாந்ததேசிகர் கேட்ட பொன்னையும் பொருளையும் கொடுத்து விட்டு மறைந்தாள்.
மகாலட்சுமியிடம் கேட்டு பெற்ற பொன்னையும் பொருளையும் வந்தவரிடம் கொடுத்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இரு என்று சொல்லி அனுப்பினாராம் தேசிகர்..
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அந்த பொறாமை காரர் வேதாந்த தேசிகரிடம் ஓடி வந்து மன்னிப்பு கேட்டு காலில் விழுந்தாராம்.
இந்த நிகழ்வில் பெரியவா பார்வை :
எப்பொழுதுமே மஹான்கள் எது செய்தலும் அது எல்லோருக்கும் நன்மையிலேயே முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. .. தேசிகர் நிகழ்த்திய அற்புதத்தில் தன்னுடைய தவ பலத்தை உலகிற்கே காண்பித்தார். பொறாமை கொண்டவரை அவர் செய்தது தவறு என்று உணர வைத்து நல்லவராக மாற்றினார்... அந்த பொறாமை காரர் வேதாந்த தேசிகரை அவமானப்படுத்த நினைக காரணத்தால் தேசிகரும் மஹாலக்ஷ்மியை துதி செய்த ஸ்லோகம் நமக்கு கிடைத்தது
ஸ்ரீ ஸ்துதி.- மனம் உருக ஸ்ரீ ஸ்துதியை சொன்னால் அந்த மஹாலக்ஷ்மியை நேரில் ப்ரசன்னமாவது உறுதி.
.திருமணம் ஆகாத அந்த அரைகுறை ஆசாமிக்கும் பொன்னும் பொருளும் கிடைத்து திருமணமும் ஆனது.. இதுவே மஹாபெரியவா சொன்னதற்கு சான்று.
ஞானிகள் ஒரு போதும் மனதார மற்றவர்களை சபிக்கமாட்டார்கள்.எத்தனை பொண்ணும் பொருளும் இருந்தாலும் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று போய் விடும் மனம் படைத்தவர்கள்.
வேதாந்த தேசிகர் மஹாலலக்ஷ்மியை மனம் உருகி வேண்டும் ஸ்தோத்திரம் தான் ஸ்ரீ ஸ்துதி. ஸ்ரீ ஸ்துதியை சொன்னால் வீட்டில் அமைதியும் ஐஸ்வர்யமும் பெருகும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
மீண்டும் மற்றொரு பெரியவா பார்வையில் சந்திப்போம்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்