Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-24 பாகம்-II ராமானுஜம் குமுத வள்ளி


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-24 பாகம்-II

ராமானுஜம் குமுத வள்ளி

வட்டத்துக்குள் சிக்கியவன் திசையை இழப்பான்

வாழ்க்கை என்னும் வட்டத்துக்குள் சிக்க வேண்டாம்

இறைவனின் துணையோடு வாழ்க்கையை நடத்துங்கள்

மஹாபெரியவாளை அழையுங்கள்

உங்களை வழி நடத்துவார்

இதுவரை ஆறு வார மஹாபெரியவா குரு பூஜை முடிந்தது. ஆறாமல் இருந்த புண் ஆறி விட்டது. புண் இருந்த இடம் ஓட்டையாகி மூடாமல் இருந்தது. இதனால் வேலைக்கும் செல்ல முடியவில்லை. இரண்டு வருட வேலை நீடிப்பு கேள்விக்குறியானது. இப்பொழுது ஓட்டை சதை வளர்ச்சியால் அடைபட்டு விட்டது.

ராமானுஜம் வேலைக்கு செல்ல தயாராகி விட்டார். ஒரு வருடமாக ஆறாமல் இருந்த புண் மஹாபெரியவா குரு பூஜைக்கு பின் ஆறிய அற்புதத்தை என்னவென்று சொல்வேன். வாருங்கள் இனி மேற்கொண்டு நடந்த அற்புதத்திற்குள் உங்களை அழைத்து செல்கிறேன்.

ஏழாவது வார பூஜை:

இந்த வார பூஜையும் நன்றாகவே நடந்து முடிந்தது. வழக்கம் போல் ராமானுஜம் குடும்பத்தினர் டாக்டரை பார்க்க செல்ல வேண்டும். பார்த்து தகுதி சான்றிதழை பெற வேண்டும். காலையில் எனக்கு ராமானுஜம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

"மாமா இன்று தகுதி சான்றிதழ் வாங்க டாக்டரை பார்க்க போகப்போகிறோம். நல்ல படியாக எல்லாம் முடிந்து எனக்கு தகுதி சான்றிதழ் கிடைக்க மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.

நானும் சரி என்று சொல்லி மஹாபெரியவாளிடம் சென்றேன்.என்னுடைய பிரார்த்தனையை பின்வருமாறு சமர்பித்தேன்.

"பெரியவா ராமானுஜம் ஏழு வார பூஜையை முடித்து விட்டார். அவருடைய ஆறாத புண்ணை ஆற்றி விடீர்கள்.மூடாத ஓட்டையை சதையை வளரச்செய்து மூடி விட்டீர்கள். இப்பொழுது அவர் வேலையில் சேர தயாராக இருக்கிறார். இன்று அவருக்கு தகுதி சான்றிதழ் கிடைக்க வேண்டும் பெரியவா. கொஞ்சம் ராமானுஜத்திற்கு அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா. என்று வேண்டிக்கொண்டேன்.

என் பிரார்த்தனைக்கு மஹாபெரியவா அளித்த பதில்

"அவனுக்கு இன்னிக்கு சர்டிபிகேட் கொடுத்துவா. அவன் கிட்டே சொல்லு என்றார். சரி பெரியவாஎன்று விடை பெற்றுக்கொண்டு ராமானுஜத்தை தொலை பேசியில் அழைத்து விவரங்களை தெரிவித்தேன்.

அவரும் சரி மாமா எனக்கு என்ன சொல்ரதுன்னு தெரியல. ஆனால் சர்டிபிகேட் வாங்கற வரைக்கும் ஒரே டென்ஷன் தான் என்றார். ஒன்னும் கவலை வேண்டாம். சான்றிதழ் வாங்கிய பிறகு உங்கள் வீட்டில் மஹாபெரியவாளுக்கு நன்றி சொல்லிவிட்டு எனக்கும் தெரியப்படுத்துங்கள் என்றேன்.

எனக்கு நிச்சயமாக கிடைத்துவிடும் என்று தெரியும். அவருக்கு இதுதான் முதல் அனுபவம். சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் ராமானுஜம் அழைப்புக்கு காத்திருந்தேன்.

மாலை நான்கு மணி இருக்கும். நான் என்னுடைய காயத்ரி ஜெபத்தில் இருந்தேன். ராமானுஜம் என்னை தொலை பேசியில் அழைத்தார். “சான்றிதழ் வாங்கி விட்டேன் மாமா என்று சந்தோஷத்தில் திளைத்தார். உங்களுக்கு ரொம்ப நன்றி மாமா என்றார்.

நானும் எனக்கு நன்றி சொல்லாதீர்கள். நான் செய்தது ஒரு தபால்காரன் வேலை மட்டும்தான். உங்கள் நன்றியை மஹாபெரியவாளுக்கு சொல்லுங்கள் என்றேன்.

இப்படியாக ஏழு வார பூஜை முடிந்து விட்டது. எல்லாம் நல்ல படியாக முடிந்து ராமானுஜம் வேலைக்கு செலவும் தயாராகி விட்டார். இன்னும் இரண்டு வார பூஜை பாக்கி உள்ளது. இந்த சமயத்தில் அவருடைய நிறுவனத்தில் இருந்து இன்னும் இரண்டு வருட வேலை நீடிப்போடு அழைப்பு வர வேண்டும். காத்திருக்கிறார் ராமானுஜம்.

எதிர்பாராமல் நடப்பதுதான் வாழ்க்கை. இதற்கு ராமானுஜமும் விதிவிலக்கல்ல.பல மாதங்கள் ஓய்வில் இருந்த காரணத்தால் இவருக்குள் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டு விட்டது. தன்னால் முதல் மாதிரி செயல் பட முடியுமா. உடல் அளவில் சரியகி விட்டாலும் மனதளவில் இன்னும் சரியாக வில்லை. அவருக்கு தேவை இப்பொழுது தன்னம்பிக்கை ஒன்றுதான்.

மாலை ஏழு மணி இருக்கும் . நான் மாலை பிரார்த்தனையில் இருந்தேன்.அப்பொழுது எனக்கு ஒரு தொலை பேசி அழைப்பு. மறு முனையில் ராமானுஜம். தனக்குள்ளிருக்கும் நம்பிக்கையின்மையை என்னிடம் சொல்லி "எனக்கு சற்று பயமாக இருக்கு மாமா" என்றார்.

நான் அவரிடம் சொன்னேன். நீங்கள் உடனே மஹாபெரியவா முன்பு ஒரு விளக்கேற்றி வைத்து கண்ணை மூடி த்யானம் செய்யுங்கள். உங்கள் பயம் அகன்று விடும் என்றேன். இருந்தாலும் நீங்களும் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் என்றார். நானும் சரி என்றேன்.

மறு நாள் காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது மஹாபெரியவாளிடம் பின் வருமாறு வேண்டிக்கொண்டேன்.

பெரியவா ராமானுஜத்திற்கு கால் புண் ஆறி இன்று வேலைக்கு போகும் அளவிற்கு உடல் தகுதியை கொடுத்தீர்கள். ஆனால் இப்பொழுது மனதளவில் அவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். உடல் அளவில் ராமானுஜத்தை தயார் செய்ததை போல மனதளவிலும் அவரை தயார் படுத்திக்கொள்ள அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா என்று வேண்டிக்கொண்டேன்.

எனக்கு பதில் கிடைக்கவில்லையென்றாலும் மஹாபெரியவா நிச்சயம் ராமானுஜத்தை மனதளவில் தயார் செய்து விடுவார் என்று எனக்கு தெரியும்.

எட்டாவது வார பூஜை :

ராமானுஜம் உடல் அளவில் தயாராகி விட்டார். டாக்டரும் தகுதி சான்றிதழ் கொடுத்து விட்டார். இனி மனதளவில் ராமானுஜம் தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு நான் அவருக்கு சொல்லிக்கொடுத்த மஹாபெரியவா தியானத்தை இரண்டு வேலைகளிலும் செய்கிறார். மஹாபெரியவா முன் விளக்கேற்றி வைத்து கண்களை மூடி த்யானம் செய்யச்சொன்னேன். அதை விடாமல் செய்து கொண்டிருக்கிறார்.

தினமும் என்னை தொலை பேசியில் அழைத்து தன்னுடைய முன்னேற்றத்தை என்னிடம் சொல்லுவார். இந்த சமயத்தில் ராமானுஜம் தன்னுடைய நிறுவனத்திற்கு தன்னுடைய தயார் நிலையை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும். அவர்களிடம் இருந்து அதற்கு ஒரு வாரத்திற்குள் பதில் வர வேண்டும்.

அது மட்டுமல்ல இவரது நிறுவனத்தின் மருத்துவரும் இவரை சோதிக்க வேண்டும்.ராமானுஜம் கொடுக்கும் தகுதி சான்றிதழில் நிறுவனத்தின் மருத்துவர் ஒப்பம் இட வேண்டும். ராமானுஜம் என்னை தொலை பேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய நிலைமையை எடுத்து சொன்னார்.

"மாமா நான் அடுத்த வாரம் ஒன்பதாவது வார பூஜை செய்ய வேண்டும். பூஜையை முடித்து மறு நாள் நான் வேலையில் சேர வேண்டும். மஹாபெரியவா கிட்டே வேண்டிக்கோங்கோ மாமா என்றார். நானும் சரி சார் நான் வேண்டிக்கொள்கிறேன் என்று சொன்னேன்.

ஒன்பதாவது வாரபூஜை வியாழக்கிழமை அதிகாலை மணி நான்கு. எழுந்து என்னுடைய காலைக்கடன்களை முடித்து விட்டு மஹாபெரியவா முன் அன்றைய பிரார்த்தனைகளுக்கு என் வலது கையால் இடது நெஞ்சு பக்கம் கையை வைத்து வேண்டிக்கொண்டேன்.

எனக்கு இடது கை ஸ்வாதீனத்தை இழந்து விட்டதால் என்னுடைய வணக்கமும் கை கூப்பிய பிரார்த்தனையும் இப்படித்தான் இருக்கும். மஹாபெரியவாளிடம் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.

பொதுவாகவே வாழ்க்கையில் தோல்வி என்றால் எனக்கு அதன் வலி தெரியும். ஏனென்றால் பல முறை நான் அந்த தோல்வியை அனுபவித்திருக்கிறேன். ஆகவே ஒருவரின் தோல்வி என்னை மிகவும் பதித்து விடும்.

ஏனென்றால் நாமே தோல்வியுறுவது வேறு. மற்றவர்களின் முறையற்ற யுக்தியால் தோல்வியென்றால் அதன் வலியை அனுபவித்தால்தான் தெரியும். அதுவும் வாழ்க்கை பயணத்தில் எல்லாம் வெற்றிகரமாக முடிந்து வெற்றியை எட்டிவிடும் நேரத்தில் என் இதயமே ஒரு வினாடி நின்றுவிட்டுதான் இயங்கும். அன்றைக்கும் அதுபோலத்தான் மஹாபெரியவா முன் நின்று பேச வாயெடுக்கும் முன் நான் அழுது விட்டேன்.